நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 11 ஜூலை, 2024

மலேசியத் தமிழ் வள்ளல் மாரியப்பன் ஆறுமுகம் மறைவு!


மாரியப்பன் ஆறுமுகம் 


மு.இளங்கோவன், மாரியப்பனார், வாணன் (கோப்புப் படம்)


(இடமிருந்து இரண்டாவது: மாரியப்பனார், கோப்புப் படம்)

மலேசியத் திருநாட்டின் கிள்ளான் நகரில் சி. எஸ். கே. வணிக நிறுவனத்தை நடத்திவந்தவரும், தமிழ்நெறிக் கழகம், தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு  தமிழமைப்புகளின் வழியாகத் தமிழ்த் தொண்டாற்றியவரும், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் உள்ளிட்ட தமிழறிஞர்களை ஆதரித்து, புரந்து வந்தவருமான தமிழ் வள்ளல் மாரியப்பன் ஆறுமுகம் அவர்கள் (அகவை 74) இன்று (11.07.2024) மாலை 5 மணியளவில் மாரடைப்பால், மலேசியாவில் இயற்கை எய்தினார் என்ற பெருந்துயரச் செய்தியறிந்து, பெருங்கவலையுற்றேன். மாரியப்பனாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கின்றேன்

மாரியப்பனார் அவர்கள் 14.10.1950 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் ஆறுமுகம் பொன்னன், பேச்சாயி சடையன் என்பதாகும். தோட்டத் தொழிலாளியின் மகனகாப் பிறந்து, தொழிலதிபராக உயர்ந்தவர். மிகச் சிறந்த தமிழ்ப்பற்றாளர். திருக்குறளைப் பரப்பிய பெருமைக்குரியவர். தமிழகத்திலிருந்து மலேசியாவுக்குச் செல்லும் தமிழ் அறிஞர்கள், தொண்டர்களை வரவேற்று, விருந்தோம்பி வழியனுப்பி வைக்கும் பெரும்பண்பினர். அ. பு. திருமாலனார், குறிஞ்சிக்குமரனார் உள்ளிட்ட மலேசியத் தமிழறிஞர்கள் மீது மிகப்பெரும் பற்றுடையவர். முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் திருவள்ளுவர் தவச்சாலை உருவாக்கியபொழுது பெரும்பொருள் நல்கியவர். இளங்குமரனாரைப் பலமுறை மலேசியாவுக்கு அழைத்து, தமிழ்ப்பொழிவுகள் ஆற்றுமாறு செய்தவர். 

மாரியப்பனார் அவர்களுடன் நான் கால் நூற்றாண்டுக்காலம் பழகியுள்ளேன். முதன் முதல் 2001 மலேசியாவுக்குச் சென்றது முதல் இந்நொடி வரை அவர்தம் நட்பினை உயர்வாகப் போற்றி வருகின்றேன். அவர்தம் ஒத்துழைப்புடன்தான் என் நூல்கள் மலேசியாவில் வெளியீடு கண்டன. அவர் இல்லம் தமிழறிஞர்களை வரவேற்றுத் தங்க வைக்கும் தமிழ்க்குடில் ஆகும். என் நூல்களில் அவரின் திருப்பெயரை எப்பொழுதும் நன்றிப்பெருக்குடன் பொறிக்கும் வகையில் நான் மிக உயர்வாக மாரியப்பனாரைப் போற்றி வந்தேன். அண்மையில் வெளிவந்த இணைய ஆற்றுப்படை நூலில் அவருக்கு நன்றி சொல்லி, அவர்தம் திருப்பெயரைப் பொறித்துள்ளேன். ஐயாவின் பார்வைக்கு அந்த நூல் செல்லும் முன்னர் ஐயா அவர்கள் இயற்கை எய்தியமை பெருந்துயரமாக அமைந்துவிட்டது. 

மாரியப்பனார் அவர்களின் துணைவியார் வெற்றிச்செல்வி அம்மா, தம்பி வாணன், தோழர் சசி அவர்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களின் துயரில் நானும் பங்கேற்கின்றேன். மாரியப்பனாரின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்வோம். அதுவே அவருக்கு நாம் செய்யும் நன்றியாக இருக்கும். 

வாழ்க! மாரியப்பன் ஆறுமுகம் அவர்களின் பெரும்புகழ்

கருத்துகள் இல்லை: