நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 5 ஆகஸ்ட், 2023

பேராசிரியர் க. இராமசாமி அவர்களின் வாழ்வும் பணிகளும் – நேர்காணல்

 

பேராசிரியர் க. இராமசாமி 

 மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவரும் செம்மொழி நிறுவனத்தின் முன்னைப் பொறுப்பு அலுவலருமான முனைவர் க. இராமசாமி அவர்கள் மொழியியலும் தமிழும் நன்கு கற்ற பேரறிஞர் ஆவார். செம்மொழி நிறுவன வளர்ச்சியில் இவர்தம் பங்கும் பணியும் என்றும் நினைவுகூரப்படும். தமிழக மேனாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உள்ளக் குறிப்பறிந்து செம்மொழி நிறுவனத்தை மிகச் சிறப்பாக வளர்த்தெடுத்தவர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி என்னும் ஊரில் 1949 ஆம் ஆண்டில் பிறந்து, தஞ்சை சரபோசி கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று, மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்படச் செயலாற்றிய முனைவர் க. இராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அவர் வாய்மொழியாகவே கேட்டுப் பதிவுசெய்துள்ளோம். 

மொழியியில் துறையில் இவர் நிகழ்த்திய ஆய்வுகள், இவர் வரைந்த உலகத் தரம் வாய்ந்த கட்டுரைகள், நூல்கள், செயற்கரிய செய்த செயல்கள் யாவும் இந்த நேர்காணலில் பதிவுற்றுள்ளன. ஈராண்டுக்கு முன்னமே பேராசிரியரின் அரியலூர் இல்லத்தில் இந்த நேர்காணலைப் பதிவு செய்தோம். ஆயின், எமக்கிருந்த பல்வேறு பணிகளும், படத்தொகுப்புச் செய்தவதற்குரிய நேரமும் பொருளும் கிடைப்பதற்கு அரியதாக இருந்தன. நண்பர்களின் தொடர்ந்த தூண்டுதலாலும் மலைபோல் குவிந்து கிடக்கும் எம் இல்லத்தின் பல்வேறு ஒளிக்களஞ்சியக் கோப்புகளில் இவ்வரிய கோப்புகள் காணமல் போயின் என்ன செய்வது? என்ற பதைப்பாலும் பேராசிரியர் க.இராமசாமி அவர்களின் வாழ்வியல் இதுபொழுது காணொலியாக வடிவம் பெற்றுள்ளது. பேராசிரியர் அவர்களின் வாழ்வியலை ஆவணப்படமாக்கும் முன்னோட்டமாக இந்தக் காணொலி உருவாக்கப்பட்டுள்ளது. எம் முயற்சிக்கு ஊக்கம் நல்கும் தமிழ் உணர்வாளர்கள் இந்தப் பணியைப் போற்றி வரவேற்பார்கள் என்று பெரிதும் நம்புகின்றேன்.

காணொலி இணைப்பு

கருத்துகள் இல்லை: