நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 18 ஜூலை, 2012

தமிழறிஞர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள்



தமிழறிஞர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள்

மதுரை யாதவர் கல்லூரியில் பணிபுரிந்து தரமான தமிழ் மாணவர்களை உருவாக்கியும் தரமான தமிழாய்வுகளை நிகழ்த்தியும் உயர்வுபெற்றவர் முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி ஆவார். பணிநிறைவுக்குப் பின்னர் மதுரையில் தமிழ்வாழ்வு வாழ்ந்துவரும் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள் எழுதிய தமிழ்நாடகக்(குறுங்)கலைக்களஞ்சியம் என்னும் நூலை அண்மையில் படிக்கும் வாய்ப்பு அமைந்தது.

தமிழ்நாடகக்(குறுங்) கலைக்களஞ்சியம் நூலின் முன்னுரையைப் படித்தவுடன் ஐயாவுடன் உடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு என் வணக்கத்தையும் பாராட்டையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன். இசைமேதை வீ.ப,கா.சுந்தரம் அவர்களுக்குப் பிறகுத் தமிழகக் கலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க நூலாக வெ.மு.ஷாஜகான் கனி அவர்களின் தமிழ் நாடகக் (குறுங்) கலைக்களஞ்சியத்தைப் பார்க்கின்றேன். சங்கநூல்களில் இசை, நாடகம் சார்ந்த சொற்களுக்குப் பேராசிரியர் அவர்கள் வழங்கியுள்ள விளக்கங்களின் நுட்பம் என்னைப் பெருமகிழ்வு கொள்ளவைத்தது.சங்க நூல்களிலிருந்து பொருத்தமான மேற்கோள்களால் தம் நூலை யாத்துள்ளார்.

சங்கப்பரப்பில் உலா வந்தவர்களால்தான் இவ்வாறு உண்மை காணவும், நயம் காணவும் முடியும். அந்த வகையில் இந்தத் தமிழ்நாடகக்(குறுங்) கலைக்களஞ்சியம் 160 பக்கங்களில் அச்சாகியுள்ளது. இந்த நூலில் 555 சொற்களுக்குச் சிறியதும் பெரியதுமான விளக்கங்களை வரைந்துள்ளார்கள். இந்த நூல் இன்னும் பெருநூலாகக் கருக்கொளவும் உருக்கொளவும் வேண்டும் .இவர்களைப் போலும் மேதைகள் ஆய்வுநிறுவனங்களில் முழுநேரமும் பணிபுரிந்திருந்தால் தமிழுக்கு ஆக்கமான பல படைப்புகள் கிடைத்திருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கையாகும்.



தமிழ்நாடகக்(குறுங்) கலைக்களஞ்சியம் என்னும் இந்த நூலில் ஆய்ந்துகண்ட பல உண்மைகளை முன்வைத்துள்ளார். இவை குறித்து அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவலாம். ஆனால் பேராசிரியர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள் யாரும் சொல்லாத பல புதிய கருத்துகளை முன்வைத்துள்ளார். தொல்காப்பியர் புறத்திணையியலில் போர்வாழ்க்கையைக் கூறுவதாக மேற்போக்காகத் தெரியினும் நாடக வரலாற்றையே அதில் பதிவு செய்துள்ளார் என்கின்றார்(முன்னுரை). தொல்காப்பியர் காலத்தில் நாடகம் குறித்த வேறொரு சொல் பெருவழக்காக இருந்திருக்கவேண்டும். அந்தச் சொல் “நிலை” என்று குறிப்பிடுகின்றார்(துடிநிலை, கொற்றவைநிலை, கழல்நிலை, பிள்ளைநிலை…)

புறத்திணையியலில் 60 நாடகங்களையும், சங்க இலக்கியங்களில் 46 நாடகங்களையும் அக்கால நாடக இசைக்கலைஞர்களாக இருபது கலைஞர்களையும் இனங்கண்டுள்ளோம் என்று பேராசிரியர் வெ.மு.ஷாஜகான் கனி குறிப்பிட்டுள்ளமை இவர்தம் தமிழாய்வுத் தகைமைக்குச் சான்றாகும்.

அகத்தியம் என்ற சொல்லுக்கு விளக்கம் தரும் பேராசிரியர்,” தமிழ் நாடக இலக்கண நூல்(தொல்காப்பியத்தின் முதல்நூல் என உரையாசிரியர் கற்பனையாகக் கூறும் அகத்தியம் வேறு). "நாடகத் தமிழ்நூலாகிய பரதம், அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன என்பர்"( சிலப்.அடியார்க்.உரைப்பா). தமிழ்நாடகத் தொன்னூல் பரதம் அதற்கடுத்த பழைமையது அகத்தியம். சங்க இலக்கியங்களில் அகத்தியம் இல்லை” என்கின்றார்.

அம்பா ஆடல் என்னும் சொல்லுக்கு விளக்கம் எழுதும்போது, அம்பா= கொற்றவை. இது கொற்றவை வழிபாட்டு ஆடல். “விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப, வெம்பா தாக வியனில வரைப்பென, அம்பா ஆடலில் ஆய்தொடிக் கன்னியர்” (பரி.11: 76-81. இதில் வரும் புரிநூல் அந்தணர் என்பார் புரோகிதர். விரிநூல் அந்தணர் என்பார் நாடக நூலை விரிவாகக் கற்ற அறிஞர் என்கின்றார். … இவ் அம்பா ஆடலைப் பரிமேலழகர் தைந்நீராடல் என்பர். நாடக நடிகரைச் சிற்றினம் எனக் கருதும் பரிமேலழகர் பிறழ உரை கூறினர் என்க”(பக்கம் 14). என்று மூத்த உரையாசிரியரிலிருந்து மாறுபட்டு உரைகாணும் வெ.மு.ஷாஜகான் கனி அவர்களின் புலமை போற்றற்குரியது.

அல்லியம் என்னும் சொல்லுக்கு விளக்கம் தரும் பேராசிரியர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள் “அல்லிப்பாவையும்,அல்லியமும் ஒன்றெனச் சிலர் மயங்குவர்."யானை உருவில் வந்த கம்சனை அழித்து மாயோன் ஆடிய அல்லியத் தொகுதி"(சிலப் 6: 48) என்பதே அல்லியம். அல்லியம் சங்கப் பாடல்களில் இல்லை என்கின்றார்(பக்கம் 18).

ஏழிசை என்னும் சொல்லுக்குப் பேராசிரியர் வரைந்துள்ள விளக்கம் தெளிவும் திட்பமும் கொண்டவையாகும். … ச ரி க ம ப த நி ச என்னும் எழுத்துக்குறியீடு இளங்கோவடிகள் காலம் வரை வழகத்தில் இல்லை என்கின்றார். மூவேழ்துறையும் பாடும் முறை பண்டு இருந்தது. “மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி” (புறம் 152). மூவேழ்துறையும் என்றது வலிவு மெலிவு, சமம் என்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றில் ஏழு தானம் முடித்துப் பாடும் பாடற்றுறை. இவ்வேழு சுரங்களையும் மூவேழ்துறையும் முறைப்பட இசைக்கும் பாணர்கள் சிலப்பதிகாரக் காலத்தில் இருந்தனர். குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும், வழுவின்று இசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்(சிலப். 5:35-37). ஏழிசை என்பதைச் சுந்தரர் தேவாரத்தில் காணலாம்” என்கின்றார்(பக்கம். 37).

ஒக்கல் என்னும் சொல்லுக்கு விரிந்த விளக்கம் வரைந்து வரும் இடத்தில் ஒக்கல் என்றால் சுற்றம், சுற்றத்தினர், இடுப்பு என்று பொருள்படும் என்கின்றார். இதற்குச் சான்றாகப் பழமொழியை எடுத்துக்காட்டுவது இருவகை வழக்கிலும் பேராசிரியருக்குப் புலமை இருப்பது புலப்படுகின்றது. இதுபோல் கண் 2 என்ற சொல்லுக்கு விளக்கம் வரைந்துள்ளமையும் நயம் தோன்ற உள்ளது(பக்கம்43-44).

இவ்வாறு இக்கலைக்களஞ்சியம் முழுவதும் விளக்கம்பெறும் சொற்கள் தமிழ் நாடக வளம் அறிவதற்குப் பெரிதும் துணைபுரியும். தமிழுக்கு ஆக்கமான நூல் தந்த பேராசிரியரின் வாழ்க்கைக் குறிப்பையும் பிற படைப்புகளையும் கீழே வரைகுவன்:

முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் என்னும் ஊரில் 13.07.1947 இல் பிறந்தவர். பெற்றோர் வெ. உ. முகமது இப்ராகிம், நா.ஆயிஷாபீவி ஆவர். தொடக்கக் கல்வி முதல் பள்ளியிறுதி வகுப்புவரை அபிராமம் ஊரில் பயின்று, அதன்பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூயில் புகுமுக வகுப்பை நிறைவுசெய்தவர். இளம் அறிவியல் வகுப்பைப் பயின்ற பிறகு முதுகலைத் தமிழ்ப்பாடத்தை மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்றவர்(1969-71). உரைவேந்தர் ஔவை.துரைசாமியார், பேராசிரியர் தமிழண்ணல், சுப.அண்ணாமலை உள்ளிட்ட அறிஞர்களிடம் தமிழ் இலக்கியம் பயின்ற பெருமைக்குரியவர்.

1971 இல் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியிலும், 1973 முதல் 83 வரை இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியிலும் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்த வெ.மு.ஷாஜகான்கனி அவர்கள் 1983 முதல் 2006 வரை மதுரை யாதவர் கல்லூரியில் பணிபுரிந்துள்ளார். இவர் மேற்பார்வையில் ஐந்துபேர் முனைவர் பட்ட ஆய்வும், 12 பேர் இளம் முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொண்டனர். தினமணியில் சிறகுகள் தரும் சின்னத் திரைக்கலை என்னும் தொடரை 66 வாரம் எழுதியுள்ளார். தினமணி சிறுவர் மணியில் பாடம் திருத்திய பாப்பா கதைகள், சாப்ளின் மாமா படக்கதைகள் வெளிவந்துள்ளன.

பேராசிரியர் ஷாஜகான் கனி அவர்கள் தொழில் வகையிலும், தொழில்நுட்ப வகையிலும் 'காணொளி காட்சி பதிவில்' (Videography) விற்பன்னர் மற்றும் பயிற்றுனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்விக்கூடத்தில், இந்தியா கனடா கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ் இவர் 'காணொளி காட்சி பதிவு' குறித்த வகுப்பின் முதன்மை ஆசிரியராக திகழ்ந்தவர்.

பேராசிரியரின் நேரடிக் கண்காணிப்பில் 'காணொளி காட்சிப் பதிவு' படித்த மாணவர்களின் எண்ணிக்கை மிகுதியாகும்.இவரிடம் படித்துப் பின்னர்த் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற ஒரு இயக்குனர்தான் திரு.சசிகுமார் அவர்கள்.

வெ.மு.ஷாஜகான் கனி அவர்களின் புகழ்பெற்ற நூல்கள்:

1. கற்புகள் கற்பனைகள்
2. புகை- திரைநாடகம்
3. பட்ட மரங்கள் – கவிதைத்தொகுப்பு
4. விடுதலைவீரர் அழகுமுத்து- நாடகம்
5. விறகுவெட்டி
6. நல்லவனும் கெட்டவனும்
7. ஏமாற்றாதே ஏமாறாதே
8. சூழ்நிலையியல்
9. சென்னை அறிவொளி
10. வீட்டுக்கு ஒரு நாட்டுவைத்தியர்
11. சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை
12. பாடம் திருத்திய பாப்பா கதைகள்
13. அரங்கேற்று காதை ஆராய்ச்சி(2009)
14. மைசூர்ப்புலி திப்புசுல்தான்
15. தமிழ் நாடகக் (குறுங்) கலைக்களஞ்சியம்
16. தமிழ்நாடக வகையும் வரலாறும்
17. திரைப்படக்கலை
18. குறும்படம் பழகி… சினிமா எடுக்கலாம் வாங்க

மால்கம் ஆதிசேசையா விருது, தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது பெற்றவர். தமிழுக்கு உழைக்கும் பேராசிரியரை வாழ்த்துவோம்


வெ.மு.ஷாஜகான்கனி அவர்களின் முகவரி:

ஓவிய இல்லம்,
1/18, இரண்டாம் தெரு,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியக்குடியிருப்பு,
நத்தம் நெடுஞ்சாலை,
திருப்பாலை, மதுரை 605 014

செல்பேசி : 0091 94435 05929

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தமிழறிஞர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்களைப் பற்றியும், அவரின் புகழ்பெற்ற நூல்களையும் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி சார்...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

முனைவர்.வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள் யாதவர் கல்லூரியில் எனது தமிழாசிரியர் ஆவார்.அவரின் எழுத்துக்கள் தமிழ் ஓவியங்களாகும்.

வாழ்த்துக்கள் ஐயா .

பகிர்வுக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

பதிவுவும் தகவலும் அருமை ..

முனைவர் வெ,மு.ஷாஜகான் கானியின் தமிழ் பணி வியக்க வைக்கின்றது !!!

முனைவர். வா.நேரு சொன்னது…

ஒரு நல்ல மனிதரைப் பற்றிய அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

முனைவர். வா.நேரு சொன்னது…

ஒரு நல்ல மனிதரைப் பற்றிய அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.