நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 27 டிசம்பர், 2014

மலேசியாவில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் வெளியீடு



தமிழிசைக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தம் வாழ்க்கையை ஒப்படைத்தவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவார். அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழிசை ஆய்வில் ஈடுப்பட்டிருந்தவர். மறைந்துபோன நூல்கள் வரிசையில் இருந்த பஞ்ச மரபு நூலினைப் பதிப்பித்து வழங்கியவர். இவரின் வாழ்வியல், பாடல்கள் அடங்கிய ஆவணப்படம், தமிழ் உணர்வாளர்கள் தழைத்து வாழும் மலேசிய மண்ணில் வெளியீடு காண உள்ளது.

மலேசியத் தலைநகரான கோலாலம்பூர் தான்சிறீ சோமா அரங்கில் 28.12.2014 ஞாயிறு காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் ஆவணப்பட வெளியீட்டு விழா டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ச. சாமிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கு வருகைதரும் தமிழ் உணர்வாளர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் மலேசியத் தமிழ்நெறிக்கழகத் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் வரவேற்று உரையாற்றுகின்றார். நிகழ்ச்சி குறித்த அறிமுக உரையை ஆவணப்பட ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சி.. மன்னர்மன்னன் வழங்குகின்றார். ஆவணப்படத்தின் புரவலரும் நிகழ்ச்சியின் புரவலருமான டத்தோ சூ. பிரகதீஷ்குமார், டத்தோ பா. சகாதேவன், டத்தோ இரா. மணிவாசகன் முன்னிலையில் நடைபெறும் விழாவில் டான்ஸ்ரீ சு. குமரன்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கி. கருணாகரன் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

ஆவணப்பட நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகத் திரு. தருண்விஜய் எம்.பி. அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இவர் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக்கவும், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் உரிய இடம் இந்திய அளவில் கிடைக்க வேண்டும் எனவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர். உத்ராகண்டு மாநிலங்களவை உறுப்பினரான இவர்தம் திருக்குறள் ஈடுபாட்டை இந்த நிகழ்ச்சியில்  பாராட்ட உள்ளனர்.

ஆவணப்பட இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் நிறைவில் ஏற்புரையாற்ற உள்ளார்.

குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்பட வெளியீட்டு விழா மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசிய நாமக்கல் நலனபிவிருத்தி மன்றம், மலேசியத் தமிழ் அறவாரியம், மலேசிய சைவ நற்பணிக் கழகம், பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம், பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்குழு ஆகிய அமைப்புகளும் இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்துகின்றன.


கருத்துகள் இல்லை: