நாட்டியமணிகளின் அரங்கேற்றம்
புதுச்சேரியில் பல்வேறு கலை இலக்கிய
நிகழ்வுகள் நடைபெற்றாலும் அனைத்திலும் கலந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை. வாய்ப்பு
நேரும்பொழுதெல்லாம் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளேன். புல்லாங்குழல் கலைஞர் தம்பி
இராஜ்குமார் அவர்கள் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ’தம் குடும்பத்தினர் நடத்தும்
நாட்டியப் பள்ளியில் பயிலும், நாட்டிய மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்வு 29.01.2017 இல்
நடைபெறுகின்றது. அதில் தாங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வேண்டும்’ என்று
ஓர் அன்பு வேண்டுகோளை முன்வைத்தார். எனக்கிருந்த பல்வேறு பணிகளில் கலந்துகொள்ள இயலுமா
என்று தெரியவில்லையே என்ற ஒருவகை தயக்கத்துடன் வருவதாக ஒத்துக்கொண்டேன்.
குறிப்பிட்ட நாளில் கம்பன் கலையரங்கத்திற்கு
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே சென்றேன். இராஜ்குமார் அவர்களும் அவரின் தந்தையார்
கலைமாமணி கா. இராஜமாணிக்கம் ஐயாவும் அன்புடன் வரவேற்றனர்.
நாட்டிய நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களுள்
ஒருவராகக் கலந்துகொள்ள பேராசிரியர் நளினி அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத்திலிருந்து
அழைக்கப்பட்டிருந்தார். இருவரும் சிறிதுநேரம் கல்வித்துறை பற்றி உரையாடிக்கொண்டிருந்தோம்.
அந்திமாலை 6.30 மணிக்குக் குத்துவிளக்கேற்றி
நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தோம். இறைவணக்கத்துடன் நாட்டிய நிகழ்வு தொடங்கியது. எட்டு
மாணவியர் அரங்கேறினர். குழுவாகவும், தனித்தனியாகவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கம் கலை இலக்கிய ஆர்வலர்களால் நிறைந்திருந்தது. மலர்வணக்கம்(புஷ்பாஞ்சலி),
கௌத்துவம், அலாரிப்பு, ஜதீசுவரம், வர்ணம், எனத் தொடங்கிச் சிவன், காளி, முருகன், இராமன்,
கண்ணன் என்று ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபட்டு, நிறைவில் தில்லானாவுடன் அமையும் வகையில்
நாட்டிய நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அரங்கேறிய மாணவிகள் தேர்ந்த கலைஞர்களைப்
போல் தம் கலையார்வத்தை வெளிப்படுத்தினர். ஆடல் ஆசானின் திறமை இந்த இளம் கலைஞர்களிடம்
வெளிப்பட்டு நின்றது. விசயவசந்தம், இரேவதி, ஆரபி, இலதாங்கி, சிவரஞ்சனி அம்சத்துவனி,
உள்ளிட்ட இராகங்களில் இடம்பெற்ற பாடல்கள் அவையோரின் பெரும் பாராட்டினைப் பெற்றன.
’ஆடல் ஆசான்’ இரஞ்சனி இராஜமாணிக்கம், ’இசையாசான்’
இராஜமாணிக்கம், ’தண்ணுமையாசான்’ திருமுடி அருண், ’நாமுழவு ஆசான்’ அழகு இராமசாமி, வயலின்
பேராசிரியர் சீனிவாசன், குழலாசான் இராஜ்குமார் என அனைவரும் அரங்கில் இசை அரசாங்கத்தையே
நடத்தினார்கள். ஒவ்வொருவரின் தனித்திறனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை மேம்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் அபிதா, சௌபுதேஜாசிறீ, எரின் டைனாசியசு, கோபிகா, என எண்மர் அரங்கேறினர்.
மூன்றுமணி நேரமும் சிலப்பதிகார அரங்கேற்று
விழாவை நேரில் பார்த்த மன உணர்வைப் பெற்றேன். அக்காலத்தில் இருந்த திரைச்சீலைகளும்,
வண்ண விளக்குகளும், ஆடல் அரங்கும், தலைக்கோல் பட்டமும், ஆயிரத்து எண்கழஞ்சும், வலப்புறம், இடப்புறம் நின்ற
நாட்டியக்கலைஞர்களும், வேத்தியல் பொதுவியல் கூத்துகளும் என் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன.
நாட்டிய நிகழ்வைச் சிறப்பாக வடிவமைத்த கலைமாமணி
கா. இராஜமாணிக்கம் ஐயாவின் நாட்டிய அறிவையும், குரலினிமையையும் பல்வேறு வாய்ப்புகளில்
முன்பே அறிவேன். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் உருவான
பொழுது, நாட்டியம், இசைத் தொடர்பான பணிகளில் இவரின் உதவி எங்களுக்கு மிகுதியாக இருந்தது.
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “இசையில் தனித்தமிழை எங்கும் பரப்பி” எனத் தொடங்கும்
பாடலை இவர் பாடியபொழுது பாடல் பதிவு அரங்கில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்ப்பூக்களைத்
துடைத்தோம். அந்த அளவு உணர்ந்து பாடிய பெருமகனாரின் குரல் உலகத் தமிழர்களால் சிறப்பாகப்
பாராட்டப்பட்டது. புதுவையின் புகழ்மிக்க கலைஞராக உலக நாடுகளில் இசைப்பயணத்தைத் தொடர்ந்து
நடத்திவரும் கலைமாமணி கா.இராசமாணிக்கம் அவர்களின் தமிழிசைப் பணியை உலகத் தமிழர்கள்
பயன்படுத்திக்கொள்ளலாம். அவரின் தமிழிசைப் பணியை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.
கா.
இராஜமாணிக்கனார் அவர்களின் இசைவாழ்க்கை:
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த உலைவாய்க்கால்
என்ற ஊரில் வாழ்ந்த திருவாளர் சி. காத்தவராயன், பச்சையம்மாள் ஆகியோரின் மகனாக
19.07.1963 இல் பிறந்தவர். வில்லியனூரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு
வரை பயின்றவர். மேல்நிலைக் கல்வியை முத்தரையர்பாளையம் இளங்கோவடிகள் பள்ளியில் பயின்றவர்.
1982 முதல் 1986 வரை கும்பகோணம் தருமாம்பாள், வடலூர் திரு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம்
தன் முயற்சியாக நாட்டியம், வாய்ப்பாட்டைக் கற்றுக்கொண்டவர். 1986 முதல் 1989 வரை நான்காண்டுகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் “இசைமாமணி” என்னும் இசைப்படிப்பைப் படித்து, முறையாக
இசையறிவு பெற்றவர். முனைவர் சீர்காழி கோவிந்தராசன் இவரின் இசைப்பேராசிரியர் என்பது
குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
கலைமாமணி கா. இராஜமாணிக்கம்
ஊரில் நடைபெறும் தெருக்கூத்து நிகழ்வுகளில்
கலந்துகொண்டு,இவரின் அப்பா ஆர்வமாகப் பாடும் இயல்புடையவர். அம்மாவின் குரலும் சிறப்பாக
இருக்கும். இந்தப் பின்புலத்தில் இசை, நாட்டியத்தை முறையாகப் பயின்ற கா. இராசமாணிக்கம்
அவர்கள் கே.பி. கிட்டப்பா பிள்ளை, திரு. இராமையா ஆகியோரிடம் பயின்று நாட்டிய இசையறிவை மேலும் மேலும் வளப்படுத்திக்கொண்டார்.
1990-91 ஆம் ஆண்டளவில் புதுவையில் நாட்டிய
ஆசிரியராக அனைவருக்கும் அறிமுகமானார். 1992 இல் சங்கீத நாட்டியாலயா என்னும் நாட்டிய
இசைப்பள்ளியை உருவாக்கிப் பல நூறு மாணவர்களுக்கு நாட்டிய இசையறிவை வாரி வழங்கும் பேராசிரியராகப்
புகழுடன் விளங்கிவருகின்றார். 1989 இல் இராஜேஸ்வரி அம்மையாரை மணந்து, இரண்டு மக்கள்
செல்வங்களுடன் புகழ்வாழ்க்கை வாழ்ந்து வரும் இராசமாணிக்கம் ஐயா நாட்டுப்புறப் பாடல்களிலும்
பெரும் ஆற்றல் பெற்றவர்.
கலைப்பயணமாக சுவிசு (7 முறை), பிரான்சு
(5 முறை) இத்தாலி, டென்மார்க்கு, செர்மனி, ரியூனியன் எனத் தமிழர்கள் வாழும் நாடுகளில்
தமிழ் இசைப்பணியைத் தொடர்ந்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள இவரின்
ஆர்வத்துறை நாட்டிய நாடகங்கள் ஆகும். புரட்சிக்கவி, வீரத்தாய், சிலப்பதிகாரம் ஆகியவற்றை
நாட்டிய நாடகமாக அரங்கேற்றியுள்ளார். இவரின் நாட்டியபாணி தஞ்சாவூர் பாணியாகும். பாரதியார்,
பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச் சிவம் உள்ளிட்ட பாவலர்களின் பாடல்களை இசையமைத்துப்
பாடியுள்ள இவரின் ஆற்றல் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும்.
கலைமாமணி கா. இராஜமாணிக்கம் அவர்களின் மகன்
இராஜ்குமார் இராஜமாணிக்கம் மிகச்சிறந்த புல்லாங்குழல் கலைஞர்; வாய்ப்பாட்டுக் கலைஞர்;
படத்தொகுப்பாளர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம், விபுலாநந்தர்
ஆவணப்படம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெருந்துணைபுரிந்தவர். கலைமாமணி கா.இராஜமாணிக்கம்
அவர்களின் மகளார் மருத்துவர் இரஞ்சனி இராஜமாணிக்கம் புகழ்பெற்ற நாட்டியக் கலை இயக்குநர்.
கலைமாமணி கா. இராஜமாணிக்கம் அவர்கள் புதுவை
மாநிலத்தில் அமைந்துள்ள ஆதித்தியா வித்தியாசிரமப் பள்ளியின் கலைத்துறை இயக்குநராகப்
பணியாற்றி வருகின்றார். தமிழிசை, நாட்டியம் இவற்றில் பெரும் பங்களிப்பு செய்துவரும்
இந்த இசையறிஞர்க்கு என் வாழ்த்துகளும் வணக்கமும்.
கலைமாமணி கா. இராஜமாணிக்கம் ஐயாவின் அன்பில்...
கலைமாமணி கா.இராஜமாணிக்கம் அவர்கள்
அரங்கேறியவர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்
1 கருத்து:
ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. நிகழ்வினைப் பகிர்ந்தவிதம் நெகிழவைத்தது. பாராட்டுகள்.
கருத்துரையிடுக