தி.மாயாண்டி அவர்கள் கல்லூரியின் தாளாளர் திரு. வீரப்பன் அவர்களிடம் சுவடிகளை ஒப்படைத்தல். அருகில் பேராசிரியர்கள் தெ.முருகசாமி, மு.இளங்கோவன், சு. புவனேசுவரி
எனக்கென அமைந்த பல்வேறு பணிச்சுமைகளால் பேராசிரியர் வையை கோ.
வீரக்குமரன் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குப் பலவாண்டுகள் ஆயின.
ஒருமுறை அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது தம் குடும்பத்தினர் பல்வேறு ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து வைத்துள்ளதாகவும்
அவற்றுள் என்ன இருக்கின்றன?
என்று ஆராய்ந்து பார்த்து உரைக்கும்படியும் ஓர்
அன்பு வேண்டுகோள் வைத்தார்.
நான் புதுச்சேரியிலும், அவர் கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும், ஓலைச்சுவடிகள் மதுரைக்கு அருகில் உள்ள முத்துசாமிப்பட்டி என்னும் சிற்றூரிலும் இருந்ததால் சந்திப்புக்குப் பலமுறை நாள்
குறித்தும் அனைத்தும் பொய்த்தன. இந்தமுறை ஓலைச்சுவடிகளை என் கையில்
சேர்த்துவிடுவது என்று பேராசிரியர் கோ. வீரக்குமரன் திட்டமொன்றைத்
தீட்டினார். நான் காரைக்குடி செல்லும் பயணத்தை அறிந்த பேராசிரியர்,
அவர் உறவினர் தி.மாயாண்டி வழியாக ஓலைச்சுவடியை
எனக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தார்.
இணையத் தமிழ்ப் பயிலரங்கில் கலந்துகொள்ள
நான் காரைக்குடி செல்வது உறுதியானது. முனைவர் வீரக்குமரன் இதனை உறுதிப்படுத்திக்கொண்டு
என் கையில் ஓலைச்சுவடியைச் சேர்க்கும் திட்டத்தில் கவனமாக இருந்தார். குறித்த நாளில் குறித்த நேரத்தில் தி. மாயாண்டி அவர்கள்
ஒரு கைப்பெட்டியில் ஓலைச்சுவடிகளைச் சுமந்துகொண்டு நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்துசேர்ந்தார்.
தி. மாயாண்டி அவர்கள் நான்
திருச்சியில் பயின்றபொழுது அறிமுகம் ஆனவர். அவர்தம் அச்சகத்தில்,
“கங்கைகொண்டசோழபுரத்து இறைவன்மேல் கருவூர்த்தேவர் பாடிய பாடல்கள்” என்ற சிறு நூலினை அப்பொழுது அச்சடித்துள்ளேன் (1995). பழகுதற்கு இனிய பண்பாளரான தி.
மாயாண்டியுடன் சிறிது நேரம் குடும்பம், உறவு, தொழில் குறித்து
அளவளாவினேன். ஓலைச்சுவடியை ஒப்படைத்து உடனடியாக ஊர் திரும்பவேண்டிய
கட்டாயத்தில் தி. மாயாண்டி அவர்கள் இருந்தார். இந்த அரிய ஓலைச்சுவடிகளை
விடுதியில் வைத்துப் பெற்றுக்கொள்வதிலும் அருமையும் பெருமையும் வாய்ந்த காரைக்குடி
இராமசாமி தமிழ்க் கல்லூரியில் மாணவர்கள் பேராசிரியர்கள் முன்னிலையில் பெற்றுக்கொள்வது
சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். அருகிலிருந்த பேராசிரியர் தெ.முருகசாமி அவர்களும் இதனை ஒப்பினார்கள்.
விடுதியிலிருந்து மகிழ்வுந்தில் கல்லூரிக்குப்
புறப்பட்டோம். இராமசாமி தமிழ்க்கல்லூரியின் அரங்கில் மாணவர்கள் இணையத்தமிழ்
அறிய குழுமியிருந்தனர். கல்லூரியின் தாளாளர் பெ. வீரப்பன், கல்லூரியின் முதல்வர் சு. புவனேசுவரி, பேராசிரியர் தெ. முருகசாமி அருகிருக்க மாணவர்கள்
முன்னிலையில் அந்தச் சுவடிகளைப் பெற்றுக்கொண்டோம். தி.மாயாண்டிக்கு நன்றியுடன் ஆடைபோர்த்தி அழகுபார்த்தோம். தி. மாயாண்டி அவர்களும் சிறிது
நேரத்தில் எங்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
பயிலரங்கப் பணிகளை முடித்துக்கொண்டு
இரவு தொடர்வண்டியில் கண்விழித்து
அந்தப் பெட்டியைப் பாதுகாப்பாகக் கொண்டுவர வேண்டியிருந்தது. பெட்டி வனப்பாக இருந்ததால்
யாரேனும் கள்வர்கள் கைப்பொருள் நினைந்து கவர்ந்து, சென்றுவிட்டால் அண்ணனுக்கு யார்
விடை சொல்வது? அல்லது தேர்தல் நேரமாக இருப்பதால் தேர்தல் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில்
இதனைக் குடைந்து பார்த்தால் அவர்களுக்கு எவ்வாறு மறுமொழி தருவது? என்று கவலையுற்றபடி,
அந்தச் சுவடிகள் தாங்கிய பெட்டியைப் பெருமிதத்துடன் புதுச்சேரிக்குக்
கொண்டுவந்தேன்.
ஓலைச்சுவடிகள் அடங்கிய அந்தப் பேழையைத்
திறந்து பார்த்தபொழுது சுவடிகள் சிறு சிறு கட்டாக இருந்தன. சில சுவடிகள் படிக்கும்
நிலையில் இருந்தன. சில சுவடிகள் படிக்க இயலாத வகையில் எழுத்துகள்
சிதைந்தும், சுவடிகள் சிதைந்தும் காணப்பட்டன. கையுறைப் பொருத்திக்கொண்டு, நுண்ணாடியின்
துணையுடன் பருந்துப்பார்வையாகச் சுவடிகளின் உள்ளடக்கத்தைப் பார்வையிட்டேன்.
நீதி நூல்களும், மருந்து நூல்களுமாக இருந்த சிலவற்றை
இனங்கண்டேன். மாட்டு மருத்துவம் பற்றி ஒரு சுவடிக்கட்டு இருந்தது. பாம்புக்கடி
மற்ற நச்சுக்கடிக்கு உரிய மருந்துகளைப் பற்றி சில சுவடிகளில் செய்திகள் இருந்தன. கணக்கு
வழக்கினைக் குறித்த செய்திகள் ஒரு சுவடியில் இருந்தன. மின்னொளியாள் குறம் என்ற ஒரு சுவடிக்கட்டு
இருந்தது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உள்ளிட்ட நீதிநூல்கள் அடங்கிய ஒரு சுவடியும் இருந்தது.
நீதி நூல் சுவடி மூலமும் உரையுமாக இருந்தது. இவற்றைத் தூய்மை செய்து, படி எடுத்தும்,
மின்படிமம் செய்தும் ஓய்வில் பாதுகாப்பேன்.
கடந்த இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் என்னை
இனங்கண்டு, தமிழ்நெறியில் ஆற்றுப்படுத்தி, என் வளர்ச்சியின் ஒவ்வொரு முனையிலும் ஊக்கப்படுத்திவரும்
அண்ணன் வையை கோ. வீரக்குமரன் அவர்கள் ஓலைச்சுவடியை மனம் உவந்து வழங்க முன்வந்தமைக்கும்,
ஊரிலிருந்து ஓலைச்சுவடிகளைக் கொண்டுவந்து கைவயம் தந்து உதவிய இனிய நண்பர் திரு. தி.
மாயாண்டி அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
தி. மாயாண்டி அவர்களுக்கு பெ. வீரப்பன் அவர்கள் ஆடை அணிவித்தல்
விரியன் கடிக்கு உரிய மருந்து
கொன்றைவேந்தன்
சாராயம், முறிவுக்கு மருந்து
கொன்றைவேந்தன்
உலகநீதி
1 கருத்து:
அதிகமான பணிகளுக்கிடையே அருமையான மற்றொரு பணியில் ஈடுபட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.
கருத்துரையிடுக