நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 30 ஜூன், 2009

பாரதியும் பாவேந்தரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்-கவிஞர் சிற்பி பேச்சு!


கவிஞர் சிற்பி உரையாற்றுதல்

பாரதியும் பாவேந்தர் பாரதிதாசனும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள்.இரண்டு கவிஞர்களிடமும் ஒற்றுமையும் உண்டு.வேற்றுமையும் உண்டு.பாரதியார் எதைப்பாடினாலும் தொன்மம் கலந்து பாடுவது இயல்பு.பாரதிதாசன் தொன்மம் கலவாமல் பாடுபவர்.இரண்டு கவிஞர்களின் படைப்புகளும் மனிதர்களை மாமனிதர்களாக மாற்றுவன என்று கவிஞர் சிற்பி அவர்கள் புதுச்சேரியில் நடந்த பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பேசினார்.

புதுச்சேரியில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நேற்று(29.06.2009)கொண்டாடப்பட்டது.புதுவை அரசு பாவேந்தர் பிறந்த நாள் விழாவையும் புதுவை அறிஞர்களுக்குக் கலைமாமணி,தமிழ்மாமணி விருது வழங்கும் விழாவையும் நேற்று நடத்தியது.புதுவை கலை,பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி அவர்கள் சிறப்புரையாற்றினார்.பாரதியார் கவிதைகளிலும் பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளிலும் நன்கு தோய்ந்த சிற்பி இரண்டு கவிஞர்களின் கவிதைகளின் சிறப்பையும் எடுத்துக்காட்டிப் பேசினார்.

புதுச்சேரி என்றால் இருவர் நினைவுக்கு வருவர்.ஒருவர் ஆனந்தரங்கர்(நாட்குறிப்பு எழுதியவர்).மற்றவர் பாவேந்தர் பாரதிதாசன்.பாரதிதாசன் பாரதியாரால் புதுமை படைக்கும் ஆற்றலைப் பெற்றார்.தங்கக்கட்டி எனப் பாரதியாரைக் குறிப்பிடலாம்.பாரதிதாசனை அழகிய அணிகலன் என்று குறிப்பிடலாம்.இருவரும் உணர்ச்சி மிகுந்த பாடல்களைத் தந்தவர்கள்.

இருவருக்கும் இடையில் ஒற்றுமையும் உண்டு.வேற்றுமையும் உண்டு.பாரதி எதையும் தொன்மத்துடன் பாடுபவர்.பாவேந்தர் தொன்மத்திலிருந்து விடுபட்டவர்."ஆதி சிவன் பெற்றுவிட்டான்" என்பார் பாரதியார்."திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் மண்ணோடும் பிறந்தவர்கள்" என்று தொன்மம் கடந்து பாவேந்தர் பாடுவார்.இருவரும் மனிதர்களின் மாண்பு பேசியவர்கள்.மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டுவர இருவரும் பாடினர் என்று இரண்டு கவிஞர்களின் பாடல்வரிகளையும் மேற்கோள்காட்டி மிகச்சிறந்த திறனாய்வுரையைச் சிற்பி வழங்கினார்.

2 கருத்துகள்:

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

அண்மையில் கவிஞர் சிற்பி அவர்களின் பொழிவினைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கேட்டேன்.அவருடன் சந்தித்துப் பேசிகொண்டிருந்த போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் என்று கூறி மகிழ்ந்தார்கள்.அவரின் பொழிவினை வெளியிட்டமைக்கு நன்றி.

arunan சொன்னது…

நல்ல பதிவு!
நல்ல முயற்சி!
இளங்கோவனாரின் பணிகள் தொடர வாழ்த்துகள்!