வியாழன், 12 ஜூலை, 2012
பாவலர் பல்லவன் மறைவு
பாவலர் பல்லவன் அவர்கள்
தமிழ்ப்பற்றாளரும் மிகச்சிறந்த பாவலருமான பாவலர் பல்லவன் அவர்கள் இன்று காலை ஆறுமணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிக வருந்துகின்றேன். ஐயா அவர்கள் 1993 முதல் எனக்கு நல்ல தொடர்பில் இருந்தார். தமிழ் வள்ளல் ஐயா நா.அருணாசலம் அவர்களின் தமிழ்ப்பணிகளில் இணைந்து உழைத்தவர்.
“மம்மி என்றது குழந்தை
அம்மா என்றது மாடு”
என்ற கவிதையின் வழியாகத் தமிழக மக்களைத் தம் பக்கம் ஈர்த்தவர் பாவலர் பல்லவன். கிழவனல்ல அவன் கிழக்குத் திசை என்று தந்தை பெரியார் குறித்து இவர் எழுதிய பாடல் புட்பவனம் குப்புசாமி அவர்கள் வழியாகப் பாடப்பெற்று உலகப்புகழ்பெற்றது.
பல்லவனின் இயற்பெயர் வீரராகவன் ஆகும். இவர் பிறந்த ஊர் திருக்கழுக்குன்றம் ஆகும். அங்குப் பேரூராட்சி அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். இலக்கியவீதி அமைப்பின் மூலம் அரங்கேறியவர்.
பல்லவன் ஏராளமான சிறந்த துளிப்பா கவிதைகளைப் படைத்துப் புகழ் பெற்றவர். புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் படைத்திருக்கும் கவிஞர் பல்லவன் இளம் கவிஞர்களை ஊக்குவிப்பதிலும் தமிழ் உணர்வாளர்களை எழுதத் தூண்டுவதிலும் ஆர்வத்தோடு உழைத்தவர்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பற்றிய செய்திகளை, அவர்கள் காலத்தில் நடந்த சம்பவங்களைக் கேட்பவர்களிடம் ஈடுபாட்டுடன் சொல்லக்கூடியவர் பல்லவன்.
இரண்டு மகன்கள், ஒரு மகள், மனைவியோடு வாழ்ந்த கவிஞர் பல்லவன் எளிமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். தோற்றத்திலும் எளிமை, வாழ்க்கை முறையிலும் எளிமையைக் கடைப்பிடிப்பவர்.
தமிழ்வழி கல்விக்குப் பாடுபட்ட தமிழ்ச்சான்றோர் பேரவையின் தொடக்கத்துக்கு ஒரு முக்கிய தூணாக விளங்கியவர் பல்லவன்.
இவரின் தமிழ்த்தொண்டைப் பாராட்டிப் பாவேந்தர் பாரதிதாசன் விருது, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் விருது, முகம் இதழின் மாமணி விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை நீலாங்கரையில் உடல்நிலை நோய்வாய்ப்பட்டிருந்த இவர் இன்று(12.07.2012) காலை 6 மணியளவில் இயற்கை எய்தினார்.
நாளை(13.07.2012) காலை பத்து மணியளவில் பாவலர் பல்லவன் அவர்களின் உடல் பெசண்டு நகர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தொடர்புகொள்ள அலைபேசி எண் : 9710437227.
தாய்மடி,
3/433, முதல் தெரு, பாண்டியன் சாலை, நீலாங்கரை, சென்னை – 600 041.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக