நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

பேராசிரியர் மு. இளங்கோவன் தமிழ் விக்கி தூரன் விருது பெற்றார்!

 

 எழுத்தாளர் ஜெயமோகன் மு.இளங்கோவனுக்கு மாலை அணிவித்தல்

பி.கே.இராஜசேகரன்(மலையாளத் திறனாய்வாளர்), தியடோர் பாஸ்கரன், மு.இளங்கோவன், சிவசங்கர், எழுத்தாளர் ஜெயமோகன்




மு. இளங்கோவன்

 தமிழ் ஆய்வுப்புலத்தில் தொடர்ந்து இயங்கி, சாதனைகள் படைக்கும் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குத் தமிழ் விக்கி தூரன் விருது, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி தூரன் விருதுக்குப் புதுச்சேரிப் பேராசிரியர் மு. இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.  இவர் புதுவை அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். 

 ஈரோட்டில்  06.08.2023 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன், சூழலியல் அறிஞர் சு. தியடோர் பாஸ்கரன், மலையாளத் திறனாய்வு வல்லுநர் பி. கே. இராஜசேகரன் ஆகியோர் இணைந்து மு. இளங்கோவனுக்குத் தமிழ் விக்கி தூரன் விருதினை வழங்கினர். இரண்டு இலட்சம் ரொக்கப்பரிசு, நினைவுச் சிற்பம், பாராட்டிதழ் ஆகியன வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருது சிவசங்கருக்கு வழங்கப்பட்டது. 

 இரண்டு நாள் நடைபெற்ற விழாவில் மு. இளங்கோவனின் எழுத்துப்பணி, ஆவணப்படப் பணி, கணினி, இணையத்துறையில் செய்துள்ள பணிகள், நூலாக்கப் பணிகள், நாட்டுப்புறவியல் ஆய்வுகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினர்களுடன் தனித்தனிக் கலந்துரையாடல்களும் நடைபெற்றன. மலையாளத் திறனாய்வாளர் பி.கே. இராஜசேகரன் அவர்களின் உரையை எழுத்தாளர் ஜெயமோகன் தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார். எழுத்தாளர் சிவசங்கர் தம் மொழிபெயர்ப்பு, ஆய்வு, ஆவணமாக்கல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

விருது விழாவின் முதன்மை நிகழ்வுகளுள் ஒன்று தூரன் அவர்களின் இசைப்பாடல்கள் நாகசுர இசையில் வழங்கப்பட்டன. திருமெய்ஞானம் டி.பி.என். இராமநாதன், பாண்டமங்களம் ஜி. யுவராஜ் ஆகியோர் நாகசுர இன்னிசை வழங்கினர். ”கலைமாமணி” தலைச்சங்காடு டி.எம்.இராமநாதன், கட்டிமேடு பி.பாலசங்கர் ஆகியோர் தவில் இசை வழங்கினர்.

 மு.இளங்கோவன் உருவாக்கிய இரண்டு ஆவணப்படங்களின் சுருக்கப்பட்ட வடிவம் விழாவில் திரையிடப்பட்டன. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பங்கேற்பாளர்கள்

 

கருத்துகள் இல்லை: