நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 23 மே, 2016

புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தில் பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் சிறப்புரை!


பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார்

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியம் குறித்த ஆறாம் தொடர்பொழிவு, புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் உள்ள செகா கலைக்கூடத்தில் 23.05.2016 திங்கள் கிழமை மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.

கடலூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தொல்காப்பியம் மரபியல் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொல்காப்பியம் நூலில் மரபு குறித்துப் பேசப்படும் பகுதிகளை முதற்கண் நினைவூட்டிப் பேசிய பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் பொருளதிகாரம் மரபியல் பகுதியில் உள்ள இளமைப் பெயர்கள், உயிர்களின் வகைகள், நான்கு வகையான வருணத்தார் பற்றிய செய்திகள், நூல்களின் மரபு பற்றிய செய்திகளை எடுத்துரைத்து விளக்கினார். கற்றோர்கள் வியக்கும் வகையில் உரை அமைந்திருந்தது.

முதற்கண் பாவலர் இளமுருகன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். முனைவர் இராச. திருமாவளவன் தலைமையுரை வழங்கினார். முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்ற, முனைவர் மு.இளங்கோவன் அறிமுக உரையாற்றினார். முனைவர் சு. சக்திவேல் நன்றியுரை வழங்கினார்.


புதுச்சேரியில் வாழும் தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

தமிழறிஞர்கள்

பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனாரைப் 
புலவர் சீனு. இராமச்சந்திரன் அவர்கள் சிறப்பித்தல்.

திரு. அமரநாதன் அவர்கள் முனைவர் இராச.திருமாவளவன் அவர்களைச் சிறப்பித்தல்

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

சிறப்புரை நிகழ்வுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.