கவிஞர் ஆகாசம்பட்டு
சேஷாசலம்
புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஆகாசம்பட்டு
என்னும் ஊரில் வாழும் கவிஞர் இவர். எளிய மக்கள் வாழ்க்கையை வெண்பா வடிவில் எடுத்துரைத்த படைப்புகளின்
வழியாகக் கவிதைத்துறையில் அனைவருக்கும் அறிமுகம் ஆனவர்; மொழிபெயர்ப்பாளர்; சிறுகதையாசிரியர்; சில காலம் ஆசிரியராகவும்
பணியாற்றியவர்; முழுநேரமாக உழவுத்தொழில்
செய்துவருகின்றார்.
1992 ஆம் ஆண்டில் புதுவைப் பல்கலைக்கழகத்தில்
நான் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக இருந்தபொழுது பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா அவர்களின்
இல்லத்துக்கு அடிக்கடி செல்வது உண்டு. தமிழ்க் கவிதைப் போக்குகளைக் குறித்து அவருடன் உரையாடுவது அந்நாளைய வழக்கம். மக்கள் கவிஞர்
த. பழமலை அவர்களின் "சனங்களின் கதை" நூலினையும், ஆகாசம்பட்டு சேஷாசலம் அவர்களின் "ஆகாசம்பட்டு" நூலினையும் அறிமுகப்படுத்தியதோடு, அந்த நூலின் படிகளையும் தங்கப்பா எனக்கு வழங்கினார்.
ஆகாசம்பட்டு கவிதை நூல் வெண்பா யாப்பில் அமைந்த நூல். தூய தமிழில் படிப்பதும் எழுதுவதுமாக அந்த நாளில் இருந்த எனக்கு, இந்த நூல் பேச்சு வழக்கில் இருப்பதைக் கண்டு, ஒருவகை ஒவ்வாமை உணர்வுடன்தான்
படிக்கத் தொடங்கினேன். உள்ளடக்கச் செய்திகள் யாவும் என் உள்ளம் கவர்ந்தன. வெண்பா ஓசை
குறையாமல் மக்களின் பேச்சு வழக்கில் அமைந்த சொற்களைக் கொண்டு நூல் முழுவதும் விளங்கியது.
பல வெண்பாக்கள் மனத்துள் பதிந்தன. அவ்வகையில கீழ்வரும் வெண்பாக்களை நான் படித்துச்
சுவைத்து, சேஷாசலம் அவர்களின் வெண்பாவியற்றும் திறனை வியந்து நின்றுள்ளேன். வேளாண்மை
வாழ்க்கையில் உழன்றவர்களுக்கு இத்தகைய வெண்பாக்கள் உள்ளத்துக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல்
இருக்கும். மூன்றாண்டுகள் உழவுத்தொழிலில் நான் உழன்று, அதன் பிறகு கல்விக்கூடத்திற்குச்
சென்றவன் ஆதலால் ஆகாசம்பட்டு நூல் வெண்பாக்கள் என் நெஞ்சத்துக்கு நெருக்கமாக இருந்தன.
வெள்ளாட்டை
வித்து வெரைப்பயிர் வாங்கியாந்து
மள்ளாட்டை
போட்டேன் மதிகெட்டு! – கல்லாட்டம்
செம்பைவச்சித்
தான களைவெட்ணேன்? வேறஎந்தத்
தெம்பவச்சி
வாங்குவன்ஜிப் சம்? (173)
நெத்து
வெடிக்கையில பத்துகிலோ; நெய்தடவி
அத்தை
ஒடைச்சாக்கா ஆறுகிலோ; - குத்தி
எடுத்துப்
பொடைச்சாக்கா அஞ்சிகிலோ ஆச்சே
அடச்சாமி
இந்த உளுந்து! (171)
எங்கூர்ல
என்ன வெளையுதுண்ணாக் கேட்டீங்க?
வெங்காயம்;
பச்சைப் பயறு;உளுந்து; - தெங்கு;நுங்கு;
வள்ளி;
வரகு;கம்பு; மள்ளாட்டை; கேவுரு;
நெல்லு;கொள்ளு;
மல்லி;கரும்(பு) எள்ளு! (172)
சாமரம்
வீசும்; சவுக்கு ’நிழல்’கொடுக்கும்;
ஆமாம்;
கனவுங் களைவளர்க்கும்! - போமையா..!
நட்டுவச்ச
அண்ணைக்கே நாம கெளம்பிடறோம்
வட்டிக்கி
வாங்கி வர! (177)
ஊசியப்
போடும்; உடம்புமேல் உக்காரும்;
ஓசியில்
கச்சேரி வச்சிடும்; - ஓசையுடன்
மின்விசிறி
போட்டால் மிரண்டுமே ஓடிவிடும்
இன்னாக்
கொசுவோ இது?! (999)
பாண்டி
வழியா தெரியாது மாட்டுக்கே?
ஆண்டாண்டாய்
அண்ணாடம் போவுதில்ல? – நீண்டு
படுத்தே
உறங்கிக் குறட்டைவிட்டா(ல்) என்ன?
அடத்தே
வுடா,போகு தே!? (1010)
எல்லாக்
கடவுளரும் “யாமிருக்க என்ன பயம்?”
சொல்றாங்க,
இப்படித்தான் சொல்றாங்க! – வெள்ளி
மொளையுமட்டும்
பாண்டிபோய் சேருமட்டும் ராந்தல்
வெளிச்சமே
எந்தன் துணை! (1012)
மேற்கண்ட
வெண்பாக்கள் பலருக்கும் மனப்பாடமாக இருப்பதைக் கேட்டுள்ளேன்.
ஒருநாள் கோட்டக்குப்பம் பொது நூலகத்தில்
நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பொழுது “ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல” என்ற நூல்
தலைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுத்தது. அந்த நூலை எழுதியவரும் நம் ஆகாசம்பட்டு
சேஷாசலம்தான். நூலகத்தில் அமர்ந்து அந்த நூலைப் படித்த நான் ஆகாசம்பட்டு ஊர் எங்கு
உள்ளது? என்று வினவிக்கொண்டு, மாலை நேரத்தில் ஒரு மிதிவண்டியில் ஆகாசம்பட்டு சென்று,
அவர் இல்லத்தை அடைந்தேன். கவிஞர் சேஷாசலம் உள்ளார்களா? என்று கேட்டதும், அவர் நிலத்தில்
இருக்கும் விவரம் தெரிந்தது. நானும் அவரின் நிலத்துக்கு வழி வினவிக்கொண்டு, சென்று
சேர்ந்தேன். நம் கவிஞர் சவுக்குமரக் கன்றுகளை ஆடு மாடுகள் மேய்ந்துவிடாமல் காவல் காத்துக்கொண்டு,
உட்கார்ந்து இருந்தார். என்னை அறிமுகம் செய்துகொண்டு, உரையாடினேன். விளக்கு வைக்கும்
நேரம் வரை இருவரும் கொல்லையில் இருந்துவிட்டு, இரவு இல்லம் திரும்பினோம்.
இரவுப்பொழுதுக்குச்
சிற்றுண்டி கொடுத்தார்கள். உண்டுவிட்டு, இரவு முழுவதும் சேஷாசலத்தின் கவிதை முயற்சிகள்
குறித்து உரையாடினோம். நள்ளிரவில் கண்ணயர்ந்தோம். காலையில் உணவுகொடுத்தார்கள். உண்டு
முடித்துப் பல்கலைக்கழகத்துக்குப் புறப்பட்டேன். காலங்கள் உருண்டோடின. முப்பதாண்டு இடைவெளியில்
புதுவையில் இலக்கிய நிகழ்வுகளில் ஓரிரு முறை சந்திக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது.
ஆகாசம்பட்டு சேஷாசலம் அவர்களின்
படைப்புகள் குறித்து முனைவர் ப. சரவணன் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாகவும், சேஷாசலத்தின்
நூல்கள் பாட நூல்களாகக் கல்லூரிகளில் உள்ளதாகவும் அறிந்து மகிழ்ந்தேன். எழுதாளர் கி.
இராவும், பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகரும் சேஷாசலத்தின் வெண்பாக்கள் குறித்து
உரையாடலின்பொழுது எப்பொழுதும் வியந்துபேசுவார்கள்.
ஆகாசம்பட்டு சேஷாசலம் அவர்களின் இல்லத் திருமணம் கடலூரில்
சிலவாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. எழுத்தாளர் கி. இரா. அவர்களும் கலந்துகொண்டு
மணமக்களை வாழ்த்தினார். நானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். அதன் பிறகும் ஓரிரு
முறை தொலைபேசியில் சேஷாசலத்துடன் உரையாடல் நடந்தது. மீண்டும் ஒருமுறை ஆகாசம்பட்டு சென்று
கவிஞரைச் சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். பலவாண்டு எண்ணம் நேற்று (01.01.2024) கைகூடியது. மாலைப்பொழுதில் ஆகாசம்பட்டுக்கு வரும் செய்தியைச் சேஷாசலம்
அவர்களுக்குச் சொன்னதும் கவிஞரும் மகிழ்ந்தார். சொன்னவாறே மாலையில் சென்று, சற்றொப்ப
இரண்டு மணி நேரம் சேஷாசலத்தின் இலக்கிய முயற்சிகள், மொழிபெயர்ப்புப் பணிகள், முன்னோடி
எழுத்தாளர்களின் ஆக்கங்கள் குறித்து உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அவரின் வாழ்க்கைக் குறிப்பையும் தெரிந்துவந்தேன்.
சேஷாசலம்
தம் தாத்தாவின் ஊரான ஆகாசம்பட்டுக்கு இளமைக் காலத்தில் குடிபெயர்ந்தவர். ஆகாசம்பட்டு
என்னும் இந்த ஊர் புகழ்பெற்ற பஞ்சவடி திருக்கோவிலுக்கு அருகில் உள்ளது. இந்த ஊர் குறித்து,
இலக்கிய உலகில் நம் சேஷாசலம் அவர்களால் நல்ல
அறிமுகம் கிடைத்தது. ஆகாசம்பட்டு ஊர் மழைநீரை நம்பி, முற்காலத்தில் வேளாண்மை செய்யும்
நிலையில் இருந்தது. இவர்தான் முதன்முதல் ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர் வளத்தை வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர் இந்த ஊர் இன்று பல்வேறு பயிர் விளையும் ஊராக மாறிப்போனது. சோளம், உளுந்து,
துவரை விளைச்சல்தான் முன்பு அதிகமாக இருந்தது. இன்று அனைத்துப் பயிர்களும் விளைவிக்கப்படும்
வளம் நிறைந்த ஊராகச் செழித்து நிற்கின்றது.
சேஷாசலம் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை
அடுத்துள்ள பாங்களத்தூர் என்னும் சிற்றூரில் 13. 09. 1948 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர்
வெங்கட சுப்பு, அலர்மேல் அம்மாள் ஆகும். பள்ளிப்படிப்பை 1966 இல் நிறைவு செய்த சேஷாசலம்
அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் இளம் அறிவியல் (விலங்கியல்) படிப்பை 1970 இல் நிறைவு செய்தவர்.
1970 இல் இராஜேஸ்வரி அம்மையாருக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு
இரண்டு மகள்களும் ஒரு மகனும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.
சேஷாசலம் கல்வியியல் படிப்பை 1973 இல் முடித்து,
திண்டிவனம், கடலூர் முதலிய ஊர்களில் ஆசிரியர் பணியாற்றினார். பின்னாளில் கவிஞர் இரா.
மீனாட்சி அவர்களின் வேண்டுகோளின்படி ஆரோவில்லில் உள்ள வெளிநாட்டினரின் பிள்ளைகளுக்குத்
தமிழ் பயிற்றுவிப்பதும், தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பதுமான பணியில்
ஆர்வமுடன் செயல்பட்டார்.
பள்ளிக்காலம் முதல் படிப்பதிலும் எழுதுவதிலும்
சேஷாசலம் ஈடுபாடுகொண்டிருந்தவர். இவரின் கையெழுத்து முத்து முத்தாகக் கண்ணைக் கவரும்
தரத்தில் இருக்கும். இது இவருக்குப் பணியாற்றும் இடங்களில் நல்ல புகழை ஈட்டித் தந்தது.
இலக்கிய நூல்களில் தனிப்பாடல்கள் இவருக்கு அறிமுகம் ஆனதும் அதனைப் போலப் பல பாடல்களை எழுதித்
தம் பாட்டு வேட்கை தணியாமல் பார்த்துக்கொண்டார். பாரதிதாசன் படைப்புகளில் தொடக்கத்தில்
நல்ல ஈடுபாடு கொண்டிருந்த சேஷாசலம் பின்னர் பாரதியார் படைப்புகளை ஈடுபாட்டுடன் பயின்றவர். வாணிதாசனின் "எங்களூர்" கவிதையும்
இவருக்குக் கவிதைத் துறையில் கால்பதிக்க உதவியது. கண்ணதாசன் படைப்புகளிலும் கவிமணியின்
மொழிபெயர்ப்புகளிலும் மனம் பறிகொடுத்தவர். வானொலிக் கவியரங்குகளில் வளமான கவிதைகளை
வழங்கி அனைவரின் பாராட்டினைப் பெற்றுவருபவர்.
“கவிதை” என்னும் இதழைத் தெசிணி(தெய்வசிகாமணி)
அவர்கள் நடத்தினார். பல இளங்கவிஞர்கள் தோன்றுவதற்கு வாய்ப்பாக இந்த இதழ் விளங்கியது.
அவரின் ஏட்டில் சேஷாசலம் கவிதைகளைப் படைத்தார். கவிஞர் வைரமுத்துவின் படைப்புகளும்
அந்த இதழில் வெளிவந்தன. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் இருந்த கற்பனை உணர்ச்சி, அவருடன்
நெருங்கிய நட்புக்கு நகர்த்திச் சென்றது. சேஷாசலம்
சென்னை சென்றால் வைரமுத்துவின் வீட்டில் தங்கிவரும் அளவுக்கு ஆழமான நட்பு இருவருக்குமிடையில் அந்நாளில் உருவானது. இவரின் நூலுக்குக் கவிஞர் வைரமுத்துவின் அணிந்துரை அமைந்துள்ளமை இங்குக்
குறிப்பிடத்தக்கது. 1980 இல் வெளிவந்த சேஷாசலத்தின் “இரை இழுக்கும் எறும்பு” என்னும் நூலுக்குக் கவிஞர்
வைரமுத்துவின் அணிந்துரை அமைந்து, நூலுக்குப் பெருமை சேர்த்தது. இரண்டாம் நூலான "ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல" என்ற நூல் வெளிவருவதிலும் கவிஞர் வைரமுத்து உதவினார் என்று சேஷாசலம் நன்றியுடன் குறிப்பிடுவார்.
சேஷாசலம் தம் பதினைந்தாம் வயது முதல் வெண்பா
வடிவில் படைப்புகளைத் தந்து வருகின்றார். எண்சீர், அறுசீர், கட்டளைக் கலித்துறை வடிவங்களையும்
பயன்படுத்தியுள்ளார். “புலவர்களுக்கு வெண்பா புலி” என்பார்கள். அந்தப் புலி நம் சேஷாசலத்திடம்
கால் மடக்கி, தலைதாழ்த்தி நிற்கும். எளிய பேச்சு வழக்கில் மக்கள் வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டுவதில்
சேஷாசலம் வெற்றிபெற்றுள்ளார். இவர்தம் வெண்பாக்களை கி. இரா, தி.க.சிவசங்கரன், அப்துல்
ரகுமான், மீரா, சிற்பி, சுஜாதா, அ. அறிவுநம்பி, க.பஞ்சாங்கம், தேவமைந்தன், நாயகர், வாலி, வைரமுத்து, பிரபஞ்சன், தங்கப்பா,
இரா. மீனாட்சி, யுகபாரதி உள்ளிட்டவர்கள் ஆர்வமுடன் குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம்.
1991 இல் புதுக்கவிதை அமைப்பில் 192 வெண்பாக்களை
ஆகாசம்பட்டு என்னும் தலைப்பில் அன்னம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டார். இந்த நூல்
தமிழகத்தில் அனைவரின் கவனத்தையும் இழுத்தது. எழுத்தாளர் சுஜாதா இந்த நூல் பற்றி இந்தியா
டுடே இதழில் ஒரு கட்டுரை எழுதி, இலக்கிய உலகில் அனைவரின் கவனத்துக்கும் கொண்டுசென்றார்.
இந்த நூல் 2004 இல் மறுபதிப்பு கண்டது. இதில் 1062 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன. மூன்றாம்
பதிப்பு கூடுதல் வெண்பாக்களுடன் வெளிவர உள்ளது. ஒரே வடிவத்தில் எழுதி, அல்லது ஒரே நூலின்
வழியாக இலக்கிய மதிப்பைப் பெறமுடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் தன் படைப்புகளை
வழங்கிவருகின்றார்.
படைப்பு நூல்களை வழங்கிவரும் சேஷாசலம் அண்மைக்காலமாக
மொழிபெயர்ப்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார். வடமொழிக் கவிஞர் காளிதாசன்,
வால்மீகி, வைக்கம் முகமது பஷீர், பிரேம் சந்த் ஆகியோரின் படைப்புகளை ஆங்கிலம் வழியாகத்
தமிழுக்குப் பெயர்க்கும் அரும்பணியைச் செய்துவருகின்றார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே வடமொழிக்
கவிவாணர் காளிதாசனின் காவியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள சேஷாசலத்தின் மொழிபெயர்ப்புகள்
வெளிவந்தால் அவை தமிழுக்கு ஆக்கமாக இருக்கும். வடமொழிக் காவியங்களின் சுவைகளை எடுத்துரைத்து,
காளிதாசனின் பெரும்புலமையை வியக்கும் சேஷாசலம் அந்தப் பெருங்கவிஞரின் முதன்மையான கற்பனைகளை
விளக்குவதன் வழியாக அக் காப்பியச் சுவையை முழுதுணர்ந்துள்ளமையை அறியலாம்.
காளிதாசனின் ரகுவம்சம் நூலில் இராமனின்
மூதாதையர் வரலாறும் பின்வந்தோர் வரலாறும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நூலுக்குப் பேராசிரியர்
ப. மருதநாயகம் அவர்களின் அணிந்துரை அமைந்து, நூலின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது.
வெண்பா, எண்சீர், அறுசீர் விருத்தங்களில் அமைந்த பாடல்கள் இந்த நூலினை அழகுசெய்கின்றன.
மொழிபெயர்ப்பு என்று கூறமுடியாதபடி பாடல்கள் உயிரோட்டமாக இந்த நூலில் உள்ளன.
எங்கள் உரையாடலில் புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்,
தீபம் நா. பார்த்தசாரதியின் தீபம் இதழும் முதன்மைப் பொருள்களாக இடம்பெற்றன. ஜெயகாந்தனின்
இலக்கிய ஆளுமையைச் சேஷாசலம் எடுத்து முன்வைப்பதில் ஆற்றல் பெற்றவர். பன்மொழி இலக்கியப்
பயில்வு இவர்தம் இலக்கிய மதிப்பீடுகளைச் சிறப்புடையதாக்கி உள்ளன.
75 வயதாகும் ஆகாசம்பட்டு சேஷாசலம் மாலிய
நெறியினர் என்பதால் மாலாயிரம் உள்ளிட்ட அரிய இலக்கியப் பனுவல்களை ஈடுபாட்டுடன் எழுதி,
இலக்கிய வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார். இவரின் படைப்புகள் இவரின் சிறப்புகளை என்றும்
நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
ஆகாசம்பட்டு சேஷாசலம்
படைப்புகள்
·
இரை
இழுக்கும் எறும்பு – 1980
· ரப்பர்
மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல – 1983, 2004(மணிவாசகர் பதிப்பகம்)
·
ஆகாசம்பட்டு
- 1991, 2004(மணிவாசகர் பதிப்பகம்)
·
அனுமாயணம்(யாப்பு)
– 2003
·
சேஷாசலம்
கவிதைகள் – 2004
·
வனவாசிகள்(மரபு)
– 2004
·
கிருஷ்ணார்ப்பணம்
(யாப்பு) – 2004
·
மாலாயிரப்
பிரபந்தம்(யாப்பு)(மொழிபெயர்ப்பு) – 2007
·
ரகுவம்சம்(யாப்பு)
(மொழிபெயர்ப்பு)- 2008
·
கண்ணன்
கவிதைகள்(யாப்பு), (மொழிபெயர்ப்பு) – 2010
வெளிவர வேண்டிய நூல்கள்:
·
குமார
சம்பவம் (மொழிபெயர்ப்பு)
·
மேகதூதம்
(மொழிபெயர்ப்பு)
·
ருதுசம்காரம்
(மொழிபெயர்ப்பு)
·
சேஷ
இராமாயணம் (மொழிபெயர்ப்பு)
·
வைக்கம்
முகமது பஷீர் கதைகள் (மொழிபெயர்ப்பு)
·
பிரேம்சந்த்
கதைகள்(மொழிபெயர்ப்பு)
·
வேமனர்
கவிதைகள் (சதகம்)
·
அமரு
சதகம்
·
கீத
கோவிந்தம்