நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஏப்ரல், 2015

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ம. மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துகள்!



  மலேசியாவில் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிவரும் அமைப்புகளுள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்குச் சிறப்பிடம் உண்டு. அந்த அமைப்பின் தலைவராகப் பேராசிரியர் . மன்னர் மன்னன் அவர்கள் அண்மையில்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியறிந்து மகிழ்கின்றோம்.

  பேராசிரியர் ம. மன்னர் மன்னன் அவர்கள் மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒருவராகப் பங்காற்றி வருபவர். இவரிடம் பயின்ற மாணவர்கள் மலேசியா முழுவதும் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வருவதை நான் நேரில் அறிவேன்.

  தாயகத் தமிழர்களை வரவேற்று விருந்தோம்புவதில் பேராசிரியர் ம. மன்னர் மன்னன் அவர்கள் முன்னிற்பவர். மலேசியாவின் அனைத்து அமைப்புகளிடத்தும் நல்லுறவு பேணுபவர். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அரவணைத்துப் போகும் உயர்பண்புகொண்டவர்.


  திரு. ம. மன்னர் மன்னன் அவர்களின் தலைமையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறப்புறத் தமிழ்ப்பணியாற்ற என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

சனி, 14 ஜூலை, 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருக்குப் புதுச்சேரியில் வரவேற்பு


மலேசியத் தமிழ் எழுத்தாளர் பெ.இராசேந்திரனுக்கு முனைவர் வி.முத்து அவர்கள் பொன்னாடை அணிவித்தல். அருகில் மன்னர்மன்னன், பொறிஞர் பாலு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் அவர்கள் புதுச்சேரிக்கு வருகைபுரிந்துள்ளார். அவரையும் அவருடன் வந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர்களையும் இன்று(14.07.2012) புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் புதுவைத் தமிழறிஞர்கள் வரவேற்றுப் பாராட்டிப் பேசினர்.

தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். பாரிசு பார்த்தசாரதி அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

இனிய நந்தவனம் என்னும் இதழின் புதுவைச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இனிய நந்தவனம் இதழின் ஆசிரியர் சந்திரசேகரன் அவர்களும் கலந்துகொண்டார்.

புதுவைத் தமிழ்ச்சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் ஏற்புரையாற்றினார். மலேசியாவில் இலக்கிய வளர்ச்சிக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆற்றிவரும் பணிகளையும் மலேசியத் தமிழர்களின் தமிழ் உணர்வையும் எடுத்துரைத்தார்.


மலேசியத் தமிழ் எழுத்தாளர் பெ.இராசேந்திரன் உரை


முனைவர் வி.முத்து தலைமையுரை


இனிய நந்தவனம் இதழ் வெளியீடு


பெ.இராசேந்திரன் அவர்களுடன் புதுவைத் தமிழறிஞர்கள்,ஆர்வலர்கள்

வெள்ளி, 13 ஜூலை, 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் பாராட்டு!

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

நாள்: 14.07.2012 காரி(சனிக்கிழமை),நேரம்: மாலை 6 மணி
இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி

முனைவர் வி முத்து அவர்கள் தலைமையில் நடைபெறும் பாராட்டுவிழாவில் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். புதுவை அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் பெ.இராசவேலு அவர்கள் கலந்துகொண்டு மலேசித் தமிழ் எழுத்தாளர்களைப் பாராட்டிச் சிறப்புரையாற்றுகின்றார்.

தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்கள் வாழ்த்திப் பேசுகின்றார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் அவர்கள் ஏற்புரையாற்றுகின்றார்.

மாலையில் நடைபெறும் இனிய நந்தவனம் புதுவைச் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வில் சீனு. வேணுகோபால் கலந்துகொண்டு இதழின் அறிமுகவுரையாற்றுகின்றார். இனிய நந்தவனம் ஆசிரியர் த.சந்திரசேகரன் கலந்துகொண்டு ஏற்புரையாற்றுகின்றார்.