கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ. இராசு
கல்வெட்டியில் அறிஞரும் பன்னூலாசிரியருமான புலவர் செ.இராசு அவர்கள் ஈரோட்டில் இயற்கை எய்தினார்(09.08.2023) என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
புலவர் செ. இராசு அவர்களின் பெருமையை அண்மையில்(06.08.2023) ஈரோட்டில் நடைபெற்ற தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது விழாவில் நினைவுகூரும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. புலவர் அவர்களின் பெருமையைப் பலவாண்டுகளுக்கு(22.07.2008) முன் என் வலைப்பதிவில் எழுதி மனம் நிறைவுற்றிருந்தேன். மேலும் தொல்லிசையும் கல்லிசையும் என்ற எம் ஆவணப்படத்திற்காகப் புலவர் அவர்களை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் செய்து காணொலியில் பதிந்து வந்தோம். அவர் கண்டுபிடித்த அறச்சலூர் இசைக்கல்வெட்டு வரலாற்றை மிக ஆர்வத்துடன் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர் காட்டிய வழியில் கல்வெட்டையும் மலைமீது ஏறிக் கண்டு உவந்தோம்.
புலவர் செ. இராசு அவர்கள் படித்த திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நானும் பயின்றவன் என்பதில் நெஞ்சம் நிறைவடைகின்றேன்.
தமிழக வரலாறும் கொங்குநாட்டு வரலாறும் துலக்கமுறுவதற்குத் தொண்டாற்றிய புலவர் பெருமகனாரின் தமிழ் வாழ்க்கையை என் பழைய பதிவிலிருந்து மீண்டும் பதிவு செய்கின்றேன்.
புலவர் செ. இராசு அவர்களின் தமிழ் வாழ்க்கை
புலவர் செ. இராசு அவர்கள் 02.01.1938 இல் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு (பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் ந.சென்னியப்பன், நல்லம்மாள். இவர்தம் மனைவியார் பெயர் கெளரி அம்மாள். மூன்று ஆண்மக்கள் இவருக்கு வாய்த்தனர். கணிப்பொறித் துறையில் இவர்கள் பணிபுரிகின்றனர்.
தொடக்கக் கல்வியை(1-5) திருப்பூர் கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், வள்ளுவர் தொடக்கப்பள்ளி, ஞானிபாளையம், இலண்டன் மிசன் பள்ளி(ஈரோடு) செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பை நிறைவு செய்தவர் (1955-59). சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட், முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
ஈரோட்டில் தமிழாசிரியர் பணியைத் தொடங்கி(1959), 1980-82 இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார். பிறகு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1982 இல் இணைந்து கல்வெட்டு, தொல்லியல் துறையில் துறைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட ஆய்வுப்பணியை மேற்கொண்டிருந்தார்.
இவர்தம் பணிக்கு மேலும் பெருமை கிடைக்கும்படி பல்வேறு தமிழ் அமைப்புகள் இவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவற்றுள் கல்வெட்டறிஞர், பேரூராதீனப் புலவர், கல்வெட்டியல் கலைச்செம்மல், திருப்பணிச் செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத் தக்கன.
இவர் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை (4 முறை) நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்தவர்.
1959 இல் தமிழாசிரியர் பணியேற்றது முதல் கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். பெரும்புலவர் தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் சுவடிப்பயிற்சி, பேராசிரியர் கா.ம.வேங்கடராமையாவிடம் கல்வெட்டுப் பயிற்சி, தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் இரா. நாகசாமியிடம் தொல்லியல் பயிற்சியும் பெற்று, தொடர்ந்து களப்பணிகள் வழியாகத் தன் பட்டறிவை வளர்த்துக்கொண்டவர்.
இவர் அடிப்படையில் தமிழ்ப்புலமை பெற்றவர். ஆதலால் தமிழ் ஆவணங்களைப் பிழையின்றி, பொருள் உணர்ச்சியுடன் படிப்பதில் வல்லவர். கல்வெட்டு, செப்பேடு, சுவடி பற்றிய தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று அவைகளை ஆய்வு செய்து செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளி உலகிற்கு வழங்குவதில் வல்லவர். இவ்வகையில் இவர் வெளியிட்ட நூல்கள் நூற்றுக்கு மேல் அமைகின்றன. கட்டுரைகள் 250 அளவில் வெளிவந்துள்ளன. செய்திகள் 100 மேல் வந்துள்ளன.
பேராசிரியர் அ.சுப்பராயலு அவர்களுடன் இணைந்து தமிழகத் தொல்லியல் கழகம் நிறுவி எட்டாண்டுகளாகத் தொடக்கச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் செயல்பட்டவர். ஆவணம் என்ற இதழ் கொண்டுவரக் காரணமானவர். பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிபவர்.ஆசிரியப்பணி புரிந்த பொழுது மாணவர்களை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வரலாற்று ஆர்வம் ஊட்டியவர்.
பல கல்லூரிகளில் இவரின் முயற்சியால் தொல்லியல் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது. இவர்தம் கண்டுபிடிப்புகளுள் பல இவரின் பெருமையை என்றும் நினைவுகூரும். அவற்றுள் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசைக் கல்வெட்டைக் கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்தியவர். இந்தியாவில் இதுவே முதலாவது இசைக் கல்வெட்டாகும்.
சங்க காலத்தில் கொடுமணம்(இன்றைய கொடுமணல்) ஊரைக் கண்டறிந்து அகழாய்வு செய்து உரோமானியர்களுடன் தொடர்புடைய நொய்யல் கரை நாகரிகம் வெளிப்படுத்தியது இவர் கண்டுபிடிப்புகளுள் மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த பணியாகும். தென்னிந்தியாவில் மிக அரிதான பாடலுடன் கூடிய பழமங்கலம் நடுகல் கண்டறிந்தமையும் குறிப்பிடத் தகுந்த பணியேயாகும்.
சித்தோட்டுக்கு அருகில் குட்டுவன் சேய் பிராமி கல்வெட்டைப் படித்து அறிவித்த இவர்தம் பணி குறிப்பிடத்தக்கது. சென்னையிலிருந்து பூனா செல்லவிருந்த தஞ்சை மராட்டியர்களின் மோடி (மோடி என்பது மராட்டிய மொழியின் சுருக்கெழுத்தாகும்) ஆவணங்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வந்த முயற்சியும் இவருடையது ஆகும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலாக இவருடைய நூல் வெளியிடப்பட்டது. ஆய்வாளர்கள் நிகழ்கால வரலாற்றிலும் கவனம் செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் கண்ணகி கோட்டம், கச்சத்தீவு உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவர் தம் உழைப்பில் கொங்கு, சுவடி, ஆவணம், தேனோலை, கொங்குமலர் உள்ளிட்ட இதழ்கள் பொலிவு பெற்றன.
தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது எடுத்த சில படங்கள்:
மு.இளங்கோவனுக்கு அறச்சலூர் இசைக்கல்வெட்டின் நுட்பம் விளக்கும் புலவர் செ. இராசு ஐயா
முழுக்
கட்டுரையையும் படிக்க என் வலைப்பதிவுக்கு வாருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக