நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
வில்லியனூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வில்லியனூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஜனவரி, 2017

புதுச்சேரி கலையருவி நாட்டியப் பள்ளியின் அரங்கேற்ற நிகழ்வு…


நாட்டியமணிகளின் அரங்கேற்றம்


ஆடற்கலையில் வல்லோரின் அரங்கேற்றம்

புதுச்சேரியில் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றாலும் அனைத்திலும் கலந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை. வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளேன். புல்லாங்குழல் கலைஞர் தம்பி இராஜ்குமார் அவர்கள் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ’தம் குடும்பத்தினர் நடத்தும் நாட்டியப் பள்ளியில் பயிலும், நாட்டிய மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்வு 29.01.2017 இல் நடைபெறுகின்றது. அதில் தாங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வேண்டும்’ என்று ஓர் அன்பு வேண்டுகோளை முன்வைத்தார். எனக்கிருந்த பல்வேறு பணிகளில் கலந்துகொள்ள இயலுமா என்று தெரியவில்லையே என்ற ஒருவகை தயக்கத்துடன் வருவதாக ஒத்துக்கொண்டேன்.

குறிப்பிட்ட நாளில் கம்பன் கலையரங்கத்திற்கு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே சென்றேன். இராஜ்குமார் அவர்களும் அவரின் தந்தையார் கலைமாமணி கா. இராஜமாணிக்கம் ஐயாவும் அன்புடன் வரவேற்றனர்.

நாட்டிய நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராகக் கலந்துகொள்ள பேராசிரியர் நளினி அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத்திலிருந்து அழைக்கப்பட்டிருந்தார். இருவரும் சிறிதுநேரம் கல்வித்துறை பற்றி உரையாடிக்கொண்டிருந்தோம்.

அந்திமாலை 6.30 மணிக்குக் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தோம். இறைவணக்கத்துடன் நாட்டிய நிகழ்வு தொடங்கியது. எட்டு மாணவியர் அரங்கேறினர். குழுவாகவும், தனித்தனியாகவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். புதுச்சேரி கம்பன் கலையரங்கம் கலை இலக்கிய ஆர்வலர்களால் நிறைந்திருந்தது. மலர்வணக்கம்(புஷ்பாஞ்சலி), கௌத்துவம், அலாரிப்பு, ஜதீசுவரம், வர்ணம், எனத் தொடங்கிச் சிவன், காளி, முருகன், இராமன், கண்ணன் என்று ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபட்டு, நிறைவில் தில்லானாவுடன் அமையும் வகையில் நாட்டிய நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அரங்கேறிய மாணவிகள் தேர்ந்த கலைஞர்களைப் போல் தம் கலையார்வத்தை வெளிப்படுத்தினர். ஆடல் ஆசானின் திறமை இந்த இளம் கலைஞர்களிடம் வெளிப்பட்டு நின்றது. விசயவசந்தம், இரேவதி, ஆரபி, இலதாங்கி, சிவரஞ்சனி அம்சத்துவனி, உள்ளிட்ட இராகங்களில் இடம்பெற்ற பாடல்கள் அவையோரின் பெரும் பாராட்டினைப் பெற்றன.

’ஆடல் ஆசான்’ இரஞ்சனி இராஜமாணிக்கம், ’இசையாசான்’ இராஜமாணிக்கம், ’தண்ணுமையாசான்’ திருமுடி அருண், ’நாமுழவு ஆசான்’ அழகு இராமசாமி, வயலின் பேராசிரியர் சீனிவாசன், குழலாசான் இராஜ்குமார் என அனைவரும் அரங்கில் இசை அரசாங்கத்தையே நடத்தினார்கள். ஒவ்வொருவரின் தனித்திறனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை மேம்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் அபிதா, சௌபுதேஜாசிறீ, எரின் டைனாசியசு, கோபிகா, என எண்மர் அரங்கேறினர்.

மூன்றுமணி நேரமும் சிலப்பதிகார அரங்கேற்று விழாவை நேரில் பார்த்த மன உணர்வைப் பெற்றேன். அக்காலத்தில் இருந்த திரைச்சீலைகளும், வண்ண விளக்குகளும், ஆடல் அரங்கும், தலைக்கோல் பட்டமும்,  ஆயிரத்து எண்கழஞ்சும், வலப்புறம், இடப்புறம் நின்ற நாட்டியக்கலைஞர்களும், வேத்தியல் பொதுவியல் கூத்துகளும் என் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன.

நாட்டிய நிகழ்வைச் சிறப்பாக வடிவமைத்த கலைமாமணி கா. இராஜமாணிக்கம் ஐயாவின் நாட்டிய அறிவையும், குரலினிமையையும் பல்வேறு வாய்ப்புகளில் முன்பே அறிவேன். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் உருவான பொழுது, நாட்டியம், இசைத் தொடர்பான பணிகளில் இவரின் உதவி எங்களுக்கு மிகுதியாக இருந்தது. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “இசையில் தனித்தமிழை எங்கும் பரப்பி” எனத் தொடங்கும் பாடலை இவர் பாடியபொழுது பாடல் பதிவு அரங்கில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்ப்பூக்களைத் துடைத்தோம். அந்த அளவு உணர்ந்து பாடிய பெருமகனாரின் குரல் உலகத் தமிழர்களால் சிறப்பாகப் பாராட்டப்பட்டது. புதுவையின் புகழ்மிக்க கலைஞராக உலக நாடுகளில் இசைப்பயணத்தைத் தொடர்ந்து நடத்திவரும் கலைமாமணி கா.இராசமாணிக்கம் அவர்களின் தமிழிசைப் பணியை உலகத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அவரின் தமிழிசைப் பணியை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

கா. இராஜமாணிக்கனார் அவர்களின் இசைவாழ்க்கை:

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த உலைவாய்க்கால் என்ற ஊரில் வாழ்ந்த திருவாளர் சி. காத்தவராயன், பச்சையம்மாள் ஆகியோரின் மகனாக 19.07.1963 இல் பிறந்தவர். வில்லியனூரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர். மேல்நிலைக் கல்வியை முத்தரையர்பாளையம் இளங்கோவடிகள் பள்ளியில் பயின்றவர். 1982 முதல் 1986 வரை கும்பகோணம் தருமாம்பாள், வடலூர் திரு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் தன் முயற்சியாக நாட்டியம், வாய்ப்பாட்டைக் கற்றுக்கொண்டவர். 1986 முதல் 1989 வரை நான்காண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் “இசைமாமணி” என்னும் இசைப்படிப்பைப் படித்து, முறையாக இசையறிவு பெற்றவர். முனைவர் சீர்காழி கோவிந்தராசன் இவரின் இசைப்பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.


கலைமாமணி கா. இராஜமாணிக்கம்

ஊரில் நடைபெறும் தெருக்கூத்து நிகழ்வுகளில் கலந்துகொண்டு,இவரின் அப்பா ஆர்வமாகப் பாடும் இயல்புடையவர். அம்மாவின் குரலும் சிறப்பாக இருக்கும். இந்தப் பின்புலத்தில் இசை, நாட்டியத்தை முறையாகப் பயின்ற கா. இராசமாணிக்கம் அவர்கள் கே.பி. கிட்டப்பா பிள்ளை, திரு. இராமையா ஆகியோரிடம் பயின்று நாட்டிய இசையறிவை மேலும் மேலும் வளப்படுத்திக்கொண்டார்.



1990-91 ஆம் ஆண்டளவில் புதுவையில் நாட்டிய ஆசிரியராக அனைவருக்கும் அறிமுகமானார். 1992 இல் சங்கீத நாட்டியாலயா என்னும் நாட்டிய இசைப்பள்ளியை உருவாக்கிப் பல நூறு மாணவர்களுக்கு நாட்டிய இசையறிவை வாரி வழங்கும் பேராசிரியராகப் புகழுடன் விளங்கிவருகின்றார். 1989 இல் இராஜேஸ்வரி அம்மையாரை மணந்து, இரண்டு மக்கள் செல்வங்களுடன் புகழ்வாழ்க்கை வாழ்ந்து வரும் இராசமாணிக்கம் ஐயா நாட்டுப்புறப் பாடல்களிலும் பெரும் ஆற்றல் பெற்றவர்.

கலைப்பயணமாக சுவிசு (7 முறை), பிரான்சு (5 முறை) இத்தாலி, டென்மார்க்கு, செர்மனி, ரியூனியன் எனத் தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் இசைப்பணியைத் தொடர்ந்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள இவரின் ஆர்வத்துறை நாட்டிய நாடகங்கள் ஆகும். புரட்சிக்கவி, வீரத்தாய், சிலப்பதிகாரம் ஆகியவற்றை நாட்டிய நாடகமாக அரங்கேற்றியுள்ளார். இவரின் நாட்டியபாணி தஞ்சாவூர் பாணியாகும். பாரதியார், பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச் சிவம் உள்ளிட்ட பாவலர்களின் பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ள இவரின் ஆற்றல் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும்.

கலைமாமணி கா. இராஜமாணிக்கம் அவர்களின் மகன் இராஜ்குமார் இராஜமாணிக்கம் மிகச்சிறந்த புல்லாங்குழல் கலைஞர்; வாய்ப்பாட்டுக் கலைஞர்; படத்தொகுப்பாளர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம், விபுலாநந்தர் ஆவணப்படம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெருந்துணைபுரிந்தவர். கலைமாமணி கா.இராஜமாணிக்கம் அவர்களின் மகளார் மருத்துவர் இரஞ்சனி இராஜமாணிக்கம் புகழ்பெற்ற நாட்டியக் கலை இயக்குநர்.

கலைமாமணி கா. இராஜமாணிக்கம் அவர்கள் புதுவை மாநிலத்தில் அமைந்துள்ள ஆதித்தியா வித்தியாசிரமப் பள்ளியின் கலைத்துறை இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். தமிழிசை, நாட்டியம் இவற்றில் பெரும் பங்களிப்பு செய்துவரும் இந்த இசையறிஞர்க்கு என் வாழ்த்துகளும் வணக்கமும்.



கலைமாமணி கா. இராஜமாணிக்கம் ஐயாவின் அன்பில்...


அரங்கேறியவர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்



கலைமாமணி கா.இராஜமாணிக்கம் அவர்கள்



அரங்கேறியவர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்


 சிலம்பிலிருந்து மேற்கோள்காட்டி மு.  இளங்கோவன் உரை

சனி, 6 செப்டம்பர், 2014

சுடுமண் சிற்பக் கலைஞர் வில்லியனூர் கி.முனுசாமி


 திரு.முனுசாமி அவர்களையும் அவர்கள் உருவாக்கிய சிலையையும் உற்றுப் பார்த்து வியக்கும் மு.இளங்கோவன்

    ஒளி ஓவியர் சிவக்குமார் அவர்கள் பலநாள் என்னை அழைத்துப்பார்த்தார். வேலைகளைக் காரணம் காட்டித் தப்பித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் இரவு கட்டாயம் வரவேண்டும் என்று கட்டளைபோட்டார். வேறு வழியில்லாமல் முன்னிரவு நேரத்தில் அரைமனத்துடன் வில்லியனூர் நோக்கி இருவரும் விரைந்தோம். சந்தும் பொந்துமான பாதைகளைக் கடந்து எங்கள் வண்டி மண்குவியல்கள் இருந்த வீட்டருகே நின்றது. இறங்கிச் சுற்றும் முற்றும் பார்த்தேன். உழைக்கும் மக்கள் நிறைந்த தெருவாக இரவில் அந்தத் தெருவை மதிப்பிட்டுக்கொண்டேன். வீட்டின் திண்ணையிலும் கூடத்திலும் மண்பொம்மைகள் செய்ததும், வெந்ததுமாக இருந்தன. அங்கிருந்த மண்குவியல்களையும், பக்குவப்படுத்தப்பட்ட மண்ணையும், புளித்த மண்ணையும், பல்வேறு சுடுமண் பொம்மைகளையும் தொட்டும் தடவியும் பார்த்து மகிழ்ந்தேன்.

வாயிற்படியில் அமர்ந்தபடி அகல்விளக்கினைத் தடவியும், வழித்தும், சிறு கத்தியை வைத்துப் பிசிறுகளைச் சீவியும் அழகுப்படுத்திக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. பின்புதான் இவர் கலைமாமணி விருது பெற்ற கலைஞர் என்று தெரிந்துகொண்டேன். எங்களுக்குத் தேநீர் கொடுத்துவிட்டு அவர் வேலையை அவர் கவனித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வந்துவிடுவதாகக் கூறிய நண்பர் கால்மணி நேரத் தாழ்ச்சிக்குப் பிறகு வந்து சேர்ந்தார். காலத் தாழ்ச்சிக்குப் பொறுத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொண்டார்.

இதுநேரம் வரை நான் கேட்டுக்கொண்டிருந்த செய்திகளுக்கும் கண்ணில் தென்பட்ட ஆளுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது. மெலிந்த உடல்வாகு. வெண்மயிர் விரவிய தலைமுடி.  அன்பு ஒழுகும் பார்வை. அறிவு ஒழுகும் பேச்சு. அவருடன் எங்கள் பேச்சு மூன்றுமணி நேரத்திற்கும் மேல் நீண்டது.

சுடுமண் பொம்மைக் கலைஞர் கி. முனுசாமி மனந்திறந்து உரையாடியானார். புதுவை முத்தியால்பேட்டையில் வாழ்ந்த கிருஷ்ண பத்தர், மங்கலட்சுமி ஆகியோருக்குப் பன்னிரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர் முனுசாமி. 21.07.1967 இல் பிறந்த இவர் வறுமைச்சூழலில் வாழ நேர்ந்தது.  மண்ணைக் குழைத்து அகல்விளக்கு, சட்டி, பானை, குடம் வனையும் தொழில் செய்யும் குடும்பம். எத்தனையோ குடும்பங்களுக்கு உணவு சமைக்க பானைகளைச் செய்துகொடுத்தாலும் இவர்களின் அடுப்பில் பானையை வைத்துப் பொங்கமுடியாத வறுமைச்சூழல். முனுசாமி எட்டாம் வகுப்பு வரை படித்தார். பெங்களூரில் இரண்டாண்டுகள் வேலை பார்த்தார். 83 - 85 ஆம் ஆண்டுகளில் மின்சாரப் பணியாளர் படிப்பை முடித்தார். கேரளா, பாலக்காடு வரை வறுமையின் துரத்தலுக்குத் தப்பிச் சென்று பல்வேறு வேலைகளைச் செய்தார். ஆரியாடு இராசேந்திரன் அவர்களிடம் இயற்கை வடிவமைப்பு தொழிலைப் பயின்றார்.

1989 முதல் அகல்விளக்கு விற்றால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிலை முனுசாமிக்கு இருந்தது. அகல்விளக்குச் செய்து விற்றுவந்தார். வில்லியனூரில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்குத் தாய் சேய் சிலை செய்யச் சொன்னார்கள். அதன் பிறகு காத்தவராயன், ஆரிய மாலா சிலை செய்தார். 1989 இல் கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் என்ற கல்வித்துறையின் முழக்கத்திற்கு ஆசையோடு பாட்டி, தாய், சேய் பொம்மை செய்துகொண்டு அதிகாரிகளைப் பார்க்கப் போனார். மிதிவண்டியில் சென்ற பாட்டியும் தாயும் சேயும் கீழே விழுந்து கை கால் தனித்தனியாப் பிரிந்து கிடந்தனர். அதிகாரிகளுக்கு நிலைமையை விளக்கிய முனுசாமி அவர்கள் முன்பாகவே பாட்டி, தாய், சேய் நலம்பெறச் செய்தார். இதனை நேரில் கண்ட அதிகாரிகள் முனுசாமியின் கையசைவுக்குக் கட்டுப்பட்டனர். அதிகாரிகள் நடுவே இவரின் முயற்சி தெரியவந்தது. முனுசாமியின் புகழ் பரவத் தொடங்கியது.

மூலதனம் இல்லாமல் வாணிகம் செய்யமுடியும் என்று நம்பிய முனுசாமி மண், காற்று, தீ, நீர். வானை நம்பிச் செய்யும் தம் முன்னோர் தொழிலான மண்பாண்டம் சார்ந்த தொழிலில் தீவிரமாக இறங்கினார். பானை, சட்டி செய்ததுடன் மண்குதிரை, புத்தர், விநாயகர், கண்காட்சிக்கு வைக்கும் அழகுப்பொம்மைகள் பலவற்றைச் செய்தார், இவர் பொம்மைகள் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்ததன. இவர் பொருள்கள் இவருக்கு முன்பாகக் கடல்கடந்தன. வானில் பறந்தன. புதுவை, தமிழகம் இந்தியா கடந்து முனுசாமியின் புகழ் உலக அரங்கிற்குச் சென்றது. தான் மட்டும் பொருள்களைச் செய்யாமல் அக்கம் பக்கம் இருந்தவர்களுக்குப் பயிற்சியளித்து மண்பொம்மைகள் செய்யப் பயிற்றுவித்தார். இதனால் தொடர்ந்து 11 ஆண்டுகள் இவர் செய்த பொருள்கள் முதல்பரிசினைத் தட்டிச் சென்றன. ஐந்துமுறை இவருக்குத் தேசிய விருது கிடைத்துள்ளது. 68 விருதுகள் இதுவரை பெற்றுள்ளார்.

இசுபெயின், பிரான்சு, ருமானியா, தாய்லாந்து, வியட்நாம், செர்மனி, இத்தாலி நாடுகளுக்குச் சென்று மண்ணில் சிலைசெய்வது எவ்வாறு என்று அங்குள்ளவர்களுக்குப் பயிற்சியளிதுள்ளார். தமிழகத்தின் தாய்த்தொழிலான மட்பாண்டம் செய்யும் கலையை உலகத் தமிழர்கள் இவரை அழைத்துப் பயின்று, பாதுகாக்கலாம். இவரின் விரல் அசைவில் விநாயகரும் புத்தரும் உயிர்பெறுவர். படத்தைப் பார்த்தும், உருவத்தைப் பார்த்தும் மண்ணில் சிலைவடிக்கும் மிகப்பெரும் கலைஞரைக் கண்ட மன நிறைவில் அவரிடம் விடைபெற்றோம்.

மண்ணும், கல்லும் மக்கள் வாழ்விலும் வரலாற்றிலும் பெருந்துணைபுரிவன. மண் ஓடுகளில் நம் முன்னோர்கள் எழுதிய எழுத்துகள்தான் தமிழக வரலாற்றில் ஆண்டுக்கணக்கை உறுதிசெய்ய உதவுகின்றன. பானை ஓடுகளில் உள்ள கீறல்களும் கிறுக்கல்களும்தான் பல வரலாற்று ஆராய்ச்சி அறிஞர்களைத் தூங்கவிடாமல் செய்கின்றன. கிரேக்க, உரோமை உறவுகளை அறியவும், சிந்துச் சமவெளி ஆய்வுகளை முன்னெடுக்கவும், அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் ஆய்வுகளை முன்னெடுக்கவும் பானை ஓடுகளும், தாழிகளும் பெரிய நிலையில் உதவுவன.

 உணவு சமைக்க உதவிய பானைகளின் பெரிய வடிவமான தாழிகள்தான் மனிதனை அடக்கம் செய்ய அக்காலங்களில் பயன்பட்டன. புறநானூற்றில் இடம்பெறும் "தாழிய பெருங்காடு" (புறம்.364) என்று தாழியில் உடல்புதைத்த வரிகள் இப்பொழுது என் நெஞ்சில் நிழலாடின. மணிமேகலையில் ஐந்துவகையில் உடல்புதைத்தக் குறிப்புகளையும் மனத்தில் அசைபோட்டேன். அவை இவை:

“சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்” 
                              ( மணிமேகலை: 6: 66-67)

மற்ற ஊர்களிலும் நாடுகளிலும் செய்யும் பொம்மைகள் உப்புத் தன்மை உடைய மண்ணில் செய்யப்படுவன. புதுச்சேரியில் ஓடும் சங்கராபரணி ஆற்றுப்படுகை மண் உப்புக் கலவாதது. இதில் செய்யும் பானைகளும் சட்டிகளும் பொம்மைகளும் உப்புத் தன்மை இல்லாததால் நீண்டகாலம் நிலைபெற்றிருக்கும் என்று முனுசாமி சொன்னது என் காதில் ஒலித்துக்கொண்டே உள்ளது. இவர் கைப்பட்ட மண்பொம்மைகள் உலகம் முழுவதும் இருந்து தமிழகத்தின் வரலாற்றை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் என்று நினைத்துக்கொண்டே வீடு திரும்பினேன்.




புதன், 12 அக்டோபர், 2011

ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி - தமிழ் இணையம் அறிமுக விழா


பார்வையாளர்கள்

புதுச்சேரியை அடுத்துள்ள வில்லியனூர் ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் சார்பில் 12.10.2011 புதன்கிழமை காலை 11 .30 மணியளவில் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் தமிழ் இணைய அறிமுக விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் திரு.மு.முகமது ஷா அவர்கள் தலைமை ஏற்றுச், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து இணையத்தின் இன்றையத் தேவையை மாணவர்களுக்கு வலியுறுத்திப் பேசினார். விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பேராசிரியர் மு.செந்தமிழ்க்கோ அவர்கள் வரவேற்றார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் மன்றக் கருத்தரங்க விழாவில் கலந்துகொண்டு இணையமும் தமிழும் என்ற தலைப்பில் தமிழ் இணையத்தின் பல்வேறு பயன்பாடுகளை விளக்கினார். இணையத்தின் தேவையை மாணவர்களுக்கு எடுத்துரைத்துத் தமிழ்த்தட்டச்சு தொடங்கி, இணையத்தில் உள்ள தமிழ் நூல்கள் குறித்த செய்திகள், மின்னஞ்சல் வசதி, உரையாடல் வசதி, விக்கிப்பீடியா உள்ளிட்ட தளங்களை அறிமுகம் செய்து, தமிழ் இணையம் வளர்ந்த வரலாற்றை மாணவர்களின் உள்ளம் உணரும் வகையில் எடுத்துரைத்தார்.

விழாவில் ஆச்சார்யா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திரு.பாரதிதாசன் உள்ளிட்டவர்களும் பிற துறைசார்ந்த பேராசிரியர்கள், மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் இந்த இணைய அறிமுகத்தால் ஏற்பட்ட பயன்களை நிறைவாக எடுத்துரைத்தனர்.

திரு.அ.வேல்முருகன் அவர்கள் நன்றியுரைத்தார்.


பேராசிரியர் மு.முகமது ஷா(முதல்வர்)


மு.இளங்கோவன் உரை


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


கலந்துகொண்டவர்களின் கருத்துரை


கலந்துகொண்டவர்களின் கருத்துரை


கலந்துகொண்டவர்களின் கருத்துரை