நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளை

 

                   பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளை (1920-2000) 

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் முன்னைப் பேராசிரியர்; தமிழும் வடமொழியும் நன்கு அறிந்தவர்; திருவாவடுதுறை ஆதீனப் புலவராக விளங்கியதுடன்,  திருவாவடுதுறை ஆதீனத்தின் மெய்கண்டார் இதழ் வெளியீட்டுப் பணியில் முன்னின்று உழைத்தவர். யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம், தண்டியலங்காரம், நம்பியகப்பொருள் உள்ளிட்ட நூல்களைச் செம்பதிப்பாக வெளியிட்ட பெருமைக்கு உரியவர். 

நான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் மாணவராகப் பயின்றபொழுது(1987-92) மாரியம்மன்கோவில் தெருவில் இருந்த அம்பாள் அச்சகத்திற்குச் செல்வது வழக்கம். அந்தத் தொடர்பில், அம்பாள் அச்சகத்தின் சிறப்பினை எடுத்துரைக்கும் வகையில் அச்சக ஆற்றுப்படை என்ற ஒரு சிற்றிலக்கியம் படைக்கும் வாய்ப்பும் அந்த நாளில் அமைந்தது. அச்சகத்து வரும் எத்தனையோ நுகர்வோரைப் போல் நானும் ஒருவனாக இல்லமால் பின்னாளில் அந்தக் குடும்பத்துள் ஒருவனாக மதிக்கப்பட்டு, என் புகைப்படம் அந்த வீட்டில் பொருத்தப்படும் அளவுக்கு இன்றும் தொடர்பு வலிமையடைந்து நிற்பதை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன். 

அம்பாள் அச்சகத்தில் ஓய்வு நேரங்களில் நண்பர் குழாமுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அகவை முதிர்ந்த ஒருவர் சாலையில் நடைப்பயிற்சியில் இருப்பதை அம்பாள் அச்சக உரிமையாளர் திருவாளர் சோ. சிவநேசனார் சுட்டிக்காட்டுவார். அப்பொழுது மணி ஐந்தாக இருக்கும். அவர் நடைப்பயிற்சி முடித்து, திரும்பும்பொழுது மணி ஆறாக இருக்கும். இதனை ஒவ்வொரு நாளும் நாங்கள் பார்ப்போம். அவ்வாறு நடைப்பயிற்சியில் இருந்தவர் யார்? என்று வினவிய பொழுது, திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூயில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பேராசிரியர் என்று அறிந்தேன். ஆயின், அவரிடம் நெருங்கிப் பழகவோ, அவர்தம் முழுப்புலமையையும் அறியவோ எனக்கு அந்த நாளில் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஆயின், அவர் பதிப்பித்த நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம் - மூலமும் உரையும்(1969) என்ற ஒரு நூலினை மட்டும் வாங்கி வந்து, பலவாண்டுகளாகப் பாதுகாத்து வருகின்றேன். 

நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கத்தினைப் பதிப்பித்த அந்தப் பேராசிரியரின் பெயர் மு. சுந்தரேசம் பிள்ளை என்பதாகும். அவர் பற்றிய விவரங்களைப் பலவாண்டுகளாகத் தேடிக்கொண்டிருந்தாலும் முழுமையான விவரங்கள் கிடைப்பதில் காலத் தாழ்ச்சி ஏற்பட்டவண்ணம் இருந்தது. மு. சுந்தரேசம் பிள்ளை அவர்களின் மகனார் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம் (மதுரை) அவர்களிடம் தந்தையாரின் விவரம் வேண்டிய சூழலில், அவர்தம் சிறிய தந்தையார் மு.வைத்தியநாதன் அவர்களைப் பற்றி அறிய முடிந்தது (மு.வை. அவர்களைப் பற்றி முன்னமே எழுதியுள்ளேன்). பேராசிரியர் மு. சண்முகசுந்தரம், பேராசிரியர் மு. வைத்தியநாதன் ஆகியோரிடம் மேலும் மேலும் வினவியபொழுது மு. சுந்தரேசம் பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணிகள் ஓரளவு தெரியவந்தன. நம்முடன் வாழ்ந்து, மறைந்த மூத்த தமிழறிஞர் ஒருவரின் வாழ்க்கையை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்கின்றேன்.

மு. சுந்தரேசம் பிள்ளை அவர்களின் வாழ்வும் பணியும் 

பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளை அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் பிள்ளைப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த “மணியம்” பி. ச. முத்துக்குமரப் பிள்ளை, திருநாவுக்கரசி ஆகியோரின் முதல் மகனாக 1920 ஆம் ஆண்டில் பிறந்தவர். 

கொல்லாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் தொடக்கக் கல்வியையும், உயர் தொடக்கக் கல்வியையும் பயின்றவர். சென்னை, மயிலாப்பூரில் இருந்த வடமொழிக் கல்லூரியில் சேர்ந்து, ஐந்தாண்டுகள்  வடமொழி பயின்று, அரசுத் தேர்வெழுதி, "சிரோன்மணி" பட்டம் பெற்றவர். தம் வடமொழிக் கல்வி, எதிர் காலத்துப் பணிநிலைகளுக்கு உதவாது என்று உணர்ந்து, தஞ்சாவூரில் அமைந்துள்ள கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து ஓராண்டு பயின்று, தேறினார். பின்னர் அதே கல்லூரியில் 1941 ஆம் ஆண்டு சேர்ந்து, தமிழ் வித்துவான் பயின்றார். 1944 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வெழுதி, தமிழில் தேர்ச்சி பெற்றவர். 

மு. சுந்தரேசம் பிள்ளை அவர்கள் கரந்தையில் பயின்றபொழுது இவருடன் அ. மு. பரிமணம் (அரசு கல்லூரிப் பேராசிரியர்), பாளையங்கோட்டை மாயாண்டி பாரதி (பேராசிரியர்), சென்னை ந. ரா. முருகவேள் (சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர்), கோவை சங்கரநாராயணன் (ச. மெய்கண்டான் இ.ஆ.ப. வின் தந்தை) ஆகியோர் உடன் பயின்றவர்கள். 

கரந்தைக் கல்லூரியில் மு. சுந்தரேசம் பிள்ளை மாணவராக இருந்தபொழுது அக்கல்லூரியில் புகழ்பெற்ற அறிஞர்களாக கா. சுப்பிரமணியப் பிள்ளை, க. வெள்ளைவாரணன், அடிகளாசிரியர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை முதலிய அறிஞர்கள் பேராசிரியர்களாக இருந்தனர். இவர்களின் வழியாகத் தமிழ் இலக்கண, இலக்கியங்களை ஆழமாகக் கற்றுத் தேர்ந்தவர் நம் பிள்ளை அவர்கள். 

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி, 1945 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற சூழலில் பேராசிரியர் கே. எம். வேங்கடராமையா கல்லூரியின் முதல்வராகத் திறம்படப் பணியாற்றினார். அப்பொழுது ச. தண்டபாணி தேசிகர், தி.வே.கோபாலையர் ஆகியோர் பேராசிரியர்களாக அக்கல்லூரியில் இருந்தனர். அவர்களுக்குப் பின் 1945 -1950 ஆம் ஆண்டில் காசித் திருமடத்தின் ஊதியம் பெற்றுகொண்டு மு. சுந்தரேசம் பிள்ளை பேராசிரியராகப் பணியாற்றினார். 1950 ஆம் ஆண்டில் செந்தமிழ்க் கல்லூரி அரசு உதவிபெறும் கல்லூரியாக மாற்றம் பெற்றது. அது முதல் 1979 ஆம் ஆண்டு வரை மு. சுந்தரேசம் பிள்ளை அவர்கள் அரசு ஊதியம் பெற்றுத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1945 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை இவர் பணியாற்றிய காலத்தில்தான் தா. ம. வெள்ளைவாரணம், கு. சுந்தரமூர்த்தி ஆகியோர் இவரிடம் கல்வி பயின்றனர். 

மு. சுந்தரேசம் பிள்ளை அவர்கள் கல்லூரிப் பணியில் இணைந்தபொழுது சிற்றிலக்கியங்களையும் இலக்கண நூல்களான தண்டியலங்காரம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, நம்பியகப்பொருள், நன்னூல் உள்ளிட்டவற்றையும் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வந்தார். பின்னாளில் காப்பியங்கள், சங்க இலக்கியங்கள், திருமுறைகளைப் பயிற்றுவிப்பதில் தன்னிகரற்று விளங்கினார். பாடப்பகுதிகள் பெரும்பாலும் இவருக்கு மனப்பாடமாக இருக்கும். பாடம் நடத்தும்பொழுது, பாடத்துச் செய்திகளுடன் பிற செய்திகளையும், ஒப்புமைப் பகுதிகளையும் இணைத்துக்காட்டிப் பாடம் சொல்வது இவரது வழக்கம். சுந்தரேசம் பிள்ளை நல்ல தோற்றப்பொலிவு உடையவர். வெள்ளை வேட்டியும் முழுக்கைச் சட்டையும் இவர் உடை அடையாளம் ஆகும். நேர ஒழுங்கைப் பின்பற்றுவதில் கண்டிப்பானவர். 

தமிழின் முதல் இலக்கண நூலாகக் கருதப்படும் தொல்காப்பியப் பொருளதிகாரம் இளம்பூரணர் உரையை நடத்தும்பொழுது ஈடுபாட்டுடன் நடத்துவது இவர் வழக்கம்.  தம்மிடம் கற்கும் மாணவர்களைப் பழங்காலத்திற்கே இவரின் திறமையால் அழைத்துச் செல்வார். அதுபோல் தொல்காப்பியம் - சொல்லதிகாரம் சேனாவரையத்தை நடத்தும்பொழுது, இவர்தம் வடமொழி  இலக்கண அறிவின் துணைகொண்டு மிகச் சிறப்பாக விளக்குவது இவர் வழக்கம். விரிவாக நடத்துவதால் சேனாவரையம் வகுப்பு பல மாதங்கள் நீள்வது உண்டு. 

சைவ சித்தாந்த நூல்களைச் சிறப்புப் பாடப் பகுதியாக அக்காலத்தில் மாணவர்கள் படிப்பது வழக்கம். இவர்தம் சித்தாந்த வகுப்புகளின் பொழுது சித்தாந்தக் கருத்துகளை மிகவும் எளிமையாகவும் எடுத்துக்காட்டுகளுடனும் விளக்குவார். மாணவர்களின் உள்ளக் குறிப்பறிந்து நடத்துவதால் அக்காலத்து மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தமிழ் பயின்றனர்.

திருவாவடுதுறை ஆதீனப் புலவர்: 

தமிழ் வளர்க்கும் ஆதீனங்களுள் குறிப்பிடத்தக்க ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனம் ஆகும். அத் திருமடத்தின் இருபதாம் பட்டம் குருமகா சந்நிதானம் அவர்கள் திருவாவடுதுறை ஆதீனப் புலவராக மு. சுந்தரேசம் பிள்ளையை அங்கீகரித்து, அருந்தமிழ்ப் பணியாற்ற வாய்ப்பு நல்கினார். ஆதீனத்தின்  "சரசுவதி மகால்" நூலகத்துக் காப்பாளராகவும்  பொறுப்பு வகித்தார். மு. சுந்தரேசம் பிள்ளை அவர்கள் ஆதீனப் புலவராக இருந்தபொழுது, மெய்கண்டார் என்னும் சமய இலக்கிய மாத இதழ் வெளிவந்தது. அவ்விதழின் இதழாசிரியராக இருந்து அரிய கட்டுரைகள் வெளிவருவதற்குத் துணைநின்றார். 

தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி: 

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறையில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியமர்த்தப்பெற்றவர். . அதன் பயனாக “சுத்தாத்வைதம்” என்னும் திட்டப்பணி முடிக்கப்பெற்றுப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நூல் வெளிவரும்பொழுது பல்கலைக்கழகத்திற்குப் பெரும் சிறப்பு அமையும்.

மு. சுந்தரேசம் பிள்ளை அவர்கள் சொற்பொழிவாற்றுவதிலும் வல்லவர். இரண்டு முறை இலங்கைக்குச் சென்று திருக்கோவில்கள், மன்றங்கள், கல்வி நிறுவனங்களில் இலக்கியம், மற்றும் சமயங்கள் குறித்து உரையாற்றி மீண்டவர். 

மு. சுந்தரேசம் பிள்ளையின் இல்வாழ்க்கை: 

பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளை அவர்களுக்கு 1952 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்தம் மனைவியின் பெயர் இராசாமணி அம்மையார் ஆவார். இவர்களுக்கு சு. இராசேசுவரன், சு. இராசலெட்சுமி, சு. சண்முகசுந்தரம், சு. சரசுவதி, சு.முத்துக்குமார் என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இவர்கள் யாவரும் நன்கு கல்வி கற்றுப் பேராசிரியர்களாகவும், ஆசிரியர் பெருமக்களாகவும் உயர்ந்து நிற்கின்றனர். 

மு. சுந்தரேசம் பிள்ளையின் மணிவிழா 1980 ஆம் ஆண்டிலும் எண்பதாம் அகவை விழா 2000 ஆம் ஆண்டிலும் திருப்பனந்தாளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

தமிழிலும் வடமொழியிலும் பெரும்புலமை பெற்று, நல்லாசிரியராகப் பல்லாயிரம் மாணவர்களை உருவாக்கிய மு.சுந்தரேசம் பிள்ளை அவர்கள் தம் எண்பத்தொன்றாம் அகவையில் 30.11. 2000 இல் இயற்கை எய்தினார். 


பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளையின் இல்லத்து நிகழ்வில்...


                  பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளையின் இல்லத்து நிகழ்வில்...

மு. சுந்தரேசம் பிள்ளை பெற்ற விருதுகள்: 

vஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்திய மெய்கண்ட சாத்திரப்போட்டியில் இவர் கலந்துகொண்டு எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வுகளை எதிர்கொண்டு முதல்பரிசு பெற்றவர். 

v  சென்னையில் அமைந்துள்ள சைவ சித்தாந்த பெருமன்றம் நடத்திய சைவத் தமிழறிஞர் போட்டியில் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றவர்.

v  மதுரை ஆதீனத்தின் சித்தாந்தப் பேராசிரியர் விருது பெற்றவர். 

v  குன்றக்குடி ஆதீனத்தின் பெரும்புலவர் விருது பெற்றவர். 

v  திருப்பனந்தாள் காசித்திருமடத்தின் அதிபர் சைவத் தமிழ் மாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார். 

நூல் பதிப்புப் பணியும் இயற்றிய நூல்களும்: 

1.   யாப்பருங்கலம்

2.   யாப்பருங்கலக் காரிகை

3.   தண்டியலங்காரம்

4.   நம்பியகப்பொருள்

5.   நன்னூல் விருத்தியுரை (எழுத்து, சொல்)

6.   திருக்கடைக்காப்பில் சித்தாந்தச் செம்பொருள்

7.   தேவாரத்தில் சித்தாந்தச் செம்பொருள்

8.   திருப்பாட்டின் சித்தாந்தச் செம்பொருள்

9.   திருவாசகத்தில் மெய்கண்ட உண்மைகள்

10. சிவஞானச் செல்வர்கள்

11. சிவஞான முனிவர் உரைச்சிறப்பு 



நன்றி:

பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள்

பேராசிரியர் சு. சண்முகசுந்தரம் அவர்கள்

கருத்துகள் இல்லை: