நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 29 பிப்ரவரி, 2016

பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடு: ஒரு புதிய நோக்கு - அணிந்துரை




தமிழரின் தொன்மை காட்டும் ஆவணம்!


“பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி” – புறப்பொருள் வெண்பா மாலை

புறப்பொருள் வெண்பாமாலை எனும் இலக்கண நூலில் இடம்பெறும் மேற்கண்ட வெண்பாவை இளமையில் படித்து மனப்பாடமாக மனத்துள் தேக்கியிருந்தாலும் இந்தப் பாடலடிகள், உண்மை உணர்ந்து எழுதப்பட்ட தமிழகச் சான்று ஆவணம் என்பதை அண்மைக் காலமாகத்தான் யான் உணர்ந்தேன்.

பல்லாயிரம் ஆண்டு இலக்கணப் பின்புலமும், இலக்கிய வளமும் கொண்டு, வாழும் மொழியாக வையகத்தில் விளங்கும்மொழி தமிழ்மொழியாகும். இம்மொழி பேசும் மக்கள் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிக வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் துணிகின்றனர், கடல்கொண்ட குமரிக்கண்டம் பற்றியும், சிந்து சமவெளி நாகரிகம் பற்றியும் நாம் உரைக்கும் உரைகளை உலகத்தினர் உற்றுக் கவனித்தாலும் உண்மையை ஒத்துக்கொள்ளத் தயங்குகின்றனர். அண்மைக்காலமாகத் தமிழகத்தில் நடந்துள்ள அகழாய்வுகளும், கிடைத்துள்ள சான்றுகளும் நம் எண்ணங்களை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பிக்க உதவுவன. இவ்வகையில் புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா. இராசன் அவர்களின் ஆய்வுமுயற்சி தனித்துச் சுட்டத்தக்கதாகும். இவரின் ‘பொருந்தல்’ ஆய்வு அரிய முடிவுகள் பலவற்றைத் தர உள்ளன.

அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் ஆய்வுமுடிவுகளும் செம்பியன் கண்டியூர், பொருந்தல்,  கீழடி பள்ளிச்சந்தை புதூர்(சிவகங்கை மாவட்டம்) முதலான ஊர்களில் கிடைத்துள்ள அண்மையச் சான்றுகளும் தமிழர்களின் தொன்மை வரலாற்றை மிகச் சிறப்பாக மெய்ப்பிக்க உதவுவனவாகும்.

உலக நாகரிக இனங்களுள் முந்திய நாகரிக இனம் தமிழினம் என்பதை நிலைப்படுத்த சான்றுகள் முன்பே கிடைத்துள்ளன. எனினும் தமிழர்களிடம் விழிப்பின்மையாலும், வீறு இன்மையாலும், அளவுக்கு மீறிய தன்னடக்கத்தாலும் உலகத்திற்கு நம் சிறப்புகளை இன்னும் தெரியப்படுத்தாமல் உள்ளோம்.

பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் இடம்பெறும் நகர அமைப்புகள், வணிகவளம், மக்கள் வாழ்க்கைமுறை இவற்றை அறியும்பொழுது பூம்புகாரில் வாழ்ந்த தொன்மைமக்கள் பற்றி ஓரளவு கணிக்க முடிகின்றது. அண்மையில் நடந்த பூம்புகார் கடலாய்வுகள் சில உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டினாலும் முழு உண்மையையும் வெளிப்படுத்த இயலாதவர்களாகப் பல தலைமுறைகளைக் கழித்துள்ளோம் என்பது மட்டும் உறுதி. நம் வரலாற்றை மெய்ப்பிக்கும் சான்றாவணங்கள் பலவும் இன்னும் வெளிக்கொணரப் படாமலும், வரலாற்று ஆய்வில் போதிய ஆர்வம் இல்லாமலும் நம் மக்கள் உள்ளனரே என்று கையற்ற நிலையில் கவலையொடு இருந்தபொழுதுதான்  பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் எழுத்தாவணம் கண்டு இறும்பூது எய்தினேன்.


பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடுஒரு புதிய நோக்கு என்ற அரிய நூலினைப் படிக்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. தமிழ்ப்புலமை மிக்க பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் மொழிப்பற்றுடனும், இனப்பற்றுடனும் நாட்டுப்பற்றுடனும் இந்த நூலை இயற்றியுள்ளார். பண்டைத் தமிழர் பண்பாடு குறித்துப் பல நூல்கள் வெளிவந்திருப்பினும் இந்த நூல் பலவகைச் சிறப்புகளைக் கொண்டு வெளிவந்துள்ளது. இலக்கணம், இலக்கியம், தொல்லியல், அகழாய்வு, வரலாற்றுத்துறை சார்ந்த பல நூல்களைக் கற்றுப் பேராசிரியர் அவர்கள் இந்த நூலைத் தமிழுலகிற்கு வழங்கியுள்ளார். இவர்தம் இத்தகு பணிக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

உலகில் தோன்றிய முதல்மாந்தன் தமிழன் எனவும் அவன் தோன்றிய இடம் கடலுள் மறைந்த குமரிக்கண்டம் எனவும் குமரிக்கண்ட மாந்தன் பேசிய தமிழ்மொழியே உலகில் தோன்றிய முதல் மொழி எனவும் மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் ஒப்பியன் மொழிநூல் உள்ளிட்ட தம் நூல்களில் குறிப்பிடுவார். தமிழர்களின் தோற்றப் பரவல் குறித்தும், தமிழ்மொழி குறித்தும்,  பாவாணர் மொழிந்த கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு, தென்திசையிலிருந்து தமிழக வரலாற்றைத் தொடங்கி எழுதுவதற்குத் தனித்த நெஞ்சுரமும், வாலறிவும் தேவை. பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களிடம் இவற்றைக் கண்டு வியந்தேன். தெற்கிலிருந்து வரலாறு தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற கூற்று முன்னேற்றமடைந்து தென்திசையில் பிறந்த பேராசிரியரே தெற்கிலிருந்து வரலாற்றைத் தொடங்கி எழுதி வெற்றிபெற்றுள்ளார் என்று குறிப்பிட விரும்புகின்றேன்.

தமிழ்மொழியின் தொன்மையை ஆராய்ந்து விளக்கியுள்ளமையும், பண்டைத் தமிழகத்தில் நடந்த ஆழிப்பேரலை அழிவுகளைத் தக்க சான்றுகளுடன் நிறுவிக் காட்டியுள்ளமையும் பாராட்டிற்குரிய முயற்சிகளாகும். மறைந்துபோன குமரிக்கண்ட வரலாற்றை உலக மாந்தப்பரவலுடன் இணைத்துக் காட்டுவதற்கு நூலாசிரியர் எடுத்து அடுக்கும் சான்றுகள் இவரின் பன்னூல் பயிற்சியையும், தமிழ்ப்பற்றையும் காட்டுகின்றன. முச்சங்க வரலாறு பற்றியும் இந்த நூலில் செய்திகள் விரிவாக இடம்பெற்றுள்ளன.

முகைந்த தரை(மொகஞ்சதாரோ), அரப்பா நாகரிகம் பற்றி விளக்கும்பொழுது உலக நாகரிகங்களை எடுத்துக்காட்டி விரிவாக விளக்குவது நூலாசிரியரின் வரலாற்று அறிவை நமக்கு வெளிப்படுத்துகின்றது.

பண்டைத் தமிழர்கள் பற்றி விளக்கும்பொழுது தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூலில் உள்ள அரிய செய்திகளை நினைவுகூர்ந்து எழுதியுள்ளமை இந்நூலில் இவருக்கு இருக்கும் புலமையுரைப்பனவாகும். புறநானூறு உள்ளிட்ட நூல்களில் உள்ள அரிய வரலாறு விளக்கும் வரிகளையெல்லாம் பொருத்தமுற எடுத்துக்காட்டிக் கற்பார் உள்ளத்தில் களிப்பை ஏற்படுத்தியுள்ளார். வரலாற்றுச் செய்திகளை மட்டும் குறிப்பிடாமல் இலக்கியச் சுவையுணர்த்தும் வரிகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளதால், நூலைக் கற்ற பிறகு தமிழ் இலக்கியச் சுவையுணர்ந்தவர்களாக மாற வாய்ப்பு உள்ளது.

தமிழ் எழுத்துகள் பற்றி விரிவான ஆய்வினை இந்த நூலில் நூலாசிரியர் நிகழ்த்தியுள்ளார். சிந்து சமவெளி எழுத்துகளையும், பிற பாறை ஓவிய எழுத்துகளையும், நாணயங்களில், கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளையும் சான்றுகளாகக் கொண்டு தமிழ் எழுத்து வரலாற்றை நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். “தமிழகத்தில் பிராமி எழுத்துக்கள் அறிமுகம் செய்யப்படும் முன்னரே தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்கள் பற்றி ஆராய்ந்து இலக்கணம் வகுத்துக் கூறினார்” என்று பேராசிரியர் இ. பாலசுந்தரனார் குறிப்பிட்டுள்ளமை அவரின் தமிழ்ப்பற்றிற்கும் தமிழுள்ளத்திற்கும் சான்றாக நிற்கும் இடமாக நான் கருதுகின்றேன்.

பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் பண்டைத் தமிழகம் பற்றிக் குறிப்பிடும்பொழுதெல்லாம் ஈழத்தையும் இணைத்துப் பேசியுள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். தமிழகத்து மக்கள் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முதன்மைமிக்க ஊர்களையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் அறிவார்களேயன்றி இலங்கையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை அறிய வாய்ப்பில்லாமல் இருந்தனர்; இந்த நூலில்தான் இலங்கையில் உள்ள சில வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பழைய ஊர்கள் எடுத்துக்காட்டி விளக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வடபகுதி நாகதீபம், தென்பகுதி தாமிரபரணி(தம்பண்ணை-பாலிமொழி) என்ற குறிப்பும், மாந்தை(மன்னார் மாவட்டம்), பொன்பரிப்பு(புத்தளம் மாவட்டம்) ஊர் குறித்த செய்திகள் வரலாற்று ஆர்வலர்களுக்குப் பெரும்பயன் நல்குவனவாகும்.

தமிழர்களின் இசையறிவு, சிற்ப அறிவு, கலையறிவு இவற்றைச் சிறப்பாக விளக்கியுள்ளதுடன் தமிழர்களிடம் இருந்த இறையுணர்வு குறித்தும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். இந்த நூலில் ஈழத்து அறிஞர் விபுலாநந்தர் பாபிலோனியர்கள், சுமேரியர்கள் குறித்து எழுதியுள்ள கருத்துகள் பொன்னேபோல் எடுத்தாளப்பட்டுள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.

பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் பண்டைத் தமிழகத்தின் சிறப்பினை இலக்கியச் சான்றுகள், இலக்கணச் சான்றுகள், தொல்லியல், அகழாய்வுச்சான்றுகளின் துணைகொண்டு மிகச் சிறப்பாக இந்த நூலில் வரைந்துகாட்டியுள்ளார். பன்னூற் புலமையும், பயிற்சியும், வரலாற்று ஈடுபாடும் உள்ள பெருமக்களால்தான் இத்தகு முயற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற இயலும். ஈராசு பாதிரியார் தொடங்கி இற்றைப் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அஸ்கோ பர்போலா வரை உள்ள அறிஞர்களின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு இந்த நூலைத் தமிழர்களின் விடியலுக்காக எழுதியுள்ள பேராசிரியர் அவர்களின் தமிழ்த்தொண்டினை நெஞ்சாரப் போற்றக் கடமைப்பட்டுள்ளேன்.


பேராசிரியர் அவர்களுக்கு நிறைவாழ்வும். நல்உடல் வளமும் வாய்க்க உளமார வாழ்த்துகின்றேன். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களுக்குத் தமிழன்னை அனைத்து நலன்களையும் வழங்கி மகிழ்வாளாக!

நூல் கிடைக்குமிடம்: மணிமேகலைப் பிரசுரம், சென்னை - 17

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்



விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 27.02.2016 காரி(சனி)க் கிழமை நடைபெற்ற இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள் என்னும் தலைப்பில் அமைந்த மாநில அளவிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள் என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. கல்லூரியின் தாளார் உயர்திரு ஏ. சாமிக்கண்ணு அவர்களும், கல்லூரி இயக்குநர் பேராசிரியர் கஸ்தூரிபாய் தனசேகரன் அவர்களும் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மு. மங்கையர்க்கரசி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

என் உரையை முழுவதும் செவிமடுத்த கல்லூரித் தாளாளர் அவர்கள் ஒரு விருப்பம் தெரிவித்தார். நான் மீண்டும் ஒருமுறை அவர்களின் கல்லூரிக்கு வந்து தமிழக நாட்டுப்புறப் பாடல்களைக் கல்லூரி மாணவிகள் அனைவரும் கேட்கும் வகையில் உரையாற்ற வேண்டும் என்பதே அந்த விருப்பம். சற்றொப்ப மூவாயிரம் மாணவிகள் பயிலும் கல்லூரியைப் போற்றிப் புரக்கும் தமிழ்ப்பற்று நிறைந்த கல்லூரியின் தாளாளர் திரு. ஏ. சாமிக்கண்ணு அவர்கள்  இந்நாடு முன்னேற தாய்மொழிவழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆற்றிய உரையைக் கேட்டு நான் வியந்தேன். தமிழ் உணர்வு தழைத்த தாளாளர் அவர்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது.


வாய்ப்பு நல்கிய விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியினருக்கு நன்றி.





ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

“செவிச்செல்வர்” கரந்தை கோ. தாமோதரன்…

கரந்தை கோ. தாமோதரன்
              
இசைமேதை வீ. . கா. சுந்தரம் அவர்களின் வாழ்வியலைத் தெரிந்துகொள்ள பல நூல்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்பொழுது செல்பேசி அழைப்புமணி ஒலித்தது; செவிமடுத்தேன். மறுமுனையில், கரந்தை தாமோதரன் பேசுகின்றேன். புதுவையில் ஓர் அன்பர் இல்லத்திற்கு வந்துள்ளேன். என்னைச் சந்திக்க வர இயலுமாஎன்று அன்புவேண்டுகோள் வைத்தார். அடுத்த பத்து நிமையத்தில் கரந்தை தாமோதரனார் தங்கியிருந்த இல்லத்தில் இருந்தேன்.

கரந்தை கோ. தாமோதரன் அவர்கள் என் மேலதிகாரியோ, எனக்குப் பணி வாய்ப்பை, பதவி உயர்வை உருவாக்கித் தரும் முகவரோ இல்லை. இருப்பினும் அவர் முன் நான் நின்றதற்குக் காரணம் அவரிடம் இருந்த இசையறிவும், நாலாயிரப் பனுவலில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அளவுக்கு அவர் பெற்றிருந்த புலமையும், உடனுக்குடன் பாவியற்றிப் பாடும் பெரும் ஆற்றலும் ஆகும். எங்களின் சந்திப்பு சற்றொப்ப நான்கரை மணிநேரம் நீண்டது. தம் ஐம்பதாண்டு கால இசை வாழ்க்கையை மனம் திறந்து பேசினார்.

தமிழகத்து இசைமேதைகள் பலரின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். பாடகர்கள் டி.எம். சௌந்தரராசன், சீர்காழி கோவிந்தராசன், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டவர்களுடன் தமக்கு ஏற்பட்ட பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார். தாம் கற்றுக்கொண்ட ஒவ்வொரு பாடல் பற்றியும், பாடிய ஒவ்வொரு பாடல் பற்றியும் சுவைபட எடுத்துரைத்தார். அரிய இராகங்கள் பலவற்றை எடுத்துரைத்துப் பொருத்தமான பாடல்களைப் பாடிக்காட்டினார். ஆழ்வார் பாசுரங்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்ல, தாம் மேற்கொண்ட இசைநுட்பங்களை எடுத்துக்கூறினார்.

ஆழ்வார் பாசுரங்களைப் பொருளுணர்ந்து பாடிக்காட்டிய இப்பெருமகனாரின்  குரலெனும் இசையருவியில் நனைந்தமை வாழ்வில் என்றும் நினைக்கத்தகுந்த பொழுதுகளாகும். இவர்தம் பாடல்களை இணையவெளியில் வெளியிட்டுக்கொள்ள எனக்கு இசைவு வழங்கினார்கள் (விரைந்து கரந்தை கோ.தாமோதரனார் குரலில் ஆழ்வார் பாசுரங்கள் பலவற்றைக் கேட்டு மகிழலாம்).

"உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே "

எனவும்

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!

எனவும்

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதுஇல் இன்கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தார் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.

எனவும் வரும் பாசுரப் பாடல்களைக் கரந்தை கோ. தாமோதரன் குரலில் கேட்டோம்; காதுகள் குளிர்ந்ததன.

இசையறிஞர் கரந்தை கோ. தாமோதரன் அவர்களைப் பலவாண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஓர் இலக்கிய நிகழ்வில் கண்டுள்ளேன். பெருங்குரலெடுத்து அவர் பாடியபொழுது அரங்கம் அடங்கிக் கிடந்தது. அவரின் மாலியக் கோலமும், மனத்தைப் புத்துணர்வு ஏற்படுத்திப் பொலிவுறச் செய்யும் அவர் பாடும் ஆழ்வார்தம் பாசுரங்களும் கேட்டார்க்கு அல்லால் அவரின் அருமை புலனாகாது.

கரந்தை கோ. தாமோதரன் அவர்கள் காஞ்சிபுரத்தை அடுத்த கரந்தை என்ற சிற்றூரில் உழவர் குடும்பத்தில் பிறந்தவர் (05.03.1944). இவர்தம் பெற்றோரின் பெயர் திருவாளர்கள் க. கோவிந்தப் பிள்ளை, கோ. மாணிக்கத்தம்மாள் ஆகும். குடும்பச் சூழலால் நான்காம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்டு, வெள்ளாடு மேய்ப்பதில் வாழ்க்கையைத் தொடங்கியவர்.

நான்காம் வகுப்பில் படித்தபொழுது இவருக்கு ஆசிரியராக வாய்த்த ஐயாதுரை நயினார் அவர்கள், தாமோதரனார் அவர்களின் நெற்றியில் அணிந்து வந்த திருச்சூர்ணம் கண்டு, பாசுரம் பாடத்தெரியுமா? என்று கேட்டார்கள். இல்லை என்று உரைத்தவுடன், “பச்சைமா மலைபோல் மேனி”  எனத் தொடங்கும் பாடலைப் பாடிக்காட்டி, நாலாயிரப் பனுவலின் பக்கம் இவரை ஆற்றுப்படுத்தினார்.

முன்பெல்லாம்  ஊர்ப் பொதுவிடங்களில் வானொலிகள் ஒலிப்பது வழக்கம்.  குறிப்பிட்ட நேரங்களில் ஒலிபரப்பாகும் செய்திகளையும், பாடல்களையும் ஊர் மக்கள் கேட்டு மகிழ்வர். அவ்வாறு பொதுவிடத்தில் ஒலிபரப்பாகும் வானொலியின் வழியே திரைப்பாடல்களைக் கேட்டு, அதன் இனிமை குறையாமல் உடன் பாடும் ஆற்றலைக் கரந்தை தாமோதரன் பெற்றவர். டி.எம். சௌந்தரராசன், பி.சுசிலா, சீர்காழி கோவிந்தராசன் உள்ளிட்டவர்களின் பாடல்களைக் கேட்டுக் கேட்டு, இசையார்வத்தைப் பெருக்கிக்கொண்டவர்.

கணபதி பாகவதர் என்பவரின் அறிவுரையின்படி இரவு வேளைகளில் ஆழ்வார் பாசுரங்கள் மனப்பாடம் ஆயின. ஈராயித்திற்கும் மேற்பட்ட பாசுரங்களைக் கற்று, மனப்பாடமாக வைத்திருந்த கரந்தை கோ. தாமோதரன் அவர்கள்  திருப்பெரும்புதூரில் நடைபெற்ற இராமானுசர் சாற்றுமுறை விழா உள்ளிட்ட இடங்களில் பாடுவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றார். பாசுரங்களைப் பாடிப் பரப்பும் பசனைக் குழுக்களில் பாடியதால் இவரின் குரலும், புகழும் சிறந்தன.

நாதசுவர வித்துவான் திருவாளர் கணேசன் அவர்கள் கரந்தை கோ. தாமோதரனின் இசையார்வத்தைக் கண்டு பல்வேறு இராகங்களை இவருக்குப் பயிற்றுவித்தார். தொடர்ந்த பயிற்சியும், டி.எம். சௌந்தரராசன், சீர்காழி கோவிந்தராசன், கவியரசு கண்ணதாசன் போன்றவர்களின் தொடர்பும் கரந்தை கோ. தாமோதரன் அவர்களுக்கு மிகப்பெரும் ஊக்கத்தைத் தந்தது. திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், சமய அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் இவர்தம் இசைக்கு மயங்கியுள்ளனர். திருக்குறளார் வீ.முனுசாமி, மக்கள் தலைவர் திரு. மூப்பனார் அவர்களும், திரு. ஜி.கே. வாசன் அவர்களும் கரந்தை தாமோதரன் அவர்களின் இசைக்கு மதிப்பளித்துப் போற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்தம் பாசுரப் பாடல்களைக் கேட்டவர்கள், மேடைகளில் பாடுவதற்குரிய வகையில் பல வாய்ப்புகளை வழங்கினர். விருதுகளையும், பட்டங்களையும் தந்து மகிழ்ந்தனர். அந்த வகையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.

அவற்றுள் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் வழங்கிய வைணவமணி (1979), கவியரசர் கண்ணதாசன் வழங்கிய பிரபந்த மணி (1979), மகாவித்துவான் வேணுகோபாலப் பிள்ளை வழங்கிய அருட்கவிச் செல்வர் (1983), சீர்காழி கோவிந்தராசன் வழங்கிய தமிழிசைத் தென்றல் (1984), சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் வழங்கிய பண்ணிசைப் பாவாணர் (1985) தமிழக அரசின் கலைமாமணி (2003) உள்ளிட்ட விருதுகள் குறிப்பிடத் தக்கனவாகும்.

கரந்தை கோ. தாமோதரன் அவர்களின் வளர்ச்சிக்கு அவரிடம் நிறைந்து காணப்படும் நன்றியுணர்வே அடிப்படைக் காரணமாகும். தாம் நேசித்த பாடகர் டி.எம் சௌந்தரராசன், கவியரசு கண்ணதாசன் என்னும் இரு பெருமக்களின் பெயரினைத் தம் பிள்ளைகளின் பெயராக வைத்தவர் நம் கரந்தையார்.

கரந்தை கோ. தாமோதரனார் பல்லாயிரம் இசையரங்குகளில் தம் இசைப்பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். வைணவ மாநாடுகளிலும், திருமால் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு விழாக்களிலும், கம்பன் கழக விழாக்களிலும் இவரின் பாடல்கள் சிறப்பாக இடம்பெற்றதுண்டு. பொதிகை தொலைக்காட்சியில் இவரின் நேர்காணல் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஒலிநாடாக்களின் வழியாகத் தம் இசைப்பதிவுகளைக் கிடைக்கச்செய்துள்ளார். அகவை முதிர்ச்சியால் இசையரங்கப் பணிகளை நிறுத்திக்கொள்ள நினைக்கும் இவருக்கு ஒரு வேண்டுகோள்: குறைந்த நேரமாவது இவர் பாசுரங்களைப் பாடி, மக்களுக்கு வழங்க வேண்டும். இவர் பாடிய ஆழ்வார்களின் நாலாயிரப் பனுவல் பாடல்கள் உள்ளவரை இவரின் குரல் நம் உள்ளத்தை உருக்கும்.

கரந்தையார் பாடிய சில ஒலிவட்டுகள்:

1.   திருவாய்மொழியில் திருவேங்கடம்
2.   ஆழ்வார்கள் அமுத கானம்
3.   ஆர்த்திப் பிரபந்தம்
4.   மூன்று ஆழ்வார்கள் முத்தமிழ் கீதம்
5.   வைணவம் காட்டும் சமயமும் சமுதாயமும்

வாழ்க கரந்தை கோ. தாமோதரனார்!.



கரந்தை கோ. தாமோதரனார் அவர்களின் தொடர்புக்கு
0091 94436 20823




புதன், 17 பிப்ரவரி, 2016

தனித்தமிழ் இயக்கம் குறித்த ஈருரைகள்!


  தனித்தமிழ் இயக்கம் குறித்து அண்மையில் அறிஞர்கள் தங்கப்பா, இரா. இளங்குமரனார் ஆகியோர் புதுச்சேரியில் உரையாற்றினர். அவர்கள் ஆற்றிய உரைகளைக் காணொளியாக இணைத்துள்ளேன்.

தாங்கள் கண்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவும் வேண்டுகின்றேன்.

ம.இலெனின் தங்கப்பா


இரா. இளங்குமரனார்


சனி, 13 பிப்ரவரி, 2016

இசை ஆய்வாளர் முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார்…


முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டுக்குச் சென்றிருந்த நேரம் (28.12.2012). அந்த நாளில் மக்கள் அரங்கில் தமிழ் இணையத்தை எளிமையாக மக்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது வந்த அம்மையார் ஒருவர் இணையம் குறித்து சில ஐயங்களை எழுப்பித் தெளிவுபெற்றுக்கொண்டிருந்தார். தம்மை ஓர் இசை ஆய்வாளர் எனவும், தம் கணவர் முனைவர் கிரீஷ்குமார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் புல்லாங்குழல் பயிற்றுவிக்கும்  உதவிப் பேராசிரியர் என்றும் அறிமுகம் செய்துகொண்டார். என் முயற்சிகளை அவ்வப்பொழுது செய்தி ஏடுகளிலும் பொதிகைத் தொலைகாட்சியிலும் பார்த்துள்ளதாகத் தெரிவித்தார். அன்றுமுதல் ஏற்பட்ட நட்பு இன்றுவரை வளர்பிறையாக வளர்ந்து வருகின்றது.

முனைவர் சிவகௌரி அவர்கள் இலங்கையில் திருகோணமலையில் பிறந்தவர். இவர்தம் குடும்பம் இசைக்குடும்பமாகும். பெற்றோர் திருவாளர்கள் சோமாஸ் கந்த சர்மா, சாரதாம்பிகையாவர். இளம் அகவை முதல் இசையில் ஈடுபாட்டுடன் விளங்கிய முனைவர் சிவகௌரி அவர்கள் தொடக்கத்தில் தம் அத்தை சி. சந்திராதேவி அவர்களிடம் தொடக்கநிலை இசையறிவு பெற்றவர். முறைப்படி இசைபயில, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்து,  மூன்றாண்டுகள் இளங்கலை - இசை பயின்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இசை பயின்றவர். அவ்வேளையில் கலைமாமணி சுகுணா புருஷோத்தமன் அவர்களிடம் மேல்நிலை இசைநுணுக்கங்களை அறிந்தவர். மேலும் முனைவர் ந. இராமநாதன், முனைவர் ஆர். எஸ். ஜெயலட்சுமி உள்ளிட்ட இசையறிஞர்களிடமும் இசைநுட்பங்களை அறிந்தவர். இளம் முனைவர், முனைவர் பட்டங்களைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர்.

  திருமுறைகளைப் பாடுவதற்குக் குமாரவயலூர் திரு. பாலச்சந்திர ஓதுவார் அவர்களிடம் தனிப்பயிற்சி பெற்றவர்.

மகாவித்துவான் திரு. வா. சு. கோமதி சங்கர ஐயரின் தமிழிசைப்பணி என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து கோமதி சங்கர ஐயரின் வாழ்வியலையும், தமிழிசைப் பணிகளையும் ஆய்வுலகுக்கு வழங்கியவர். இந்த ஆய்வேடு  கோமதி சங்கர ஐயரின் வாழ்க்கை வரலாறு, கோமதி சங்கர ஐயரின் தமிழிசை ஆய்வுகள், கோமதி சங்கர ஐயர் இயற்றிய இசைத்தமிழ் இலக்கண விளக்கம், கோமதி சங்கர ஐயர் இயற்றிய தமிழிசைப் பாடல்கள், கோமதி சங்கர ஐயர் பிறருடைய பாடல்களை இசையமைத்த முறைகள், கோமதி சங்கர ஐயரின் இசை கற்பிக்கும் முறைகள் என்னும் தலைப்பில் அமைந்து, அரிய செய்திகளின் களஞ்சியமாக விளங்குகின்றது. ஆய்வேட்டின் பின்னிணைப்பில் கோமதி சங்கர ஐயரின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புடைய படங்கள், அவர் இயற்றிய பாடல்கள், அவர் நூல்களில் உள்ள இசைவடிவங்கள், அவரின் வெளிவராத பாடல்கள், அவரின் இசை இலக்கண ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி, இசையாய்வு உலகிற்குப் பெருங்கொடையாக உள்ளது. கோமதி சங்கர ஐயரின் பாடல்கள் ஆய்வாளரால் பாடப்பட்டுக் குறுவட்டாக இணைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

முனைவர் சிவகௌரி அவர்கள் பாடுதுறை வல்லுநர் ஆவார். திருமுறைகளையும் திருப்புகழ்ப் பாடல்களையும் தமிழிசை நுட்பம் வெளிப்படும் வகையில் பாடக்கூடியவர். “இனிமை மிகு இலங்கைத் திருப்பதிகங்கள்” என்ற தலைப்பில் இவர் பாடி வெளியிட்டுள்ள குறுவட்டு, திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டது (2014).

சிதம்பரத்தில் வாழ்ந்துவரும் முனைவர் சிவகௌரி அவர்கள் திருமுறைகளைப் பயிற்றுவிப்பதையும், தமிழிசையைப் பயிற்றுவிப்பதையும் ஆர்வமாகச் செய்துவருகின்றார். அயல்நாட்டு மாணவர்கள் பலர் இணையம் வழியாக இவரிடம் இசையையும், திருமுறைகளையும் பயின்று வருகின்றனர்.

தமிழிசை ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பாடுதுறை வல்லுநர் முனைவர் சிவகௌரி அவர்களைத் தமிழிசை மேடைகளில் பாடச் செய்து, அவர்தம் தமிழிசை ஆய்வுத்திறத்தைப் போற்றலாம்.

 முனைவர் சிவகௌரி அவர்களின் மின்னஞ்சல்: gsivagowri@gmail.com 

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

உலகத் தொல்காப்பிய மன்றம் – புதுச்சேரிக் கிளை, தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு


பேராசிரியர் தெ.முருகசாமி அவர்களின் சிறப்புரை


உலகத் தொல்காப்பிய மன்றம் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு நிகழ்ச்சி புதுச்சேரி, செகா கலைக்கூடத்தில் 08.02.2016 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை முனைவர் . பத்மநாபன் வரவேற்றார். முனைவர் மு.இளங்கோவன் தொடர்ப்பொழிவு குறித்த நோக்கவுரை வழங்கினார்

காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் தெ. முருகசாமி தொல்காப்பியம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொல்காப்பிய நூலின் காலம், அந்த நூலில் இடம்பெற்றுள்ள செய்திகள், தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் படிக்க வேண்டியதன் தேவையைத் தம் சொற்பொழிவில் எடுத்துரைத்தார்

செ.திருவாசகம் நன்றியுரை வழங்கினார். புதுசேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.




ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தின் சிறப்பு நிகழ்வு...



 07.02.2016 ஞாயிறு மாலை 6.30 மணியளவில் புதுச்சேரி, முதலியார்பேட்டையில் உள்ள தொண்டைமண்டல நாணயவியல் கழகத்தின் சிறப்புக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஒருமணிநேரம் உரையாற்றும் வாய்ப்பு  எனக்கு அமைந்தது. சற்றொப்ப பதினைந்து உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அனைவரும் தொல்லியல் ஆய்விலும், தொன்மைப் பொருள்களைச் சேமித்துப் பாதுகாப்பதிலும் வல்லுநர்கள். என் தமிழ்ப்பயணம், ஆய்வுகள், ஆவணப்படுத்தியுள்ள என் முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடினேன். திரு. கோபிராமன் அவர்களும் அவரின் நண்பர்களும் இந்த அரிய வாய்ப்பினை வழங்கினர்.






படங்கள் உதவி: திரு. கந்தன்

புதன், 3 பிப்ரவரி, 2016

உலகத் தொல்காப்பிய மன்றம் – புதுச்சேரிக் கிளை, தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு



அன்புடையீர்! வணக்கம்.


தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு நடைபெற உள்ளது. தாங்கள் முதல் பொழிவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.


நாள்: 08. 02. 2016, திங்கள் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 7.30
இடம்: செகா கலைக்கூடம் (Sega Art Gallery), நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்

நோக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

முன்னிலை: புரவலர் அரங்க. மாரிமுத்து அவர்கள்

சிறப்புரை: முனைவர் தெ. முருகசாமி அவர்கள்,

மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி

நன்றியுரை: திரு. செ. திருவாசகம் அவர்கள்


அனைவரும் வருக!

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்
புதுச்சேரிக் கிளை
............................................................................................................................................................ 
தொடர்புகொள்ள:

முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / திரு செ. திருவாசகம் + 9585509560 /
முனைவர் மு.இளங்கோவன் + 9442029053