கணினி, இணையத்தில் தமிழ் இணைந்த வரலாறு அரை நூற்றாண்டைத் தொட உள்ளது. கணினி, இணையத்தில் தமிழை இணைப்பதற்குத் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் முயன்று உழைத்துள்ளனர். அவர்களின் அறிவுழைப்பை உரைநடையில் நூலாகவும் கட்டுரையாகவும் எழுதி மக்கள் மன்றத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளனர்.
மரபுத் தமிழில் தொழில் நுட்ப வரலாற்றை வரைதல் வேண்டும் என்ற நோக்கில் 563 ஆசிரியப்பாவில் அமைந்த பாடலடிகளில் இணைய ஆற்றுப்படை என்னும் பெயரில் நூல் ஒன்றினை எழுதியுள்ளேன். இந்த நூல் உருவாவதற்கும், பதிப்பாவதற்கும் பெருந்தூண்டுதலாக இருந்தவர் முனைவர் நாக. கணேசனார் ஆவார். இவர் அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தின் அறிவியலறிஞர் ஆவார். பலவாண்டுகளுக்கு முன்னர் என் மரபுப் பயிற்சியை அறிந்த இவர் இணைய ஆற்றுப்படையை எழுதுக எனத் தூண்டினார். நானும் நூறு பாடலடிகளை ஆர்வமாக எழுதி அன்றொரு நாள் விடுத்தேன். அதன் பின்னர் “இடைக்கண் முறிந்து”, வேறு பணிகளில் உழன்றவண்ணம் இருந்தேன்.
அண்மையில் நாக. கணேசனார் மீண்டும் இணைய ஆற்றுப்படையை உருவப்படுத்தி அனுப்புக என்றார். வேனில் விடுமுறைக்காலம் தொடங்கியது… வெப்பக் கடுமையில் வீட்டில் முடங்கியிருந்தபொழுது இணைய ஆற்றுப்படையை முழுமையாக நிறைவு செய்து அனுப்பினேன். அவரின் திருத்தங்களாலும், செய்திச் சேர்க்கைகளாலும் ஆற்றுப்படை பொலிவுபெற்றது. தஞ்சைப் பேராசிரியர் முனைவர் இரா. கலியபெருமாள், தமிழாகரர் பேராசிரியர் தெ. முருகசாமி ஆகிய தமிழ்ப் பெரியோர்கள் நூலினை மேற்பார்வையிட்டதுடன் நூலுக்குரிய வாழ்த்துரைகளை வழங்கினர்.
இந்த நூலில் தமிழ் நிலச் சிறப்பு, தமிழர் பெருமை, தமிழுக்கு அவ்வப்பொழுது பிற இனத்தாரால் நடந்த கேடுகள், அதனைத் தடுத்து நிறுத்திய தமிழர்களின் ஈகங்கள், தமிழ் மக்களின் உலகப் பரவல், கணினி இணையம் அறிமுகம், கணினி, இணையத்தின் பயன்கள், இவற்றில் தமிழை உள்ளிட உழைத்த அறிஞர்கள், மென்பொருள் கண்டோர், எழுத்துருக்கள் தந்தோர், தமிழ் வளம் தாங்கிய இணையத் தளங்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பணிகள், நூலகம், தமிழ் விக்கி உள்ளிட்ட உயர்பணியாற்றும் இணையத்தளங்களின் அறிவுக்கொடைகள், தனி மாந்தராக இருந்து அறிவு நல்கை தந்த பெருமக்களின் உழைப்பு முதலியன இந்த நூலில் நினைவுகூரப்பட்டுள்ளன.
தமிழ் வளம் தாங்கிய இணையத்தளங்கள், தமிழ் இணையத்துறைக்குப் பங்களித்தோர் என்ற இரண்டு பின்னிணைப்புகள் நூலின் பெருமைக்கு வலிமை சேர்க்கின்றன. இந்நூலில் முதன்மையான 50 இணையத் தளங்களின் முகவரிகள் உள்ளன. தமிழ்க் கணினி, இணையத்துறைக்குப் பாடுபட்ட 34 ஆளுமைகளின் பணிகளை ஓரிரு வரிகளில் அறிமுகம் செய்து, படத்துடன் வெளியிட்டுள்ளோம். உலக அளவில் இப்பணிகள் விரிந்து நடப்பதால் விடுபட்ட செய்திகள் அடுத்தப் பதிப்பில் இணைக்கப்படும்.
மரபினைக் காப்போம்! புதுமையைப் போற்றுவோம் என்ற அடிப்படையில் இணைய ஆற்றுப்படையை வாங்கிப் படியுங்கள். பரப்புங்கள்.
புதுமையை விரும்பும் ஆசிரியப் பெருமக்கள், பேராசிரியர்கள், கணினி இணைய ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் இந்த நூலினை வாங்கிப் படிப்பதுடன், மாணவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். தமிழ் தழைக்கட்டும்.
நூல்:
இணைய ஆற்றுப்படை
ஆசிரியர்:
முனைவர் மு.இளங்கோவன்
பதிப்பாசிரியர்:
முனைவர் நாக. கணேசன்
பக்கம்:
48
விலை:
100 உருவா
தொடர்புக்கு:
muetamil@gmail.com / +91 9442029053 புலனம்,
பேசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக