நூல்வெளியீட்டு விழாவில்
முனைவர் ம.இராசேந்திரன், வேல.இராமமூர்த்தி, மு.இளங்கோவன், ஈரோடு கதிர், பொறியாளர் இரவிச்சந்திரன், மருத்துவர் வி.தனபால் உள்ளிட்டோர்
தஞ்சாவூர் இராசப்பா நகரில் அமைந்துள்ள ஐசுவர்யம்
மகாலில் 18.12.2016 ஞாயிறு மாலை 6 மணிக்குச் சிங்கப்பூரில் வாழும் பொறியாளர் இரவிச்சந்திரன்
எழுதிய வெட்டிக்காடு, அவர் மனைவி கீதா இரவிச்சந்திரன் எழுதிய கீதா கஃபே நூல்களின் வெளியீட்டு
விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தஞ்சாவூர் வினோதகன் மருத்துவ மனையின் மருத்துவர் வி. தனபாலன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் அப்துல்லா
வரவேற்புரை வழங்கினார். வெட்டிக்காடு என்ற நூலினை எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி
வெளியிட, முதற்படியினை ஜெயம் சோமு பெற்றுக் கொண்டார். கீதா
கஃபே நூலினைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
முனைவர் ம. இராசேந்திரன் வெளியிட,
பத்மாவதி தனபாலன், முனைவர் பழனி. அரங்கசாமி பெற்றுக்
கொண்டனர். கீதா கஃபே நூலினை எழுத்தாளர் ஈரோடு கதிர் சிறப்பாக அறிமுகம் செய்தார். முன்னாள் எம்.பி. சிங்காரவடிவேலு உள்ளிட்டோர்
வாழ்த்திப் பேசினர்.
பொறியாளர் இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும்
திருவாட்டி கீதா இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.
நூலாசிரியர்கள் இரவிச்சந்திரன்,
கீதா இரவிச்சந்திரன் ஏற்புரை வழங்கினர்.
சுரேகா சுந்தர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள்,
உறவினர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெட்டிக்காடு
நூலினை அறிமுகம் செய்து மு.இளங்கோவன் பேசியதாவது:
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில்
உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன்,
பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு
இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர். இந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள
வெட்டிக்காடு என்ற ஊரில் பிறந்து வளர்ந்த இரவிச்சந்திரன் வெளிநாட்டில் வாழ்ந்தாலும்
தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை வெட்டிக்காடு நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.
இந்த ஊரின் இயற்கைச்சூழல், பள்ளிப்படிப்பு, ஆசிரியர்கள், விவசாயம், திருவிழாக்கள்,
பொழுதுபோக்குகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். கிராமப்புறத்து மக்களின் பண்பாடுகள்
இந்த நூலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் கிராமங்களால் அமைந்தது. எனவே தமிழகப்
பண்பாட்டு வரலாற்றை முழுமையாக அறிய கிராமப்புறத்து வரலாற்றை அறிய வேண்டும். மேல்தட்டு
வரலாற்றைதான் இதுவரை இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அடித்தட்டு மக்களின் வரலாற்றைப்
பதிவு செய்துள்ள இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று பேசினார்.
நூல்வெளியீட்டு விழா- மேடையில்
2 கருத்துகள்:
இதே நாளில் புதுக்கோட்டையில் நடைபெற்ற கணினிப்பயிற்சி முகாமில் விக்கிபீடியாவில் என் அனுபவம் பற்றி பேசச் சென்றிருந்ததால் இவ்விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை. கலந்துகொள்ளாத குறையை தங்கள் பதிவு நீக்கிவிட்டது. விழாப்பகிர்வுக்கு நன்றி.
அருமையான நிகழ்வுஐயா
கருத்துரையிடுக