நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 5 ஜூலை, 2012

இணையத்தில் மொழிபெயர்ப்புகள்







இணையத்தின் வழியாகப் பல்வேறு பயன்களை நுகர்ந்து வருகின்றோம். வாழ்க்கையை எளிமைப்படுத்தி, உலகத்தை ஒரு சிற்றூராக மாற்றிய இணையம் மொழி வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி வருகின்றது. இணையத்தின் வரவால் ஒவ்வொரு மொழியிலும் சொற்கலப்பு, புதுச்சொல் உருவாக்கம், மொழிநடை மாற்றம் உருவாகியுள்ளன. அகராதி வளர்ச்சியும் இணையத்தில் சிறப்பாக உள்ளது. சொல்திருத்தி(spell checker), சொல் ஒலிப்பு, எழுத்து ஒலிப்பு வசதிகள், பாடத்திட்டங்கள், எழுத்து அறிமுகம், உரையாடல் வசதி, பார்வைக்குறைபாடு உடையவர்கள் படிக்கும் வசதி, வாய்பேசமுடியாதவர்களுக்கு உதவும் விழிமொழி, இணையத்தில் இருப்பதால் மொழியைப் பயில்பவர்களுக்கும் இணையம் பெரும் உதவி செய்கின்றது.

இணையத்தை ஒவ்வொரு மொழியினரும் தங்கள் மொழி வளர்ச்சிக்குப் பலவகையில் பயன்படுத்தி வருகின்றனர். தங்களுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் தங்கள் மொழிகொண்டு சாதித்துக்கொள்ளத் துடிக்கின்றனர். இதனை உணர்ந்த உலகப்புகழ் கணினி நிறுவனத்தினர் உலகின் அனைத்து மொழிகளையும் குறிவைத்துத் தங்கள் பணிகளை வழங்கத் தொடங்குகின்றனர். தேடுபொறிகளையும் இன்னபிற சேவைகளையும் உலகப்புகழ் நிறுவனத்தார் உலகமொழிகளுக்குரிய வகையில் வழங்குகின்றனர். கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தேடுபொறி வசதியை உலக அளவில் பலமொழிகளுக்கு வழங்குகின்றன. அதுபோல் விக்கிப்பீடியா நிறுவனத்தின் சேவை உலக மொழிகளை மனத்துள்கொண்டு வழங்கப்படுகின்றது.

இன்று மொழிபெயர்ப்பு உலக அளவில் தேவையான ஒரு பயன்பாடாக இருப்பதால் உலக நிறுவனங்கள் மொழிபெயர்ப்புப் பயன்பாட்டில் கவனம் செலுத்துகின்றன. கூகுள் நிறுவனம் மொழிபெயர்ப்பு வசதியில் கவனம் செலுத்தி உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் இந்தியமொழிகளில் தமிழ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வசதியை இணையத்தில் வழங்கியுள்ளது. ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் உள்ளதை மேற்கண்ட மொழிகளுக்கு மொழிபெயர்த்துத் தரும் பணியைக் கூகுள்நிறுவன மொழிபெயர்ப்பு மென்பொருள் வழங்குகின்றது. அதுபோல் வட்டார மொழிகளில் உள்ளதை மற்ற உலக மொழிகளுக்கும் ஒருநொடியில் மொழிபெயர்த்துக்கொள்ளலாம்.

இந்த மொழிபெயர்ப்புகளின் தரம், உண்மைத்தன்மை, தொடர்பு குறித்து மாற்றுக்கருத்து உண்டு. எனினும் இன்றைக்குத் தேவைப்படும் வசதிகளை இணையம் வழங்குகின்றது என்ற அடிப்படை உண்மையை மட்டும் இங்கு மனத்துள் பதித்துவைக்க வேண்டும். எளியநிலையில் உள்ள மடல்கள், அறிவிப்புகள், அறிக்கைகளைக் கூகுள் நிறுவனமொழிபெயர்ப்பு மென்பொருள் சிறப்பாகச் செய்கின்றது. தமிழ் மொழிபெயர்ப்புக்குரிய வசதி 22. 06. 2011 இல் தொடங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு உலக அளவில் 11 மொழிகளில் தொடங்கப்பட்ட இச்சேவை தற்போது 63 மொழிகளில் செயல்படுகிறது.

கூகுள் வழங்கும் மொழிபெயர்ப்பு சேவையால் பக்கம் பக்கமாக உள்ள மூலபாடங்களை விரைந்து மொழிபெயர்த்துக்கொள்ள வசதி ஏற்பட்டுள்ளது. ஒருமொழியில் உள்ளதை அடுத்த நொடியில் வேறுவேறுமொழிகளில் மொழிபெயர்த்துக்கொள்ளமுடியும். மொழிபெயர்த்தவற்றை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளது. எனவே இத்தகு மொழிபெயர்ப்பு வசதிகள் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பொழுது துல்லியமான மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை. எனினும் சொல்வளம் மிகுந்து காணப்படும் தமிழ்மொழிக்குத் தனிக்கவனம் செலுத்தி இந்த மொழிபெயர்ப்பு மென்பொருளை வளப்படுத்த வேண்டியுள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு மென்பொருள் பெயர்ச்சொற்களை நன்கு மொழிபெயர்த்துக் காட்டுகின்றது. குறிப்பாகப் பொன்மொழி என்ற பெயர்ச்சொல்லை motto என்று மொழிபெயர்க்கின்றது.
திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களை மேல்நாட்டு அறிஞர்களும், தமிழகத்து அறிஞர்களும் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளனர். அவர்களின் துல்லியமான மொழிபெயர்ப்பைக் கூகுள் நிறுவன மொழிபெயர்ப்பில் எதிர்பார்க்க.முடியாது.

சொற்களை இணைத்து மொழிபெயர்க்கும்பொழுது ஒரு மொழிபெயர்ப்பு வடிவமும், சொற்களைப் பிரித்து மொழிபெயர்க்கும்பொழுது ஒருவகை மொழிபெயர்ப்பு வடிவமும் கிடைக்கின்றன. குறிப்பாகத் திருக்குறள் கடவுள்வாழ்த்து என்று ஒரு சொல்லாக்கிப் பெயர்க்கும்பொழுது Katavulvalttu என்ற வடிவம் கிடைக்கின்றது. கடவுள் வாழ்த்து என்று பிரித்துப் பெயர்க்கும்பொழுது, God's blessing என்ற வடிவைப் பெறமுடிகின்றது. திருக்குறளைப் பெயர்த்த போப் அடிகளார் The Praise of God என்று பெயர்த்துள்ளார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

என்ற திருக்குறளைப் போப் அடிகளார் A, as its first of letters, every speech maintains;
The 'Primal Deity' is First through all the world's domains
என்று பெயர்த்துள்ளார்.

இந்தக் குறளைக் கூகுள் மொழிபெயர்ப்பில் Adi eluttellam First Alphabetically
Bhagwant mutarre world என்று பெறமுடிகின்றது.

வான் சிறப்பு என்னும் அதிகாரத் தலைப்பைப் போப் அடிகளார் The Excellence of Rain என்று பெயர்த்துள்ளார். கூகுள் மொழிபெயர்ப்பு: Van Special என்று அமைகின்றது.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுஉணரல் பாற்று.

என்னும் திருக்குறளைப் போப் அடிகளார்

The World its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives. என்று பெயர்த்துள்ளதை

கூகுள் மொழிபெயர்ப்பு: Where the world by providing vanninru
Parru tanamiltam enruunaral. என்று பெயர்த்துக்காட்டுகின்றது.

காமத்துப்பால் என்னும் அதிகாரத் தலைப்பை Love என்று போப் அடிகளார் பெயர்க்க கூகுள்மொழிபெயர்ப்பு: If kamattup என்று பெயர்க்கின்றது.

தகையணங்குறுத்தல் என்பதை Mental Disturbance caused by the Beauty of the Princess என்று போப் அடிகளார் பெயர்க்க கூகுள்மொழிபெயர்ப்பு: Takaiyanankuruttal என்று அமைகின்றது.

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று

என்னும் திருக்குறளை The palm-tree's fragrant wine,
To those who is taste yields joys divine; But love hath rare felicity For those that only see! என்று போப் அடிகளார் பெயர்க்க, கூகுள்மொழிபெயர்ப்பு: If untarkan or atunara kamampe Makilceytal saw today என்று பெயர்த்துக்காட்டுகின்றது.


மொழிபெயர்க்கும் தொடர்களை ஒலித்துக்காட்டச்செய்ய முடியும். 63 மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதி நோக்கி இணையத் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளமை மிகச்சிறந்த வளர்ச்சியாகும்.

பிறமொழிகளில் உள்ள செய்திகளை ஓரளவு புரிந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு உதவும். மேலும் பெயரைப் பிறமொழியில் எழுதிப் பார்க்கவோ, மொழிபெயர்ப்பு செய்யவோ இந்த மொழிபெயர்ப்பு வசதி ஓரளவு உதவுகின்றது. நமக்குப் பிறமொழியில் மின்னஞ்சல் வந்தால் நமக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்துப் படிக்க இந்த இணையவழிமொழிபெயர்ப்பு உதவும். குறிப்பாக ஜிமெயிலுக்கு ஒரு மலையாளமொழியில் மின்னஞ்சல் வந்தால் அதனை உடன் தமிழுக்கு அல்லது வேறுமொழிக்கு மொழிபெயர்த்துப் படித்துக்கொள்ளலாம். இது ஒரு முறை என்றால் நமக்கு அன்றாடப் பயன்பாட்டில் உள்ள செய்திகளை உடனுக்குடன் மொழிபெயர்த்து வழங்கும் தொழில்முறை மொழிபெயர்ப்பு இன்று இணையத்தில் மிகப்பெரிய தொழிலாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு நடைபெறும் இணையமொழிபெயர்ப்புகள் குறித்து இங்கு விரிவாக எண்ணிப்பார்க்கலாம்.

இணைய மொழிபெயர்ப்புகளில் சுற்றுலா, விளம்பரங்கள், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் குறித்த மொழிபெயர்ப்புகள் இணையம் வழியாக அதிகம் நடைபெறுகின்றன. நிதி சார்ந்த மொழிபெயர்ப்புகள், ஆண்டறிக்கைகள், நிறுவனங்களின் மாதாந்திர அறிக்கைகள், பாலிசிகள், வங்கிப் படிவங்கள், ஏற்றுமதி இறக்குமதி படிவங்கள், மருத்துவம் சார்ந்த அறிவிப்புப்படிவங்கள் ஆகியவற்றை உலக அளவில் கிளைபரப்பி வணிகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையம் வழியாக மொழிபெயர்த்து வழங்க இன்று தேவை மிகுதியாக உள்ளது.

எடுத்துக்காட்டாக ஆம்வே, நோக்கியா, நிக்கான் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் வழங்கும் வணிகக் குறிப்பட்டைகள், கையேடுகள் இன்று ஆங்கிலத்திலும் தமிழிலுமாக உள்ளன. இத்தகு நிறுவனங்களின் படைப்புகளைப் புரிந்துகொண்டு மக்கள் நடையில் மொழிபெயர்த்து வழங்கத் தகுதிவாய்ந்த மொழிபெயர்ப்பாளர்களை இணையவழிமொழிபெயர்ப்பு நிறுவனங்கள் விரும்புகின்றன.

மொழிபெயர்ப்பு என்பது மொழி வளர்ச்சிக்குரிய பணி என்ற நிலையிலிருந்து வளர்ந்து இன்று பல கோடி பணம் புரளும் தொழிலாக மாறியுள்ளது. உலக அளவில் பல்வேறு அமைப்புகள் இணையத்தில் மொழிபெயர்ப்புக்கு என உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் மொழிபெயர்ப்பு சேவைகள் பற்றிய செய்திகளை இணையத்தில் வெளியிடுகின்றனர். தாங்கள் வழங்கும் சேவை சிறப்பு, விரைவு, தரம் இவற்றைக் குறிப்பிட்டுத் தங்கள் பணிகளை விளம்பரப்படுத்துகின்றன.

ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை மொழிகளில் தங்களின் மொழிபெயர்ப்புச் சேவை நடைபெறுகின்றது என்று பெருமையுடன் செய்திகளை வெளியிடுகின்றன.
இணைய மொழிபெயர்ப்புகள் நேரடியாக நடைபெறாமல் இணையத்தில் நடைபெறுவதால் விரைவில் நடைபெறுகின்றது. விரைவில் பணி முடிவதுபோல் பல்வேறு பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகின்றது. குறிப்பிட்ட நிறுவனங்கள் மொழிபெயர்க்கும் ஆர்டர்களை வழங்கிவிட்டு, மொழிபெயர்த்த பகுதிகளையும் பெற்றுக்கொண்டு பணம் குறித்த காலத்திற்குள் வழங்காமல் தங்கள் நிறுவனத்தை மூடிவிடுவது உண்டு. அதனால் மொழிபெயர்க்க ஆர்டர் வாங்கிய நிறுவனம் மொழிபெயர்ப்பாளர்க்குரிய தொகையைத் தம் கைப்பொறுப்பிலிருந்து வழங்க வேண்டும். நிறுவனத்தை நிர்வகிக்கும் செலவுடன் மொழிபெயர்ப்பாளர்க்குரிய தொகையையும் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் மொழிபெயர்ப்பு நிறுவனங்ஙகள் இழப்பில் இயங்குவதும் உண்டு. இவற்றைக் கடந்து சில நிறுவனங்கள் மிகப்பெரிய இலாபம் ஈட்டும் தொழிலாக இதனை நடத்தி வருகின்றன.

மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் மற்ற மொழிகளில் ஓரமைப்பின்கீழ் செயல்பட்டாலும் இவர்களுக்கு இடையே மற்ற சங்கங்களைப் போன்று ஒற்றுமை இல்லை. இந்த அமைப்பால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பு நிறுவனங்களுக்கு இடையில் அமைப்பு ரீதியிலான ஒற்றுமை இல்லை. இவ்வாறு உள்ள நிறுவன அமைப்புகள் ஒன்று இரண்டு என்று எண்ணிவிடலாம்.

இணையத்தில் தமிழ்மொழிபெயர்ப்புக்கு இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இணையவழி மொழிபெயர்ப்புக்கு உரிய பொருண்மை பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கைக்கு உரிய செய்திகளாக இருப்பதாலும் தொழில்நுட்பம், அறிவியல், சட்டம், விளம்பரம் சார்ந்த செய்திகளாக இருப்பதாலும் இவை குறித்த அறிவுடையவர்களுக்கு இணையவழி மொழிபெயர்ப்பு மிகச்சிறந்த ஊதியத்திற்கு வழிவகுக்கும் களமாக உள்ளது.
தமிழ் மொழிபெயர்ப்பு என்றதும் இணையவழி மொழிபெயர்ப்பில் மக்களின் பயன்பாட்டில் இல்லாத அருஞ்சொற்களைக் கொண்டு மொழிபெயர்க்கும் வல்லுநர்களுக்கு இங்கு வாய்ப்பு குறைவு. இவர்களின் மொழிபெயர்ப்புகளை நிறுவனங்கள் ஏற்பதில்லை. வாழும் சொற்களையும் செய்திகளை மனக்கண்ணில் நிறுத்தும் சொற்களையும் கொண்ட மொழிபெயர்ப்புகளையே விரும்புகின்றனர்.

மேலும் குறித்த காலத்தில் மொழிபெயர்த்து வழங்க வேண்டும். சிலபொழுது குறிப்பிடும் மணிநேரத்தில் மொழிபெயர்க்க வேண்டியும் இருக்கலாம். அவ்வாறு விரைந்து மொழிபெயர்த்து வழங்கும்பொழுது சேவைக்கட்டணம் மிகுதியாக அமைவதும் உண்டு. ஒவ்வொரு நிறுவனமும் மொழிபெயர்ப்புக்கு என்று குறிப்பிட்ட நிறுவனங்களைத் தகுதி அடிப்படையில் பட்டியலிட்டு வைத்திருக்கும். தாங்கள் விரும்பும் நிறுவனம் மொழிபெயர்க்க கால நீட்டிப்பு கேட்டால் அல்லது கூடுதல் தொகை கேட்டால் அடுத்த நிறுவனத்துக்கு மொழிபெயர்ப்பு வாய்ப்பு வழங்கப்படும். பெரும்பாலும் மொழிபெயர்ப்பு விவரங்கள், பணப்பரிமாற்றம் யாவும் இணையத்தில் நடைபெறுவதால் இவற்றில் ஏமாற்றுகள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளதாக மொழிபெயர்ப்பு நிறுவன உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இணையமொழிபெயர்ப்பின் நுட்பம், தேவை, தொழில்நுட்ப அறிவு, உலகப்போக்கு இவற்றை அறிந்துகொண்டு இணையம் வழியாக மொழிபெயர்க்கத் தொடங்கினால் மிகப்பெரும் பணம் ஈட்டும் துறையாக இம்மொழிபெயர்ப்புத்துறை அமையும்.






நன்றி:
குமுதம்- தீராநதி (சூலை,2012)
"தூரிகா" திரு.வெங்கடேசு

குறிப்பு: இக்கட்டுரையை எடுத்தாளும் நண்பர்கள் கட்டுரையாளன் பெயர், வெளியான இதழ், நாள், ஆண்டு, இணையஇணைப்பு பற்றிய குறிப்புடன் வெளியிடுதல் நன்று.

கருத்துகள் இல்லை: