நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
வ.சுப.மாணிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வ.சுப.மாணிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம் நூற்றாண்டுத் தொடக்கம்!...

செம்மல் வ.சுப. மாணிக்கம்

எளிமையின் உருவம்; புலமையின் இயக்கம்; சங்கப் பனுவலில் திளைத்த அறிஞர்; தொல்காப்பியக் கடலில் மூழ்கி முத்தெடுத்த வல்லுநர்; தமிழ்க்காதலால் வள்ளுவத்தை வரைந்து பார்த்தவர்; திருவாசகத் தேனுண்ணும் தும்பி; ஏழிளந்தமிழில் வாழப் பழகியவர்; பல்லாயிரம் மாணவர்களின் நெஞ்சக் கோவிலில் நிலைபெற்ற தெய்வம்; கற்றோர் உள்ளத்தில் கலந்த மேதை; தினைத்துணை உதவி பெற்றாலும் பனைத்துணையாகக் கொள்ளும் பண்பாளர்; தமிழ்வழிக் கல்விக்குத் தெருவிலிறங்கித் தமிழ் முழக்கம் செய்தவர்; கொடை விளக்கு வழங்கிய மாமலர்; தில்லையம்பலத்தில் திருமுறை முழங்க வேட்கையுற்றவர்; கல்லாத இனத்தைக் கற்க வைத்தவருக்குப் பாடாண் திணை பாடிய பாவலர்; வீடும் கொடுத்த விழுச்செல்வரைப் பாட்டு மாளிகையில் படிமமாக்கிக் காட்டியவர். பண்டிதமணியாரின் புலமைப் பிறங்கடை இருவருள் ஒருவர்; தமிழ்ப்பகையை எதிர்த்து நின்ற அரிமா; பார் காத்தவரையும் பயிர் காத்தவரையும் போற்றும் உலகில் பைந்தமிழ் காத்தவரைப் போற்றிய நன்றியாளர்; இவ்வாறு எழுதிக்கொண்டே செல்லலாம் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ் வாழ்க்கையை! ஆம். தமிழ் வாழ்க்கை வாழ்ந்தவர்களின் பெருமையை முழுவதும் எழுதும் ஆற்றல் யாருக்கு உண்டு?

வரம்பிலாப் பெருமைகொண்ட தமிழ்த்தாயின் தலைமகன் மூதறிஞர் வசுப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று தொடங்குகின்றது! அரசியல் ஆர்ப்பாட்டத்திலும் மட்டைப்பந்து மாயையிலும் திரைப்படக் கூத்தர்களின் வெட்டுருவக் கூத்துகளிலும் மூழ்கிக் கிடக்கும் இற்றைத் தமிழகத்தாருக்கு அறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் தமிழ்ப்பணிகளையும் தமிழ் வாழ்க்கையையும் எடுத்தியம்புவது எம்மனோர் கடமையாகும்.

. சுப. மாணிக்கம் அவர்கள் மேலைச்சிவபுரி என்னும் சிற்றூரில் வாழ்ந்த வ. சுப்பிரமணியன் செட்டியார்தெய்வானை ஆச்சி ஆகியோருக்கு ஐந்தாவது மகனாக 17. 04.1917 இல் பிறந்தவர். இளம் அகவையில் தம் பெற்றோரை இழந்தவர். பர்மாவில் தம் முன்னையோரின் தொழிலைப் பழகியவர். பொய்சொல்லா மாணிக்கமாகப் பொலிந்தவர். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களால் அடையாளம் காணப்பெற்று, தமிழறிவு தரப்பெற்றவர். அண்ணாமலை அரசரின் கல்விக்கோயிலில் தம் கல்விப்பணியைத் தொடங்கி, மாணவர்களுக்குத் தமிழ் இலக்கிய அறிவையும், தமிழுணர்வையும் ஊட்டியவர். வள்ளல் அழகப்பர் அவர்களின் கல்வி நிறுவனத்தில் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தவர். நேர்மை, எளிமை இவற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர். தம் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்பவர்கள் குருதியுறவு உடையவர்கள் எனினும் பொறுத்துக்கொள்ளாத மாசில் மனத்தவராக வ. சுப. மாணிக்கம் விளங்கியவர். தம் குறிக்கோள் வாழ்க்கையை விருப்பமுறியாக(உயில்) எழுதிவைத்துப் பின்னாளில் தம் விருப்பம் தொடர வழிவகை செய்தவர். எந்த நிலையிலும் அறத்திற்குப் புறம்பாகச் செயல்படாத மாசில் மனத்தினர்; நெறியினர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராக இருந்து, மூத்த அறிஞர் பெருமக்களைத் தமிழாராய்ச்சிக்குப் பணியமர்த்தித் தமிழாராய்ச்சியை நிலைநிறுத்தியவர்.

தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள், திருவாசகம், கம்ப இராமாயணம், பாரதியத்தில் தனித்த ஈடுபாடு கொண்டவர். பழைமைப் பிடிப்பும் புதுமை வேட்கையும் நிறைந்தவர். தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தி இயக்கம் கண்டவர். தமிழ் எழுத்துக்களைத் திருத்தம் என்ற பெயரில் குலைக்க  அறிவியல், தொழில்நுட்பப் போர்வை போர்த்தி ஒரு குழு திரிந்தபொழுது அதனை வன்மையாகக் கண்டித்து எழுதியவர். ஆய்வு நூல்கள், படைப்பு நூல்கள், திறன் நூல்கள், புத்தாக்கச் சொற்கள் தந்து, தமிழ் வாழ்க்கை வாழ்ந்து தம் வாழ்நாளுக்குப் பிறகும் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் ஆக்கங்களைத் தந்த மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்; ஒவ்வொரு தமிழமைப்புகளின் கடமையாகும்.

அரசியல் செல்வாக்கோ, மற்ற பின்புலங்களோ இல்லாத மூதறிஞரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கற்றறிந்தார் கடமையாகும். அவர் படைப்புகளை மதிப்பிட்டுத் திறனாய்வு நூல்களை எழுதி, வெளியிடுவது எழுத்தாளர் கடமையாகும். மாணிக்கனாரின் வெளிவராத படைப்புகளைத் திரட்டித் தொகுத்து மாணிக்கப் புதையலை வெளிக்கொணர்வது உடன்பழகியோரின் பணியாகும்.  அவர் விரும்பிச் செய்த தமிழ்வழிக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த அரசுக்கு வேண்டுகோள் வைப்பது இயக்கம் நடத்துவோரின் தலையாப் பணியாகும். கோயில்களில் நாள்தோறும் திருமுறைகளைத் தமிழில் ஓதி, வழிபாடு நிகழ்த்துவதற்குக் குரல்கொடுப்பது இறையீடுபாட்டளர் கடமையாகும். மூதறிஞருக்குத் திருவுருவச் சிலையமைத்து அவர் நினைவுகளைப் போற்றுவதும், அவர் நினைவு என்றும் நின்று நிலவப் பணிபுரிவதும் அரசினரின் கடமையாகும். பல்கலைக்கழகங்கள், தமிழாய்வு நிறுவனங்கள் வ.சுப. மா. குறித்த ஆய்வரங்குகளையும், அறக்கட்டளைப் பொழிவுகளையும் நடத்தி அவருக்குப் பெருமை சேர்ப்பதைத் தலையாயப் பணியாக்குதல் வேண்டும்.


செம்மல் வ.சுப. மாணிக்கம் பிறந்த நாளில் அவர் கொள்கைளை நெஞ்சில் ஏந்துவோம்!

புதன், 17 ஜூன், 2015

தொல்காப்பியப் பரவலில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் பங்களிப்பு



தமிழில் முதல் நூலாகக் கிடைத்துள்ள தொல்காப்பியத்தின் நிழலைக் கடந்த ஈராயிரம் ஆண்டுத் தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பின் நெடுகிலும் காணலாம். ஓலையில் இருந்த இச்சுவடியை முதன்முதல் மழவை மகாலிங்க ஐயர் அவர்கள் அச்சில் பதித்து உலகுக்கு வழங்கினார்(1847). அவரைத் தொடர்ந்து சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள் தொல்காப்பியம் முழுமையையும் பதிப்பித்து வழங்கினார். அதன்பிறகு அறிஞர் பெருமக்கள் பலரும் தொடர்ந்து பதிப்பித்தும், உரைவரைந்தும்,மொழிபெயர்த்தும் தமிழ் உலகிற்கு வழங்கிவருகின்றனர்.

மூதறிஞர் செம்மல் .சுப.மாணிக்கனார் அவர்கள் தொல்காப்பியம் குறித்துச் சிந்தித்தும் எழுதியும் பேசியும் தம் கடமையையாற்றியுள்ளார். எங்கள் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் தொல்காப்பியப் பதிப்பில் புதிய அத்தியாயம் படைத்தவர். இவர்கள் வரைந்த ஆராய்ச்சி முன்னுரைகள் பெருஞ்சிறப்பிற்கு உரியன. அறிஞர்கள் ச.வே.சுப்பிரமணியம், தமிழண்ணல் உள்ளிட்டோர் இன்றும் தொடர்ந்து தொல்காப்பியம் குறித்து எழுதியும் பேசியும் வருகின்றனர். இந்தத் திசை நோக்கி நகரும்பொழுது சில எண்ணங்கள் தோன்றின. முதலில் தமிழின் முதல்நூலாக அமையும் தொல்காப்பியத்தை மக்கள் அனைவருக்கும் உரிய நூலாக எளிய வடிவங்களில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் தொல்காப்பிய மன்றம் தோற்றம் கண்டுள்ளது. மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அவர்களின் தொல்காப்பிய ஈடுபாட்டை, அவர்தம் நூல்களில் கற்று, உணர்வுபெற்றுத் தொல்காப்பியம் பரப்பும் முயற்சியில் நண்பர்களின் நெறிகாட்டலில் இயங்க உள்ளோம்.

மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கம் அவர்கள் தொல்காப்பியக் கடல், தொல்காப்பியப் புதுமை, தொல்காப்பியத் திறன் என்ற மூன்று தலைப்பில் நூல்களை வழங்கியுள்ளார். இந்த நூல்கள் பல்வேறு அமையங்களில் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாகும். ஒருகட்டுரை இருவேறு நூல்களில் பதிவாகியுள்ளமையையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொல்காப்பியம் மாணிக்க உரையும் (தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு), தமிழ்க்காதல் நூலும் (மணிவாசகர் பதிப்பகம்) மூதறிஞர் அவர்களின் தொல்காப்பியப் புலமை காட்டும் நூல்களாகும்.

மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் 1600 நூற்பாக்களைக் கொண்ட தொல்காப்பியத்தின் பெருமை உணராத நம்மவரை, “பதின்மூன்று அடுக்கு நிலைகொண்ட திருவரங்கக் கோபுரத்தை நிமிர்ந்து அண்ணாந்து பார்க்கமாட்டாத நெஞ்சக்கூனர்க்கு என்ன சொல்வது? (பக்கம் 365, தொல்காப்பியக் கடல்) என்று வினா எழுப்புவது நம் உறக்கம் கலைக்கும் வரிகளாகும்.

தொல்காப்பியம் ஓர் இலக்கணம் என்ற அவப்பார்வையால் அறிஞருலகம் திருக்குறளுக்குக் கொடுத்துவரும் நன்மதிப்பை இம்முதனூலுக்குக் கொடுக்கத் தவறிவிட்டது” என்று உள்ளம் வருந்துகின்றார் (பக்கம் 5).

தமிழ்மொழிக்கும், தமிழினத்துக்கும், தமிழ் நிலத்துக்கும், தமிழ் நாகரிகத்துக்கும் முதல்நூல் தொல்காப்பியம்” என்பது மூதறிஞர் அவர்களின் துணிபு( தொல்காப்பியக் கடல், பக்கம். 56 ).

தொல்காப்பியக் கடல் என்னும் நூலில் ‘தமிழ் முதல் நூல்’ என்ற தலைப்பில் உள்ள கட்டுரை 1957 இல் புதுக்கோட்டைத் திருக்குறள் கழகப் பொழிவாகும். தொல்காப்பியச் சிறப்பைப் பலபடப் பேசும் கருத்துகள் இக்கட்டுரையில் உள்ளன.

“பேரரசர்கள் நிறுவிய வரலாற்றுக் கற்றூண்களும் கற்கோட்டைகளும் சின்னமும் பின்னமும்பட்டு அழிந்தொழியும் இவ்வுலகில், ஒரு தமிழ்ப்புலவன் மூவாயிரம் ஆண்டுகட்குமுன் பனையேட்டில் எழுதிய தொல்காப்பியப் பெருநூல் சிதைவின்றி வழிவழிக் காக்கப்பட்டு, இன்றும் நம் உடைமையாக வாழ்கின்றது. காலக்கோட்படாதும், கடும்பகைக் கோட்படாதும் இத் தனிப்பெரும் பனுவலைக் குடும்பச்சொத்துப் போற் காத்தளித்த நம் முன்னோர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு தவப்பெரிது. நம் மூதாதையர் அடித்தொண்டினைப் பின்பற்றித் தமிழினத்தின் பொதுவுடைமையான தொல்காப்பியத்தினை நம் பிந்தியோர்க்கு நாமும் காத்து வழங்கவேண்டாமா? (பக்கம் 68, 69, தொல்காப்பியக் கடல்) என்று உறுதியேற்க செம்மல் வ.சுப.மாணிக்கம் அவர்கள் நமக்கு வழிகாட்டுகின்றார்.

தொல்காப்பியத்தில் இல்லறநெறி, பாலியல்நெறி, போர்நெறி, அரசியல்நெறி, மெய்ந்நெறி, பொதுநெறி, மொழிநெறி, இலக்கிய நெறிகள் உள்ளன என்று நுண்ணிதின் உணர்ந்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் எடுத்துக்காட்டியுள்ளார்

 வ.சுப.மாணிக்கம் அவர்களின் நூல்களில் கீழ்வரும் தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன.



தொல்காப்பியக் கடல்- மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம்

31 கட்டுரைகள் அடங்கிய நூல்.12+372=384 பக்கம் கொண்டது. 1987 இல் முதல் பதிப்பு. மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு.
இந்த நூலில் உள்ள கட்டுரைகள்:

  1. தொல்காப்பிய நயம்
  2. தொல்காப்பியம் நிலைபெற்றது எப்படி?
  3. எழுத்துமுறை
  4. தொல்காப்பியப் புதுமை
  5. மொழியறிஞன் தொல்காப்பியன்
  6. தமிழ் முதல்நூல்
  7. தொல்காப்பியர் நெறிகள்
  8. தொல்காப்பியப் புதிய உத்திகள்
  9. புதிய ஃ
  10. மாற்றொலியன்
  11. பாவம்
  12. ஆத்திசூடியும் எழுத்தியலும்
  13. மொழி முதலெழுத்துக்களின் வரம்பு
  14. அவன் என்பது யார்?
  15. வழுவமைதியா? மயக்கமா?
  16. சொல்லிய முறை
  17. புறத்தும் புறத்தோரும்
  18. பாடாண் எட்டு
  19. சிறந்தது பயிற்றல்
  20. பாடம் முரணா? வடிவா?
  21. பொருளே உவமம்
  22. பாவின் இனங்களா?
  23. செய்யுளியல்காரிகை
  24. தொல்காப்பிய உரைநயம்
  25. தொல்காப்பிய உரை நெறிகள்
  26. தொல்காப்பிய உரைத் திறன்கள்
  27. இலக்கண ஒருமைப்பாடு
  28. இலக்கணப் படைப்புக்கள்
  29. தமிழ்நாடு? தமிழ்நாட்டு?
  30. புதிய ஐந்திறப் போக்கு
  31. தொல்காப்பியம் இன்றும் நாளையும்



தொல்காப்பியப் புதுமை.சுப. மாணிக்கம்

மு.. 1988, 156 பக்கம். மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு.

இந்த நூலில் 16 கட்டுரைகள் உள்ளன. அவையாவன:

  1. தொல்காப்பியப் புதுமை
  2. தொல்காப்பியன் ஒரு மொழியறிஞன்
  3. தமிழ் முதல் நூல்
  4. காவியப் பேச்சு
  5. சாத்தனார்
  6. தியாகம்
  7. அழகியல்
  8. மணிநாவொலி
  9. பாவம்
  10. அருஞ்சொற்கள்
  11. வாழ்க்கைத்துணை
  12. பாரதியின் புலமை
  13. பாரதியின் பழமை
  14. பாரதி கண்ட தேசிய ஒருமை
  15. சங்க நெறிகள்
  16. தொல்காப்பிய நெறிகள் என்பன அவை.



தொல்காப்பியம் எழுத்திகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம்

தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, 1989 அக்டோபர், பக்கம் 10+202=212

தொல்காப்பியம் நூல் மரபு, மொழிமரபு என்னும் ஈரியல்களுக்கு அமைந்த விரிவான உரை நூல் இஃது.

தொல்காப்பியம் நூலுக்குப் பனம்பாரனார் பாடிய 15 அடிகள் சிறப்புப் பாயிரத்திற்கு மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அவர்கள் 16 பக்கம் அகலவுரை கண்டுள்ளமை இவர்தம் தமிழ் நூல்பயிற்சிக்கு எடுத்துக்காட்டாகும்.

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம் அவர்களின் வழியில் தொல்காப்பியம் பரப்புவோம்!


செவ்வாய், 13 ஜூலை, 2010

மூதறிஞர் வ. சுப. மாணிக்கனாரின் மனைவி ஏகம்மை ஆச்சி இயற்கை எய்தினார் ...


தெய்வத்திரு.ஏகம்மை ஆச்சி அவர்கள்

மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் மனைவி ஏகம்மை ஆச்சி அவர்கள் இன்று(13.07.2010) காரைக்குடியில் உள்ள தம் கதிரகம் இல்லத்தில் காலை 10.30 மணிக்கு இயற்கை எய்தினார். 90 அகவை கொண்டு நிறைவாழ்வு வாழ்ந்த ஆச்சி அவர்கள் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் ஐயா அவர்களின் தமிழ்ப்பணிகளுக்குப் பேருதவியாக விளங்கியவர்கள்.வ.சுப.மாணிக்கனார் அவர்கள் தம் இறுதிக்காலத்தில் விருப்பமுறி எழுதி வைத்தார்கள்.அதன்படி தம் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். அவற்றை முற்றாக நடைமுறைப் படுத்தியதில் ஆச்சி அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. வ.சுப.மாணிக்கனாரிடம் பயின்ற மாணவர்கள் யாவரும் ஆச்சி அவர்களை அம்மா என்று அன்பொழுக அழைத்து மதிக்கும் சிறப்பிற்கு உரியவர்கள்.

ஏகம்மை ஆச்சி அவர்கள் நெற்குப்பை என்ற ஊரில் இலட்சுமணன் செட்டியார்,கல்யாணி ஆச்சி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர்கள். ஆச்சி அவர்களுக்கும் அறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்களுக்கும் 14.11.1945 திருமணம் நடந்தது. மணப்பயனாக இவர்களுக்குத் தொல்காப்பியன்,பூங்குன்றன்,பாரி,தென்றல்,மாதரி,பொற்றொடி என ஆறு மக்கட் செல்வங்கள்.

வ.சுப.மாணிக்கனார் தம் மனைவியாகிய ஏகம்மை ஆச்சி பற்றி பின்வருமாறு பதிவு செய்துள்ளர்.

" நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழுநேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி.திட்டமிட்டுக் கணக்கிட்டுக் குடும்பம் நடத்தும் கலை வல்லவள்.உலகியலறிவு மிக்கவள்.நான் மேற்கொண்ட பல துணிவுகட்கு எளிதாக உடன்பட்டவள்.பதவிகளை இடையே துறந்த காலையும்,எதிர்காலம் என்னாகுமோ என்று கலங்காமல், உங்கட்கு இது நல்லது என்று பட்டால் சரிதான் என்று சுருங்கச் சொல்லி அமைபவள். குடும்பவுழைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. ( தற் சிந்தனைகள், கையெழுத்துப்படி பக்.68-69) - மேற்கோள் முனைவர் இரா.மோகன்)

காரைக்குடியில் 15.07.2010 இல் ஆச்சி அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பெற உள்ளது.

தெய்வத்திரு.ஏகம்மை ஆச்சி அவர்கள்

வ.சுப.மாணிக்கனார் இல்ல முகவரி:

"கதிரகம்"
சுப்ரமணியபுரம் 6 வது வீதி,
காரைக்குடி,தமிழ்நாடு

வியாழன், 25 செப்டம்பர், 2008

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம்(17.04.1917-25.04.1989)


மூதறிஞர் வ.சுப.மாணிக்கம்


மூதறிஞர் எனவும் செம்மல் எனவும் அழைக்கப்பெறும் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரி என்னும் ஊரில் பிறந்தவர்(17.04.1917). இவர் தம் பெற்றோர் வ.சுப்பிரமணியன் செட்டியார் தெய்வானை ஆச்சி என்பதாகும். அண்ணாமலை என்பது இவர்தம் பிள்ளைப்பருவத்துப் பெயராகும். இவருடன் பிறந்தவர்களுள் ஆடவர் இருவர், மகளிர் இருவர் என உடன் பிறந்தார் நால்வராவர்.

இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்த மாணிக்கனார் தம் தாய்வழிப்பாட்டி, மீனாட்சி ஆச்சியும், தாத்தா அண்ணாமலைச் செட்டியாரும் வளர்க்க, வளர்ந்தார்.

வ.சுப.மாணிக்கம் அவர்கள் குருகுல முறையில் ஏழாம் அகவை வரை தொடக்க கல்வியைத் தம் பிறந்த ஊரில் வாழ்ந்த திரு.நடேச ஐயரிடம் கற்றார். ஐயர் அவர்கள் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையுடன் தொடர்புடையவர்கள். அவர் வழி ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, நன்னெறி, வாக்குண்டாம் நூல்களை ஐயம் திரிபறக் கற்றார்.

பின்னர் பர்மா சென்று கைபழகுதல் என்னும் வணிகத்தொழில் பழகினார். 11 அகவையில் பர்மா சென்ற மாணிக்கனார் இருமுறை தமிழகம் வந்துள்ளார். பின்னர்க் கடை முதலாளி உரைத்தபடி பொய் சொல்லாத காரணத்தால் வேலையிழந்து தமிழகம் வந்தார். அப்பொழுது மாணிக்கனார்க்கு அகவை பதினெட்டு ஆகும்.

அறிஞர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களின் உறுதுணையால் மாணிக்கனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வித்துவான் வகுப்பினை நிறைவு செய்தார்(1936-40).பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வழியாக பி.ஓ.எல் (1945), முதுகலை(1951) ஆகிய பட்டங்களைப் பெற்றார். அடுத்து, தமிழில் வினைச்சொற்கள் என்னும் பொருளில் ஆய்வு செய்து எம்.ஓ.எல் பட்டம் பெற்றார்(1948). தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்(1957).

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வ.சுப.மாணிக்கனார் கற்ற பொழுது பண்டிதமணியார், இரா. இராகவ ஐயங்கார், நா.மு.வேங்கடசாமி நாட்டார், அ.சிதம்பரநாதன் செட்டியார், இரா. கந்தசாமியார், ஆ.பூவராகன் பிள்ளை, மு.அருணாசலம் பிள்ளை முதலான அறிஞர் பெருமக்கள் ஆசிரியர்களாக இருந்து தமிழறிவு ஊட்டினர். இவர்களுள் பண்டிதமணியார் அவர்கள் பலவகையிலும் மாணிக்கனாரின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்ததால் நன்றியின் அடையாளமாகத் தாம் வாழ்ந்த இல்லத்திற்குக் 'கதிரகம்' எனப்பெயரிட்டனர். தம் மகனுக்குப் பூங்குன்றன் எனப்பெயரிட்டனர்.

ஆசிரியப்பணி

வ.சுப.மாணிக்கனார் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே 1941 ஆம் ஆண்டு விரிவுரையாளராகப் பணியேற்றார். ஏழாண்டுகள் (1941-48) அப்பணி அங்கு அமைந்தது.1948 இல் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் இணைந்தார்.1964-1970 இல் அக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரியும் பேறும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மீண்டும் பணியாற்ற அழைப்பு விடுத்தது.  அதன் காரணமாக 1970-1977 வரை தமிழ்த்துறைத் தலைவராகவும், இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணிபுரிந்தார்.

வ.சுப.மாணிக்கம் அவர்கள் தம் கடுமையான உழைப்பாலும்,ஒப்பாரில்லாத தமிழ்ப்புலமையாலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்(17-08-1979-30-06-1982).இவர் துணைவேந்தர் பணிபுரிந்தகாலை மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் சார்பில் அரிய கண்காட்சி அமைத்தமை, பல நூல்கள் வெளியிட்டமை இவரின் பணிகளுள் குறிப்பிடத்தக்கன. பல்வேறு துறைகளை உருவாக்கிப் பல்கலைக்கழகம் புகழ்பெற வழி கண்டார்.

தம் ஆசிரியர் பெயரில் பண்டிதமணி அரங்கு நிறுவியமை,பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்கவேண்டும் என ஆணையிட்டமை, ஆசிரியர்கள், பணியாளர்கள் வீடு கட்டிக்கொள்ள கடனுதவி வழங்கியமை உள்ளிட்டன குறிப்பிடத்தக்கன. தக்க அறிஞர்களைச் சிறப்புநிலைப் பேராசிரியராக அமர்த்தித் தமிழ் ஆய்வுக்கு வழி வகுத்தார்.

வ.சுப.மாணிக்கம் அவர்கள் துணைவேந்தர் பணியிலிருந்து விடுபட்ட பின்னர் திருவனந்தபுரம் திராவிட மொழியியற் கழகத்தில் 'தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஓர் ஆய்வினை மேற்கொண்டார்.முதுபேராய்வாளர் என்னும் பதவியில் இப்பணியை ஐயா அவர்கள் செய்தார்கள்.

பின்னர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காபிய ஆய்விற்கென அமைக்கப்பெற்ற ஆய்விருக்கையில் தொல்காப்பியத் தகைஞர் என்னும் பொறுப்பில் இருந்து ஓராண்டு ஆய்வு செய்தா(1985-86).இவ்வாய்வு தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை என்னும் பெயரில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்வழி வெளிவந்துள்ளது. தொடர்ந்து பல நூல்கள் எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை செம்மல் என்னும் சிறப்புப் பட்டத்தையும்,குன்றக்குடி ஆதீனம் முதுபெரும்புலவர் என்னும் பட்டத்தையும்,ஈப்போ பாவாணர் தமிழ்மன்றம் பெருந்தமிழ்க்காவலர் என்னும் பட்டத்தையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பொன்விழாவின் பொழுது இவருக்கு மூதறிஞர் (டி.லிட்.,1979) என்னும் பட்டத்தையும் வழங்கிச்சி றப்பித்தன. தமிழக அரசு இவருக்குத் திருவள்ளுவர் விருதினை வழங்கிச் சிறப்பித்தது(மறைவிற்குப் பின்).

வ.சுப.மாணிக்கம் அவர்கள் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறைக்கு ஆசிரியர் பணியமர்த்தல் நேர்காணல் தேர்வாளராக 24.04.1989 இல் புதுச்சேரி சென்றார். புதுச்சேரி உப்பளம் அரசினர் தங்குமனையில் இரவு பதினொருமணி வரை நன்கு உரையாடியபடி இருந்தார். நள்ளிரவு ஒருமணியளவில் அவருக்கு அடிக்கடி இருமல் ஏற்பட்டது. வாந்தியும் எடுத்தார். உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவ ஊர்தியில் ஏற்றிக்கொண்டு கோரிமேடு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிர் 25.04.1989 ஆம் நாள் வைகறையில் பிரிந்தது.

இல்லறம்

வ.சுப.மாணிக்கம் அவர்கள் 14.11.1945 இல் நெற்குப்பையைச் சேர்ந்த ஏகம்மை ஆச்சி அவர்களைத் தம் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டவர். இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக இவர்களுக்குத் தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி எனும் ஆண்மக்களும், தென்றல், மாதரி, பொற்றொடி என்னும் மூன்று பெண்மக்களும் பிறந்தனர்.

வ.சுப.மாணிக்கம் அவர்கள் மிகச்சிறந்த தமிழ்ப்புலமை உடையவர்கள். தமிழ்ப்பற்று உடையவர்கள்.இருபதாம் நூற்றாண்டில் உரைநடையில் எழுத வல்லாருள் இவருக்குத் தனி இடம் உண்டு. நன்றியுணர்வு உடையவர்கள். சங்க இலக்கியங்களைத் தம் நா நுனியில் வைத்திருந்தவர். இவருக்கெனப் பல கொள்கைகள் இருந்தன. தமிழ்வழிக் கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். திருக்குறள் செயல் நூல் என்றவர். தம் வாழ்க்கையில் திருக்குறள் கருத்துகளை ஏற்றுக் கடைப்பிடித்தவர்.

தொல்காப்பியத்தையும், பிற சங்கப் பனுவல்களையும் உயர்வாக எண்ணியவர். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். ஆர்ப்பாட்டம் விரும்பாதவர். கடும் உழைப்பாளி. தாம் பணிபுரிந்த நிறுவனங்கள்மீதும் அதனைத் தோற்றுவித்தவர்கள் மீதும் மிகச்சிறந்த பற்றுடையவர். தாம் பணிபுரிந்த கல்லூரியான அழகப்பர் கல்லூரியின் நிறுவுநர் வள்ளல் அழகப்பரின் சீர்த்திபேசும் கொடைவிளக்கு என்னும் நூல் உயர்ந்த தரத்தன. அந்நூலின் பாடல்கள் கற்பாரைக் கரைந்துருகச் செய்யும் ஆற்றல் உடையன. அதுபோல் தமக்குப் பணி நல்கிய அண்ணாமலை அரசர் மேல் பாடப்பெற்ற பாடல்கள் அப்பல்கலைக்கழகத்தாரால் இன்றும் நினைவுகூரப்படும் தரத்தன.

பல்வேறு புதுக் கலைச்சொற்களை வழங்கித் தமிழுக்குச் சொல்வளம் சேர்த்தவர் வ.சுப.மாணிக்கம் அவர்களாவார். மக்கள் இயக்கம் கட்டித் தில்லையில் தேவாரத் திருமொழிகள் அம்பலம் ஏற வழி வகுத்தவர். ஊர்தோறும் சென்று தமிழ்வழிக் கல்விக்காகக் குரல்கொடுத்தவர்.

வ.சுப.மாணிக்கம் அவர்கள் வழங்கிய தமிழ்க்கொடை

01. மனைவியின் உரிமை,1947
02. கொடைவிளக்கு,1957
03. இரட்டைக் காப்பியங்கள்,1958
04. நகரத்தார் அறப்பட்டயங்கள்,1961
05. தமிழ்க்காதல்,1962
06. நெல்லிக்கனி,1962
07. தலைவர்களுக்கு,1965
08. உப்பங்கழி, 1972
09. ஒருநொடியில்,1972
10. மாமலர்கள்,1978
11. வள்ளுவம்,1983
12. ஒப்பியல்நோக்கு,1984
13. தொல்காப்பியக் கடல்,1987
14. சங்கநெறி,1987
15. திருக்குறட் சுடர்,1987
16. காப்பியப் பார்வை,1987
17. இலக்கியச்சாறு,1987
18. கம்பர்,1987
19.தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை, 1989
20. திருக்குறள் தெளிவுரை,1991
21. நீதிநூல்கள்,1991
22. The Tamil Concept of Love
23. A Study of Tamil Verbs
24. Collected Papers
25. Tamilology

அறிக்கைகள்

26.எழுத்துச் சீர்திருத்தம், எங்கே போய்முடியும்?(01.04.1989)
27. தமிழ்வழிக் கல்வியியக்கம்: மொழியறிக்கை(15.05.1989)
28. தமிழ்வழிக் கல்வியியக்கம்: மதுரை ஊர்வலம் நிகழ்ச்சி விளக்கம்(12.06.1988)

நன்றி

01.முனைவர் இரா.மோகன், வ.சுப.மாணிக்கம், சாகித்திய அகாதெமி வெளியீடு,
02.முனைவர் இரா.சாரங்கபாணி, மாணிக்கச்செம்மல், மணிவாசகர் பதிப்பகம்

பின்குறிப்பு

(1992இல் பேராசிரியர் பா.வளன்அரசு அவர்களின் தலைமையில் இயங்கும் நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக்கழகம் சார்பில் நடைபெற்ற மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் தமிழ்ப்பணிகள் என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் தமிழக அளவில் யான் எழுதிய கட்டுரை தங்கப் பதக்கத்திற்கு உரியது என அறிஞர்கள் தேர்ந்தெடுத்துத் தங்கப்பதக்கம் வழங்கினர். அப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த முனைவர் ச.மெய்யப்பன் அவர்களின் வழியாக அறிஞர் மாணிக்கனாரை அவர்களின் நூல்கள் வழியாக அறியும் வாய்ப்புப்பெற்றேன். அன்றுமுதல் செம்மல் அவர்களை என் கொள்கை முன்னோடியாக நினைத்துப் போற்றுகிறேன்.செம்மலின் தம்பியார் ஐயா வ.சுப.சொக்கலிங்கம். மதுரை இராம.விசுவநாதன், அறிஞர் தமிழண்ணல், பேராசிரியர் மது.ச.விமலானந்தம் ஆகியோரின் தொடர்பும் பின்னாளில் எனக்கு அமைந்தது).