கரந்தை கோ. தாமோதரன்
இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்களின்
வாழ்வியலைத் தெரிந்துகொள்ள பல நூல்களைப்
புரட்டிக்கொண்டிருந்தேன்.
அப்பொழுது செல்பேசி அழைப்புமணி ஒலித்தது; செவிமடுத்தேன். மறுமுனையில், கரந்தை தாமோதரன் பேசுகின்றேன்.
புதுவையில் ஓர் அன்பர் இல்லத்திற்கு வந்துள்ளேன். என்னைச் சந்திக்க வர இயலுமா?
என்று அன்புவேண்டுகோள் வைத்தார். அடுத்த
பத்து நிமையத்தில் கரந்தை தாமோதரனார் தங்கியிருந்த இல்லத்தில்
இருந்தேன்.
கரந்தை கோ. தாமோதரன் அவர்கள் என் மேலதிகாரியோ,
எனக்குப் பணி வாய்ப்பை, பதவி உயர்வை உருவாக்கித்
தரும் முகவரோ இல்லை. இருப்பினும் அவர் முன் நான் நின்றதற்குக்
காரணம் அவரிடம் இருந்த இசையறிவும், நாலாயிரப் பனுவலில் ஒப்பாரும்
மிக்காரும் இல்லாத அளவுக்கு அவர் பெற்றிருந்த புலமையும், உடனுக்குடன்
பாவியற்றிப் பாடும் பெரும் ஆற்றலும் ஆகும். எங்களின் சந்திப்பு
சற்றொப்ப நான்கரை மணிநேரம் நீண்டது. தம் ஐம்பதாண்டு கால
இசை வாழ்க்கையை மனம் திறந்து பேசினார்.
தமிழகத்து இசைமேதைகள் பலரின் வாழ்வில்
நடந்த சுவையான நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். பாடகர்கள் டி.எம். சௌந்தரராசன், சீர்காழி கோவிந்தராசன்,
கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டவர்களுடன் தமக்கு ஏற்பட்ட பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
தாம் கற்றுக்கொண்ட ஒவ்வொரு பாடல் பற்றியும், பாடிய
ஒவ்வொரு பாடல் பற்றியும் சுவைபட எடுத்துரைத்தார். அரிய இராகங்கள்
பலவற்றை எடுத்துரைத்துப் பொருத்தமான பாடல்களைப் பாடிக்காட்டினார். ஆழ்வார் பாசுரங்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்ல, தாம் மேற்கொண்ட இசைநுட்பங்களை எடுத்துக்கூறினார்.
ஆழ்வார் பாசுரங்களைப் பொருளுணர்ந்து
பாடிக்காட்டிய இப்பெருமகனாரின் குரலெனும் இசையருவியில் நனைந்தமை
வாழ்வில் என்றும் நினைக்கத்தகுந்த பொழுதுகளாகும். இவர்தம் பாடல்களை
இணையவெளியில் வெளியிட்டுக்கொள்ள எனக்கு இசைவு வழங்கினார்கள் (விரைந்து கரந்தை கோ.தாமோதரனார் குரலில் ஆழ்வார் பாசுரங்கள் பலவற்றைக் கேட்டு மகிழலாம்).
"உயர்வற உயர்நலம்
உடையவன் எவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி
எவனவன்
துயரறு சுடரடி தொழுது எழு என்
மனனே "
எனவும்
ஆரா அமுதே! அடியேன் உடலம்
நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய
வுருக்குகின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும்
செழுநீர்த்
திருக்குடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்
கண்டேன் எம்மானே!
எனவும்
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை
விழுமிய முனிவர் விழுங்கும்
கோதுஇல் இன்கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தார் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை
ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத்
திரு அல்லிக்கேணி கண்டேனே.
எனவும் வரும் பாசுரப் பாடல்களைக் கரந்தை
கோ. தாமோதரன் குரலில் கேட்டோம்; காதுகள் குளிர்ந்ததன.
இசையறிஞர் கரந்தை கோ. தாமோதரன் அவர்களைப் பலவாண்டுகளுக்கு
முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஓர் இலக்கிய நிகழ்வில் கண்டுள்ளேன். பெருங்குரலெடுத்து அவர் பாடியபொழுது அரங்கம் அடங்கிக் கிடந்தது. அவரின் மாலியக் கோலமும், மனத்தைப் புத்துணர்வு ஏற்படுத்திப்
பொலிவுறச் செய்யும் அவர் பாடும் ஆழ்வார்தம் பாசுரங்களும் கேட்டார்க்கு அல்லால் அவரின்
அருமை புலனாகாது.
கரந்தை கோ. தாமோதரன் அவர்கள் காஞ்சிபுரத்தை
அடுத்த கரந்தை என்ற சிற்றூரில் உழவர் குடும்பத்தில் பிறந்தவர் (05.03.1944). இவர்தம் பெற்றோரின்
பெயர் திருவாளர்கள் க. கோவிந்தப் பிள்ளை, கோ. மாணிக்கத்தம்மாள் ஆகும். குடும்பச்
சூழலால் நான்காம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்டு, வெள்ளாடு
மேய்ப்பதில் வாழ்க்கையைத் தொடங்கியவர்.
நான்காம் வகுப்பில் படித்தபொழுது
இவருக்கு ஆசிரியராக வாய்த்த ஐயாதுரை நயினார் அவர்கள், தாமோதரனார் அவர்களின் நெற்றியில்
அணிந்து வந்த திருச்சூர்ணம் கண்டு, பாசுரம் பாடத்தெரியுமா?
என்று கேட்டார்கள். இல்லை என்று உரைத்தவுடன்,
“பச்சைமா மலைபோல் மேனி”
எனத் தொடங்கும் பாடலைப் பாடிக்காட்டி, நாலாயிரப் பனுவலின் பக்கம் இவரை ஆற்றுப்படுத்தினார்.
முன்பெல்லாம் ஊர்ப் பொதுவிடங்களில் வானொலிகள் ஒலிப்பது வழக்கம். குறிப்பிட்ட நேரங்களில் ஒலிபரப்பாகும்
செய்திகளையும், பாடல்களையும் ஊர் மக்கள் கேட்டு மகிழ்வர்.
அவ்வாறு பொதுவிடத்தில் ஒலிபரப்பாகும் வானொலியின் வழியே திரைப்பாடல்களைக்
கேட்டு, அதன் இனிமை குறையாமல் உடன் பாடும் ஆற்றலைக் கரந்தை தாமோதரன்
பெற்றவர். டி.எம். சௌந்தரராசன், பி.சுசிலா,
சீர்காழி கோவிந்தராசன் உள்ளிட்டவர்களின் பாடல்களைக்
கேட்டுக் கேட்டு, இசையார்வத்தைப் பெருக்கிக்கொண்டவர்.
கணபதி பாகவதர் என்பவரின் அறிவுரையின்படி
இரவு வேளைகளில் ஆழ்வார் பாசுரங்கள் மனப்பாடம் ஆயின. ஈராயிரத்திற்கும் மேற்பட்ட
பாசுரங்களைக் கற்று, மனப்பாடமாக வைத்திருந்த கரந்தை கோ.
தாமோதரன் அவர்கள் திருப்பெரும்புதூரில் நடைபெற்ற இராமானுசர் சாற்றுமுறை விழா உள்ளிட்ட இடங்களில்
பாடுவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றார். பாசுரங்களைப் பாடிப் பரப்பும்
பசனைக் குழுக்களில் பாடியதால் இவரின் குரலும், புகழும் சிறந்தன.
நாதசுவர வித்துவான் திருவாளர் கணேசன்
அவர்கள் கரந்தை கோ. தாமோதரனின் இசையார்வத்தைக் கண்டு பல்வேறு இராகங்களை இவருக்குப் பயிற்றுவித்தார்.
தொடர்ந்த பயிற்சியும், டி.எம். சௌந்தரராசன், சீர்காழி கோவிந்தராசன்,
கவியரசு கண்ணதாசன் போன்றவர்களின் தொடர்பும் கரந்தை கோ. தாமோதரன் அவர்களுக்கு மிகப்பெரும் ஊக்கத்தைத் தந்தது. திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், சமய அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் இவர்தம்
இசைக்கு மயங்கியுள்ளனர். திருக்குறளார் வீ.முனுசாமி, மக்கள் தலைவர் திரு. மூப்பனார் அவர்களும், திரு. ஜி.கே. வாசன் அவர்களும் கரந்தை தாமோதரன் அவர்களின் இசைக்கு
மதிப்பளித்துப் போற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்தம்
பாசுரப் பாடல்களைக் கேட்டவர்கள், மேடைகளில் பாடுவதற்குரிய வகையில் பல வாய்ப்புகளை வழங்கினர்.
விருதுகளையும், பட்டங்களையும் தந்து மகிழ்ந்தனர்.
அந்த வகையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பட்டங்களையும் இவர்
பெற்றுள்ளார்.
அவற்றுள் காஞ்சி பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராச்சாரியார் வழங்கிய வைணவமணி (1979),
கவியரசர் கண்ணதாசன் வழங்கிய பிரபந்த மணி (1979), மகாவித்துவான் வேணுகோபாலப் பிள்ளை வழங்கிய அருட்கவிச் செல்வர் (1983),
சீர்காழி கோவிந்தராசன் வழங்கிய தமிழிசைத் தென்றல் (1984), சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்
வழங்கிய பண்ணிசைப் பாவாணர் (1985) தமிழக அரசின் கலைமாமணி (2003)
உள்ளிட்ட விருதுகள் குறிப்பிடத் தக்கனவாகும்.
கரந்தை கோ. தாமோதரன் அவர்களின் வளர்ச்சிக்கு
அவரிடம் நிறைந்து காணப்படும் நன்றியுணர்வே அடிப்படைக் காரணமாகும். தாம் நேசித்த பாடகர் டி.எம் சௌந்தரராசன், கவியரசு கண்ணதாசன் என்னும் இரு பெருமக்களின் பெயரினைத் தம் பிள்ளைகளின் பெயராக
வைத்தவர் நம் கரந்தையார்.
கரந்தை கோ. தாமோதரனார் பல்லாயிரம்
இசையரங்குகளில் தம் இசைப்பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். வைணவ மாநாடுகளிலும்,
திருமால் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு விழாக்களிலும், கம்பன் கழக விழாக்களிலும் இவரின் பாடல்கள் சிறப்பாக இடம்பெற்றதுண்டு.
பொதிகை தொலைக்காட்சியில் இவரின் நேர்காணல் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஒலிநாடாக்களின் வழியாகத் தம் இசைப்பதிவுகளைக்
கிடைக்கச்செய்துள்ளார். அகவை முதிர்ச்சியால் இசையரங்கப் பணிகளை
நிறுத்திக்கொள்ள நினைக்கும் இவருக்கு ஒரு வேண்டுகோள்: குறைந்த நேரமாவது இவர் பாசுரங்களைப் பாடி, மக்களுக்கு வழங்க வேண்டும். இவர் பாடிய ஆழ்வார்களின் நாலாயிரப் பனுவல் பாடல்கள் உள்ளவரை
இவரின் குரல் நம் உள்ளத்தை உருக்கும்.
கரந்தையார்
பாடிய சில ஒலிவட்டுகள்:
1. திருவாய்மொழியில் திருவேங்கடம்
2. ஆழ்வார்கள் அமுத கானம்
3. ஆர்த்திப் பிரபந்தம்
4. மூன்று ஆழ்வார்கள் முத்தமிழ் கீதம்
5. வைணவம் காட்டும் சமயமும் சமுதாயமும்
வாழ்க கரந்தை கோ. தாமோதரனார்!.
கரந்தை கோ. தாமோதரனார் அவர்களின்
தொடர்புக்கு:
0091 94436
20823
1 கருத்து:
காஞ்சிபுரத்தை அடுத்தும் ஒரு
கரந்தை இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன் ஐயா
கரந்தை கோ.தாமோதரன் அவர்களைப் பாராட்டுவோம் போற்றுவோம்
கருத்துரையிடுக