திருக்குறளைத் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில்
திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில்
செவ்வாய்க்கிழமை அவர் முன்வைத்த கோரிக்கை: "சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் புலவர் திருவள்ளுவரால், திருக்குறள் நூல் இயற்றப்பட்டது. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத
கருத்துகளை எடுத்துரைக்கும் வகையில் மூன்று பகுதிகள், 133 அதிகாரங்கள் 1,330 குறட்பாக்கள் கொண்டதாக இந்நூல்
விளங்குகிறது. 1730-ஆம் ஆண்டில் லத்தீன் மொழியிலும்,
1886-இல் ஆங்கிலத்திலும் திருக்குறள்
மொழிபெயர்க்கப்பட்டது.
அதன்பிறகு பல்வேறு நாடுகளிலும் இந்நூல்
மொழிபெயர்க்கப்பட்டது, இதன் தனிச் சிறப்பை உணர்த்துகிறது.
இதேபோல் இந்தியாவில் பெரும்பாலான மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட கருத்துகள், மதசார்பின்மை நிலையுடன் மொழி, மத, பிராந்திய எல்லைகளைக் கடந்து
திருக்குறள் விளங்குகிறது. இந்தியாவில் உள்ள தற்போதைய தலைமுறையினர் மட்டுமன்றி
எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்றவாறும் இந்நூலின் கருத்துகள் பொருந்தும் வகையில்
அமைந்துள்ளன.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம்
நாட்டில் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய
கல்விசார் பெருமைகளையும் நம் நாடு கொண்டுள்ளது.
இந்நிலையில், தேசிய அளவில் நம்மை பிரதிபலிக்கும் நூலாக திருக்குறள் இருந்தால்
அதுவே உண்மையாக நம் நாட்டு மக்களுக்கு பயன்தரக் கூடியதாக இருக்கும். எனவே, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என்றார் திருச்சி சிவா.
நன்றி:
தினமணி 10.12.2014
1 கருத்து:
அருமையான கருத்து. தேசிய நூலாகும் தகுதி திருக்குறளுக்கு உண்டு. ஆனால் இதை தேசிய நூலாக வைத்து கொள்ளும் படியான தகுதி இந்த நாட்டிற்கு இல்லையே!
கருத்துரையிடுக