நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 29 ஜனவரி, 2024

புலவர் செம்மங்குடி துரையரசனார் மறைவு!

 

புலவர் செம்மங்குடி துரையரசனார் 

 திருவள்ளூரில் வாழ்ந்த மூத்த தமிழறிஞரும் எழுத்தாளருமான புலவர் செம்மங்குடி துரையரசனார் இன்று (29.01.2024) காலை 8.30 மணியளவில் தம் 77 ஆம் அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். புலவர் செம்மங்குடியாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். 

 புலவர் செம்மங்குடி துரையரசனார் அவர்கள் 20.10.1947 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர்: சா. சிதம்பரம், வேம்பம்மாள் ஆவர். பிறந்த ஊரான செம்மங்குடியில் தொடக்கக் கல்வியையும் நாச்சியார்கோவிலில் உயர்நிலைக் கல்வியையும் கற்ற செம்மங்குடியார் திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் 1968 முதல் 1972 வரை புலவர் படிப்பினைப் படித்துமுடித்தவர். 1972-73 ஆம் ஆண்டுகளில் குமாரபாளையம் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர். 1973 ஆம் ஆண்டு முதல் திருவள்ளூர் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியராகப் பணியாற்றி 2005 இல் ஓய்வுபெற்றவர்

 புலவர் செம்மங்குடி துரையரசனார் 1975 இல் அறிஞர் கோதண்டபாணி பிள்ளை அவர்களின் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர். இவர்தம் துணைவியார் பெயர் மங்கலம் என்பதாகும். இவரும் புலவர் படிப்பினைப் படித்து, திருவள்ளூரில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்களின் இல்லறப் பயனாக ஒரு பெண், இரண்டு ஆண் பிள்ளைகள் கிடைத்தனர். அனைவரும் படித்து நன்னிலையில் உள்ளனர்

 திருவள்ளூரில் தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழ்ப்பணியாற்றிய  செம்மங்குடி துரையரசன் அவர்கள் மிகச் சிறந்த கவிதையாற்றல் உடையவர். கருணாகரத் தொண்டைமானின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து காப்பியமாகப் பாடிய பெருமை புலவர் துரையரசனார்க்கு உண்டு. இவர்தம் ஊர்ப்பகுதியே கலிங்கத்துப் பரணியில் போற்றப்படும் கருணாகரத் தொண்டாமான் பிறந்து வாழ்ந்த ஊர்ப்பகுதி என்று சான்றுகளின் அடிப்படையில் மெய்ப்பித்ததுடன் தம் பெயருக்குப் பின் தொண்டைமான் என்பதை அமைத்து, செம்மங்குடி துரையரசத் தொண்டைமான் என்று அழைக்கப்படுபவர். கருணாகரத் தொண்டைமான் குறித்த ஆய்வில் முன்னிற்பவர்

 ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியவர். தன்முன்னேற்ற நூல்களை எழுதி, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எழுச்சியூட்டியவர். அறிஞர் கோதண்டபாணியாரின் "தமிழிசை தந்த தனிப்பெரும் வளம்" உள்ளிட்ட நூல்கள் சிலவற்றைப் பின்னாளில் பதிப்பித்துத் தமிழுலகுக்கு வழங்கிய பெருமைக்குரியவர்

 புலவர் செம்மங்குடி துரையரசனாரை என்றும் நினைவிற்கொள்வோம்! 

 புலவர் செம்மங்குடி துரையரசனாரின் வாழ்க்கை வரலாற்றை என் வலைப்பதிவில் காணலாம்.

கருத்துகள் இல்லை: