நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம் நூற்றாண்டுத் தொடக்கம்!...

செம்மல் வ.சுப. மாணிக்கம்

எளிமையின் உருவம்; புலமையின் இயக்கம்; சங்கப் பனுவலில் திளைத்த அறிஞர்; தொல்காப்பியக் கடலில் மூழ்கி முத்தெடுத்த வல்லுநர்; தமிழ்க்காதலால் வள்ளுவத்தை வரைந்து பார்த்தவர்; திருவாசகத் தேனுண்ணும் தும்பி; ஏழிளந்தமிழில் வாழப் பழகியவர்; பல்லாயிரம் மாணவர்களின் நெஞ்சக் கோவிலில் நிலைபெற்ற தெய்வம்; கற்றோர் உள்ளத்தில் கலந்த மேதை; தினைத்துணை உதவி பெற்றாலும் பனைத்துணையாகக் கொள்ளும் பண்பாளர்; தமிழ்வழிக் கல்விக்குத் தெருவிலிறங்கித் தமிழ் முழக்கம் செய்தவர்; கொடை விளக்கு வழங்கிய மாமலர்; தில்லையம்பலத்தில் திருமுறை முழங்க வேட்கையுற்றவர்; கல்லாத இனத்தைக் கற்க வைத்தவருக்குப் பாடாண் திணை பாடிய பாவலர்; வீடும் கொடுத்த விழுச்செல்வரைப் பாட்டு மாளிகையில் படிமமாக்கிக் காட்டியவர். பண்டிதமணியாரின் புலமைப் பிறங்கடை இருவருள் ஒருவர்; தமிழ்ப்பகையை எதிர்த்து நின்ற அரிமா; பார் காத்தவரையும் பயிர் காத்தவரையும் போற்றும் உலகில் பைந்தமிழ் காத்தவரைப் போற்றிய நன்றியாளர்; இவ்வாறு எழுதிக்கொண்டே செல்லலாம் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ் வாழ்க்கையை! ஆம். தமிழ் வாழ்க்கை வாழ்ந்தவர்களின் பெருமையை முழுவதும் எழுதும் ஆற்றல் யாருக்கு உண்டு?

வரம்பிலாப் பெருமைகொண்ட தமிழ்த்தாயின் தலைமகன் மூதறிஞர் வசுப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று தொடங்குகின்றது! அரசியல் ஆர்ப்பாட்டத்திலும் மட்டைப்பந்து மாயையிலும் திரைப்படக் கூத்தர்களின் வெட்டுருவக் கூத்துகளிலும் மூழ்கிக் கிடக்கும் இற்றைத் தமிழகத்தாருக்கு அறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் தமிழ்ப்பணிகளையும் தமிழ் வாழ்க்கையையும் எடுத்தியம்புவது எம்மனோர் கடமையாகும்.

. சுப. மாணிக்கம் அவர்கள் மேலைச்சிவபுரி என்னும் சிற்றூரில் வாழ்ந்த வ. சுப்பிரமணியன் செட்டியார்தெய்வானை ஆச்சி ஆகியோருக்கு ஐந்தாவது மகனாக 17. 04.1917 இல் பிறந்தவர். இளம் அகவையில் தம் பெற்றோரை இழந்தவர். பர்மாவில் தம் முன்னையோரின் தொழிலைப் பழகியவர். பொய்சொல்லா மாணிக்கமாகப் பொலிந்தவர். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களால் அடையாளம் காணப்பெற்று, தமிழறிவு தரப்பெற்றவர். அண்ணாமலை அரசரின் கல்விக்கோயிலில் தம் கல்விப்பணியைத் தொடங்கி, மாணவர்களுக்குத் தமிழ் இலக்கிய அறிவையும், தமிழுணர்வையும் ஊட்டியவர். வள்ளல் அழகப்பர் அவர்களின் கல்வி நிறுவனத்தில் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தவர். நேர்மை, எளிமை இவற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர். தம் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்பவர்கள் குருதியுறவு உடையவர்கள் எனினும் பொறுத்துக்கொள்ளாத மாசில் மனத்தவராக வ. சுப. மாணிக்கம் விளங்கியவர். தம் குறிக்கோள் வாழ்க்கையை விருப்பமுறியாக(உயில்) எழுதிவைத்துப் பின்னாளில் தம் விருப்பம் தொடர வழிவகை செய்தவர். எந்த நிலையிலும் அறத்திற்குப் புறம்பாகச் செயல்படாத மாசில் மனத்தினர்; நெறியினர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராக இருந்து, மூத்த அறிஞர் பெருமக்களைத் தமிழாராய்ச்சிக்குப் பணியமர்த்தித் தமிழாராய்ச்சியை நிலைநிறுத்தியவர்.

தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள், திருவாசகம், கம்ப இராமாயணம், பாரதியத்தில் தனித்த ஈடுபாடு கொண்டவர். பழைமைப் பிடிப்பும் புதுமை வேட்கையும் நிறைந்தவர். தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தி இயக்கம் கண்டவர். தமிழ் எழுத்துக்களைத் திருத்தம் என்ற பெயரில் குலைக்க  அறிவியல், தொழில்நுட்பப் போர்வை போர்த்தி ஒரு குழு திரிந்தபொழுது அதனை வன்மையாகக் கண்டித்து எழுதியவர். ஆய்வு நூல்கள், படைப்பு நூல்கள், திறன் நூல்கள், புத்தாக்கச் சொற்கள் தந்து, தமிழ் வாழ்க்கை வாழ்ந்து தம் வாழ்நாளுக்குப் பிறகும் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் ஆக்கங்களைத் தந்த மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்; ஒவ்வொரு தமிழமைப்புகளின் கடமையாகும்.

அரசியல் செல்வாக்கோ, மற்ற பின்புலங்களோ இல்லாத மூதறிஞரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கற்றறிந்தார் கடமையாகும். அவர் படைப்புகளை மதிப்பிட்டுத் திறனாய்வு நூல்களை எழுதி, வெளியிடுவது எழுத்தாளர் கடமையாகும். மாணிக்கனாரின் வெளிவராத படைப்புகளைத் திரட்டித் தொகுத்து மாணிக்கப் புதையலை வெளிக்கொணர்வது உடன்பழகியோரின் பணியாகும்.  அவர் விரும்பிச் செய்த தமிழ்வழிக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த அரசுக்கு வேண்டுகோள் வைப்பது இயக்கம் நடத்துவோரின் தலையாப் பணியாகும். கோயில்களில் நாள்தோறும் திருமுறைகளைத் தமிழில் ஓதி, வழிபாடு நிகழ்த்துவதற்குக் குரல்கொடுப்பது இறையீடுபாட்டளர் கடமையாகும். மூதறிஞருக்குத் திருவுருவச் சிலையமைத்து அவர் நினைவுகளைப் போற்றுவதும், அவர் நினைவு என்றும் நின்று நிலவப் பணிபுரிவதும் அரசினரின் கடமையாகும். பல்கலைக்கழகங்கள், தமிழாய்வு நிறுவனங்கள் வ.சுப. மா. குறித்த ஆய்வரங்குகளையும், அறக்கட்டளைப் பொழிவுகளையும் நடத்தி அவருக்குப் பெருமை சேர்ப்பதைத் தலையாயப் பணியாக்குதல் வேண்டும்.


செம்மல் வ.சுப. மாணிக்கம் பிறந்த நாளில் அவர் கொள்கைளை நெஞ்சில் ஏந்துவோம்!

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம்