நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 21 ஜூன், 2024

அமெரிக்காவில் தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சி

 

தொல்காப்பியம் ஓலைச்சுவடியில்

தொல்காப்பியம் ஓலைச்சுவடியில் (வேறொரு ஓலைக் கட்டிலிருந்து. 
நன்றி: பேராசிரியர் செவ்வியார்)



தொல்காப்பியம் கையெழுத்துப்படியில்... நன்றி: த.இ.க


தொல்காப்பியம் முதல்பதிப்பு (1847)

தொல்காப்பியம்- செயலி

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலாக அமைவது தொல்காப்பியம் ஆகும். இந்த நூல் ஓலைச்சுவடியிலிருந்து 1847 இல் முதன் முதல் மழவை மகாலிங்கையர்  என்னும் அறிஞரால் பதிப்பிக்கப்பட்டது. அதன் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளை இந்த நூல் கண்டுள்ளது.  அறிஞர் பெருமக்கள் பலர் புத்துரை கண்டுள்ளனர். பலர் உரைவளப் பதிப்புகளை நல்கியுள்ளனர். பலர் இந்நூல் குறித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளனர். பல கருத்தரங்குகள் தொல்காப்பியம் குறித்து நடைபெற்றுள்ளன. மொழியியல், சூழலியல், நிலத்தியல், உளவியல், மருத்துவவியல், மார்க்சியவியல், நாட்டுப் புறவியல்  நோக்கிலெல்லாம் பல்துறை வல்லுநர்கள் தங்கள் பார்வையில் தொல்காப்பியத்தைப் படித்து, கருத்துரைத்து, நூல் வரைந்து இந்த நூலுக்குப் பெருமைசேர்த்துள்ளனர். பலர் இதனை மொழிபெயர்த்துள்ளனர். பல இலக்கிய அமைப்புகள் தொல்காப்பியர் பெயரில் உள்ளன. பல இடங்களில் தொல்காப்பியருக்குச் சிலை நிறுவப்பட்டுள்ளது. தொல்காப்பியர் பெயரில் விருதுகள் உள்ளன. ஒலி, ஒளிக் காட்சிகளாகத் தொல்காப்பியம் பரவியும் வருகின்றது. பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பாடங்களாகத் தொல்காப்பியம் பயிற்றுவிக்கப்படுகின்றது. ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. 

மேற்குறித்த பெருமைக்குரிய செய்திகள் யாவற்றையும் ஓரிடத்தில் தொகுத்து, மக்கள் மன்றத்திற்குக் காட்சிக்கு வைக்கவேண்டும் என்று பெருங்கனவு கண்டு உழைத்து வருகின்றேன். இதே எண்ணம் பேராசிரியர் தமிழண்ணல் ஐயாவுக்கும் இருந்துள்ளதை அறிவேன். வெளிநாட்டு நண்பர்களிடம் என் தொல்காப்பியப் பரவலாக்க முயற்சியைச் சொன்னவுடன் தரவுத் தொகுப்புகள் தொடங்கி, நெறிமுறைகள் வகுத்துத் தந்தது உட்படப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். எனவே, அனைவரின் ஒத்துழைப்புடன் அரிய ஆவணங்களைக் கொண்ட தொல்காப்பியக் கண்காட்சி ஒன்று அமெரிக்க நாட்டில் நடத்துவதற்கு ஏற்பாடாகி உள்ளது. முதற்கட்டமாகச் சற்றொப்ப ஐந்நூறு தொல்காப்பிய ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. தொல்காப்பியம் குறித்து இதுவரை வெளிவராத பல உண்மைகள் இக்கண்காட்சி வழியாக மக்களுக்குத் தெரியவரும். 

தொல்காப்பிய ஆவணத் தொகுப்புப் பணியிலும், கண்காட்சி நடத்தும் பணியிலும் துணைநிற்குமாறு தமிழ்க் குலத்தாரைப் பணிவுடன் வேண்டுகின்றேன். 

அமெரிக்காவில் நடைபெறும் தொல்காப்பியக் கண்காட்சியின் நாள், இடம் விரைந்து அறிவிப்போம்.

கருத்துகள் இல்லை: