நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 17 ஜனவரி, 2013

பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர்- சா. நசீமா பானு அவர்கள்




மு.சாயபு மரைக்காயர் - சா. நசீமா பானு

காரைக்கால் என்றவுடன் தமிழ் இலக்கிய உலகுக்கு நினைவுக்கு வரும்பெயர் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் என்பதாகும். காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இலங்கும் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் அவர்கள் பல நூல்களை எழுதிய பெருமைக்குரியவர். மாணவர்களிடத்தும் உடன் பணியாற்றும் பேராசிரியர்களிடத்தும் அன்பு பாராட்டும் இயல்பினர். சாதி, மதம், இனம், நாடு கடந்து பழகும் இயல்பினர்.

நான் கல்லூரி மாணவனாக இருக்கும்பொழுதே பேராசிரியர் தங்கப்பா அவர்களின் வழியாகப் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் அவர்களைப் பற்றி அறிவேன். அவர்களின் உடன்பிறந்தார் பாவலர் காரை இறையடியான் அவர்களின் பாடல்களைச் சுவைத்திருந்த நான் பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்கள்மேல் அன்புகொண்டவனாக இருந்தேன். பல கருத்தரங்குகளிலும் புத்தகக் கண்காட்சிகளிலுமாகச் சந்தித்திருந்தாலும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இல்லாமல் இருந்தோம். ஆனால் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதன்மைச்செய்திகளைப் பரிமாறும் அளவிற்குத் தொடர்பு இருந்தவண்ணம் இருந்தது.

இன்று (17.01.2013) பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்களிடத்திருந்து ஒரு செல்பேசி அழைப்பு வந்தது. தாம் புதுவை வந்துள்ளதாகவும் சந்திக்க விரும்புவதாகவும் அழைத்தார்கள். நான் தேர்வுப்பணியொன்றில் ஈடுபட்டிருந்ததால் மாலையில் சந்திக்க வருவதாகச் சொன்னேன். தங்கியுள்ள இடம் வினவியபொழுது நான் குடியிருக்கும் வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளி ஐயா இருக்கும் விவரம் அறிந்தேன்.

மாலை 4 மணி. பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்கள் தங்கியிருந்த இல்லம் சென்று அவர்களையும் பேராசிரியர் நசீமா பானு அம்மாவையும் கண்டு உரையாடினேன். நேற்றுக் கல்பாக்கத்தில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு விருதுபெற்ற விவரம் சொன்னார்கள். தமிழுக்கு உழைப்பவர்களை அவர்கள் வாழும் காலத்தில் போற்றவேண்டும் என்னும் கோள் உடையவன் நான் என்பதால் இந்தச் செய்தி எனக்கு இனித்தது.

எம் மனைக்கு வரும்படி ஐயாவையும் அம்மாவையும் அன்புடன் அழைத்தேன். அரைமணி நேரம் ஒதுக்கி நம் இல்லம் வந்தார்கள். நம் பணிகளை இருவரும் கண்டு மகிழ்ந்து வாழ்த்தினார்கள். பேராசிரியர் அவர்களின் அன்பு ததும்பும் வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. எல்லை கடந்து அனைவரிடமும் பழகும் பாங்கினை ஒவ்வொரு மாந்தரும் பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

பேராசிரியரின் தமிழ் வாழ்க்கை:

பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்கள் 28. 08. 1951 இல் காரைக்காலில் பிறந்தவர். பெற்றோர் ஹாஜி முகம்மது அப்துல் காதர், பாத்திமா உம்மாள் ஆவர். இவர்தம் தாய்வழிப்பாட்டனார் அமுதகவி சாயபு மரைக்காயரின் திருப்பெயரே இவருக்குப் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. இவரின் உடன் பிறந்தார்  தனித்தமிழ்த் தென்றல் காரை. இறையடியான்(மு.முகம்மது அலி) ஆவார்.

பேராசிரியர் மு சாயபு மரைக்காயர் அவர்களின் மனைவி பேராசிரியர் சா. நசீமா பானு ஆவார். இவர்களின் திருமணம் 23.07.1978 இல் நடைபெற்றது. இவர்களுக்குச் சா. பாத்திமா யாஸ்மின், நினைவில் வாழும் சா.முகம்மது அப்துல் காதர், சா. இக்பால் உசேன் என்னும் மூன்று மக்கட்செல்வங்கள் வாய்த்தனர்.

காரைக்கால் அண்ணா கல்லூரியில் இளம் அறிவியல்(வேதியில்), பயின்று, மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றவர். 36 ஆண்டுகளாகப் புதுவை அரசின் கல்லூரிகள் பலவற்றுள் பணிபுரிந்த பெருமைக்குரியவர். 105 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இவரின் நூல்கள் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. வானொலி, தொலைக்காட்சிகளில் இவர்தம் உரைகள் ஒலி-ஒளிபரப்பாகியுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, துபாய், அபுதாபி உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று சிறப்புரைகள் ஆற்றிய பெருமைக்குரியவர்.

தம் வீட்டில் 900 சதுர அடியில் “சாயபு மரைக்காயர் நூலகத்தை” 17500 நூல்களைக் கொண்டு அமைத்துள்ளார். பல்வேறு விருதுகளும், பாராட்டுகளும் பட்டங்களும் இவரின் தமிழ்ப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளன. புதுவை அரசின் கலைமாமணி விருது, குன்றக்குடி அடிகளார் சமய நல்லிணக்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர்தம் நூல்கள் குறித்துப் பலர் ஆய்வுப்பட்டங்களுக்கு ஆய்வேடு வழங்கியுள்ளனர். பேராசிரியர் அவர்கள் “பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர்- பேராசிரியர் சா.நசீமா பானு அறக்கட்டளை”யை நிறுவியுள்ளார். இ.ப.த.மன்றத்தின் கருத்தரங்கில் இசுலாமிய இலக்கியம், வரலாறு, பண்பாடு குறித்து எழுதப்பெறும் கட்டுரைகளுக்குச் செல்வன் முகம்மது அப்துல் காதர் நினைவுப்பரிசு வழங்கி வருகின்றார்.

முகவரி:

பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் அவர்கள்,
எண் 8, தம்பி சாயபு மரைக்காயர் வீதி,
காரைக்கால்- 609 602
புதுவை மாநிலம்

தொலைபேசி: 04368- 220764
செல்பேசி: 98424 88047  // 98948 88386


சா.நசீமா பானு - மு.சாயபுமரைக்காயர் 


 மு.இளங்கோவன், சா.நசீமா பானு, மு.சாயபுமரைக்காயர்


கருத்துகள் இல்லை: