நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

முனைவர் கி. பாண்டியன் எழுதியுள்ள சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள், சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் நூல்கள் வெளியீடு!


தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் நூலினை வெளியிட, பாவலர் பத்ரிசியா பாப்புராயர் முதல் படியைப் பெற்றுக்கொண்டார். அருகில் மியான்மர் க. சந்திரசேகரன், முனைவர் ஔவை நிர்மலா, க. இளமதி சானகிராமன், மு.இளங்கோவன், செ. திருவாசகம்.
 
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் முனைவர் கி.பாண்டியனுக்குச் "சித்தர் இலக்கியச் செம்மல்" என்னும் விருது வழங்கிப் பாராட்டல்.

சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள், சித்தர்  சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா 13.01.2024 அன்று காலை (10.30 மணி முதல் பகல் 1 மணி வரை) புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. 

மயிலம் பொம்மபுர ஆதீனம், இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார். நூலாசிரியர் கி. பாண்டியனுக்குச் சித்தர் இலக்கியச் செம்மல் என்ற விருதினையும் வழங்கி, அருளாசி வழங்கினார். நூலின் முதற்படிகளைப் பிரான்சு நாட்டிலிருந்து வருகைபுரிந்த பாவலர் பத்ரிசியா பாப்புராயர், மருத்துவர் முத்துராமன் சண்முகவேல், பர்மாவிலிருந்து வருகைபுரிந்த க. சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

முனைவர் இளமதி சானகிராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் ஔவை இரா. நிர்மலா, மருத்துவர் க. கலைவேந்தன் நூல்களை அறிமுகம் செய்து உரையாற்றினர். 

க. தமிழமல்லன், சீனு. வேணுகோபால் பு. சொ. பூபதி, நெய்தல்நாடன், தி. கோவிந்தராசன், முனைவர் அரங்க. மு. முருகையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் கி. பாண்டியன் ஏற்புரை வழங்கினார். செ. திருவாசகம் நன்றியுரை வழங்கினார். பூங்குழலி பெருமாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வயல்வெளிப் பதிப்பக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை: