நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 26 ஜனவரி, 2024

வள்ளலார் வழித்தொண்டர் ஜெய. பாலகிருஷ்ணன்

 

ஜெய. பாலகிருஷ்ணன் 

பிரான்சு நாட்டின் பாரிஸ் மாநகரத்தில் வாழ்ந்துவரும் ஜெய. பாலகிருஷ்ணன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் பயின்றவர். கடலூரில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். 1985 ஆம் ஆண்டு பிரான்சுக்குச் சென்றவர். வள்ளலார் வழியில் தம் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொண்டவர். இராமலிங்கர் பணிமன்றத்தின் சார்பில்  2005 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் உலக வள்ளலார் மாநாட்டை நடத்தியவர். பிரான்சு – சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர். ’வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்’ என்னும் நூலின் ஆசிரியர். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டவர். 

பலவாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்குத் தவத்திரு. ஊரன் அடிகளார் அவர்கள் வடலூரிலிருந்து, புதுச்சேரிக்கு வந்திருந்தார். புதுவை செயராம் உணவகத்தில் அந்த நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு  வந்திருந்த அடிகளார் அவர்கள் பிரான்சு நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு வந்திருந்த திரு. ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களையும் அழைத்திருந்தார். ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களும் அடிகளாரின் அழைப்பின்பெயரில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றி அடிகளார் மேடையில் எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அதன் பிறகு தொடர்பு இல்லாமல் இருந்தோம். அண்மையில் புதுவை பால மோகன மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மீண்டும் பாலகிருஷ்ணன் ஐயாவைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தாலும் உரையாடி மகிழும் வாய்ப்பு இல்லாமல் போனது. 

பிரான்சு நாட்டிலிருந்து அண்மையில் புதுவைக்கு வந்துள்ள திருவாளர்கள் ஜெயராமன் ஐயா, தணிகா ஐயா உள்ளிட்டோருடன் இன்றைய மாலை வேளையில் புதுவை நேரு வீதியில் உள்ள இந்தியன் குளம்பியகத்தில் தேநீர் சந்திப்பு ஒன்று நடந்தது. எங்கள் பேச்சின் ஊடாக ஜெய. பாலகிருஷ்ணன் ஐயாவுக்கு 27.01.2024 இல் நடைபெறும் விருது வழங்கும் விழா குறித்து உரையாடினோம். விருது பெறும் அறிஞர் குறித்து நன்மொழிகளை அரங்கில் பரிமாறிக்கொள்ள போதிய விவரங்களை வேண்டியபொழுது, வழக்கம்போல் அவரின் பன்முகத் திறனை ஒவ்வொன்றாக நண்பர்கள் நினைவுகூர்ந்தனர். வள்ளலார் நெறியில் வாழ்ந்து வரும் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களை இன்றைய(25.01.2024) தைப்பூச நாளில் நேரில் சந்தித்து உரையாடுவது சிறப்பு என்று கருதியும் அவர்தம் தமிழ்ப் பணிகளை அறிய வேண்டும் என்ற அவாவிலும், அவர் இல்லம் சென்றேன். அவர்தம் திருமண மண்டபத்தில் தைப்பூசம் சார்ந்த வள்ளலார் வழிபாட்டை முடித்துக்கொண்டு, அடுக்குமாடி இல்லத்தில் ஓய்விலிருந்த அவரிடம் உரையாடத் தொடங்கியபொழுது, அவரின் தமிழ் பயின்ற வரலாறும், தமிழ் இலக்கியப் பயிற்சியும் தெரியத்தொடங்கின. 

ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களின் தமிழ் வாழ்வு… 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் வடக்குத் தில்லைநாயகபுரம் என்னும் ஊரில் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்கள் 05.12.1950 இல் பிறந்தவர். பெற்றோர் வீ. ஜெயராமலு, வச்சலா அம்மாள். உடன்பிறந்தோர் ஜெ. பக்கிரிசாமி (அண்ணன்), ஜெ. பங்காருசாமி(தம்பி). 

தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் சிதம்பரத்தை அடுத்துள்ள சி. முட்லூர் அரசு பள்ளிகளில் பயின்றவர். புகுமுகக் கல்வி முதல் முனைவர் பட்ட ஆய்வு வரை சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர்தம் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு: ஸ்ரீ வில்லிபாரதத்தில் பாத்திரப் படைப்புகள் என்பதாகும். இவர் தம் எம். ஓ. எல். (M.O.L) படிப்பில் ’கொங்கு மண்டல சதகம்’ குறித்து ஆராய்ந்து திட்டக்கட்டுரை வழங்கியவர். 


தங்கப் பதக்கம் பெறும் மாணவர் ஜெ. பாலகிருஷ்ணன்

வறுமையின் கோரப்பிடியில் இவரின் படிப்பு நடைபெற்றாலும் படிப்பிலும் உடலோம்புவதிலும் பெரும் விருப்பம் கொண்டிருந்தவர். தம் படிப்பில் முதன்மைக்காக  24. 06. 1972 இல்  நிறுவுநர் நாளில் தங்கப்பதக்கம் பெற்றவர். இவர் புகுமுக வகுப்பில் சிறப்புத் தமிழினைப் பாடமாக எடுத்துப் படித்தவர். இளங்கலைத் தமிழ் வகுப்பினை 1972-75 இல் படித்தவர். இவர் எம்.ஓ.எல். படித்தபொழுது இவருடன் 18 பேர் படித்தனர். இவரின் பேராசிரியர்களாக மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், அழ. பழநியப்பன், செ. வைத்தியலிங்கம், ஆறு. அழகப்பன், அ.ஆனந்த நடராசன், சு. சாமி ஐயா, ஆ.இராமசாமிப் பிள்ளை, சுப.இராமநாதன், வெ. செயராமன், ந.வீ. செயராமன், சோ.ந. கந்தசாமி, சிவ. திருநாவுக்கரசு, கதி. தியாகராசன் உள்ளிட்டோர் விளங்கினர். பேராசிரியர் க. வெள்ளைவாரணம் ஐயாவிடமும் பாடம் கேட்ட பெருமைக்குரியவர். 

எடைதூக்கும் வீரர் ஜெ. பாலகிருஷ்ணன்


எடைதூக்கும் வீரர் ஜெ. பாலகிருஷ்ணன்

எடைதூக்கும் போட்டியில் (Weightlifting) பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற போட்டிகளில் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு, பல்கலைக்கழத்திற்குப் பெருமைசேர்த்தவர். புகுமுக வகுப்பில் இவருக்கு ஏற்பட்ட விளையாட்டு ஆர்வம் இவர் முதுகலை படிக்கும்பொழுது அலிகார் முசுலிம் பல்கலைக்கழகம் வரை எடைதூக்கும் போட்டியாளராக அனுப்பிவைத்தது. 1978- முதல் 1979 வரை ஓராண்டு மட்டும் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டவர்.  1979 இல் கடலூர் தூய தாவீது மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியில் இணைந்து, 1985 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தவர். இப்பள்ளி அரசு உதவிபெறும் பள்ளியாகும்.

09.02.1979 இல் புதுவையைச் சேர்ந்த மோகனா அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். முதல் மகன் செந்தில்; அனு, வாணி என்னும் இரு பெண் மக்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் பிரான்சில் வாழ்ந்து வருகின்றனர். புதுச்சேரி அல்லயன்சு பிரெஞ்சுப் பள்ளியில் பகுதி நேரமாகப் பிரெஞ்சு மொழி பயின்ற பாலகிருஷ்ணன் அவர்கள் 10.07.1985 இல், மூன்று ஆண்டு ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்துக்கொண்டு, பிரான்சு நாட்டுக்குப் பயணமானார். 25.11.1985 முதல் 10.12.2010 வரை பாரிசில் உள்ள வீல் - இவரார் (Ville Evarard) என்ற மருத்துவமனையில் அலுவலகப் பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

பிரான்சு நாட்டில் வாழ்ந்த திரு. சிவசண்முகம் அவர்கள் வழியாக இராமலிங்க அடிகளாரின் படைப்புகளும் பணிகளும் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அறிமுகம் ஆயின. வள்ளலாரின் ’பசித்தோர்க்கு உணவு’, ’கடவுளுக்கு உருவம் இல்லை’, ’இறைவன் ஒளி வடிவானவன்’ உள்ளிட்ட கொள்கைகளில் ஈர்ப்புண்ட பாலகிருஷ்ணன் அவர்கள் வள்ளலார் வழியில் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். 2005 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17, 18 ஆகிய நாள்களில் பிரான்சில் நடைபெற்ற இராமலிங்கர் பணி மன்றத்தின் விழாவில் தலைமைப் பொறுப்பேற்று, உலக வள்ளலார் மாநாட்டைச் சிறப்பாக நடத்தியவர். பின்னர் பிரான்சு சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவி, வள்ளலார் நெறிகளைப் பரப்பி வருபவர். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூத்த தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைக் கற்றறிந்த ஜெய. பாலகிருஷ்ணன் அவர்கள் ’வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்’ என்னும் புறநானூற்றுப் பாடலடியை நூல் தலைப்பாக்கிப் புற நானூற்றுச் செய்திகளின் அடிப்படையில் அரிய நூலொன்றைப் படைத்துள்ளார்.  புறநானூற்றுச் செய்திகளை எளிய மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் அரிய படைப்பாக இந்த நூல் விளங்குகின்றது. தவத்திரு ஊரன் அடிகளார் அணிந்துரையுடன் வெளிவந்துள்ள இந்த நூல் 2017 ஆம் ஆண்டில் 126 பக்கத்தில் வெளிவந்துள்ளது. 



புதுச்சேரியில் பால மோகன மகால் உருவாக்கியும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்கியும், புதுவை - திண்டிவனம் சாலையில் முதியோர் இல்லம் உருவாக்கியும் மக்கள் பணியில் மனம் செலுத்தும் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்கள் வள்ளலார் நெறியை வையமெங்கும் பரப்பும் பல்வேறு திட்டங்களை மனத்துள்கொண்டுள்ளார். 

வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடிய, கருணை நெஞ்சத்தாரைத் தம் முன்னோடியாகக் கொண்டு வாழ்ந்து வரும் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களின் தமிழ் ஆய்வுப்பணிகளும் எழுத்துப்பணிகளும் ஒவ்வொன்றாக வெளிவந்து, தமிழுக்கு ஆக்கம் நல்கும் என்று நம்புவோமாக!



கருத்துகள் இல்லை: