தமிழ்
நூல்கள் குறித்து நான் வகுப்பறைகளில் பாடம் நடத்தும்பொழுது மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்குத் தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளைச் சொல்லி ஊக்கமூட்டுவேன். தமிழில் எண்ணற்ற நூல்கள் உள்ளன. எண்ணற்ற நூல்கள்
இறந்துபட்டன. இருக்கும் நூல்களுள்ளும் மூன்று நூல்களை மட்டும் வைத்துக்கொண்டு நம் பெருமையை
உலக அரங்கில் நிலைநாட்டிவிடமுடியும் என்று குறிப்பிடுவேன்.
அந்த
நூல்களாவன:
1. தமிழ்மொழியின்
சிறப்பையும், தொன்மையையும் நிலைநாட்ட உதவும் தமிழை வரம்பிட்டுக் காத்த ஒல்காப் பெரும்புகழ்த்
தொல்காப்பியம்.
2.தமிழர்களின்
நெறிப்பட்ட வாழ்க்கையையும், அறிவார்ந்த மெய்யுணர்வுகளையும் தாங்கிநிற்கும் திருக்குறள்.
3. தமிழர்களின்
கலை, பண்பாட்டு அறிவுக்கருவூலமான சிலப்பதிகாரம்.
இந்த
மூன்று நூல்களையும் தமிழர்கள் அறிய வேண்டும். படிக்க வேண்டும், போற்ற வேண்டும், ஆராய
வேண்டும் என்று தமிழறிஞர்கள் பலரும் அவரவர் வாய்ப்புக்கு ஏற்பத் தொடர்ந்து குரல்கொடுத்துள்ளனர்.
இந்த நூல்களுள் நடுவணதாக நிற்கும் திருக்குறள் அயலகத்து அறிஞர்களை வியக்க வைத்த பெருமைக்குரியது.
அதனால்தான் திருக்குறளை வீரமாமுனிவர் போன்ற வெளிநாட்டுத் துறவிகள் தம் மொழியில் பெயர்த்துப்
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உலகப் பார்வைக்கு வைத்தனர். அனைத்து ஆசைகளையும் துறந்த
துறவிகளிடத்தும், ஆசையை உண்டாக்கி மொழி பெயர்க்க வைத்த பெருமை திருக்குறளுக்கு அமைந்தது
எனில் மிகையன்று.
திருக்குறள்
எழுதப்பட்ட காலம்முதல் தமிழகத்திலும் தமிழ் சார்ந்த பிற புலங்களிலும் மதிக்கப்பட்டுள்ளதை
இலக்கியங்கள் வழியாகவும் பிற சான்றுகள் வழியாகவும் அறிய முடிகின்றது. திருக்குறளை மேற்கோளாக
ஆண்டு பல நூல்கள் வந்துள்ளன. திருக்குறளைப் பல புலவர்கள் தனித்துச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்(திருவள்ளுவமாலை).
திருக்குறளுக்கு நுட்பமான பல உரைகள் பரிமேலழகர் போன்ற சான்றோரால் இயற்றப்பட்டன.
திருக்குறள்
குறித்தும் திருவள்ளுவர் குறித்தும் பல நினைவுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. திருவள்ளுவர்
கோயில், திருவள்ளுவருக்குக் கோட்டம், திருவள்ளுவர் சிலை, திருவள்ளுவர் படம், திருவள்ளுவர்
உருவம் பொறித்த காசுகள், திருவள்ளுவர் பெயரில் நகர், பூங்கா, சாலை, பேருந்து, மன்றங்கள்,
தவச்சாலைகள், விருதுகள் என்று தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் அயலகத்திலும் உள்ளமையை
நினைக்கும்பொழுது நமக்குப் பெருமை ஏற்படுகின்றது.
திருக்குறள்தான்
தம்மை இந்த நிலைக்கு உயர்த்தியது என இந்தியாவின் மேனாள் குடியரசுத்தலைவர் மேதகு அ.ப.ஜெ. அப்துல்
கலாம் அவர்கள் பேசியும் எழுதியும் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்குத் திருக்குறளின்
சிறப்பைச் சொல்லி வருகின்றமை எம்மனோர்க்குப் பேருவகை அளிக்கும் செயலாகும்.
மேனாள்
நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் இந்திய நாடாளும் மன்றத்தில் இந்திய நாட்டுக்கான பெருமைக்குரிய
நிதி நிலை அறிக்கைகளைப் படிக்கத் தொடங்கும் முன்பாகத் திருக்குறளின் பொன்வரிகளை முன்மொழிவாக
வழங்கியமை இந்திய வரலாற்றில் பதிந்துகிடக்கும் செய்தியாகும்.
சமூகச்
சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் அவர்கள் திருக்குறள் சிறப்பை மக்களுக்கு நினைவுகூரும்
வகையில் திருக்குறள் மாநாடுகள் நடத்தியுள்ளமை இங்கு எண்ணிப்பார்க்கத்தக்க செய்திகளாகும்.
1948, 1949 இல் என இரண்டுமுறை தந்தை பெரியார் அவர்களின் முயற்சியில் திருக்குறள் மாநாடு
தமிழகத்தில் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். இந்த மாநாட்டில் தனித்தமிழ்த்தந்தை
மறைமலையடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பெரும்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் போன்றவர்கள் கலந்துகொண்டமை பெருமைக்குரிய நிகழ்வுகளாகும்.
தமிழகத்துத் தவமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அவர்கள் உலகத் திருக்குறள் பேரவை கண்டு பல மாநாடுகள் நடத்தியமையும் மொழிப்போர் மறவர்
பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் குறள்நெறி தந்தமைமையும் ஈரோடு அரசமாணிக்கனார் குறளியம்
கண்டமையும், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் திருவள்ளுவர் தவச்சாலை கண்டு தவவாழ்வு வாழ்ந்தமையும்
நினைவிற்கொள்ளத் தக்க செய்திகளாகும்.
கேரள
மண்ணில் துறவி சச்சிதானந்தம் அவர்கள் திருவள்ளுவரைக் கடவுளாகப் போற்றும் வாழ்க்கையை
மேற்கொண்டுள்ளதை அறியமுடிகின்றது. திருக்குறள் முறைப்படி வாழ்க்கை வட்டச் சடங்குகளைச்
செய்து வாழ்வதையும் திருக்குறளன்பர்கள் கூறுவர்.
திருக்குறள்
கற்றோரையும் மற்றோரையும் ஈர்த்து நன்னெறி புகட்டுவதால் உலக அளவில் மதிக்கப்படும் நூலாக
உள்ளது. “பிறப்பு ஒக்கும்” என்று மாந்தர்களிடையே ஒருமைப்பாட்டை உணர்த்துகின்றது. “மனத்துக்கண்
மாசிலனாக” வாழ்க என மாந்தர்களை நன்னெறிப்படுத்துகின்றது. “அறத்தால் வருவதே இன்பம்”
என்கின்றது. “இனிய உளவாக” எனச்சொல்லி நன்மொழி நவிலத் தூண்டுகின்றது.
தனிமாந்த
வாழ்க்கையை நெறிப்படுத்தி, உலகச் சமுதாயத்தில் ஒன்றிணைக்கும் திருக்குறள் இந்தியாவுக்கு
மட்டுமன்று உலகத்திற்கே ஒளியேற்றும் உயரிய நூல். இதனை இந்திய அரசு தேசிய நூலாக அறிவிக்க
வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், அறிஞர்களும்
தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர்.
இந்த
நிலையில் உத்தரகண்டு மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் திரு. தருண்விஜய் அவர்களின்
கோரிக்கையை ஏற்று இந்திய அரசின் மனிதவளத்துறை திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும்
சிறப்புச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளத்தை நினைக்கும்பொழுது விரைந்து தமிழர்களின்
நூற்றாண்டுக் கனவு நிறைவேறும் என்று தோன்றுகின்றது.
உலக மொழிகளிலும்,
இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பட்டியலைப் பார்த்தால் இன்றையை
தேவை நமக்குப் புலனாகும்.
Thirukural Translation List
LANGUAGES TRANSLATIONS
Assamese 1
Bengali 3
Burmese 1
Chinese 2
Czech 1
Dutch 1
English 25
Fijian 2
Finnish 1
French 7
German 7
Gujarati 1
Hindi 7
Japanese 1
Kannada 4
Latin 2
Malay 3
Malayalam 7
Oriya 1
Punjabi 1
Polish 1
Rajasthani 1
Russian 2
Sanskrit 2
Saurashtra 1
Sinhala 2
Swedish 1
Telugu 2
Urdu 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக