நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 14 டிசம்பர், 2016

பதிப்புத்துறை அறிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்


வெள்ளையாம்பட்டு சுந்தரம்

1993 ஆம் ஆண்டு முதல் வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயாவை அறிவேன். எங்கள் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை சார்பில் என்னுடைய அச்சக ஆற்றுப்படை என்ற நூலினை வெளியிட்ட நிகழ்வில் முதல்படியைப் பெற்றுக்கொண்டவராக வெள்ளையாம்பட்டு சுந்தரம் அறிமுகம் ஆனார். அதன்பிறகு என் வாழ்க்கையில் அமைந்த படிப்பு, ஆய்வு, பணிநிலைகளில் பல்வேறு இடங்களில் வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயா அவர்களைக் கண்டுள்ளேன். அவர் பதிப்பித்த நூல்களை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டுப் பார்த்தால் முதல் தலைமுறை எழுத்தாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் தேடிப்பிடித்து அவர்களின் நூல்களை வெளியிடுவதில் ஆர்வம்கொண்டவராக விளங்கியமையை உணரலாம். பி.எல்.சாமி உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை வெளியிட்டவர் என்ற வகையில் வெள்ளையாம்பட்டு சுந்தரம் மேல் எனக்கு எப்பொழுதும் மதிப்பு மேம்பட்டே இருந்தது. அது தவிர அவர் பற்றிய வேறு விவரங்கள் எனக்குத் தெரியாமல் இருந்தது.

புதுச்சேரியில் இலக்கியப் புரவலராக விளங்கிய திருமுடி சேதுராமன் செட்டியார் அவர்களின் இல்லத்தில் இன்று நடைபெற்ற மணவினை உறுதிப்பாட்டு நிகழ்வுக்கு வந்திருந்த வெள்ளையாம்பட்டாரைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அவர் என்னுடன் உரையாட விரும்பியதை அறிந்தேன். அவரின் பயணத்திட்டத்தை அறிந்துகொண்டு, இவருடன் ஒரு நேர்காணல் செய்யத் திட்டமிட்டேன். காணொளியில் இவரின் நேர்காணலை இன்று பதிவு செய்தோம்(ஓய்வில் காணொளியைத் தொகுத்து வழங்குவேன்).

ஐம்பதாண்டுகாலத் தமிழ் இலக்கிய உலகம், பதிப்புத்துறை, அரசியல் உலகம், அவர்தம் திரைப்படத்துறைப் பங்களிப்பு, சான்றோர் பெருமக்களின் வாழ்வியல் என்று சற்றொப்ப மூன்று மணிநேரம் எங்கள் உரையாடல் நீண்டது.

வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாம்பட்டு என்னும் சிற்றூரில் 04.09.1933 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் சிவானந்தம், சாரதாம்பாள் ஆவர். எட்டாம் வகுப்புவரை அனந்தபுரம் பள்ளியிலும் பண்ணுருட்டி புதுப்பேட்டையிலும் கல்வி பயின்றவர். தந்தையாரை இழந்ததால் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. இதன் காரணமாகப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டுத் தறித்தொழிலில் உழைத்தார். உறவினர் ஒருவரின் முயற்சியில் சென்னையில் ஒரு ஏற்றுமதித் துணி நிறுவனத்தில் ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கினார். கைத்தறி மூட்டிகளை (லுங்கி) வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனம் என்பதால் கடுமையாகப் பணி செய்ய வேண்டிய நிலையில் உழன்றவர்.

விடுமுறை நாள்களின் ஓய்வு நேரங்களில் பழைய புத்தகங்களை விலைக்கு வாங்கிச்சென்று சென்னைப் பல்கலைக்கழகத்து வளாகத்தில் அமர்ந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். தாம்  படித்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களைக் கண்டு உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அக்காலத்தில் தன்முன்னேற்ற நூல்களை எழுதிப் புகழ்பெற்ற அப்துல் றகீம் அவர்களைக் கண்டு தம் உரையாடலைத் தொடங்கிய இவர் பன்மொழிப்புலவர் க. அப்பாத்துரையார், திருக்குறளார் முனுசாமி, தெ. பொ. மீனாட்சிசுந்தரம், அ. ச. ஞானசம்பந்தன், சிலம்புச்செல்வர் ம.பொ.சி., வாணிதாசன், புலியூர்க் கேசிகன், உவமைக் கவிஞர் சுரதா, சுப்பு ஆறுமுகம், இராம கண்ணப்பன் உள்ளிட்டவர்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்.

திரைப்படத் துறையில் புகழ்பெற்று விளங்கிய கண்ணதாசனின் உதவியாளராக 1957 அக்டோபரில் இணைந்தவர். பல்வேறு திரைப்படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்து உழைத்தவர். மாலையிட்ட மங்கை, சிவகங்கைச் சீமை, இதயவீணை, கவலையில்லாத மனிதன், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், மகளே உன் சமத்து, திருமகள், தங்கமலர் உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்தவர்.

வெள்ளையாம்பட்டு சுந்தரம் 1946 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு தன்மான உணர்வு தழைத்தவராகவும், பகுத்தறிவாளராகவும் வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. விடுதலை, உண்மை உளிட்ட இயக்க ஏடுகளையும் பெரியார் நூல்களையும், அம்பேத்கார் நூல்களையும் காந்திய நூல்களையும், நேருவின் படைப்புகளையும் கற்றுத் தெளிந்தவர்.

ஐம்பதாண்டுகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்களைப் பற்றியும் பதிப்பகங்கள் பற்றியும் பல்வேறு செய்திகளை என்னுடன் பகிர்ந்துகொண்டார். தம் நண்பர் ஒருவரின் ஏற்பாட்டில் சேகர் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, முதல் முறையாகப் பதினைந்து நூல்களை வெளியிட்டதையும் அதன் பிறகு ஆண்டுதோறும் கனிசமான நூல்களை வெளியிட்டுவருவதையும் குறிப்பிட்ட  வெள்ளையாம்பட்டு சுந்தரம் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தாம் பதிப்பித்துள்ளதையும், ஒவ்வொரு நூலுக்கும் வரைந்துள்ள பதிப்புரைகள் குறிப்பிடத்தக்க சிறப்பிற்கு உரியன என்றும் குறிப்பிட்டார். இவரின் பதிப்பகம் புதினங்களை வெளியிடுவதில்லை என்ற குறிக்கோள் கொண்டது. வரலாறு, கல்வெட்டு சார்ந்த நூல்களுக்கு முதன்மையளித்து வெளியிடுவது இவர் இயல்பு. நூலகங்களில் இந்த நூல்கள் இருந்தால் இந்தத் தலைமுறையினர் கற்கவில்லை என்றாலும் அடுத்த தலைமுறையாவது கற்பார்கள் என்ற நம்பிக்கையில் நூல்களைப் பதிப்பித்து வருகின்றார்.

தெய்வசிகாமணி ஆச்சாரியார் எழுதிய மேடைத்தமிழ் என்ற நூலுக்குக் கண்பார்வை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும்  திரு. வி. க. அணிந்துரை 16 பக்கம் எழுதியுள்ளார் என்ற செய்தியைப் போகும் போக்கில் தெரிவித்தார். இந்த நூலில் பெரியாரின் மேடைப்பேச்சின் சிறப்பு, அண்ணாவின் மேடைப்பேச்சு முறை குறித்த செய்திகள் பதிவாகியுள்ளதையும் பகிர்ந்துகொண்டார். நூல்களை வாங்குவது, கற்பது, கற்ற வழியில் நிற்பது வெள்ளையாம்பட்டு சுந்தரம் இயல்பாகும்.

1954-55 அளவில் தந்தை பெரியார் திருமழிசை ஊருக்கு வந்துபொழுது புதிய சுவடியில் கையெழுத்து வாங்கிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதுடன் அன்றைய நாளில் பெரியார் மூன்றுமணி நேரம் சொற்பொழிவாற்றிய அரிய செய்தியைத் தெரிவித்தார். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ உள்ளிட்ட உலக அறிஞர்களின் வரலாறு, பணிகளை எடுத்துக்காட்டி இவர்களின் மேம்பட்டவர் பெரியார் என்று பேருரை ஒன்றையை இந்த நேர்காணலில் நிகழ்த்தினார்.

தமிழ்நாட்டுப் பள்ளிகள்  கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இருந்த அறிஞர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் தமிழகத்தில் உள்ள கோயில்கள், சிற்பங்களைக் குறித்து நன்கு அறிந்துவைத்துள்ளார். தக்க அறிஞர்களை அழைத்துச் சென்று கோயில்களில் உள்ள கல்வெட்டுகள், அரிய வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டித் தமிழக வரலாறு துலங்குவதற்குரிய பதிப்புப்பணிகளைச் செய்துள்ளார். தொல்லியல் அறிஞர்கள் இரா. நாகசாமி, கோபிநாத், முனைவர் இராச. பவுன்துரை, பேராசிரியர் இரா.மதிவாணன், முனைவர் இரா. கலைக்கோவன், நடன. காசிநாதன், முனைவர் மா. சந்திரமூர்த்தி, ச. கிருஷ்ணமூர்த்தி, பாகூர் குப்புசாமி, வில்லியனூர் வெங்கடேசன், வே. மகாதேவன்,  உள்ளிட்டோரின் கோயில், கல்வெட்டு சார்ந்த நூல்களை வெளியிட்டுத் தமிழ்ப்பணிபுரிந்துவரும் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் தம் 84 ஆம் அகவையிலும் படிப்பதிலும் எழுதுவதிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவர் வாழ்க்கை இளைஞர்களுக்கு முன்மாதிரி வாழ்க்கையாகும்.

23.02.1956 ஆம் ஆண்டில் பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார் தலைமையில் வெள்ளையாம்பட்டு சுந்தரம், கோகிலா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆறு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இப்பொழுது இருவர் மட்டும் உள்ளனர்.



                                           வெள்ளையாம்பட்டு சுந்தரம்

                           மு.இளங்கோவன், வெள்ளையாம்பட்டு சுந்தரம்

குறிப்பு: கட்டுரையைப், படங்களை எடுத்து ஆள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரிய மனிதர்
போற்றுவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் மூலமாக வெள்ளையாம்பட்டு ஐயாவின் அறிமுகம் கிடைத்தது. எனது முதல் சிறுகதைத்தொகுப்பு நூலாக்கம் பெறுவதற்குக் காரணமானவர். ஐயாவுடன் நன்கு பழகியுள்ளேன். மிகவும் இளகிய மனம். பழகும் அனைவரிடமும் மிகவும் கனிவோடு நடந்துகொள்வார். பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் மற்றும் அறிஞர்களுடன் தொடர்புகொண்டுள்ளவர். இவருடன் அறிமுகமாகும் எவருக்குமே நாம் ஏன் ஒரு நூலை வெளியிடக்கூடாது என்ற எண்ணம் உண்டாகும் அளவு நூல் எழுதுவதைப் பற்றிப் பேசுவார். தமிழகத்தில் எனக்குத் தெரிந்தவரை வாசிப்பு ஆர்வமும், பதிப்பு ஆர்வமும், நண்பர்களை ஊக்குவிக்கும் ஆர்வமும் ஒருசேரப் பெற்றவர் இவர் மட்டுமே. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் நடத்திய அறுபதாம் ஆண்டு விழாவில் அந்நிறுவன நூலை எழுதிய நிலையில் (நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் என் நூல்களை வெளியிட்டுள்ளது)பாராட்டு பெற்றபோது அவர் நேரில் வந்து என்னை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி அரிய நூல்களை அன்பளிப்பாகத் தந்தார். ஓர் அரிய மனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி.