நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

அறிஞர் இரா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்வாழ்க்கை


அறிஞர் இரா.சாரங்கபாணியார்

பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்தபடி வருகிறது. இலக்கியங்களைத் தவிரப் பிற உலகியல் வாழ்க்கை தெரியாமல் வாழ்ந்ததால் பழங்காலத்துப் புலவர்கள் வறுமையில் வாடியதாக அறிகிறோம். இன்று தமிழ் , மேடைகளில் முழங்கப்படும் வணிகப் பொருளாகிவிட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களின் வாய்வீச்சுகளும், கவிதை வாசிப்புகளும், நகைச்சுவையின் பெயரில் அடிக்கப்படும் கோமாளிக் கூத்துகளும் இன்று தமிழ் என்று ஆகிவிட்டது.

தொலைக்காட்சிகளின் நாடிப்பிடித்தும், அரசியல்வாதிகளின் அடிமனத்து விருப்பங்களை அறிந்தும் தங்கள் கலைச்சரக்குகளைக் கவிதை, பட்டிமன்ற, அரட்டைக் கச்சேரிகளின் வடிவில் காசாக்கிப் பலர் வயிறுவளர்க்கும் சூழலில் தமிழறிஞர் என்றால் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று இலக்கணவாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஒருவர். அவர்தான் அறிஞர் இரா.சாரங்கபாணியார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பல ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியராக இருந்து பலநூறு மாணவர்கள் தரமான மாந்தர்களாகவும், தமிழறிஞர்களாகவும் மாற வழிவகுத்தவர் இரா.சாரங்கபாணியார். தமிழர்களின் மறையாகப் போற்றப்படும் திருக்குறள், சங்க இலக்கியங்களைப் பிழையறக் கற்று, அதன்வழி வாழ்ந்து வரும் இரா.சாரங்கபாணியார் தமிழ்இலக்கியங்கள் தவிர பிற உலகியல் ஒன்றும் அறியாதவர். பரிபாடல் என்னும் பிறரால் நுழைந்து ஆழம் காணமுடியாத சங்க இலக்கியப் பனுவலைத் தம் நுண்ணறிவால் ஆழமாகக் கற்றவர். அதில் மிகச்சிறந்த ஆய்வு நடத்தி நூலாக வெளியிட்டவர்.

திருக்குறளின் அத்தனைக் குறட்பாக்களின் வேர் மூலமும் அறிந்தவர் . திருக்குறளுக்குக் காலந்தோறும் எழுந்த உரைகளை நுட்பமாகக் கற்று அதன் வேறுபாடுகளை நா நுனியில் வைத்திருப்பவர்.தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட இரா.சாரங்கபாணியார் மாணிக்கனாரின் விருப்பப்படி பல ஆண்டுகள் காரைக்குடியில் அவருடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.உள்ளத்துள் தூய்மையுடையவராகப் புலால் மறுத்து, திருவள்ளுவர் கூறும் வாழ்க்கைய வாழ்ந்து வருபவர் இரா.சாரங்கபாணியார். இன்றும் இவர் வீட்டில் மாடு, கன்றுகளை வளர்த்து அதன் பயன் நுகரும் சிற்றூர் சார்ந்த எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அகவை 84 என்ற நிலையிலும் தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆராய்ந்தும், தமிழ் நூல்களைப் பதிப்பித்தும் சுறு சுறுப்பாக இயங்கி வருகிறார். செம்மொழி உயராய்வு நிறுவனத்திற்காக இவர் திருக்குறள், பரிபாடல் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரின் திருக்குறள் உரை வேறுபாடுகள் நூலும்,பரிபாடல் திறன் நூலும் அறிஞர் உலகால் என்றும் போற்றப்படுவனவாகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அருகில் அமைந்துள்ள மாரியப்பா நகரில் ஓய்வு பெற்ற பிறகும் இரா.சாரங்கபாணியார் முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் செ.வை.சண்முகம் ஆகியவர்களுடன் நாளும் உரையாடித் தமிழ் ஆய்வுகளை நிகழ்த்தி வருபவர். புறங்கூறாமையை மேற்கொண்டு வாழ்ந்துவரும் இரா.சாரங்கபாணி அவர்கள் தம் பேராசிரியர் நண்பர்களுடன் தமிழ் ஆய்வுகள் பற்றியே உரையாடுவாராம். இவரின் வாழ்க்கை தமிழ் வாழ்க்கை.

இவர் மகன் அந்துவன் அவர்கள் இலண்டனில் புகழ்பெற்ற மருத்துவராகப் பணிபுரிபவர். தந்தையாரைப் போலவே எளிமையும், அடக்கமும் விரும்புபவர். பெயரர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அறிஞர் இரா.சாரங்கபாணியார் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தேவங்குடி ஊரினர். 18.09.1925 இல் பிறந்தவர். பெற்றோர் பொ.இராசகோபால் மழவராயர், சனமாலிகை அம்மையார். தேவங்குடி என்பது அமரர் கோபாலகிருட்டிணன் (மேனாள் பாராளுமன்ற உறுப்பினர்)உள்ளிட்ட தலைவர்கள் பிறந்த ஊர்.

அவ்வூரில் தோன்றிய இரா.சாரங்கபாணியார் அவ்வூரில் தொடக்கக் கல்வியையும், புவனகிரி கழக உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் ஆறாம்படிவம் வரையிலும் பயின்று,1942 இல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்பயின்று புலவர் பட்டமும் (1947), பி.ஓ.எல் பட்டமும்(1949) பெற்றவர்.முதுகலை(1955),எம்.லிட்(1962), முனைவர் பட்டம் (1969) ஆகியவற்றைச் சென்னைப்பல்கலைக்கழகத்தின் வழியாகப் பெற்றவர்.

பி.ஓ.எல் வகுப்பில் இவருடன் பயின்றவர்கள் முனைவர் மு.கோவிந்தசாமி, முனைவர் ப.அருணாசலம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அறிஞர் சாரங்கபாணியார்க்கு ஆசிரியர்களாக இருந்து நெறிப்படுத்தியவர்களுள் கா.சுப்பிரமணிய பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அ.சிதம்பரநாதன் செட்டியார், ஆ.பூவராகம் பிள்ளை, மு.அருணாசலம் பிள்ளை, க.வெள்ளைவாரணனார், ஒளவை. சு.துரைசாமிப் பிள்ளை, வ.சுப.மாணிக்கனார் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக் கல்வியை நிறைவுசெய்த பிறகு 1949 ஆம் ஆண்டில் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பணியாற்ற தொடங்கினார்.விரிவுரையாளர் பணியேற்ற இவர் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் சிறந்தார்.1979 முதல் மூன்றாண்டுகள் உயராய்வு நடுவத்தின் இயக்குநராகவும் இருந்தார்.இருபதாண்டுகளுக்கும் மேலாக அறிஞர் வ.சுப.மாணிக்கனாருடன் பணிசெய்யும் வாய்ப்பு அமைந்ததை நன்றியுடன் நினைவு கூர்பவர்.இவருக்குத் திருக்குறளிலும்,பிற சங்க இலக்கியப் பனுவல்களிலும் மிகுந்த ஆர்வம் தோன்ற செம்மல் வ.சுப.மாணிக்கனார் அவர்களே காரணம் எனில் மிகையன்று. திருக்குறள் உரைவேற்றுமை உள்ளிட்ட நூல்கள் உருவாக அடித்தளம் அமைத்தவரும் அறிஞர் வ.சுப.மா அவர்களேயாவர்.

காரைக்குடி கல்லூரிப் பணியிலிருந்து தாமே ஓய்வு பெற்றுத் தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்(1982-86 இல்) சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியில் இணைந்து தமிழ் இலக்கியத்துறையின் தலைவராக மிளிர்ந்தார். நான்காண்டு உழைப்பின் பயனாய்ச் சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(இரு தொகுதிகள்)வெளியிட்டார்.

1988-1994 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் ஆய்வகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அறிஞர் சாரங்கபாணியார் காரைக்குடித் தமிழ்ச்சங்கத்தில் துணைத்தலைவராக இருந்து, சங்க இலக்கிய வகுப்புகள் நடத்திய பெருமைக்கு உரியவர்.

சிதம்பரம் தில்லைத் தமிழ்மன்றத்தில் கிழமைதோறும் திருக்குறள் வகுப்புகள் நடத்தி மூன்றாண்டுகளில் திருக்குறள் பாடத்தையும் புறநானூற்று வகுப்புகளைத் தொடர்ந்து நடத்திப் புறநானூற்றுப் பாடல்களை அனைவருக்கும் பரப்பியமையும் இவரின் தமிழ் இலக்கிய ஈடுபாடு காட்டும் சான்றுகளாகும். தமிழகத்துப் பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் பலவற்றை நிகழ்த்தியவர். ஆய்வரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தியவர்.

யாழ்ப்பாணம் திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாடநூற்குழுவின் தலைவராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.தமிழகப் பல்கலைக்கழகங்களிலும், கேரளப் பல்ககலைக் கழகத்திலும் இவர் எழுதிய இயற்கை விருந்து, குறள் விருந்து, பரிபாடல் திறன்,சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் என்னும் நூல்கள் பாடநூல்களாக இடம்பெற்றுள்ளன.

இவர் எழுதிய பரிபாடல் திறன்(1975),மாணிக்கச்செம்மல்(1999) நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசில்களைப் பெற்றுள்ளன. குன்றக்குடி ஆதீனத்தின் பெரும்புலவர் பட்டமும்(1981), சீராம் நிறுவனத்தின் திருக்குறள் பொற்கிழியும்(1991), தமிழ்நாட்டரசின் விருதும்(1998), மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவைச்செம்மல் விருதும் பெற்றவர்(2000).

அறிஞர் இரா.சாரங்கபாணியார் அவர்களின் திருமணம் 15.06.1949 இல் குமுடிமூலை என்னும் ஊரில் நடந்தது. தனலக்குமி அம்மையாரை மணந்துகொண்டார். இவர்தம் ஆசிரியப்பெருமக்கள் ஆ.பூவராகம் பிள்ளை, மு.அருணாசலம்பிள்ளை, க.வெள்ளை வாரணனார், கு.சீநிவாசனார், நண்பர் க.திருமாறன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் வாழ்வு வாழ்ந்துவரும் இவருக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்த இடம் உண்டு.

அறிஞர் இரா.சாரங்கபாணியார் அவர்கள் தம் ஊரில் படிக்கும் மாணவர்களுள் பத்தாம் வகுப்பிலும், மேல்நிலை வகுப்பிலும் முதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ஆளுக்கு ஐந்தாயிரம் உருவா ஆண்டுதோறும் பரிசில் நல்கி ஊக்கப்படுத்தி வருகின்றார்.

அறிஞர் இரா.சாரங்கபாணியார் வழங்கிய நூற்கொடை

01.இயற்கை விருந்து(1962)
02.குறள் விருந்து(1968)
03.பரிபாடல் திறன்(1972)
04.A critical Study of Paripatal(1984)
05.A Critical Study of Ethical Literature in Tamil(1984)
06.சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(இருதொகுதி)1986
07.திருக்குறள் உரை வேற்றுமை, அறத்துப்பால் (1989)
08.திருக்குறள் உரையாசிரியர்கள்(1991)
09.திருக்குறள் உரை வேற்றுமை, பொருட்பால் (1992)
10.திருக்குறள் உரை வேற்றுமை, காமத்துப்பால்(1992)
11.சங்கச் சான்றோர்கள்(1993)
12.வள்ளுவர் வகுத்த காமம்(1994)
13.புறநானூற்றுப் பிழிவு(1994)
14.மாணிக்கச் செம்மல்(1998)
15.திருக்குறள் இயல்புரை(1998)
16.சித்தர் இலக்கியங்களில் திருக்குறள்(1999)
17.திருக்குறள் பரிமேலழகர் உரைவிளக்கம் (2000)
18.சங்கத்தமிழ் வளம்(2003)
19.பரிபாடல் உரைவிளக்கம்(2003), கோவிலூர் மடம்
20.சங்க இலக்கிய மேற்கோள்கள்(2008)
21.சங்க இலக்கியப்பிழிவு(2008)
22.திருக்குறள் செம்மொழிப்பதிப்பு(அச்சில்)
23.பரிபாடல் செம்மொழிப்பதிப்பு(அச்சில்)


மாணிக்கச் செம்மல்(வ.சுப.மாணிக்கம் வாழ்க்கை வரலாறு)


பரிபாடல் திறனாய்வு(ஆங்கிலமொழியில்)


பரிபாடல் கோவிலூர் ஆதீனப்பதிப்பு


திருக்குறள் உரைவேற்றுமை


திருக்குறள் உரைவேற்றுமை


சித்தர் இலக்கியங்களில் திருக்குறள்


திருக்குறள் உரைவேற்றுமை(காமத்துப்பால்)திருக்குறள் உரையாசிரியர்கள்

அறிஞர் இரா.சாரங்கபாணியார் இல்ல முகவரி :

முனைவர் இரா.சாரங்கபாணியார்
குறள் இல்லம்,
330,மாரியப்பா நகர்,
அண்ணாமலை நகர்,சிதம்பரம்-608 002
தொலைபேசி : 04144 - 238038

நனி நன்றி:
தமிழ் ஓசை - களஞ்சியம்,சென்னை,தமிழகம்.21.09.2008
முனைவர்.மூவேந்தன்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முனைவர் தன.சசிகலா,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முனைவர் அரங்க.பாரி,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முனைவர்.சே.கல்பனா,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

கருத்துகள் இல்லை: