நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 டிசம்பர், 2012

தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி நினைவுகள்...





பொங்குதமிழ் மன்றத்தார் வழங்கும் நினைவுப்பரிசில்( இராமன், தமிழ்நாடன், இலட்சுமிநாராயணன், மு.இளங்கோவன், முத்து, சேதுராமன்)

குவைத் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சிக்கு ஒரு நாள் முன்னதாகவே வந்துவிட்டேன். அன்றைய நாள் முழுவதும் எழுதுவதும், படிப்பதும், ஓய்வுமாகப் பொழுது கழிந்தது(13.12.2012). மாலையில் நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்கள் உணவுடன் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தார். உண்டபடியே இருவரும் தமிழ் இலக்கியப் போக்கு பற்றி உரையாடினோம். மறுநாள் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு நண்பர் கிருட்டிணமூர்த்தி விடைபெற்றுக்கொண்டார். காலையில் கண்காட்சி தொடக்கம் என்பதால் இரவில் நன்கு ஓய்வெடுத்தேன்.

14.12.2012 காலையில் ஒரு மகிழ்வுந்தில் கண்காட்சிக் கூடத்திற்குச் சென்றோம். குவைத் வாழும் பொறியாளர்களும், தமிழ் நண்பர்களும் அன்புடன் வரவேற்றனர். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். கண்காட்சி தொடக்கவிழா காலை 10 மணியளவில் அமைந்தது, பொறியாளர் திரு. இராமராஜ் அவர்கள் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்கள்.

கண்காட்சியின் தொடக்கவிழாவில் பொறியாளர்  திரு.செந்தமிழ் அரசு அவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள். தமிழகத்தில் பொதிகைத் தொலைக்காட்சியில் எங்கள் உள்ளம் இனிக்கும்படி செய்திபடித்த அதே செந்தமிழ் அரசு அவர்களை இருபதாண்டு இடைவெளிக்குப் பிறகு பார்த்தேன். தோற்றம் மாற்றம்கொண்டு விளங்கினார். அதே இனிமை ததும்பும் தமிழ் ஒலிப்பைக் கேட்டு வியந்தேன். செந்தமிழ் அரசு பொறியாளர் என்று அறிந்ததும் இன்னும் வியப்பு இருமடங்கானது.

பொறியாளர் செந்தமிழ் அரசு அவர்களின் தந்தையார் இராமநாதன் செட்டியார் அவர்கள் சென்னைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் எனவும் பரிபாடல் உள்ளிட்ட நூல்களுக்கு உரை எழுதியவர் எனவும் அறிந்தபொழுது ஐயா செந்தமிழ் அரசு அவர்களைச் சந்தித்ததைப் பெருமையாகக் கருதினேன். உடன் பேராசிரியர் இராமநாதன் செட்டியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பைத் தந்து உதவும்படி கேட்டேன். இசைவு தந்தார்.

கண்காட்சியைத் திறந்துவைத்த பிறகு மேலோட்டமாக ஒரு பார்வையிட்டேன். தமிழ்நாட்டையே இறக்குமதி செய்தமைபோல் பல்வேறு அரங்குகள் விளங்கின. தஞ்சைக் கோயில், கங்கைகொண்டசோழபுரம், மாமல்லபுரம், இராமேசுவரம், என்று தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில்கள் யாவும் படத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தேர், வண்டி, முக்காலி, உலக்கை, உரல், அம்மிக்குழவி, ஆட்டுக்கல் என்று நம் மரபை நினைவூட்டும் பொருட்களைப் பார்த்து மகிழ்ந்தேன். பனைப்பொருட்கள், கோரைப்பொருட்கள் காட்சிக்கு இருந்தன. உணவுப்பொருள்கள், கறிகாய், மலர், மூலிகைப்பொருட்கள், புத்தக அரங்கு என்று அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில் பலவகைப் பொருட்கள் காட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. பார்வையிடவும், நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வந்திருந்த பொறியாளர்கள், பல்வேறு நிலைகளில் பணிபுரியும் தோழர்களைக் கண்டு உரையாடி மகிழ்ந்தேன்.

காலை 11 மணிக்கு மேல் மேடை நிகழ்வுங்கள் தொடங்கின. பொங்குதமிழ் மன்றத்தின் தோழர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுக் கண்காட்சியின் நோக்கம் பற்றி உரையாற்றினர். உள்ளூர்ப் பேச்சாளர்கள் பலரும் பலவகைப் பொருளில் பேசினர். நான் தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் குறித்து இரண்டு பிரிவாக இரண்டுமணிநேரம் உரை நிகழ்த்தினேன். தமிழக நாட்டுப்புறப்பாடல்களின் தொன்மையை எடுத்துரைத்து நடவுப்பாடல்கள். கும்மிப்பாடல்கள், கோலாட்டப் பாடல்களை நினைவூட்டினேன். அரங்கில் இருந்தவர்கள் அமைதியாக என் உரையைச் செவி மடுத்தனர். பகலுணவு முடிந்தது.

மீண்டும் மாலையில்  குவைத் வாழும் தமிழ் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பேசினர். சிறுவர்களும் பெரியவர்களும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். கண்காட்சிக்கு மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இரவு நண்பர்களிடம் விடைபெற்று, நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்களின் மகிழ்வுந்தில் அறைக்குத் திரும்பினேன்.

15.12.2012 காலையில் பொறியாளர் செந்தமிழ் அரசு அவர்கள் காலைச்சிற்றுண்டிக்கு அழைப்பு விடுத்தார். நானும் பொறியாளர் இராமன்(திருத்துறைப்பூண்டி) அவர்களும் புறப்பட்டோம். திரு.செந்தமிழ் அரசு அவர்களும் எங்கள் வண்டியைத் தொடர்ந்து வந்தார். எங்கள் வண்டிகள் குவைத்தில் புகழுடன் விளங்கும் சரவணபவன் உணவகத்தில் நின்றன. சரவணபவன் உணவகத்தின் அமைப்பைக் கண்டு வியந்தேன். தூய்மைக்கும் சுவைக்குப் பெயர்பெற்ற அந்த நிறுவனம் மேலும் தன் தரத்தைப் பறைசாற்றிகொண்டு அழகிய கடற்கரை ஓரம் நிற்கின்றது. காலைச்சிற்றுண்டியைச் சுவைத்து உண்டோம். தமிழக உணவான இட்டிலி, துவையல், குளம்பியுடன் காலை உணவு முடிந்தது. பொறியாளர் செந்தமிழ் அரசு அவர்கள் அந்தக் கடையின் தொடர் வாடிக்கையாளர் என்பதால் கடை ஊழியர்கள் எங்களை மதிப்புடன் நடத்தினர். கடையின் சிறப்பினை அரசு அவர்கள் எடுத்துரைத்தார்.

உணவுக்குப் பிறகு நாங்கள் கண்காட்சி அரங்கிற்குச் சென்றோம். பகல் முழுவதும் நண்பர்களுடன் உரையாடுவதில் பொழுது கழிந்தது. அங்கு வந்திருந்த ஒளிப்படக் கலைஞர்கள் என்னைப் பல கோணங்களில் படம் எடுத்து வழங்கினர். கேரளாவிலிருந்து இவர்கள் குவைத்துக்குத் தொழில் நிமித்தம் வந்தவர்கள். இவர்களின் கடமையுணர்ச்சியும், பொறுப்புணர்ச்சியும் கண்டு அனைவரும் பாராட்டினோம். மாலையில் அவர்களுக்கு ஒரு நினைவுப்பரிசில் கொடுத்துப் பாராட்டியதில் அவர்கள் மிக மகிழ்ந்தார்கள்.

மாலையில் நிறைவு விழா தொடங்கியது. செந்தமிழ் அரசு அவர்கள் தமிழர் பண்பாடு குறித்து உரையாற்றினார். நான் நிறைவுரையாகச் சிலர் கருத்துகளைச் சொல்லி என் உரையை நிறைவு செய்தேன்.

நிறைவாகத் தோழர் தமிழ்நாடன் அவர்கள் நன்றியுரை என்ற அமைப்பில் கண்காட்சி தொடக்கம் முதல் நிறைவு வரை சந்தித்த இடர்களை எடுத்துரைத்து, உதவியர்கள் அனைவருக்கும் முறையாக நன்றி தெரிவித்தார். எனக்கு ஒரு நினைவுப்பரிசு வழங்கினார்கள். இரண்டு மரப்பாச்சி சிலைகளையும் வழங்கினார்கள்.

மரப்பாச்சி மரம் என்று நினைக்காமல் அதனை உயிர் உள்ள குழந்தையாக நினைத்துப்போற்றும் நம் மரபைத் தமிழ்நாடன் நினைவுகூர்ந்து பரிசிலாகக் கொடுத்தமை எனக்கு மகிழ்ச்சி தந்தது. இரண்டு மரப்பாச்சிகளையும் பாதுகாப்பாகத் தமிழகத்திற்குக் கொண்டுசெல்வேன். அதுபோல் தமிழகத்திலிருந்து ஒளிப்படங்கள் எடுத்து வழங்கிய புதுவை முருகன், ஓவியர் அன்பழகன், திருமுதுகுன்றம் முனைவர் இரத்தின.புகழேந்தி, ஆசிரியர் சான்போசுகோ உள்ளிட்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கினர். அனைவரிடமும் விடைபெற்றுகொண்டு நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்களுடனும் பட்டுக்கோட்டை சத்தியா அவர்களுடனும் இரண்டாம் நாள் இரவு அறைக்குத் திரும்பினேன்.





கண்காட்சியைத் திறந்து வைத்தல்



செந்தமிழ் அரசு அவர்களுடன் மு.இ



நினைவுப்பொருள் வழங்குதல்



குழந்தைகளின் ஆடல்



வருங்கால மாதவிகள்



இந்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல




சிற்பம் குறித்த செய்திகளை விளக்கும் அரங்கம்


இசைக்கருவிகள் குறித்த அரங்கு



தேர்வுக்குப் படித்தவர்கள்



தமிழக உணவு வகைகளைப் பதம் பார்க்கும் பார்வையாளர்கள்



கைவினைப் பொருட்களை நோட்டமிடும் பெண்கள்



ஞாயிறு, 16 டிசம்பர், 2012

குவைத் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சியில் என் பட்டறிவு…



       குவைத் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் பொறிஞர் சேதுமாதவன் அவர்களுடன் மு.இளங்கோவன்

  குவைத் பொங்கு தமிழ் மன்றமும் தமிழ்நாடு பொறியாளர் குழுமமும் ஏற்பாடு செய்திருந்த இரண்டுநாள்(14,15-12.2012) கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினனாகக் குவைத் நாட்டிற்கு அழைக்கப்பெற்றிருந்தேன். திரு. தமிழ்நாடன் அவர்கள் இணையம் வழியாக என் முயற்சிகளை அறிந்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்.


  11.12.2012 இரவு புதுவையிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் வந்தேன். நண்பர் சீனு அவர்கள் என் பயண ஏற்பாட்டுக்கு உதவினார். சென்னை வானூர்தி நிலையம் வந்தவுடன் தம்பி சிலம்பரசன் அவர்கள் குவைத் கண்காட்சிக்குக் கொண்டுபோவதற்குத் திருவள்ளுவர் சிலை, துணிமணிகள் சிலவற்றுடன் வந்து காத்திருந்தார். அவற்றை வாங்கிக்கொண்டேன். வானூர்தி நிலைய ஆய்வுகளுக்கு என்னை உட்படுத்திக்கொண்டேன். 

  காலை 5.45 மணிக்குக் குவைத் வானூர்தி புறப்பட்டது. குவைத் நேரப்படி காலை 8.30(இந்திய நேரம்11 மணி) மணிக்குக் குவைத் வந்து சேர்ந்தேன்.

  வானூர்தி நிலைய ஆய்வுகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தபொழுது பொறியாளர் சேது மாதவன்(கடலூர்) எனக்காகக் காத்திருந்தார். இருவரும் இணைந்து அவரின் இல்லத்துக்கு மகிழ்வுந்தில் சென்றோம். குவைத் நாட்டின் திட்டமிட்ட நகரமைப்புகளும் சாலை வசதிகளும் எனக்குப் பெரும் மகிழ்வைத் தந்தன. போக்குவரவு நெறிமுறைகளை ஓட்டுநர்கள் சிறப்பாகப் பின்பற்றுகின்றனர். எல்லாம் நம்மூர் ஓட்டுநர்கள்தான் கோலோச்சுகின்றனர்.


குவைத் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் மு.இளங்கோவன்

  குவைத் நகரத்தின் தெருக்கள் தூய்மையாக இருந்தன. சாலையை ஒட்டி மணல்வெளிகள் காட்சியளிக்கின்றன. நண்பர் சேதுமாதவன் அவர்கள் குவைத் நாட்டின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே வந்தார். பொருட்களைக் கொண்டுபோய் வீட்டில் வைத்தோம். ஒரு குளியல் நடந்தது. இருவரும் பகலுணவுக்கு அருகில் இருந்த பாகில்(Fahaheel) நகரத்திற்குச் சென்றோம். தமிழர்கள் நடத்தக்கூடிய கடை என்பதால் தமிழர்கள் கடைக்குள் வருவதும் உரையாடியபடி உண்பதும் வெளியேறுவதுமாக இருந்தனர். உணவுக்குப் பின் இருவரும் அறைக்குத் திரும்பினோம். ஓய்வெடுக்கும்படி என்னைப் பணித்தனர். சிறிது நேரம் பயணக்களைப்பில் கண்ணயர்ந்தேன்.

  மாலையில் நண்பர் பழமலை கிருட்டினமூர்த்தி அவர்கள்(கங்கை கொண்டசோழபுரம் அடுத்த சம்போடை ஊரினர்) என்னைக் காண வந்தார். இருவரும் முன்பே அறிமுகம் ஆனவர்கள். இருவரும் அருகில் இருந்த நகரத்திற்கு இரவு உணவுக்குப் புறப்பட்டோம். குவைத் – சவுதி சாலையில் வண்டியை ஒரு பெரும் ஓட்டம் விட்டார்.

  30 ஆம் எண் சாலையை ஒட்டி இருந்த கன்னெய்(பெட்ரோல் தூய்மைசெய்யும் நிலையங்கள்) நிலையங்களை(Refineries) எனக்கு விளக்கியபடி வந்தார். இரவில் ஒளிவெள்ளத்தில் கன்னெய்த் தூய்மை நிலையங்கள் மின்னின. பாதுகாப்பு மிகுதி என்பதால் பல அடுக்கு முள்வேளி இட்டுக் காத்து வருகின்றனர். வெளி ஆட்கள் உள்ளே செல்ல இயலாது என்று கூறி ஒருவாறு எனக்குக் கன்னெய்த் தூய்மைப்பணிகளை விளக்கினார். 

  கடற்கரையின் ஓரமாகத் தூய்மைப்பணி நிலையங்கள் இருப்பதால் வெளிநாடுகளுக்கு எண்ணெய்க் கப்பலில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற விவரத்தையும் சொன்னார். குவைத் நாடு வெப்பம் மிகுதி என்று அறிந்து அதற்கான வெப்ப உடைகளுடன் வந்திருந்தேன். இங்கு வந்த பிறகுதான்  கடுங்குளிரும் இருக்கும் என்று அறிந்தேன். உடல் நடுங்கின. நண்பர்களின் குளிர் ஆடைக்குள் மறைந்தேன்.

  இரவு உணவுக்கு ஒரு தமிழரின் கடைக்கு அழைத்துச் சென்றார் நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி. ஒரு கோழியை உறித்து எண்ணெயில் பொறித்துக் கொண்டு வைத்தனர். முன்பாக ஒரு பரோட்டைவை உடைத்து உள்ளே போட்டிருந்ததால் கோழியின் சில பகுதிகளை மட்டும்தான் உண்ணமுடிந்தது. இருவரும் திணறினோம். அளவாக உண்டு முடித்து மீதியை வீட்டுக்குக் கட்டிக்கொடுக்கும்படி வேண்டினோம். அமெரிக்காவில் இதே முறை இருப்பதை உணர்ந்தவன் அல்லவா? பெருமையோடு மீதியைக் கட்டிக்கொண்டோம். இந்தக் காட்சியை நம் ஊரில் உள்ள மக்கள் பார்த்திருந்தால் திட்டித் தீர்த்திருப்பார்கள்.

  குளிர்க்குடிப்பு ஒன்றை வாங்கிக்கொண்டு நண்பர் கிருட்டினமூர்த்தியின் அறைக்குச் சென்றோம். அங்குச் செயங்கொண்டம், மதுரை சார்ந்த ஊரிலிருந்து வந்த தோழர்கள் தங்கியிருந்தனர். அவர்களைக் கண்டு உரையாடி அவர்களுக்கு என் வாழ்த்தைச் சொல்லி விடைபெற்றேன்.

  நண்பர் கிருட்டினமூர்த்தி அவர்கள் பள்ளி இறுதி வகுப்புவரை படித்தவர். ஆனால் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தமிழ்க்கவிதைகளில் நல்ல பயிற்சியுடையவர். குவைத் வாழ் தமிழர்களால் நல்ல பேச்சாளர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து உரையாடியபடி நான் தங்குமிடம் வந்து சேர்ந்தேன். இரவு சிறிது நேரம் இணையத்தில் உலவினேன். குடும்பத்தாருக்குச் செய்தி தெரிவித்தேன். நாளைய நிகழ்வுகளை மனத்தில் தேக்கியபடி ஓய்வுகொண்டேன்…

சனி, 15 டிசம்பர், 2012

தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி தொடக்கவிழா…






பார்வையாளர்கள்

குவைத்தில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சியின் தொடக்கவிழா இன்று(14.12.2012) காலை 10 மணியளவில் தொடங்கியது. கண்காட்சியைத் தமிழ்நாடு பொறியாளர் குழுமத்தின் துணைத்தலைவர் இராமராஜன் அவர்கள் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகள் தொடர்ந்தன. 

பொறியாளர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். அறிமுகவுரையை இலட்சுமிநாராயணன் வழங்கினார். கண்காட்சியின் நினைவாக வெளியிடப்பட்ட நூல்களைச் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்ட புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் வெளியிட்டார். குவைத் பொறியாளர்கள் பெற்றுக்கொண்டனர். சிறப்புவிருந்தினர் தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் குறித்த இசையுரை வழங்கினார். பொறியாளர் இராமன் (தலைவர், பொங்குதமிழ் மன்றம்) நன்றியுரையாற்றினார்.

பிற்பகல் அமர்வில் குவைத் வாழும் தமிழ்க் குழந்தைகள் வழங்கிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, குவைத் வாழும் தமிழர்கள் வழங்கிய இலக்கிய உரை அனைவரையும் கவர்ந்தது. கண்காட்சியில் தமிழர்களின் உணவு, இசைக்கருவிகள், தமிழறிஞர்களின் படங்கள், கைவினைப்பொருட்கள், மரப்பொருட்கள், உணவுப்பொருட்கள், விளையாட்டுக்காட்சிகள், விளையாட்டுப்பொருட்கள், தமிழ்நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குவைத் வாழும் தமிழர்கள் கண்காட்சியில் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



கண்காட்சி மலர் வெளியீடு(பெறுதல் பொறிஞர் இராமராஜன்)

கண்காட்சியில் பொருள்கள் விற்பனை


கண்காட்சி மலர் வெளியீடு


கண்காட்சியைச் சுவைக்கும் தாய்க்குலத்தார்



                      மு.இளங்கோவன் சிறப்புரை


தாய்க்குலங்கள் ஆர்வமுடன் உரையாடும் காட்சி


அரபுநாட்டுக்காரர்களுக்கு நினைவுப்பரிசில்


பொறியாளர் இராமன்(நன்றியுரை)


சிறுவர் விளையாட்டு அரங்கில் கவண்வீசும் சிறுமி



இசைக்கருவிகள்


உழவுப்பொருட்கள் கண்காட்சி

வியாழன், 13 டிசம்பர், 2012

குவைத் நாட்டில் இரண்டுநாள் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி




குவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி 2012 டிசம்பர் 14-15 (வெள்ளி,சனி)ஆகிய இரண்டு நாள் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு பொறியாளர் குழுமமும், பொங்குதமிழ் அறக்கட்டளையும் செய்துள்ளன. 

ஃபிந்தாசு அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் தமிழர்களின் மரபுவழி வாழ்க்கையை நினைவூட்டும் காட்சிப் பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

சிறப்புரைகள்

தமிழர் பண்பாட்டுக் க
ண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அழைக்கப்பட்டுள்ளார். தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் குறித்தும், தமிழர் பண்பாட்டு வாழ்க்கை குறித்தும் உரையாற்ற உள்ளார். அதுபோல் தமிழ் இணையப் பயிலரங்கத்திலும் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சியை அறிமுகப்படுத்த உள்ளார்.

கண்காட்சியில் தமிழர்களின் பண்டைய வாழ்க்கையை நினைவூட்டும் பாலை திரைப்படம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம் இசைப்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.

கண்காட்சித் திறப்புவிழாவின் வரவேற்புரையை குரு. முத்துக்குமார் வழங்குகின்றார். இலட்சுமி நாராயணன் அறிமுக உரையாற்றுகின்றார். தமிழர் பண்பாடு குறித்து வளநாடன், செந்தமிழ் அரசு, இராவணன் உரையாற்றுகின்றனர். சிலப்பதிகாரம் குறித்து பழ.கிருட்டிணமூர்த்தி சொற்பொழிவாற்றுகின்றார். குவைத்தில் வாழும் பொறியாளர்கள் பலர் உரையாற்றுகின்றனர்.

கும்பகோணம் டிகிரி காபி

அரங்கில் கும்பகோணம் டிகிரி காபி, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கூழ், போன்றவையும் எலுமிச்சை சோறு, சாம்பார் சோறு உள்ளிட்ட உணவுகளும் விற்கப்படும். வெற்றிலைப் பாக்கு, சுக்கு காபி பானகம், மூலிகைக்குடிநீர் போன்றவை இலவசமாக வழங்கப்படும். 

பொருட்காட்சி

பழங்குடியினர் ஓவியங்கள், குறுந்தகடுகள், மென்பொருட்கள், நூல்கள் வாங்கக் கிடைக்கும். 2000க்கும் மேற்பட்ட படங்கள், தமிழகக் கலைப்பொருட்கள், உழவுக்கருவிகள், விளையாட்டுப் பொருட்கள், பனை ஓலைப்பொருட்கள் உள்ளிட்ட தமிழர் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் விளக்கும் விதம்விதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும்.

மலர் வெளியீடு

கண்காட்சிக்கு வருகைதரும் தமிழ்நாடு பொறியாளர் குழுமம், பொங்குதமிழ் மன்றத்தின் உறுப்பினர்களுக்குத் “தமிழ் மருத்துவம்” என்ற நூல் இலவசமாக வழங்கப்படும். பல்வகைக் குறுந்தகடுகளும் சிறுநூல்களும் கண்காட்சியில் வெளியிடப்படும், பயனுள்ள பலசெய்திகளை உள்ளடக்கிய கண்காட்சி மலர் வெளியிடப்படும். 

கண்காட்சி காலை 10மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு நாளும் நடைபெறும். அனுமதி இலவசம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடன், சேது மாதவன்,இராமன், உள்ளிட்டோர் செய்துவருகின்றனர். 

குவைத் தொடர்பு எண்: திரு. தமிழ்நாடன் : 6685 2906 திரு. சேது மாதவன்: 65094097.

புதன், 12 டிசம்பர், 2012

குவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி


 குவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சியைத் தமிழ்நாடு பொறியாளர் குழுமமும், பொங்குதமிழ் மன்றமும் திசம்பர் 14, 15 ஆகிய இரண்டுநாள் (வெள்ளி, சனி) நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்தக் கண்காட்சியில் தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் குறித்தும், தமிழ் இணையம் குறித்தும் இரண்டு உரைகள் வழங்க என்னை அழைத்துள்ளனர்

இன்று (12.12.2012) காலை சென்னையில் வானூர்தியில் புறப்பட்டு குவைத் நாட்டு நேரப்படி காலை 8. 30 மணிக்குக் குவைத் பன்னாட்டு வானூர்தி நிலையம் வந்து சேர்ந்தேன். நண்பர் தமிழ்நாடன் ஏற்பாட்டில் நண்பர் சேது அவர்கள் வானூர்தி நிலையம் வந்து வரவேற்று அழைத்துச்சென்றார்

குவைத் நாட்டின் வளம் பற்றியும், தமிழகத் தொழிலாளர்களின் நிலை பற்றியும் செவி வழி அறிந்திருந்த எனக்கு இந்த நாட்டை நேரில் காணும் வாய்ப்பு இன்று அமைந்தது. அவ்வப்பொழுது என் பட்டறிவுங்களைப் பகிர்ந்துகொள்வேன்.

குவைத் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள குவைத் வாழும் தோழர்கள் வந்து மகிழ்வூட்டலாம்.

குவைத்தில் தொடர்புக்கு:

திரு. தமிழ்நாடன் : 6685 2906
திரு. சேது : 65094097