நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 27 ஜூலை, 2012

தமிழறிஞர் முனைவர் அ.பாண்டுரங்கன் அவர்கள்


முனைவர் அ.பாண்டுரங்கன் அவர்கள்

தமிழறிஞராகவும், மிகச்சிறந்த ஆராய்ச்சியாளராகவும் அறியப்படும் முனைவர் அ.பாண்டுரங்கன் அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் தி.சுப்புலாபுரம் என்னும் ஊரில் 10.03.1936 இல் பிறந்தவர். இந்த ஊரில் வாழ்ந்த இரா.அழகர்சாமி, தனுக்கோடி என்ற இராமக்கம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். இளம் அகவையில் (10 நாள் குழந்தையில்) தாயை இழந்த இவரை இவர்தம் பாட்டியார் முத்தம்மாள் அவர்கள் வளர்த்தார்கள். சிறிய தந்தையார் இராஜூ என்ற இராமசாமி அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்.

பிறந்த ஊரான தி.சுப்புலாபுரத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். ஆண்டிப்பட்டியில் எட்டாம் வகுப்புவரை பயின்றவர். பள்ளியிறுதி வகுப்பைத் தேனி நாடார் சரசுவதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இடைநிலை வகுப்பையும் (இண்டர்மீடியட்), இளங்கலை வகுப்பையும் (கணக்கு) மதுரைக் கல்லூரியில் பயின்றவர். சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர்(1958-60). தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் நல்ல புலமையுடைய பேராசிரியர் அ.பாண்டுரங்கன் அவர்கள் இருமொழியிலும் எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். வைணவ நூல்களில் ஆழங்கால்பட்ட பயிற்சியுடையவர்.

புதுச்சேரி தாகூர் அரசினர் கலைக்கல்லூரியில், பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்(Tutor) (1961-62). பின்னர் இதே கல்லூரியில் துணை விரிவுரையாளராக (Assistant Lecturer), (ஏழாண்டுகள் பணிபுரிந்தார் (1962- 69). பின்னர் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் பேராசிரியர்- துறைத் தலைவராக ஓராண்டு பணிபுரிந்தார்(Professor and Head of Dept.).

1969-70 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நான்காண்டுகள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு (1970-74), முனைவர் முத்துச்சண்முகன் பிள்ளை அவர்களின் மேற்பார்வையில் காப்பியக் கொள்கையும் கம்ப ராமாயணமும் (Epic Theory and Kamba Ramayanam) முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் பட்ட ஆய்வுக்குப் பிறகு புதுவை தாகூர் கல்லூரி, காரைக்கால் அறிஞர் அண்ணா கல்லூரியில் பணியாற்றிய பிறகு புதுவைப் பல்கலைக் கழகத்தின் சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி, இலக்கியப் புலத்தின் (Professor and Head of Subramanya Bharathi School of Tamil Language and Literature), காரைக்கால் மையத்திலும், புதுவையிலும் பேராசிரியர் – துறைத்தலைவராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

ஆசிரியர் எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் (Books authored):

(1) என்றுமுள தென்றமிழ், 1988,

தமிழரங்கம், புதுச்சேரி, (சிலப்பதிகாரம் சங்க இலக்கியம் கம்ப ராமாயணம் பற்றிய கட்டுரைகள்)

(2) காப்பிய நோக்கில் கம்ப ராமாயணம், 1989,

என். சி.பி.எச், சென்னை (கம்ப ராமாயணம் பற்றிய ஆசிரியரின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் ஒரு பகுதி. மிகவும் சிறப்பாக வரவேற்கப்பட்ட இந்நூல் 2007 ஆம் ஆண்டு என்.சி.பி.எச்.நிறுவனத்தின் வழியாக இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.)


(3) காப்பிய இயல், 1992

தமிழரங்கம், புதுச்சேரி (காப்பியங்கள் தொடர்பான மேலைநாட்டுக் கொள்கைகளையும் வடமொழிக் கொள்கைகளையும் தமிழ்க் காப்பியங்களோடு ஒப்பிட்டுத் தமிழ்க் காப்பியக் கோட்பாட்டை இந்நூல் உருவாக்க முயன்றுள்ளது).

(4) தமிழாய்வு புதிய கோணங்கள்,

தமிழரங்கம், புதுச்சேரி. (தமிழிலக்கியங்கள் வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் விமர்சிக்கப்பட்டுள்ளன)

(5) கம்பரும் வால்மீகியும், 2003,

தமிழரங்கம், புதுச்சேரி (கம்ப ராமாயணத்தையும் வால்மீகத்தையும் ஒப்பிட்டுக்காட்ட முயன்றுள்ளது)

(6) வேதநாயகம் பிள்ளை, 1994,

சாகித்திய அகாதமி, புது டில்லி (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் முதல் நாவலாசிரியரான வேதநாயகம் பிள்ளை பற்றிய ஓர் ஆழமான அறிமுக நூல்-நூலின் தகுதி காரணமாக, இந்நூல் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது.)

(7) தொகையியல், 2008,

தமிழரங்கம், புதுச்சேரி (சங்க இலக்கியம் – குறிப்பாக எட்டுத்தொகை நூல்கள் குறித்து ஒரு விரிவான ஆய்வு இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பாகத் தொகைநூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பாடப்பட்ட காலம், அவை தொகைகளாகத் தொகுக்கப்பட்ட காலம், தொகுப்பு நெறிகள், தொகுத்தமைக்கான வரலாற்றுச் சூழ்நிலை, தொகுத்தோர் தொகுப்பித்தோர் பற்றிய நுட்பமான ஆய்வு இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது)

(8) வாணிதாசன், 2008,

சாகித்திய அகாதமி, புது டில்லி (பாவேந்தர் பரம்பரையில் எழுதிய வாணிதாசன் பற்றிய ஆய்வு நூல் – இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)

(9) Sangam Classics – New Perspectives, 2010,

International Institute of Tamil Studies, Chennai.


(10) சான்றோர் கவி, 2010,

சேகர் பதிப்பகம், சென்னை Kaumaram, Saktam, Ganapatyam and Sourams, NCBH.


பதிப்பித்து வெளியிட்டுள்ள நூல்கள்:

(1) இலக்கிய அறிமுகம் பட்ட வகுப்பு (இளங்கலை-இளம் அறிவியல்) , பகுதி – 1, தமிழ் முதலாண்டு, 1989, புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி

(2) பாட்டும் உரைநடையும், பட்ட வகுப்பு, (இளங்கலை-இளம் அறிவியல்) பகுதி – 1, தமிழ் முதலாண்டு, 1994, புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி

(3)பாட்டும் உரைநடையும், பட்ட வகுப்பு (இளங்கலை-இளம் அறிவியல்) , பகுதி-1, இரண்டாம் ஆண்டு, 1995, புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி

(4) நோக்கு -1 (சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக் கழகம், காரைக்கால் மையத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஆய்வு மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு) 1989, புதுவைப் பல்கலைக் கழகம், காரைக்கால்

(5) நோக்கு – 2 1990, காரைக்கால்

(6) நோக்கு – 3 1991, காரைக்கால்

(7) நோக்கு – 4 1992, காரைக்கால்

(8) Common Forms and Themes in Indian Literature, A collection of papers presented in the National Seminar on Common Forms and Themes in Indian Literature, Pondicherry University, 1993

(9) எண்பதுகளிலும் அதற்குப் பிறகும் இந்திய அறிவியல் (ச.பி. குப்தாவின் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஆசிரியரே மொழிபெயர்த்துப் பதிப்பித்துள்ளார்), 1994, புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி

(10)Palm Leaf Manuscripts of Indian Languages, 1995, Asian Institute of Tamil Studies, Madras


சங்க இலக்கியம் இலக்கணம் தொடர்பான ஆய்வுகள்

(அ) பல்கலைக் கழக மானியக் குழுவின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட சங்க இலக்கிய அகராதித் திட்டத்தின் கீழ்ச் சங்க இலக்கியம் முழுவதற்குமான சொல்லடைவு உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட சொல்லடைவுகள் எட்டுத்தொகை பத்துப் பாட்டு உள்ளிட்ட நூல்களுக்குத் தனித்தனியாக உருவாக்கப்பட்டன. இவ்வாய்வாளர் சுமார் 1500 பக்க அளவில் உருவாக்கிய சொல்லடைவு எல்லாத் தொகை நூல்களுக்கும் சேர்த்து ஒரு முழுமையான சொல்லடைவாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன் உருவாக்கப்பட்ட சொல்லடைவுகளிலிருந்து மாறுபட்டு ஒரு சொல் எத்தனை இடங்களில் வருகின்றது, அச்சொல் எவ்வெப் புலவர்களால் எவ்வெவ் நூல்களில் கையாளப்பட்டுள்ளது, என்னும் தாகவல்கள் ஓரிடத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு சொல் எத்தனை இடங்களில் வருகின்றது என்று கணக்கிட (Word Frequency) இயலும். அத்துடன் அச்சொல்லின் பொருண்மை மாற்றம் (Semantic change) எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்றும் அறிய இயலும். இச்சொல் அடைவு இன்னும் அச்சிடப்படவில்லை

(ஆ) சிறப்புநிலைப் பேராசிரியர் (Emeritus Professorship) பதவி வகித்த காலத்தில் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றள்ள பயனிலை வடிவங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. பொதுவாக எச்ச வினைகள் என்று கருதப் பெறும் சில எச்ச வடிவங்கள் முற்று வடிவங்களாகத் தொழிற்படுவதை வாக்கிய அமைப்பிலிருந்து பார்க்கும்போது காண முடிந்தது. பால் காட்டாத பொது வினைகள் (Impersonal Finite Verbs) தொகைநூல்களில் இடம் பெறுவதைக் காணமுடிந்தது. அருகிய வழக்காக வரும் இவ்வினை வடிவங்கள் இன்றளவும் கன்னியாகுமரி மாவட்டப் பேச்சுத் தமிழிலும் இலங்கை, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலும் இடம் பெறுவதையும் காண முடிந்தது. இத்திட்டக் கட்டுரையும் இன்னும் நூல் வடிவம் பெறவில்லை

(இ) Cattantai: An Appraisal, A Note on Ceyticin Verbals, உடம்படுமெய் புதிய பார்வை போன்ற இலக்கணம் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளின் மூலம் பழந்தமிழ் இலக்கணம் பற்றிய சில புதிய சிந்தனைகள் (insights) முன் வைக்கப்பட்டுள்ளன

PHISPC வெளியிட்டுள்ள ஆசிரியரின் Sangam Classics on kingship and Society, Religious Thoughts of Snagam Classics என்னும் இரண்டு கட்டுரைகளின் வாயிலாக ஆசிரியர் சங்க இலக்கியங்களைச் சமுதாய வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் விளக்க முயன்றுள்ளார்

செம்மொழித் தமிழ் இலக்கிய மையத்தின் சார்பில் தமிழர்களின் தொல்சமயம் என்னும் ஆய்வேடு கொடுக்கப்பட்டுள்ளது.

பங்கேற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

(1) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையில்
இரத்தின சபாபதி பிள்ளை அவர்களின் அறக்கட்டளையில்
(1) பக்தி இயக்கத்தில் திருஞான சம்பந்தரின் இடம்.
(2) பக்தி இயக்கத்தில் திருநாவுக்கரசரின் இடம் என்னும் இரண்டு சொற்பொழிவுகள், 1993

2) பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலைஅறிவியல் செந்தமிழ்க் கல்லூரியில்
(1) கம்பரின் வருணனைத் திறம்
(2) கம்ப ராமாயண யாப்பு
என்னும் இரண்டு சொற்பொழிவுகள், டிசம்பர், 1996

3) காரைக்குடி, அழகப்பா பல்கலைக் கழகம் வ.சுப. மாணிக்கனார் அறக்கட்டளை சார்பில் சங்க இலக்கியங்களில்
(1) குறிஞ்சித் திணை
(2) நெய்தல் திணை
பற்றிய இரண்டு சொற்பொழிவுகள், டிசம்பர், 1998

(4) கேரளப் பல்கலைக் கழகம், தமிழ்த்துறை
பேராசிரியர் ச. வையாபுரி பிள்ளை அறக்கட்டளைச் சொற்பொழிவு, 2005


பரிசுகளும் பாராட்டுகளும்

அ) சிவபோக சாரம் – சைவ சித்தாந்தம் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு, மாநிலக் கல்லூரி, சென்னை, 1959

ஆ) சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பட்டமேற்படிப்பு வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றமைக்கு டாக்டர் கே. எஸ். கிருஷ்ணன் அறுபதாம் ஆண்டு நினைவுத் தங்கப் பதக்கமும் மதிப்பிற்குரிய (Reverend) ஜான் லாஸரஸ் தங்கப் பதக்கமும் பெற்றமை, 1960

இ) சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கிற்கு ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷனால் (பேலூர்) அழைக்கப்பெற்று ”உலக அமைதிக்குச் சமயத்தின் பங்களிப்பு” என்னும் பொருளில் கட்டுரை படித்தமை, கொல்கொத்தா, 1994

ஈ) தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாம் உலகத் தமிழ்க் கருத்தரங்கு தொடர்பான ஆலோசனைக் குழு உறுப்பினர், 1995

உ) புதுவைப் பல்கலைக் கழகத்தில் பணி மூப்பு எய்தியதும் (சூன்-1995) சங்க இலக்கியம் தொடர்பாக மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காக இரண்டு ஆண்டுகள் (சூலை-1995-சூன்19970) பணி நீட்டிப்பு பெற்றமை

ஊ) அரவிந்தர் சிந்தனைக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு, புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி 1988

எ) சென்னை இந்து மிஷனும் காஞ்சி சங்கர மடமும் இணைந்து நடத்திய ‘பழந்தமிழ் இலக்கியங்களில் இந்து சமயம்‘ ஆறுதல் பரிசு, 1999

ஏ) சென்னை இந்து மிஷனும் காஞ்சி சங்கர மடமும் இணைந்து நடத்திய ‘கம்பனும் வால்மீகியும்‘ கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு, 2000

ஐ) புதுலைக் கம்பன் கழகம், அருணகிரி அறக்கட்டளை சார்பாகக் கம்பனைப் பற்றிய சிறந்த நூலுக்குப் பரிசு ‘கம்பரும் வால்மீகியும்‘ என்னும் நூல் பரிசு பெற்றமை, 2004

ஒ) பல்கலைக் கழக மானியக் குழு சிறப்பு நிலைப்பேராசிரியர் (செப்டம்பர் 2002 – ஆகஸ்டு 2004)

ஓ) திருமலை – திருப்பதி தேவஸ்தான நூல் வெளியீடு, உதவிக் குழு உறுப்பினர், 2004 – 2006

க) பிர்லா அறக்கட்டளை ‘சரஸ்வதி சம்மான்‘ விருதுக்குத் தமிழ் இலக்கியங்களைத் தேர்ந்தெடுக்கும் ‘பாஷா சமிதிக் குழு‘ உறுப்பினர் 1995 – 1998

கா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அழைப்பை ஏற்று 1993-1996, 1997-1998 ஆகிய ஆண்டுகளில் திணைக்களம் நடத்திய பல்வேறு கருத்தரங்குளில் தலைமையேற்றமை கட்டுரைகள் படித்தமை.


கல்விக்கூடங்கள் ஆய்வு நிறுவனங்கள் ஆய்விதழ்கள் ஆகியவற்றோடு உள்ள தொடர்புகள்:

அ) கல்விக்குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழகம்,1968-69

ஆ) உறுப்பினர், ஆட்சிக்குழு, புதுவைப் பல்கலைக் கழகம்,1987-90

இ) பாடத்திட்டக்குழு பட்டமேற்படிப்பு, அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி, (1987-90)

ஈ) உறுப்பினர் கல்விக்குழு (Academic Council), புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி,1987-92

உ) தலைவர், பாடத்திட்டக்குழு (பட்டப் படிப்பு), புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி, 1957-96

ஊ)உறுப்பினர், பாடத்திட்டக்குழு (பட்ட மேற்படிப்பு), மதுரை-காமராசர் பல்கலைக் கழகம், மதுரை, 1993-96

எ) உறுப்பினர், மொழிப்புலம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர், 1994-99

ஏ) பொருளாளர், புதுவை வரலாற்றுக் கழகம், புதுச்சேரி, 1995-99

ஐ) செயலாளர், திராவிட மொழியியல் கழகம் (Dravidian Linguistics Association) , திருவனந்தபுரம், 1996-1999


அனைத்திந்திய அளவில் இலக்கியப் பணிகள்:

அ) சாகித்திய அகாதமி தயாரித்த இந்தியப் பேரிலக்கியங்கள் தொகுப்பில் தமிழ் மொழிப் பகுதி உதவி ஆசிரியர்.

ஆ) சாகித்திய அகாதமிக்காக வேதநாயகம் பிள்ளை நூலை எழுதி வெளியிட்டது, 1994

இ) தேசியப் புத்தக நிறுவனத்துக்காக (National Book Trust), இந்தியச் சிறப்பிலக்கியங்கள் தொகுப்பில் தமிழ் மொழி உதவி ஆசிரியர்

ஈ) கே.கே. பிர்லா அறக்கட்டளை, சரஸ்வதி சம்மான் தேர்வுக்குழு உறுப்பினர், 1995-98

உ) சாகித்திய அகாதமிக்காக வாணிதாசன் நூலை எழுதி வெளியிட்டது, 2008


வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள்:

(1) தொடர்நிலைச் செய்யுளும் பெருங்காப்பியமும்- தமிழாசிரியர் ஐந்தாவது கருத்தரங்க ஆய்வுக் கோவை, 1973, இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம்

(2) பாண்டியர் காலச் சமுதாயம் – ஆராய்ச்சி, 1974, பாளையங்கோட்டை.

(3) அடியார்க்கு நல்லாரின் காப்பியக் கொள்கை, வையை, சூலை, 1974, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை

(4) கூனியின் பாத்திரப் படைப்பு, தமிழாசிரியர் மன்ற ஏழாவது கருத்தரங்க ஆய்வுக் கோவை, 1975, இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம்

(5) அகிலன் நாவல்களில் நகர்ப்புறமும் கிராமப்புறமும் – ஒரு சித்திரிப்பு, அகிலன் கருத்தரங்க ஆய்வுரைகள், சனவரி, 1976, மதுரை- காமராசர் பல்கலைக் கழகம், மதுரை

(6) சிலப்பதிகாரம்: காப்பியக் கட்டமைப்பு, புலமை, தொகுதி-2, அக்டோபர்-
டிசம்பர், 1976, சென்னை


(7) The Narrative Voice in Kamba Ramayanam, 1978, Journal of Madurai University

(8) The Concept of Epic Hero- a Comparative Study, 1979, Journal of Madurai University

(9) The Character of Kuni, 1979, Journal of Tamil Studies, IITS, Chennai

(10) Gandhian Impact on Akilon’s Novels, Studies in Tamil Fiction, 1979,
S.V. Publications Pondicherry

(11)Ramayana Versions in Tamil, Journal of Tamil Studies, 1982, IITS, Chennai

(12) தமிழ்க் காப்பியங்களில் தேவர்கள் புனைவு, தமிழாசிரியர் ஏழாவது கருத்தரங்க ஆய்வுக் கோவை, 1983, இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம்

(13) ருஷ்யப் புரட்சியும் மகாகவி பாரதியாரும், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நூற்றாண்டு விழா மலர், 1982, புதுவை அரசு, புதுச்சேரி

(14) உடையானும் உடைமையும், தமிழாசிரியர் இருபத்து மூன்றாம் கருத்தரங்க ஆய்வுக் கோவை, 1982, இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம்

(15) The Saints of South India: Alwars and Nayanmars, Revue Histoire de Pondicherry, No. XIII, Pondicherry, 1984

(16) A Brief on Pondicherry, ISDL Working Papers in Linguistics, 1985, ISDL, Pondicherry Centre.

(17) கம்பராமாயணம்: மரபு வழிப் பார்வை வித்துவான் வே. வேங்கடராசுலு
ரெட்டியார் நினைவு மலர், 1985, திருவனந்தபுரம்

(18) Cattantai: Revisited, ISDL, Working Papers in Linguistics, 2:2, 1986,
Pondicherry Centre

(19) தமிழில் அறிவியல் கலைச் சொல்லாக்கம், களஞ்சியம், 1987, வளர்தமிழ் மன்றம், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை

(20) Kamban’s Rama: The Divine and the Human, 1987, Journal of Tamil Studies, IITS, Chennai

(21) பாரதி காலமும் கருத்தும், தமிழாசிரியர் பத்தொன்பதாவது கருத்தரங்க ஆய்வுக் கோவை, 1987, இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம்

(22) காப்பியம், ஒரு சொல்லாராய்ச்சி, தமிழாசிரியர் இருபதாவது கருத்தரங்க
ஆய்வுக் கோவை, 1988, இந்தியப் பலகலைக் கழகத் தமிழாசிரியர்
மன்றம்

(23) பாரதியின் தேசியப் பார்வை-ஒரு வரலாற்றுப் பின்புலம், 1988, தமிழியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

(24) மானுடம் பாடிய கவி, தமிழ்ப் பொழில், ஆகஸ்டு-செப்டம்பர், 1988, கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர்

(25) தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாடு – தமிழர்களின் பங்களிப்பு, நோக்கு-1 (ஆய்வுக் கட்டுரைகள்), செப்டம்பர் 1989 தமிழ்த் துறை, சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி இலக்கியப்புலம், புதுவைப் பல்கலைக் கழகம், காரைக்கால்

(26) தமிழ்க் காப்பியங்களில் மீவியல் புனைவு, பேராசிரியர் தமிழண்ணல் மணி விழா மலர், அக்டோபர், 1989, மதுரை

(27) திருவள்ளுவரும் இந்தியச் சிந்தனையாளர்களும், தமிழ்ப் பொழில், 1990, கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர்

(28) Cattantai: A Re apprraisal, PILC, Journal of Dravidic Studies, 1991, PILC, Pondicherry

(29) ஸ்ரீ அரவிந்தரும் இந்தியத் தத்துவமும், திருமுருகன் மணிவிழா மலர், 1991, புதுச்சேரி

(30) தென்கிழக்காசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, தேவராச வழிபாடு, நோக்கு-3 (ஆய்வுக் கட்டுரைகள்), டிசம்பர், 1991, சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக் கழகம், காரைக்கால்

(31) தென்கிழக்காசிய நாடுகளில் தமிழ் மந்திரங்கள், நோக்கு-4 (ஆய்வுக் கட்டுரைகள்), டிசம்பர், 1992, சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக் கழகம், காரைக்கால்

(32) The Codification of Nalayria Tivviyap Pirapantam: A Historical Background, Journal of the Institute of Asian Studies, Vol. X No. 2, March 1993, Institute of Asian Studies Chennai

(33) பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை – ஒரு மதிப்பீடு, தமிழ் உலா, சூலை, 1993, மணிவாசகர் பதிப்பகம், சென்னை

(34) A Critical Evaluation of Vaiyapuri Pillai’s Kaviya Kalam, July, 1993, Institute of Asian Studies, Chennai

(35) Bhakti Literature and Human Values, Journal of Tamil Studies, June- December 1993, IITS, Chennai.

(36) The Role of Religion in promoting Peace and Harmony. The Centenary Volume of Swamy Vivekananda’s Chicago address, 1994, Kolkatta

(37)நாட்டுப்புறக் கதைப்பாடல், நாட்டார் வழக்காற்றியல், மார்கழி, 1995, இந்து சமய கலாசார அலுவல்கள், திணைக்களம், கொழும்பு, இலங்கை.

(38) சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்புப் பணி-ஒரு மறு மதிப்பீடு, பண்பாடு, மலர்-6, இதழ்-2, 1996, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, இலங்கை

(39) தமிழ் ஆராய்ச்சி, வரைவிலக்கணமும் ஆய்வுப் பரப்பும், பண்பாடு, மலர்-7 இதழ்-1, 1997, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, இலங்கை

(40) கம்ப ராமாயணத்தில் சந்தப் பாக்கள், பண்பாடு, மலர்-7, இதழ்-3, 1997, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, இலங்கை

(41) சங்க இலக்கியத்தில் குடும்பம், பண்பாடு, மலர்-7, இதழ்-4, 1997, இந்து சமய கலாசார அலுவல்கள், திணைக்களம், கொழும்பு, இலங்கை

(42) தமிழில் தொகை நூல்கள், தமிழியல், சூன்-டிசம்பர், 1997, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

(43) ஆனந்தரங்கப் பிள்ளை, தமிழர்களின் தலைவர், பண்பாடு, மலர்-8, இதழ்- 2, சித்திரை, 1998, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, இலங்கை

(44) திருமால் திருக்கோயில் வழிபாட்டில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், 1998, இந்து சமய கலாசார அலுவல்கள், திணைக்களம், கொழும்பு, இலங்கை

(45) ஆறுபடை வீடு: ஒரு புதிய பார்வை, தமிழியல் கட்டுரைகள், சூன்-2000 ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை

(46) பிரஞ்சு நாட்டுத் திருத்தொண்டர்கள் ஆற்றிய தமிழ்ப் பணிகள், பிரஞ்சு அறிஞர்களின் தமிழ்ப் பணி, (கட்டுரைத் தொகுப்பு), ஆகஸ்டு, 2000, அருள்மிகு வி.மி. ஞானப்பிரகாசம் சே.ச. கிறித்துவ ஆய்வுத் துறை, மதுரை-காமராசர் பல்கலைக் கழகம், மதுரை

(47) எட்டுத்தொகை நூல்கள், தொகுப்பு நெறிகள், தமிழியல், சூன் 2001, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

(48) Divyadesa Yatra as per Vaisnava Traditions, Ananthacharya Indological Institute., AIRJ Vol IV (2001-2002)

(49) திணைக்கோட்பாடு, தமிழியல், சூன்-2002, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

(50) Note on Ceyticin Verbals, Journal of Tamil Studies, June 2003, IITS, Chennai

(51) நெய்தல் திணை, Vol 2, Number 2, மே-2004, தமிழ் ஞாலம், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை

(52) உடம்படுமெய்: புதிய பார்வை, தமிழியல், சூன்-2004, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

(53) தொகை நூல்கள்: தொகுப்பியல் நெறிகள், சங்க இலக்கியங்களும் கோட்பாடுகளும், சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி இலக்கியப்புல வெளியீடு, மார்ச்சு- 2007, புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி.

(55) Religious Thoughts of the Sangam Classicas, PHISPC, Centre for Studies in Civilzations, New Delhi, 2008

(56) The Sangam Classics on Kingship and Society, PHISPC, Centre for Studies in Civilizations, New Delhi, 2008.


கருத்தரங்கில் படிக்கப்பட்டு இன்னும் அச்சிடப்படாதுள்ள கட்டுரைகள்:

(1) உபய வேதாந்தம் தோற்றமும் வளர்ச்சியும்: ஒரு வரலாற்றுப் பார்வை, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, இலங்கை

(2) Vaisnavism- Paper presented in the National Seminar on Religion, Society and literatute of India, Christian Chair, University of Madras, Chennai

(3) Evolution of Murukan as a Tamil Deity: Historical Background, International Seminar on Skanda Murukan, Institute of Asian Studies, Chennai

(4) Slavery System in Bakthi Literature, Human Values in Indian Literature, Seminar conducted by the Dept. of English, Pondicherry University, Pondicherry

(5) Place Names in Campantar Tevaram, Seminar on Place Names, Tamil University, Tanjavur

(6) கொள்கையும் கோட்பாடும், இலக்கியங்களின் வழி கோட்பாடுகளை உருவாக்குதல், சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி

(7) தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியங்களின் இடம், சாகித்திய அகாதமியும் மதுரை காமராசர் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய கருத்தரங்கு, மதுரை


14. Brief Essays included in Encyclopaedia:
(A) Encyclopedia of Tamil Literature Vol: 3, Instutute of Asian Studies, Chennai
(a) Iraman (Rama)
(b) Ilakkuvan (Lakshmana)

(B) Encyclopedia of Hindu Religion and Literature, U.S.A.
(a) Modern Tamil Drama
(b) History of modern Tamil Drama
(C) Encyclopaedia of Tamil Literature, U.S.A
(a) Cankam Age (Religious Content)
(b) Post-Cankam Literature
(c) Thiruvalluvar
(d) Civaka Cintamani
(e) Peruntevanar
(f) Tiruppanalvar
(g) Tiruccanta Viruttam
(h) Tituvaciriyam
(i) Tattuvarayar
(j) Sivagnana Yogi















முகவரி:

முனைவர் அ.பாண்டுரங்கன் அவர்கள்
30, 19-ஆவது குறுக்குத் தெரு,
அவ்வை நகர்,
இலாசுப்பேட்டை அஞ்சல்,
புதுச்சேரி-605 008.
தொலைபேசி: (0413) 2251065

கைபேசி: 94866 23730

புதன், 18 ஜூலை, 2012

தமிழறிஞர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள்



தமிழறிஞர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள்

மதுரை யாதவர் கல்லூரியில் பணிபுரிந்து தரமான தமிழ் மாணவர்களை உருவாக்கியும் தரமான தமிழாய்வுகளை நிகழ்த்தியும் உயர்வுபெற்றவர் முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி ஆவார். பணிநிறைவுக்குப் பின்னர் மதுரையில் தமிழ்வாழ்வு வாழ்ந்துவரும் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள் எழுதிய தமிழ்நாடகக்(குறுங்)கலைக்களஞ்சியம் என்னும் நூலை அண்மையில் படிக்கும் வாய்ப்பு அமைந்தது.

தமிழ்நாடகக்(குறுங்) கலைக்களஞ்சியம் நூலின் முன்னுரையைப் படித்தவுடன் ஐயாவுடன் உடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு என் வணக்கத்தையும் பாராட்டையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன். இசைமேதை வீ.ப,கா.சுந்தரம் அவர்களுக்குப் பிறகுத் தமிழகக் கலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க நூலாக வெ.மு.ஷாஜகான் கனி அவர்களின் தமிழ் நாடகக் (குறுங்) கலைக்களஞ்சியத்தைப் பார்க்கின்றேன். சங்கநூல்களில் இசை, நாடகம் சார்ந்த சொற்களுக்குப் பேராசிரியர் அவர்கள் வழங்கியுள்ள விளக்கங்களின் நுட்பம் என்னைப் பெருமகிழ்வு கொள்ளவைத்தது.சங்க நூல்களிலிருந்து பொருத்தமான மேற்கோள்களால் தம் நூலை யாத்துள்ளார்.

சங்கப்பரப்பில் உலா வந்தவர்களால்தான் இவ்வாறு உண்மை காணவும், நயம் காணவும் முடியும். அந்த வகையில் இந்தத் தமிழ்நாடகக்(குறுங்) கலைக்களஞ்சியம் 160 பக்கங்களில் அச்சாகியுள்ளது. இந்த நூலில் 555 சொற்களுக்குச் சிறியதும் பெரியதுமான விளக்கங்களை வரைந்துள்ளார்கள். இந்த நூல் இன்னும் பெருநூலாகக் கருக்கொளவும் உருக்கொளவும் வேண்டும் .இவர்களைப் போலும் மேதைகள் ஆய்வுநிறுவனங்களில் முழுநேரமும் பணிபுரிந்திருந்தால் தமிழுக்கு ஆக்கமான பல படைப்புகள் கிடைத்திருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கையாகும்.



தமிழ்நாடகக்(குறுங்) கலைக்களஞ்சியம் என்னும் இந்த நூலில் ஆய்ந்துகண்ட பல உண்மைகளை முன்வைத்துள்ளார். இவை குறித்து அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவலாம். ஆனால் பேராசிரியர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள் யாரும் சொல்லாத பல புதிய கருத்துகளை முன்வைத்துள்ளார். தொல்காப்பியர் புறத்திணையியலில் போர்வாழ்க்கையைக் கூறுவதாக மேற்போக்காகத் தெரியினும் நாடக வரலாற்றையே அதில் பதிவு செய்துள்ளார் என்கின்றார்(முன்னுரை). தொல்காப்பியர் காலத்தில் நாடகம் குறித்த வேறொரு சொல் பெருவழக்காக இருந்திருக்கவேண்டும். அந்தச் சொல் “நிலை” என்று குறிப்பிடுகின்றார்(துடிநிலை, கொற்றவைநிலை, கழல்நிலை, பிள்ளைநிலை…)

புறத்திணையியலில் 60 நாடகங்களையும், சங்க இலக்கியங்களில் 46 நாடகங்களையும் அக்கால நாடக இசைக்கலைஞர்களாக இருபது கலைஞர்களையும் இனங்கண்டுள்ளோம் என்று பேராசிரியர் வெ.மு.ஷாஜகான் கனி குறிப்பிட்டுள்ளமை இவர்தம் தமிழாய்வுத் தகைமைக்குச் சான்றாகும்.

அகத்தியம் என்ற சொல்லுக்கு விளக்கம் தரும் பேராசிரியர்,” தமிழ் நாடக இலக்கண நூல்(தொல்காப்பியத்தின் முதல்நூல் என உரையாசிரியர் கற்பனையாகக் கூறும் அகத்தியம் வேறு). "நாடகத் தமிழ்நூலாகிய பரதம், அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன என்பர்"( சிலப்.அடியார்க்.உரைப்பா). தமிழ்நாடகத் தொன்னூல் பரதம் அதற்கடுத்த பழைமையது அகத்தியம். சங்க இலக்கியங்களில் அகத்தியம் இல்லை” என்கின்றார்.

அம்பா ஆடல் என்னும் சொல்லுக்கு விளக்கம் எழுதும்போது, அம்பா= கொற்றவை. இது கொற்றவை வழிபாட்டு ஆடல். “விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப, வெம்பா தாக வியனில வரைப்பென, அம்பா ஆடலில் ஆய்தொடிக் கன்னியர்” (பரி.11: 76-81. இதில் வரும் புரிநூல் அந்தணர் என்பார் புரோகிதர். விரிநூல் அந்தணர் என்பார் நாடக நூலை விரிவாகக் கற்ற அறிஞர் என்கின்றார். … இவ் அம்பா ஆடலைப் பரிமேலழகர் தைந்நீராடல் என்பர். நாடக நடிகரைச் சிற்றினம் எனக் கருதும் பரிமேலழகர் பிறழ உரை கூறினர் என்க”(பக்கம் 14). என்று மூத்த உரையாசிரியரிலிருந்து மாறுபட்டு உரைகாணும் வெ.மு.ஷாஜகான் கனி அவர்களின் புலமை போற்றற்குரியது.

அல்லியம் என்னும் சொல்லுக்கு விளக்கம் தரும் பேராசிரியர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள் “அல்லிப்பாவையும்,அல்லியமும் ஒன்றெனச் சிலர் மயங்குவர்."யானை உருவில் வந்த கம்சனை அழித்து மாயோன் ஆடிய அல்லியத் தொகுதி"(சிலப் 6: 48) என்பதே அல்லியம். அல்லியம் சங்கப் பாடல்களில் இல்லை என்கின்றார்(பக்கம் 18).

ஏழிசை என்னும் சொல்லுக்குப் பேராசிரியர் வரைந்துள்ள விளக்கம் தெளிவும் திட்பமும் கொண்டவையாகும். … ச ரி க ம ப த நி ச என்னும் எழுத்துக்குறியீடு இளங்கோவடிகள் காலம் வரை வழகத்தில் இல்லை என்கின்றார். மூவேழ்துறையும் பாடும் முறை பண்டு இருந்தது. “மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி” (புறம் 152). மூவேழ்துறையும் என்றது வலிவு மெலிவு, சமம் என்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றில் ஏழு தானம் முடித்துப் பாடும் பாடற்றுறை. இவ்வேழு சுரங்களையும் மூவேழ்துறையும் முறைப்பட இசைக்கும் பாணர்கள் சிலப்பதிகாரக் காலத்தில் இருந்தனர். குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும், வழுவின்று இசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்(சிலப். 5:35-37). ஏழிசை என்பதைச் சுந்தரர் தேவாரத்தில் காணலாம்” என்கின்றார்(பக்கம். 37).

ஒக்கல் என்னும் சொல்லுக்கு விரிந்த விளக்கம் வரைந்து வரும் இடத்தில் ஒக்கல் என்றால் சுற்றம், சுற்றத்தினர், இடுப்பு என்று பொருள்படும் என்கின்றார். இதற்குச் சான்றாகப் பழமொழியை எடுத்துக்காட்டுவது இருவகை வழக்கிலும் பேராசிரியருக்குப் புலமை இருப்பது புலப்படுகின்றது. இதுபோல் கண் 2 என்ற சொல்லுக்கு விளக்கம் வரைந்துள்ளமையும் நயம் தோன்ற உள்ளது(பக்கம்43-44).

இவ்வாறு இக்கலைக்களஞ்சியம் முழுவதும் விளக்கம்பெறும் சொற்கள் தமிழ் நாடக வளம் அறிவதற்குப் பெரிதும் துணைபுரியும். தமிழுக்கு ஆக்கமான நூல் தந்த பேராசிரியரின் வாழ்க்கைக் குறிப்பையும் பிற படைப்புகளையும் கீழே வரைகுவன்:

முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் என்னும் ஊரில் 13.07.1947 இல் பிறந்தவர். பெற்றோர் வெ. உ. முகமது இப்ராகிம், நா.ஆயிஷாபீவி ஆவர். தொடக்கக் கல்வி முதல் பள்ளியிறுதி வகுப்புவரை அபிராமம் ஊரில் பயின்று, அதன்பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூயில் புகுமுக வகுப்பை நிறைவுசெய்தவர். இளம் அறிவியல் வகுப்பைப் பயின்ற பிறகு முதுகலைத் தமிழ்ப்பாடத்தை மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்றவர்(1969-71). உரைவேந்தர் ஔவை.துரைசாமியார், பேராசிரியர் தமிழண்ணல், சுப.அண்ணாமலை உள்ளிட்ட அறிஞர்களிடம் தமிழ் இலக்கியம் பயின்ற பெருமைக்குரியவர்.

1971 இல் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியிலும், 1973 முதல் 83 வரை இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியிலும் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்த வெ.மு.ஷாஜகான்கனி அவர்கள் 1983 முதல் 2006 வரை மதுரை யாதவர் கல்லூரியில் பணிபுரிந்துள்ளார். இவர் மேற்பார்வையில் ஐந்துபேர் முனைவர் பட்ட ஆய்வும், 12 பேர் இளம் முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொண்டனர். தினமணியில் சிறகுகள் தரும் சின்னத் திரைக்கலை என்னும் தொடரை 66 வாரம் எழுதியுள்ளார். தினமணி சிறுவர் மணியில் பாடம் திருத்திய பாப்பா கதைகள், சாப்ளின் மாமா படக்கதைகள் வெளிவந்துள்ளன.

பேராசிரியர் ஷாஜகான் கனி அவர்கள் தொழில் வகையிலும், தொழில்நுட்ப வகையிலும் 'காணொளி காட்சி பதிவில்' (Videography) விற்பன்னர் மற்றும் பயிற்றுனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்விக்கூடத்தில், இந்தியா கனடா கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ் இவர் 'காணொளி காட்சி பதிவு' குறித்த வகுப்பின் முதன்மை ஆசிரியராக திகழ்ந்தவர்.

பேராசிரியரின் நேரடிக் கண்காணிப்பில் 'காணொளி காட்சிப் பதிவு' படித்த மாணவர்களின் எண்ணிக்கை மிகுதியாகும்.இவரிடம் படித்துப் பின்னர்த் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற ஒரு இயக்குனர்தான் திரு.சசிகுமார் அவர்கள்.

வெ.மு.ஷாஜகான் கனி அவர்களின் புகழ்பெற்ற நூல்கள்:

1. கற்புகள் கற்பனைகள்
2. புகை- திரைநாடகம்
3. பட்ட மரங்கள் – கவிதைத்தொகுப்பு
4. விடுதலைவீரர் அழகுமுத்து- நாடகம்
5. விறகுவெட்டி
6. நல்லவனும் கெட்டவனும்
7. ஏமாற்றாதே ஏமாறாதே
8. சூழ்நிலையியல்
9. சென்னை அறிவொளி
10. வீட்டுக்கு ஒரு நாட்டுவைத்தியர்
11. சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை
12. பாடம் திருத்திய பாப்பா கதைகள்
13. அரங்கேற்று காதை ஆராய்ச்சி(2009)
14. மைசூர்ப்புலி திப்புசுல்தான்
15. தமிழ் நாடகக் (குறுங்) கலைக்களஞ்சியம்
16. தமிழ்நாடக வகையும் வரலாறும்
17. திரைப்படக்கலை
18. குறும்படம் பழகி… சினிமா எடுக்கலாம் வாங்க

மால்கம் ஆதிசேசையா விருது, தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது பெற்றவர். தமிழுக்கு உழைக்கும் பேராசிரியரை வாழ்த்துவோம்


வெ.மு.ஷாஜகான்கனி அவர்களின் முகவரி:

ஓவிய இல்லம்,
1/18, இரண்டாம் தெரு,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியக்குடியிருப்பு,
நத்தம் நெடுஞ்சாலை,
திருப்பாலை, மதுரை 605 014

செல்பேசி : 0091 94435 05929

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பிரஞ்சுநாட்டு அதிபருடன் நாட்டியக் கலைஞர் இரகுநாத் மனே…


பிரான்சுநாட்டு அதிபர் பிரான்சுவா ஒலாந்து, “செவாலியே” இரகுநாத் மனே

புதுவையின் புகழ்பெற்ற நடனக் கலைஞரும், பிரான்சு நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது பெற்றவருமான இரகுநாத் மனே அவர்கள் பிரஞ்சு குடியரசு நாளில் பிரான்சில் நடைபெற்ற விழாவுக்கு அழைக்கப் பெற்றிருந்தார். அப்பொழுது அவர் பிரான்சு நாட்டு அதிபரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்.

சனி, 14 ஜூலை, 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருக்குப் புதுச்சேரியில் வரவேற்பு


மலேசியத் தமிழ் எழுத்தாளர் பெ.இராசேந்திரனுக்கு முனைவர் வி.முத்து அவர்கள் பொன்னாடை அணிவித்தல். அருகில் மன்னர்மன்னன், பொறிஞர் பாலு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் அவர்கள் புதுச்சேரிக்கு வருகைபுரிந்துள்ளார். அவரையும் அவருடன் வந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர்களையும் இன்று(14.07.2012) புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் புதுவைத் தமிழறிஞர்கள் வரவேற்றுப் பாராட்டிப் பேசினர்.

தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். பாரிசு பார்த்தசாரதி அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

இனிய நந்தவனம் என்னும் இதழின் புதுவைச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இனிய நந்தவனம் இதழின் ஆசிரியர் சந்திரசேகரன் அவர்களும் கலந்துகொண்டார்.

புதுவைத் தமிழ்ச்சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் ஏற்புரையாற்றினார். மலேசியாவில் இலக்கிய வளர்ச்சிக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆற்றிவரும் பணிகளையும் மலேசியத் தமிழர்களின் தமிழ் உணர்வையும் எடுத்துரைத்தார்.


மலேசியத் தமிழ் எழுத்தாளர் பெ.இராசேந்திரன் உரை


முனைவர் வி.முத்து தலைமையுரை


இனிய நந்தவனம் இதழ் வெளியீடு


பெ.இராசேந்திரன் அவர்களுடன் புதுவைத் தமிழறிஞர்கள்,ஆர்வலர்கள்

வெள்ளி, 13 ஜூலை, 2012

மறைமலையடிகள் பிறந்தநாள் விழா, கரு.வெ.கோவலங்கண்ணன் படத்திறப்பு விழா

தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் பிறந்தநாள் விழா, பாவாணர் பற்றாளர் கரு.வெ. கோவலங்கண்ணன் படத்திறப்பு விழா விருதுநகர் மாவட்டம் முரம்பு,சீயோன்மலையில் அமைந்துள்ள பாவாணர்கோட்டத்தில் நடைபெற உள்ளது.

நாள்: 15.07.2012. நேரம்: மாலை 5.30 மணி.

முனைவர் இரா.இளவரசு இல்லத்தார் தமிழ்ப்பணிக்கு வழங்கிய உருவா 25,000 குறித்த அறிமுகமும் விழாவில் நடைபெறும். மதுரை நா.மம்முது, பேராசிரியர் தா.மணி ,திண்டுக்கல் சாகுல் அமீது உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

தொடர்புக்கு: நெடுஞ்சேரலாதன் 94432 84903

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் பாராட்டு!

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

நாள்: 14.07.2012 காரி(சனிக்கிழமை),நேரம்: மாலை 6 மணி
இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி

முனைவர் வி முத்து அவர்கள் தலைமையில் நடைபெறும் பாராட்டுவிழாவில் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். புதுவை அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் பெ.இராசவேலு அவர்கள் கலந்துகொண்டு மலேசித் தமிழ் எழுத்தாளர்களைப் பாராட்டிச் சிறப்புரையாற்றுகின்றார்.

தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்கள் வாழ்த்திப் பேசுகின்றார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் அவர்கள் ஏற்புரையாற்றுகின்றார்.

மாலையில் நடைபெறும் இனிய நந்தவனம் புதுவைச் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வில் சீனு. வேணுகோபால் கலந்துகொண்டு இதழின் அறிமுகவுரையாற்றுகின்றார். இனிய நந்தவனம் ஆசிரியர் த.சந்திரசேகரன் கலந்துகொண்டு ஏற்புரையாற்றுகின்றார்.

வியாழன், 12 ஜூலை, 2012

பாவலர் பல்லவன் மறைவு


பாவலர் பல்லவன் அவர்கள்

தமிழ்ப்பற்றாளரும் மிகச்சிறந்த பாவலருமான பாவலர் பல்லவன் அவர்கள் இன்று காலை ஆறுமணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிக வருந்துகின்றேன். ஐயா அவர்கள் 1993 முதல் எனக்கு நல்ல தொடர்பில் இருந்தார். தமிழ் வள்ளல் ஐயா நா.அருணாசலம் அவர்களின் தமிழ்ப்பணிகளில் இணைந்து உழைத்தவர்.

“மம்மி என்றது குழந்தை
அம்மா என்றது மாடு”

என்ற கவிதையின் வழியாகத் தமிழக மக்களைத் தம் பக்கம் ஈர்த்தவர் பாவலர் பல்லவன். கிழவனல்ல அவன் கிழக்குத் திசை என்று தந்தை பெரியார் குறித்து இவர் எழுதிய பாடல் புட்பவனம் குப்புசாமி அவர்கள் வழியாகப் பாடப்பெற்று உலகப்புகழ்பெற்றது.

பல்லவனின் இயற்பெயர் வீரராகவன் ஆகும். இவர் பிறந்த ஊர் திருக்கழுக்குன்றம் ஆகும். அங்குப் பேரூராட்சி அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். இலக்கியவீதி அமைப்பின் மூலம் அரங்கேறியவர்.

பல்லவன் ஏராளமான சிறந்த துளிப்பா கவிதைகளைப் படைத்துப் புகழ் பெற்றவர். புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் படைத்திருக்கும் கவிஞர் பல்லவன் இளம் கவிஞர்களை ஊக்குவிப்பதிலும் தமிழ் உணர்வாளர்களை எழுதத் தூண்டுவதிலும் ஆர்வத்தோடு உழைத்தவர்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பற்றிய செய்திகளை, அவர்கள் காலத்தில் நடந்த சம்பவங்களைக் கேட்பவர்களிடம் ஈடுபாட்டுடன் சொல்லக்கூடியவர் பல்லவன்.


இரண்டு மகன்கள், ஒரு மகள், மனைவியோடு வாழ்ந்த கவிஞர் பல்லவன் எளிமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். தோற்றத்திலும் எளிமை, வாழ்க்கை முறையிலும் எளிமையைக் கடைப்பிடிப்பவர்.

தமிழ்வழி கல்விக்குப் பாடுபட்ட தமிழ்ச்சான்றோர் பேரவையின் தொடக்கத்துக்கு ஒரு முக்கிய தூணாக விளங்கியவர் பல்லவன்.

இவரின் தமிழ்த்தொண்டைப் பாராட்டிப் பாவேந்தர் பாரதிதாசன் விருது, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் விருது, முகம் இதழின் மாமணி விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை நீலாங்கரையில் உடல்நிலை நோய்வாய்ப்பட்டிருந்த இவர் இன்று(12.07.2012) காலை 6 மணியளவில் இயற்கை எய்தினார்.

நாளை(13.07.2012) காலை பத்து மணியளவில் பாவலர் பல்லவன் அவர்களின் உடல் பெசண்டு நகர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தொடர்புகொள்ள அலைபேசி எண் : 9710437227.

தாய்மடி,
3/433, முதல் தெரு, பாண்டியன் சாலை, நீலாங்கரை, சென்னை – 600 041.

கணித்தமிழ் வல்லுநர் மா.ஆண்டோபீட்டர் மறைவு


மா.ஆண்டோபீட்டர்

கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவுநரும், கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான திரு.மா.ஆண்டோபீட்டர் அவர்கள் இன்று(12.07.2012) அதிகாலை 1.30 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். தந்தைபெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். உத்தமம் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர்.

ஆண்டோ பீட்டர் அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவர்தம் மாணவர்களுக்கும் நிறுவனத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

மா.ஆண்டோபீட்டர் வாழ்க்கைக்குறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். கணினி,இணையம்,அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மென்பொருள் தயாரிப்பு, இணையப்பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர். இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு.

சனி, 7 ஜூலை, 2012

அமெரிக்காவில் தமிழ்விழா தொடங்கியது...


தோழர் நல்லகண்ணு ஐயா பெட்னா விழா உரை

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரமைப்பான "பெட்னா"வின் தமிழ்விழா 06.07.2012 காலை முதல் தொடங்கி நடைபெற்றுவருகின்றது. தமிழகத்திலிருந்து தோழர் நல்லகண்ணு, பேராசிரியர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் எசு.இராமகிருட்டினன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். தமிழறிஞர் மு.வ. அவர்களின் நூற்றாண்டுவிழாவாகவும் இந்த விழா நடைபெறுகின்றது. மு.வ.அவர்களின் சிறப்பினைப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் எடுத்துரைத்து உரையாற்றுகின்றார். பெட்னாவின் வெள்ளிவிழாவாக இது கொண்டாடப்படுகின்றது. அமெரிகாகவின் பல மாநிலத்திலிருந்தும் தமிழர்கள் ஒன்றுகூடியுள்ளனர். மலேசியா- பினாங்கு மாநிலத்தின் துணைமுதலமைச்சர் இராமசாமி அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.

மாநாட்டில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் விவரம் கீழே:

வாழும் வரலாறு தோழர் நல்லகண்ணு

மலேசியத் துணை முதல்வர் பினாங்கு இராமசாமி

தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

கவனகர் முனைவர் கலை.செழியன்

தமிழச்சி தங்கபாண்டியன்

கல்வியாளர் பொன்னவைக்கோ

ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி

தமிழிசை கலைமாமணி டிகேஎஸ் கலைவாணன்

வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்

உடுக்கையடி ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக்

பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி

நடிகர் பரத்

நடிகர் அமலா பால்

கட்டியக்கலைஞர் சிவகார்த்திகேயன்

பகடிக்கலைஞர் மதுரைமுத்து

கட்டியக்கலைஞர் பிரியதர்ஷினி

பாடகர் தாமரைத்திரு சின்னக்குயில் சித்ரா

பாடகர் முகேஷ்

பாடகர் அனிதா கிருஷ்ணன்

இணைப்பாடகர் வித்யா வந்தனா சகோதரிகள்

தமிழன் - தமிழச்சி ($1000 பரிசுக்கான போட்டி)

இலக்கிய விநாடி வினா பல்லூடக நிகழ்ச்சி (multi-media program)

கவியரங்கம்

விவாதமேடை

பட்டிமன்றம்

தமிழ்ப் பன்முகத் திறன் போட்டி (Jeopardy, multi-media program)

தமிழிசை நிகழ்ச்சி

ஐங்கரன் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி

யோகா பயிலரங்கு

திருமணத் தகவல் மையம்

இளையோர் நிகழ்ச்சி

இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சி

வலைஞர் கூடல்

மருத்துவத் தொடர்கல்வி

தொழில்முனைவர் கருத்தரங்கம்

கணினிப் பொறியாளர் கருத்தரங்கம்

தமிழ்மணம் வலைப்பதிவு பயிற்சிப் பாசரங்கம்

பல்கலைக்கழக மேனாள் மாணவர் கலந்துரையாடல்

அறுபதுக்கும் மேற்பட்ட கடைகளுடன், தமிழ்த்திருவிழாச் சந்தை

முத்தான படைப்புகளுடன் வெள்ளி விழா மலர்

இவற்றுடன் தமிழ்ச்சங்கங்களின் அருமையான இயல், இசை, நாடக, நாட்டியங்கள்

மாநாட்டு நிகழ்ச்சி நிரலின் விரிவு அறிய இங்கே சொடுக்குக

மாநாட்டு நிகழ்வுகளை நேரலையில் காண இங்கே சொடுக்குக

மாநாட்டுப் வலைப்பதிவுகளுக்கு இங்கே சொடுக்குக

மாநாட்டு நோக்கம் பற்றிய நேர்காணலைக் காண இங்கே சொடுக்குக

வெள்ளிவிழா விருந்தினர்கள் பற்றி அறிய இங்கே சொடுக்குக

வியாழன், 5 ஜூலை, 2012

இணையத்தில் மொழிபெயர்ப்புகள்







இணையத்தின் வழியாகப் பல்வேறு பயன்களை நுகர்ந்து வருகின்றோம். வாழ்க்கையை எளிமைப்படுத்தி, உலகத்தை ஒரு சிற்றூராக மாற்றிய இணையம் மொழி வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி வருகின்றது. இணையத்தின் வரவால் ஒவ்வொரு மொழியிலும் சொற்கலப்பு, புதுச்சொல் உருவாக்கம், மொழிநடை மாற்றம் உருவாகியுள்ளன. அகராதி வளர்ச்சியும் இணையத்தில் சிறப்பாக உள்ளது. சொல்திருத்தி(spell checker), சொல் ஒலிப்பு, எழுத்து ஒலிப்பு வசதிகள், பாடத்திட்டங்கள், எழுத்து அறிமுகம், உரையாடல் வசதி, பார்வைக்குறைபாடு உடையவர்கள் படிக்கும் வசதி, வாய்பேசமுடியாதவர்களுக்கு உதவும் விழிமொழி, இணையத்தில் இருப்பதால் மொழியைப் பயில்பவர்களுக்கும் இணையம் பெரும் உதவி செய்கின்றது.

இணையத்தை ஒவ்வொரு மொழியினரும் தங்கள் மொழி வளர்ச்சிக்குப் பலவகையில் பயன்படுத்தி வருகின்றனர். தங்களுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் தங்கள் மொழிகொண்டு சாதித்துக்கொள்ளத் துடிக்கின்றனர். இதனை உணர்ந்த உலகப்புகழ் கணினி நிறுவனத்தினர் உலகின் அனைத்து மொழிகளையும் குறிவைத்துத் தங்கள் பணிகளை வழங்கத் தொடங்குகின்றனர். தேடுபொறிகளையும் இன்னபிற சேவைகளையும் உலகப்புகழ் நிறுவனத்தார் உலகமொழிகளுக்குரிய வகையில் வழங்குகின்றனர். கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தேடுபொறி வசதியை உலக அளவில் பலமொழிகளுக்கு வழங்குகின்றன. அதுபோல் விக்கிப்பீடியா நிறுவனத்தின் சேவை உலக மொழிகளை மனத்துள்கொண்டு வழங்கப்படுகின்றது.

இன்று மொழிபெயர்ப்பு உலக அளவில் தேவையான ஒரு பயன்பாடாக இருப்பதால் உலக நிறுவனங்கள் மொழிபெயர்ப்புப் பயன்பாட்டில் கவனம் செலுத்துகின்றன. கூகுள் நிறுவனம் மொழிபெயர்ப்பு வசதியில் கவனம் செலுத்தி உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் இந்தியமொழிகளில் தமிழ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வசதியை இணையத்தில் வழங்கியுள்ளது. ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் உள்ளதை மேற்கண்ட மொழிகளுக்கு மொழிபெயர்த்துத் தரும் பணியைக் கூகுள்நிறுவன மொழிபெயர்ப்பு மென்பொருள் வழங்குகின்றது. அதுபோல் வட்டார மொழிகளில் உள்ளதை மற்ற உலக மொழிகளுக்கும் ஒருநொடியில் மொழிபெயர்த்துக்கொள்ளலாம்.

இந்த மொழிபெயர்ப்புகளின் தரம், உண்மைத்தன்மை, தொடர்பு குறித்து மாற்றுக்கருத்து உண்டு. எனினும் இன்றைக்குத் தேவைப்படும் வசதிகளை இணையம் வழங்குகின்றது என்ற அடிப்படை உண்மையை மட்டும் இங்கு மனத்துள் பதித்துவைக்க வேண்டும். எளியநிலையில் உள்ள மடல்கள், அறிவிப்புகள், அறிக்கைகளைக் கூகுள் நிறுவனமொழிபெயர்ப்பு மென்பொருள் சிறப்பாகச் செய்கின்றது. தமிழ் மொழிபெயர்ப்புக்குரிய வசதி 22. 06. 2011 இல் தொடங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு உலக அளவில் 11 மொழிகளில் தொடங்கப்பட்ட இச்சேவை தற்போது 63 மொழிகளில் செயல்படுகிறது.

கூகுள் வழங்கும் மொழிபெயர்ப்பு சேவையால் பக்கம் பக்கமாக உள்ள மூலபாடங்களை விரைந்து மொழிபெயர்த்துக்கொள்ள வசதி ஏற்பட்டுள்ளது. ஒருமொழியில் உள்ளதை அடுத்த நொடியில் வேறுவேறுமொழிகளில் மொழிபெயர்த்துக்கொள்ளமுடியும். மொழிபெயர்த்தவற்றை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளது. எனவே இத்தகு மொழிபெயர்ப்பு வசதிகள் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பொழுது துல்லியமான மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை. எனினும் சொல்வளம் மிகுந்து காணப்படும் தமிழ்மொழிக்குத் தனிக்கவனம் செலுத்தி இந்த மொழிபெயர்ப்பு மென்பொருளை வளப்படுத்த வேண்டியுள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு மென்பொருள் பெயர்ச்சொற்களை நன்கு மொழிபெயர்த்துக் காட்டுகின்றது. குறிப்பாகப் பொன்மொழி என்ற பெயர்ச்சொல்லை motto என்று மொழிபெயர்க்கின்றது.
திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களை மேல்நாட்டு அறிஞர்களும், தமிழகத்து அறிஞர்களும் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளனர். அவர்களின் துல்லியமான மொழிபெயர்ப்பைக் கூகுள் நிறுவன மொழிபெயர்ப்பில் எதிர்பார்க்க.முடியாது.

சொற்களை இணைத்து மொழிபெயர்க்கும்பொழுது ஒரு மொழிபெயர்ப்பு வடிவமும், சொற்களைப் பிரித்து மொழிபெயர்க்கும்பொழுது ஒருவகை மொழிபெயர்ப்பு வடிவமும் கிடைக்கின்றன. குறிப்பாகத் திருக்குறள் கடவுள்வாழ்த்து என்று ஒரு சொல்லாக்கிப் பெயர்க்கும்பொழுது Katavulvalttu என்ற வடிவம் கிடைக்கின்றது. கடவுள் வாழ்த்து என்று பிரித்துப் பெயர்க்கும்பொழுது, God's blessing என்ற வடிவைப் பெறமுடிகின்றது. திருக்குறளைப் பெயர்த்த போப் அடிகளார் The Praise of God என்று பெயர்த்துள்ளார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

என்ற திருக்குறளைப் போப் அடிகளார் A, as its first of letters, every speech maintains;
The 'Primal Deity' is First through all the world's domains
என்று பெயர்த்துள்ளார்.

இந்தக் குறளைக் கூகுள் மொழிபெயர்ப்பில் Adi eluttellam First Alphabetically
Bhagwant mutarre world என்று பெறமுடிகின்றது.

வான் சிறப்பு என்னும் அதிகாரத் தலைப்பைப் போப் அடிகளார் The Excellence of Rain என்று பெயர்த்துள்ளார். கூகுள் மொழிபெயர்ப்பு: Van Special என்று அமைகின்றது.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுஉணரல் பாற்று.

என்னும் திருக்குறளைப் போப் அடிகளார்

The World its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives. என்று பெயர்த்துள்ளதை

கூகுள் மொழிபெயர்ப்பு: Where the world by providing vanninru
Parru tanamiltam enruunaral. என்று பெயர்த்துக்காட்டுகின்றது.

காமத்துப்பால் என்னும் அதிகாரத் தலைப்பை Love என்று போப் அடிகளார் பெயர்க்க கூகுள்மொழிபெயர்ப்பு: If kamattup என்று பெயர்க்கின்றது.

தகையணங்குறுத்தல் என்பதை Mental Disturbance caused by the Beauty of the Princess என்று போப் அடிகளார் பெயர்க்க கூகுள்மொழிபெயர்ப்பு: Takaiyanankuruttal என்று அமைகின்றது.

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று

என்னும் திருக்குறளை The palm-tree's fragrant wine,
To those who is taste yields joys divine; But love hath rare felicity For those that only see! என்று போப் அடிகளார் பெயர்க்க, கூகுள்மொழிபெயர்ப்பு: If untarkan or atunara kamampe Makilceytal saw today என்று பெயர்த்துக்காட்டுகின்றது.


மொழிபெயர்க்கும் தொடர்களை ஒலித்துக்காட்டச்செய்ய முடியும். 63 மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதி நோக்கி இணையத் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளமை மிகச்சிறந்த வளர்ச்சியாகும்.

பிறமொழிகளில் உள்ள செய்திகளை ஓரளவு புரிந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு உதவும். மேலும் பெயரைப் பிறமொழியில் எழுதிப் பார்க்கவோ, மொழிபெயர்ப்பு செய்யவோ இந்த மொழிபெயர்ப்பு வசதி ஓரளவு உதவுகின்றது. நமக்குப் பிறமொழியில் மின்னஞ்சல் வந்தால் நமக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்துப் படிக்க இந்த இணையவழிமொழிபெயர்ப்பு உதவும். குறிப்பாக ஜிமெயிலுக்கு ஒரு மலையாளமொழியில் மின்னஞ்சல் வந்தால் அதனை உடன் தமிழுக்கு அல்லது வேறுமொழிக்கு மொழிபெயர்த்துப் படித்துக்கொள்ளலாம். இது ஒரு முறை என்றால் நமக்கு அன்றாடப் பயன்பாட்டில் உள்ள செய்திகளை உடனுக்குடன் மொழிபெயர்த்து வழங்கும் தொழில்முறை மொழிபெயர்ப்பு இன்று இணையத்தில் மிகப்பெரிய தொழிலாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு நடைபெறும் இணையமொழிபெயர்ப்புகள் குறித்து இங்கு விரிவாக எண்ணிப்பார்க்கலாம்.

இணைய மொழிபெயர்ப்புகளில் சுற்றுலா, விளம்பரங்கள், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் குறித்த மொழிபெயர்ப்புகள் இணையம் வழியாக அதிகம் நடைபெறுகின்றன. நிதி சார்ந்த மொழிபெயர்ப்புகள், ஆண்டறிக்கைகள், நிறுவனங்களின் மாதாந்திர அறிக்கைகள், பாலிசிகள், வங்கிப் படிவங்கள், ஏற்றுமதி இறக்குமதி படிவங்கள், மருத்துவம் சார்ந்த அறிவிப்புப்படிவங்கள் ஆகியவற்றை உலக அளவில் கிளைபரப்பி வணிகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையம் வழியாக மொழிபெயர்த்து வழங்க இன்று தேவை மிகுதியாக உள்ளது.

எடுத்துக்காட்டாக ஆம்வே, நோக்கியா, நிக்கான் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் வழங்கும் வணிகக் குறிப்பட்டைகள், கையேடுகள் இன்று ஆங்கிலத்திலும் தமிழிலுமாக உள்ளன. இத்தகு நிறுவனங்களின் படைப்புகளைப் புரிந்துகொண்டு மக்கள் நடையில் மொழிபெயர்த்து வழங்கத் தகுதிவாய்ந்த மொழிபெயர்ப்பாளர்களை இணையவழிமொழிபெயர்ப்பு நிறுவனங்கள் விரும்புகின்றன.

மொழிபெயர்ப்பு என்பது மொழி வளர்ச்சிக்குரிய பணி என்ற நிலையிலிருந்து வளர்ந்து இன்று பல கோடி பணம் புரளும் தொழிலாக மாறியுள்ளது. உலக அளவில் பல்வேறு அமைப்புகள் இணையத்தில் மொழிபெயர்ப்புக்கு என உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் மொழிபெயர்ப்பு சேவைகள் பற்றிய செய்திகளை இணையத்தில் வெளியிடுகின்றனர். தாங்கள் வழங்கும் சேவை சிறப்பு, விரைவு, தரம் இவற்றைக் குறிப்பிட்டுத் தங்கள் பணிகளை விளம்பரப்படுத்துகின்றன.

ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை மொழிகளில் தங்களின் மொழிபெயர்ப்புச் சேவை நடைபெறுகின்றது என்று பெருமையுடன் செய்திகளை வெளியிடுகின்றன.
இணைய மொழிபெயர்ப்புகள் நேரடியாக நடைபெறாமல் இணையத்தில் நடைபெறுவதால் விரைவில் நடைபெறுகின்றது. விரைவில் பணி முடிவதுபோல் பல்வேறு பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகின்றது. குறிப்பிட்ட நிறுவனங்கள் மொழிபெயர்க்கும் ஆர்டர்களை வழங்கிவிட்டு, மொழிபெயர்த்த பகுதிகளையும் பெற்றுக்கொண்டு பணம் குறித்த காலத்திற்குள் வழங்காமல் தங்கள் நிறுவனத்தை மூடிவிடுவது உண்டு. அதனால் மொழிபெயர்க்க ஆர்டர் வாங்கிய நிறுவனம் மொழிபெயர்ப்பாளர்க்குரிய தொகையைத் தம் கைப்பொறுப்பிலிருந்து வழங்க வேண்டும். நிறுவனத்தை நிர்வகிக்கும் செலவுடன் மொழிபெயர்ப்பாளர்க்குரிய தொகையையும் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் மொழிபெயர்ப்பு நிறுவனங்ஙகள் இழப்பில் இயங்குவதும் உண்டு. இவற்றைக் கடந்து சில நிறுவனங்கள் மிகப்பெரிய இலாபம் ஈட்டும் தொழிலாக இதனை நடத்தி வருகின்றன.

மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் மற்ற மொழிகளில் ஓரமைப்பின்கீழ் செயல்பட்டாலும் இவர்களுக்கு இடையே மற்ற சங்கங்களைப் போன்று ஒற்றுமை இல்லை. இந்த அமைப்பால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பு நிறுவனங்களுக்கு இடையில் அமைப்பு ரீதியிலான ஒற்றுமை இல்லை. இவ்வாறு உள்ள நிறுவன அமைப்புகள் ஒன்று இரண்டு என்று எண்ணிவிடலாம்.

இணையத்தில் தமிழ்மொழிபெயர்ப்புக்கு இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இணையவழி மொழிபெயர்ப்புக்கு உரிய பொருண்மை பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கைக்கு உரிய செய்திகளாக இருப்பதாலும் தொழில்நுட்பம், அறிவியல், சட்டம், விளம்பரம் சார்ந்த செய்திகளாக இருப்பதாலும் இவை குறித்த அறிவுடையவர்களுக்கு இணையவழி மொழிபெயர்ப்பு மிகச்சிறந்த ஊதியத்திற்கு வழிவகுக்கும் களமாக உள்ளது.
தமிழ் மொழிபெயர்ப்பு என்றதும் இணையவழி மொழிபெயர்ப்பில் மக்களின் பயன்பாட்டில் இல்லாத அருஞ்சொற்களைக் கொண்டு மொழிபெயர்க்கும் வல்லுநர்களுக்கு இங்கு வாய்ப்பு குறைவு. இவர்களின் மொழிபெயர்ப்புகளை நிறுவனங்கள் ஏற்பதில்லை. வாழும் சொற்களையும் செய்திகளை மனக்கண்ணில் நிறுத்தும் சொற்களையும் கொண்ட மொழிபெயர்ப்புகளையே விரும்புகின்றனர்.

மேலும் குறித்த காலத்தில் மொழிபெயர்த்து வழங்க வேண்டும். சிலபொழுது குறிப்பிடும் மணிநேரத்தில் மொழிபெயர்க்க வேண்டியும் இருக்கலாம். அவ்வாறு விரைந்து மொழிபெயர்த்து வழங்கும்பொழுது சேவைக்கட்டணம் மிகுதியாக அமைவதும் உண்டு. ஒவ்வொரு நிறுவனமும் மொழிபெயர்ப்புக்கு என்று குறிப்பிட்ட நிறுவனங்களைத் தகுதி அடிப்படையில் பட்டியலிட்டு வைத்திருக்கும். தாங்கள் விரும்பும் நிறுவனம் மொழிபெயர்க்க கால நீட்டிப்பு கேட்டால் அல்லது கூடுதல் தொகை கேட்டால் அடுத்த நிறுவனத்துக்கு மொழிபெயர்ப்பு வாய்ப்பு வழங்கப்படும். பெரும்பாலும் மொழிபெயர்ப்பு விவரங்கள், பணப்பரிமாற்றம் யாவும் இணையத்தில் நடைபெறுவதால் இவற்றில் ஏமாற்றுகள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளதாக மொழிபெயர்ப்பு நிறுவன உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இணையமொழிபெயர்ப்பின் நுட்பம், தேவை, தொழில்நுட்ப அறிவு, உலகப்போக்கு இவற்றை அறிந்துகொண்டு இணையம் வழியாக மொழிபெயர்க்கத் தொடங்கினால் மிகப்பெரும் பணம் ஈட்டும் துறையாக இம்மொழிபெயர்ப்புத்துறை அமையும்.






நன்றி:
குமுதம்- தீராநதி (சூலை,2012)
"தூரிகா" திரு.வெங்கடேசு

குறிப்பு: இக்கட்டுரையை எடுத்தாளும் நண்பர்கள் கட்டுரையாளன் பெயர், வெளியான இதழ், நாள், ஆண்டு, இணையஇணைப்பு பற்றிய குறிப்புடன் வெளியிடுதல் நன்று.

புதன், 4 ஜூலை, 2012

உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு, 2012

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு, 2012, திசம்பர் 15,16 நாள்களில் சென்னை - கிண்டியிலுள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா விடுதியில் நடைபெற உள்ளது. தமிழறிஞர்கள், ஆசிரியர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

மாநாட்டு ஆய்வுக்கருப்பொருள்: "தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் எதிர்காலச் சவால்கள்"

தலைப்புகள்

1. தமிழ் மொழி கற்றல் கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறைகள்
2. தமிழ் மொழி பாடப்பொருள் - காலத்திற்கேற்றவை
3. மனனம் செய்து கற்றல் மூலம் விளையும் பயன்கள்
4. தமிழ் மொழியின் எதிர்காலம்
5. ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்க்கின்றனவா?
6. தமிழை இரண்டாம் மொழியாகப் பயிலும் தமிழ் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் வழிமுறைகள்
7. பிற மொழி மாணவர்கள் தமிழை எளிமையாகக் கற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள்
8. தமிழ் மொழித்திறன் வளர்ப்பு - வழிவகைகள்
9. தமிழ் வளர்த்த அறிஞர்கள்
10. ஆசிரியப்பணி அறப்பணி

கட்டுரைகள் 20 நிமிடங்களுக்குள் வழங்கும் வண்ணம் அமைதல் வேண்டும்.

முழு வடிவில் கட்டுரைகள் அனுப்ப இறுதி நாள் : 30/08/2012

பேராளர் கட்டணம் : ரூ.5000/-

கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி:

ந. ரெங்கராஜன்
பொதுச்செயலாளர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
78, பெல்சு சாலை,
சென்னை - 600005.
பேசி : 044-28510575

செல்பேசி எண்கள்: 0091 94431 89525 / 0091 80125 22222

மின்னஞ்சல் : testf@asiriyarkoottani.org

இணையதளம் : www.tamilkalam.in