நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 15 டிசம்பர், 2016

'வைணவ இலக்கியச்செம்மல்' பாவலர்மணி சித்தன்


பாவலர்மணி சித்தன்

புதுவையின் பழைய வரலாற்றை நெஞ்சில் சுமந்து, வாழ்ந்துகொண்டிருக்கும் அறிஞர்களுள் பாவலர்மணி சித்தன் குறிப்பிடத்தக்கவர். 96 அகவையைக் கடந்தபோதிலும் தமிழ்ப்பணிகளைத் தொய்வின்றிச் செய்துவருபவர். வைணவ இலக்கியத்தில் நல்ல புலமையும், பயிற்சியும் உடைய பாவலர்மணி சித்தன், பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர். இவர்தம் தமிழ்ப்பணியை அறிவதற்குப் பல நாட்களாகத் திட்டமிட்டும் இயலாமல் இருந்தது. கல்வெட்டு அறிஞர் வில்லியனூர் வேங்கடேசனாருடன் இன்று சித்தன் அவர்களின் இல்லம் சென்றேன். மூன்று மணி நேரம் உரையாடி, அரிய செய்திகள் பலவற்றை அறிந்துகொண்டேன். வழக்கம்போல் காணொளியில் இவர் பேச்சைப் பதிவுசெய்தேன்.

பாவலர்மணி சித்தன் 1920 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஆறாம் நாளில் புதுச்சேரியில் பிறந்தவர். இயற்பெயர் இராதாகிருஷ்ணன். இவர்தம் பெற்றோர் திருவாளர்கள் முத்துசாமிப்பிள்ளை என்ற முதலியாண்டான், ஆதிலட்சுமி அம்மாள். தொடக்கக் கல்வியாக எழுத்துப் பயிற்சி முதல் எண்சுவடி வரை புதுச்சேரி காந்தி வீதியில் இருந்த பஜனை மடத்தில் பயின்றவர். கல்வே கல்லூரியில் பிரெஞ்சுப் படிப்பைப் படித்தவர். கல்வே கல்லூரியில் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவராகப் பயின்றவர். தனிப் பயிற்சியாகவும் பாவேந்தரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றவர். புதுவையில் இருந்த புதுவைக் கல்விக் கழகத்தில் தேசிகம் பிள்ளை, தில்லை கோவிந்தன் உள்ளிட்டவர்களிடம் மொழிப்பயிற்சி பெற்றவர். 19 அகவையில் தமிழாசிரியராகத் தேர்வுபெற்றாலும் மருத்துவத்துறையில் ஊதியம் அதிகம் என்பதால் ஆசிரியர் பணிக்குச்  செல்லாமல் மருத்துவமனையில் உதவி மருத்துவராகப் பணியில் இணைந்தவர். தமிழார்வம் காரணமாகப் பண்டிதர் வீ. துரைசாமி முதலியார் அவர்களிடம் பயிற்சி பெற்று, வித்துவான் தேர்வு எழுதி, 22 ஆம் அகவையில் வித்துவான் பட்டம் பெற்றவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் தேர்வெழுதி வெற்றிபெற்றவர்.

சித்தன் அவர்களின் குடும்பம் மரபு வழியான வைணவக் குடும்பம். எனவே இளம் அகவையில் ஆழ்வார் பாசுரங்களை நாளும் மனப்பாடம் செய்ய வேண்டிய சூழல். அதற்காகப் புதுவை வரதராசலு நாயுடு என்பவரிடம் வியாழன், ஞாயிறு கிழமைகளில் காலை எட்டுமணி முதல் 12 மணிவரை பாசுரங்களைப் படித்து நெட்டுருப்படுத்தியவர். திருவரங்கம் மீ. கோ. இராமாநுச சுவாமிகளிடம் ஆழ்வார்களின் பாசுரங்களைச் சிறப்பாகப் பயின்றவர். 18 அகவைக்குள் ஆழ்வார்களின் நாலாயிரம் பாடல்களும் சித்தனுக்கு மனப்பாடமானது. பெற்றோர் இதற்காக ஒரு விழா எடுத்துப் பாராட்டினர். இதனை அறிந்த பாவேந்தர் பாரதிதாசன் தம்மைச் சந்திக்க சித்தனை அறிவுறுத்தினார். பாவேந்தரின் தொடர்பு அமைந்ததும் சித்தனுக்கு இலக்கிய இலக்கண ஈடுபாடு மிகுதியானது. ஆழமாகத் தமிழ் கற்கத் தொடங்கினார். வைணவ அமைப்புகள் பலவற்றில் இணைந்து இலக்கிய - சமயப் பணியாற்றவும் வாய்ப்புகள் அமைந்தன.

பாவலர்மணி சித்தன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பல் அறுவை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். புதுவையில் வாழ்ந்த அறிஞர்கள், தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த சித்தனின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டிப் புதுவை அரசு தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகளை அளித்துச் சிறப்பித்தது. பல்வேறு கல்வி நிறுவனங்களில் வைணவ இலக்கியங்கள் குறித்தும் கம்ப ராமாயணம் குறித்தும் அரிய சொற்பொழிவுகளாற்றியுள்ளார். பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைபாடியுள்ளார். இலக்கியப் பயணமாக இலங்கை, பிரான்சு, சுவிசு, உரோமாபுரி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அரிய உரையாற்றி மீண்டவர்.

பிரான்சு நாட்டு அறிஞர் பிலியோசா அவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த சித்தன் பிலியோசா அவர்களின் பன்மொழிப் புலமை, இலக்கிய ஈடுபாடு, தமிழாராய்ச்சித் திறத்தினை அறிந்து, அவர்மேல் உயர்ந்த மதிப்பினைக் கொண்டவர்.

புதுவையில் பாவேந்தர் பாரதிதாசனைச் சந்தித்து நாளும் உரையாடும் வாய்ப்பினைச் சித்தன் பெற்றிருந்தவர். காமராசர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது, தமிழர் ஒருவர் முதலமைச்சாரனமையைப் பாராட்ட நினைத்துப் பாவேந்தர் விழாவெடுத்தார். அந்தநாளில் கவியரங்கம் ஒன்று நடந்தது. அப்பொழுது காமராசரின் சிறப்பினைக் கவிதையாகப் பாடிய சித்தனைப் புகழ்ந்து பாவேந்தர்,

வித்துவான் புதுவைச் சித்தர்
இராதா இந்நேர மிங்கே
நத்துவார்க் கெலாமி னிக்க
நறுங்குறிஞ் சித்தேன் பெய்தார்;
அத்தவக் கவிஞர் நன்னூல்
ஆய்ந்தவர், தமிழ்க்காப் பாளர்!
முத்தமிழ்ச் செல்வர் வாழி;
மொழிகின்றோம் அவர்க்கு நன்றி!

என்று பாடினார்.

குயில் இதழில் சித்த மருத்துவம் சார்ந்த பாடல்களை இராதாகிருஷ்ணன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தவரைச் சித்தன் எனப் பெயரிட்டுப் பாவேந்தர் எழுதவைத்தார். அன்றுமுதல் சித்தன் என்ற புனைபெயரே நிலைபெறலாயிற்று.

சித்தன் புதுவைப் பல்கலைக்கழகத்திலும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திலும், புதுவைக் கம்பன் கழகத்திலும் அறக்கட்டளையை நிறுவி வைணவ இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றி வருபவர். பல்வேறு  வைணவ மாநாடுகளை ஏற்பாடு செய்து திறம்பட நடத்தியவர். சைவ இலக்கிய ஈடுபாடும் இவருக்கு உண்டு.

பாவலர்மணி சித்தனின் தமிழ்க்கொடை:

1.   அருட்கவி சுத்தானந்தர்
2.   புதையுண்ட நாகரிகம்
3.   தாமரைக்காடு(கவிதைகள்)
4.   பாவேந்தருடன் பயின்ற நாள்கள்
5.   புதுமை நயந்த புலவர்
6.   துரை வடிவேலனார்
7.   பங்காரு பத்தர்
8.   வேளாளர்
9.   பாரதி கண்ட பைந்தமிழ் வள்ளல்கள்
10. கம்பன் பிள்ளைத்தமிழ்
11. கம்பனும் திருமங்கை மன்னனும்
12. மேதை கம்பனும் கோதைப் பிராட்டியும்
13. கம்பன் கற்பகம்
14. பாட்டரங்கில் கம்பன்
15. கம்பனில் மனிதம்
16. கம்பனின் கற்பனைத் திறன்
17. கடல்கடந்த கம்பன்
18. கம்பர் வித்தகம்
19. தேவ தேவி(குறுங்காப்பியம்)
20. வைணவ மங்கையர்(கவிதை)
21. திருமால் திருநெறி
22. வஞ்சி விடுதூது
23. பாலகர்க்குப் பாட்டமுதம்
24. களம் கண்ட கவிதைகள்
25. இராமாநுசர்(புரட்சித்துறவி)


புலவர் அரசமணியின்  அன்புவிடு தூது நூலினைச் சித்தன் உரையுடன் பதிப்பித்துள்ளார்.


புதுவையில் வாழ்ந்த இலக்கியப் புலவர்கள், பாவலர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுடன் பழகியும், தமிழ்ப்பணியாற்றியும் தமிழுலகுக்குப் பன்னூல்களைத் தந்தும் பாவலர்மணி சித்தனின் தமிழ் வாழ்க்கை தொடர்கின்றது. வைணவ இலக்கியங்களைப் பயின்று கற்றுத் துறைபோகிய அறிஞராக விளங்குவதுடன் பாவலராகவும் நாவலராகவும் விளங்கும் இவரைப் போற்றுவதும் பாராட்டுவதும் தமிழர் கடன்!
பாவலர்மணி சித்தன்

மு.இ, பாவலர்மணி சித்தன், வில்லியனூர் வேங்கடேசனார்

குறிப்பு: கட்டுரை, படங்களை எடுத்தாள விரும்புவோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வைணவ இலக்கியச் செம்மல் அவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. உங்களால் நாங்கள் பல அறிஞர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெறுகிறோம்.