நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 29 நவம்பர், 2015

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களிடம் பெற்ற பரிசில்!


முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்  அவர்களிடம் பரிசு பெறல்(1991) அருகில் முனைவர் எழில்முதல்வன், முனைவர் அரு. மருததுரை

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் மாணவனாக இருந்தபொழுது படிப்பது முதல்பணி; பாட்டு எழுதுவது இரண்டாவது பணி. மரபு வகைகளில் பாட்டு எழுதுவதை என் பேராசிரியர் ம.வே.பசுபதி ஊக்கப்படுத்துவார்கள். கட்டளைக் கலித்துறையில் போகிற போக்கில் எழுதும் பயிற்சி இருந்தது. ஆசிரியம் அவல் தின்பது போல் இனிமையானது. வெண்பா திருமண நாளில் பட்டுவேட்டி உடுத்துவது போல் அரிதாக இருக்கும். வெண்கலிப்பா, கலிவெண்பா யாவும் கைவந்த வடிவங்கள்.

பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு(1991) விழாவையொட்டி மரபுப்பாடல் எழுதும் போட்டியைப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்தது. பாவேந்தர் இன்றிருந்தால்… என்ற தலைப்பில் பாடல் புனைந்து அனுப்பியிருந்தேன் (1991). தமிழகத்தின் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் ஆர்வமாகக் கலந்துகொண்டனர். என் பாட்டினை முதல் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுத்துப், பரிசில் 500 உருவா தருவதாக அறிவித்திருந்தனர்.

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு வழி வினவிக்கொண்டு ஒரு சிற்றூர் மாணவனாக,. விழா நடைபெறும் நேரத்திற்குச் சென்று சேர்ந்தேன். பல்கலைக்கழகத்தின் குளிர்மை அரங்கில் நுழைந்தபொழுது ‘குடைகண்டு மிரளும் கோடாங்கிக் காளையாக’ இருந்தேன். பின்னாளில் அப் பல்கலைக்கழகம் என்னை வரவேற்று ஆய்வாளனாக மாற்றும் என்று அப்பொழுது நினைக்கவில்லை.


என் பேராசிரியர் முனைவர் எழில்முதல்வன் அவர்கள் என் பெயரை ஒலித்தபொழுது, அரங்கம் மெதுவாகக் கையொலி எழுப்பி வாழ்த்துரைத்தது. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் திருக்கையால் பரிசிலையும் சான்றிதழையும் பெற்றுக் கொண்டேன். பழைய நினைவுகளை மேலே உள்ள படம் அசைபோட வைத்தது. பாவேந்தரின் திருமகனார் தமிழ்மாமணி மன்னர் மன்னன் ஐயா அந்த நிகழ்வில் சிறப்புரையாற்றினார். அவர்தம் திருவுருவம் பாவேந்தரை ஒத்திருப்பது கண்டு, அவையினரும் நானும் வியந்து பார்த்த பொழுதுகள் இப்பொழுதும் நினைவில் உள்ளன. 

சனி, 28 நவம்பர், 2015

இசைக்கொண்டல் நெல்லை ஆ.சுப்பிரமணியன்



நெல்லை ஆ.சுப்பிரமணியன்

ஏழுவண்ணக் கொடி பறக்குது - அதில் 
எங்கள் எண்ணம் குடியிருக்குது

என்ற பாடல் வரிகள் திருச்சிராப்பள்ளி வானொலியைத் தொடர்ந்து கேட்பவர்களுக்கு நினைவுக்கு வரும். கூட்டுறவுச் சங்கத்தின் பெருமையை விளக்கும் வகையில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் எழுதி(1976), நெல்லை ஆ. சுப்பிரமணியன் அவர்கள் இசையமைத்த மேற்கண்ட பாடல் வரிகள் படித்தவர்களையும் படிக்காதவர்களையும் ஈர்க்கும் தன்மையுடையன. இந்தப் பாடலுக்கு இசையமைத்த நெல்லை ஆசுப்பிரமணியன் அவர்கள் புதுச்சேரியில் தம் மகள் வீட்டில் இருப்பதாகவும், சென்று சந்திக்கும்படியும் திருச்சிராப்பள்ளிப் பொறியாளர் செ. அசோகன் ஐயா அன்பு வேண்டுகோள் விடுத்தார். எனக்கு இருந்த அலுவல் அழுத்தங்களில் இந்தச் செய்தியைப் பலநாள் மறந்திருந்தேன்.

இன்று (27.11.2015) அலுவலகப் பணி முடித்து இல்லம் திரும்புவதற்கு வெளியே வந்தபொழுது, நெல்லையார் நினைவு வந்தது. சந்திக்க விரும்பும் என் விருப்பத்தைச் சொல்லி ஐயாவிடம் இசைவு பெற்றேன். புதுச்சேரியின் எல்லைப் பகுதியில் புதியதாக உருவாகும் நகருக்கு வரச் சொன்னார்கள். குறிப்பிட்ட நகரில் நுழைந்து வீட்டைத் தேடிப்பார்த்து, கண்டுபிடிக்க இயலாமல் திரும்பத் தொடங்கியபொழுது, மீண்டும் ஐயாவிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. முகவரி தெரியாமல் திகைத்ததை அவர்கள் புரிந்துகொண்டு, தம் மருகரை அனுப்பி, இல்லத்திற்கு அழைத்து, அறிமுகம் ஆனார்கள். மாலை நான்கரை மணிக்கு உரையாடத் தொடங்கிய நாங்கள் இரவு எட்டரை மணி வரை உரையாடினோம். உரையாட்டிலிருந்து சில துளிகள்:

நெல்லை ஆ.சுப்பிரமணியன் அவர்கள் எண்பது அகவை நிரம்பிய பெருமகனார். திருச்சிராப்பள்ளி வானொலியில் 1979 முதல் 1993 வரை இசையமைப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அதற்கு முன்பாக 1949 முதல் 1978 வரை திருச்சிராப்பள்ளி வானொலியில் பங்கேற்புக் கலைஞராக இருந்தவர். பல்வேறு இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்குரியவர். பல்வேறு இயக்குநர்களின் கீழ் வானொலி நிலையத்தில் பணிபுரிந்தவர். இவர் வழங்கிய இசை நிகழ்வுகளும், இசைப் பங்களிப்புகளும் தமிழிசை வரலாற்றில் குறிக்கத்தகுந்தன.

நெல்லையார் திருக்குறளின் 133 அதிகாரங்களிலும் இடம்பெற்றுள்ள 1330 குறட்பாக்களையும் இசையமைத்துப் பாடி, அனைவரின் பாராட்டையும் பெற்றவர். திருச்சிராப்பள்ளி வானொலியில் கீர்த்தனாஞ்சலிஎன்ற பெயரில் ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 7 மணிக்கு இவர் தியாகராசரின் கீர்த்தனைகளுக்கு விளக்கம் சொன்ன முறை இசையார்வலர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்வாகும். அதுபோல் திருமுறைத் தேனமுதம்என்ற நிகழ்வின் வாயிலாகப் பன்னிரு திருமுறைகளில் இடம்பெற்றுள்ள முதன்மையான இசைப்பாடல்களைத் தருமபுரம் சுவாமிநாதன் உள்ளிட்ட ஓதுவார்களின் குரலில் ஒலிக்கச் செய்த பெருமையும் நெல்லை ஆ.சுப்பிரமணியன் அவர்களுக்கு உண்டு. ‘சந்தத் தமிழ்ப்புனல்என்ற தலைப்பில் திருப்புகழ்ப் பாடல்களுக்கு இசையமைத்து மக்களுக்கு இசைவிருந்து படைத்தமையும் இவர் வாழ்க்கைப் பக்கங்களில் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். பதினான்கு ஆண்டுகள் திருச்சிராப்பள்ளி வானொலியில் இவையொத்த இசை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வழங்கியுள்ளார்.

நெல்லை ஆ. சுப்பிரமணியன் செட்டிநாட்டுப் பகுதியான பள்ளத்தூரில் பிறந்தவர். திருச்சி வானொலியில் நிறைய சுப்பிரமணியன்கள் இருந்தனர். எனவே இவரின் முன்னோர்கள் நெல்லையைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் நெல்லை ஆ. சுப்பிரமணியன் என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது.

நெல்லை ஆ.சுப்பிரமணியன் அவர்கள் பள்ளத்தூரில் எட்டாம் வகுப்புவரை பயின்றவர். இசையில் இளம் அகவை முதல் ஆர்வம் இருந்ததால் இசையாசிரியர்களிடம் முறையாக இசைபயின்றவர். தம் 16 ஆம் அகவையில்  கோட்டையூர் கோயிலில் இவரின் இசையரங்கேற்றம் நடைபெற்றது.

நெல்லையாரின் இளம் அகவையில் அதாவது இவரின் ஏழாம் அகவையில் பள்ளத்தூரில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. பள்ளத்தூர் கோயிலுக்கு அருகில் மேடையமைத்து, பெருந்திரளாசைவ சமய ஈடுபாட்டாளர்கள் கூடியிருந்தனர். தவத்திரு. மறைமலையடிகளார் தலைமையில் மாநாடு நடைபெற்றது. அப்பொழுது ஊர்ப் பெரியோர்கள் 7 அகவை கொண்ட சுப்பிரமணியனை மறைமலையடிகளின் திருமுன்பாகத் திருவாசகம் பாடும்வகையில் மேடையேற்றினர். திருவாசகத்தின் திருக்கோத்தும்பிப்பாடல்களையும், ‘பால் நினைந்தூட்டும்பாடலையும் பாடியபொழுது மழலைச் செல்வனின் இனிய குரலினை அடிகளார் வியந்து பாராட்டினார்இந்த நிகழ்ச்சிக்கு நீதியரசர் எம் . எம். இஸ்மாயில், பாஸ்கரத் தொண்டைமான், சரவண முதலியார் முதலான அறிஞர்கள் வருகை தந்திருந்தனர்.

கண்டரமாணிக்கம்(திருப்பத்தூர்) என்னும் ஊரில் தவத்திரு. வாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி, அவர் கையால் அந்த நூலினைப் பரிசாகப் பெற்றவர். இளமைப் பருவம் முதல் இவர்களைப் போன்ற அருளாளர்களின் ஊக்கம் நெல்லை சுப்பிரமணியன் அவர்களை இசைத்துறையில் ஈடுபாடுகொள்ள வைத்தது.



தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை

'இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்'

என்னும் குறட்பாக்களைத் தம் வாழ்நாளில் பின்பற்றத் தகுந்த குறள்களாக நினைத்துப் பார்க்கின்றார்.

செட்டிநாட்டைச் சேர்ந்த பழ. அண்ணாமலை அவர்கள் நெல்லை சுப்பிரமணியன் அவர்களை இளமையில் நன்னெறிப்படுத்தியவராவார். தமிழறிஞர் கி. பெ. விசுவநாதம் அவர்கள் கோவையில் பேசிய ஒன்றரை மணி நேரப் பேச்சொன்று அறிஞர் ஜி.டி.நாயுடு அவர்களால் பதிவு செய்யப்பெற்றுப் பாரி நிலையம் வழியாக வள்ளுவரும் குறளும்என்ற தலைப்பில் நூலுருவம் பெற்றது. அந்த நூலைக் கற்றதால் திருக்குறளில் நெல்லை ஆ. சுப்பிரமணியன் அவர்களுக்கு டுபாடு ஏற்பட்டது.

திருச்சியில் ஒவ்வொரு மாதமும் நெல்லை மாவட்டக் குழுவின் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதில் தொடர்ந்து பேசிய பேராசிரியர் இராதாகிருஷ்ண ஐயர் அவர்கள் திருக்குறளுக்கு விளக்கம் சொல்லுவார். அவரின் விளக்கத்திற்கு முன்பாக ஒவ்வொரு அதிகாரக் குறட்பாக்களும் நெல்லை ஆ. சுப்பிரமணியன் அவர்களால் பொருத்தமான இசையில் பாடப்படும். இனிய ஓசையில் பாடல் அமைவதால் ஒவ்வொரு மாதமும் பார்வையாளர்களின் வருகை அதிகரித்தவண்ணம் இருந்தது. திருக்குறளில் நல்ல பயிற்சியும் ஈடுபாடும் நெல்லை ஆ.சுப்பிரமணியன் அவர்களுக்கு இருந்ததால் கருத்துக்குத் தகுந்தபடி 133 அதிகாரத்தையும் 133 இராகங்களில் பொருத்தமான வகையில் பாடினார்(1961-1965). இவரின் திருக்குறள் பணியை அறிந்த திருக்குறள் வீ.முனுசாமியார் இவர்களுக்கு ‘இசைக் கொண்டல்’ என்ற விருது வழங்கிப் பாராட்டினார்.

நெல்லை ஆ. சுப்பிரமணியனாரின் வாழ்க்கைக் குறிப்பு

காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூரில் 15. 05. 1935 இல் திரு. ஆண்டியப்பப் பிள்ளை, இரத்தினம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர்.  இவரின் முன்னோர்கள் நெல்லையை அடுத்த முந்நீர்ப்பள்ளம் ஊரினர். இளமை முதல் இசையீடுபாடு நெல்லையாருக்கு இருந்தது. பல இசை அறிஞர்களிடம் தொடர்ந்து இசையறிவு பெற்றவர். வீணை வித்துவான் காரைக்குடி சாம்பசிவ ஐயர் அவர்களின் சீடர் கொத்தமங்கலம் கணபதி சுப்பிரமணியம் ஐயர் அவர்களிடம் இசை பயின்றவர்.

இவரின் முதல் இசை அரங்கேற்றம் 1949 இல் நடைபெற்றது. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இவரின் அரங்கேற்றத்துக்கு வயலின் வாசித்தவர். இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். 1949 முதல் திருச்சிராப்பள்ளி வானொலியில் வாய்ப்புகள் பெற்றுப் பாடத் தொடங்கினார். 1979 முதல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பணியில் இணைந்து இசைச் சித்திரங்கள், இசை நாடகங்கள், சர்வ சமய நல்லிணக்கப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், சேர்ந்திசை எனப் பல நிகழ்ச்சிகளின் வாயிலாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மணிமேகலை காவியம் இவரால் இசை வடிவம் பெற்றது. மதுரை வானொலி நிலையம் தயாரித்த சிவகாமியின் சபதம் 56 வார நெடுந்தொடர் இவரால் இசையமைக்கப்பட்டது. இரமண தீபம், இரட்சண்ய யாத்திரிகம் உள்ளிட்ட இசைத் தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார்.

வானொலி நிலையப் பணியின்பொழுது இவரால் இசையமைக்கப்பட்ட கிராமிய இசை நிகழ்ச்சிகள் தேசிய அளவிலும், சார்க் நாடுகளின் அளவிலும் விருதுகளைப் பெற்றுள்ளன; ஒலிபரப்பப்பட்டுள்ளன. இவர் இசையமைத்த ‘தொட்டில் முதல் தொட்டில்வரை’ என்ற நிகழ்ச்சி 1989 இல் ஆறு நாடுகளில் ஒரே நேரத்தில் ஒலிபரப்பானது.

தமிழிசை நிகழ்ச்சிகளுக்குத் தாமே பொறுப்பேற்று நெறிப்படுத்தியுள்ளார். தமிழிசை மரபு குன்றாமல் இருப்பதற்கு, எழுபதிற்கும் மேற்பட்ட இசையறிஞர்களின் பாடல்களை ஒலிபரப்பியுள்ளார்.

அனைத்து இந்திய வானொலியின் Music Composer, இந்திய அரசின் Song and Drama Division பிரிவால்  Expert Music Composer என்று தகுதி காணப்பெற்றவர்.

பக்திப் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த கவிஞர்களை நாட்டுப்பற்று ஊட்டும் பாடல்களை எழுதச் செய்தவர்.

வேளாண்மைத் துறைக்கு உதவியான கருத்துகளைக் கொண்ட( புகையான், பூச்சிக்கொல்லி, எலி ஒழிப்பு, கூட்டுறவு போன்ற) பாடல்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எளிய மெட்டுகளைக் கொண்டு இசையமைத்துப் பணிபுரிந்தவர்.

அருணகிரிநாதரின் வரலாறு ‘இசைக் கோபுரம்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டபொழுதும், முத்துத்தாண்டவர் இசை நாடகம் உருவான பொழுதும் அவைகளுக்கு இசையமைத்தமை குறிப்பிடத்தக்க பணிகளாகும்.

நெல்லை. ஆ.சுப்பிரமணியன் அவர்களின் இசையமைப்பில்  பாம்பே சரோஜா, பாம்பே இலலிதா வாணி ஜெயராம், ஜிக்கி, சூலமங்கலம் சகோதரிகள், ஜமுனா ராணி, டி.எம் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், சீர்காழி சிவசிதம்பரம், ஏ.எல். இராகவன், டி. எல். மகாராஜன், டி. எல். தியாகராஜன், வீரமணி, ஜாலி ஆபிரகாம், எஸ். என். சுரேந்தர், டி.என். சேஷகோபாலன், இராஜ்குமார் பாரதி, புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டவர்கள் பாடியுள்ளனர்.

நெல்லை ஆ.சுப்பிரமணியன் அவர்களின் தமிழிசைப் பணியைப் பாராட்டித் தமிழ்நாட்டரசு 'கலைமாமணி' என்னும் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழிசைத் துறையில் ஈடுபட்டு உழைத்தாலும், திருக்குறள் போன்ற நூலைப் பாடிய இப்பெருமகனாரின் குரல் ஒலி பதிவுசெய்து பாதுகாக்கப்படாமல் போனமை தமிழிசையின் போகூழ் என்றே சொல்லவேண்டும்.

நெல்லை ஆ. சுப்பிரமணியன் அவர்களின் துணைவியார் திருமதி. செல்லம்மாள் ஆவர். இவர்களுக்குச் சரவணபவன், ஆண்டியப்பன் என்னும் இரு மகன்களும், நிறைமதி என்ற மகளும் உண்டு.

திருச்சிராப்பள்ளியில் நிறைவாழ்க்கை வாழ்ந்துவரும் இசைமேதை நெல்லை. ஆ. சுப்பிரமணியன் அவர்களுக்கு நம் வணக்கமும் வாழ்த்துகளும்!




வியாழன், 26 நவம்பர், 2015

தமிழுக்குத் தொண்டாற்றும் சீனத்துக் கவிஞர் யூசிக்கு முது முனைவர் பட்டம்!


சீனத்துக் கவிஞர் யூசி


தைவான் நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த கவிஞர் யூசி ஆவார். இவர் சீன மொழியான மாண்டரின் மொழியில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை மொழிபெயர்த்துத், தமிழ் மொழியின் புகழை உலகமெல்லாம் பரவச் செய்தவர். ஔவையாரின் ஆத்திசூடியை முழுமையாகப் படித்து, அதன் விழுமிய கருத்துகளை நன்கு உணர்ந்து, 2 மணி நேரத்தில் நுட்பமாகவும், திட்பமாகவும் மொழிபெயர்த்தவர். இதுவரை இப் படைப்புகளைச் சீன மொழியில் யாரும் மொழியாக்கம் செய்யவில்லை.

கவிஞர் யூசியின் பணி சிறப்பு வாய்ந்தது ஆகும். கவிஞர் யூசி தற்போது, தைவான் நாட்டின் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பதவி வகிக்கிறார். அந்நாட்டின் பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறளைக் கற்பிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரின் சிறப்பான பணியைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு 2014-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, உரூ.1 இலட்சம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

மொழியாக்கப் பணிக்காக இவருக்குத் தமிழக அரசு உரூ.18 இலட்சம் மதிப்பூதியம் வழங்கியது. அந்தத் தொகையைத் தாமே வைத்துக் கொள்ளாமல், தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு முறையே உரூ.6 இலட்சம் என்ற அளவில் வழங்கியுள்ளார்.

மேலும், தைவான் நாட்டில் நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டின்போது தன் சொந்த செலவில் உரூ.20 இலட்சம் மதிப்பிலான திருவள்ளுவர் சிலையை அங்குள்ள மலையின் உச்சியில் நிறுவியுள்ளார். இவரது செயல் தமிழுக்கும், திருவள்ளுவருக்கும், பெருமை சேர்த்துள்ளது. இந்த நிலையில், நேற்று நடந்த தமிழ்ப் பல்கலைக்கழத்தின் ஆளவைக் கூட்டத்தில், தமிழ் மொழிக்காக அளப்பரிய பணிகளைச் செய்து வரும் கவிஞர் யூசிக்கு, ‘முது முனைவர்' பட்டத்தை வழங்கிச் சிறப்பிக்கத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

நன்றி: ஒன் இந்தியா (தமிழ்)


வெள்ளி, 20 நவம்பர், 2015

கால் நூற்றாண்டைக் கடந்தபொழுதும்…




தவத்திரு அடிகளார் அவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கும் காட்சி


திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்ற நினைவுகள் எனக்கு அவ்வப்பொழுது தோன்றி மறையும்!. 1990 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் நாள் பிற்பகல் நடைபெற்ற என் மாணவராற்றுப்படை நூல் வெளியீடு குறித்து அவ்வப்பொழுது நினைத்துப் பார்ப்பேன். மாணவப்பருவத்தில் நூல் எழுதுவதிலும் வெளியிடுவதிலும் இருந்த ஆர்வம் இப்பொழுது இல்லாமல் போனது. இல்லத்தில் தேங்கிக் கிடக்கும் அச்சிட்ட நூல் குவியல்களே ஆர்வம் குறைந்தமைக்குக் காரணம். இணையத்தில் எழுதுவதால் அனைவரின் பார்வைக்கும் செய்திகள் சென்றுவிடுகின்றன. அதன்பிறகு எதற்கு நூல்? என்று நினைத்துக்கொள்வேன்.

அண்மையில் பழையப் பெட்டிகளைத் தூய்மை செய்தபொழுது கால் நூற்றாண்டுக்கு முந்தைய படங்கள் சில கிடைத்தன. தவத்திரு முனைவர் குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் மாணவராற்றுப்படை நூல்வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட படங்களும் அதில் இருந்தன. தவத்திரு அடிகளார் அவர்கள் முன்பு திருப்பனந்தாள் காசித் திருமடத்தில் இருந்து சமயப்பணியும், தமிழ்ப்பணியும் செய்துவந்தார்கள். இப்பொழுது தருமபுர ஆதீனத்தின் நிர்வாகங்கள் பலவற்றைக் கவனிக்கும் நிலையிலும், பல்வேறு திருக்கோயில்களுக்குத் தலச்செலவு செய்து இறைவழிபாடு நிகழ்த்தும் நிலையிலும் ஓய்வில்லாமல் உழைக்கின்றார்கள்.

தவத்திரு குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள், என் மாணவப்பருவத்தின் தமிழார்வம் அறிந்து, என்னை உயர்வாகப் போற்றி மதித்தார்கள். ஆசிரியராகவும், குருவாகவும் இருந்து நன்னெறி காட்டினார்கள். அப்பெருமைக்குரிய அவர்கள் இப்பொழுது இணையத்தில் தம் திருச்செலவுகளைப் பதிவிட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. தவத்திரு அடிகளார் அவர்களைக் கண்டு பலவாண்டுகள் ஆயின. எனினும் அவர்களின் நினைவு தொடர்ந்து இருந்தவண்ணம் உள்ளது.

மாணவராற்றுப்படை நூல்வெளியீட்டு விழாவில் தவத்திரு குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் தலைமை தாங்கி, அரியதொரு இலக்கிய உரையாற்றினார்கள். சற்றொப்ப அரைமணி நேரம் அந்த உரை அமைந்துள்ளது.

பேரன்பன் அல்லன் பிழைசெய்யான் தானல்லன்
ஓரன்பும் இல்லா உலுத்தனேன் - பேரன்பு
காட்டிஎனைக் காட்டியுனைக் காட்டிஇன்பத் தொட்டிலிலே
ஆட்டிவளர் சொக்கநா தா

எனத் தொடங்கும் அந்த உரையை நல்வாய்ப்பாகப் பதிவுசெய்து காத்துவருகின்றேன். இளம் அகவையில் அடிகளார் அவர்களின் உரை பட்டறிவு சார்ந்த சிறந்த செய்திகளையும், மெய்யறிவுகளையும் தாங்கியுள்ளன(பின்னர் அவ்வுரை ஒலிவடிவில் வெளியிடப்படும்).

என் பேராசிரியரும் கல்லூரி முதல்வருமான புலவர் ம. வே. பசுபதி அவர்கள் மாணவராற்றுப்படை நூலை வெளியிட்டார்கள். பொறியாளரும், கல்லூரியின் செயலருமான திரு. பாலகிருட்டினன் அவர்கள் முதற்படியைப் பெற்றுக்கொண்டார்கள். குடந்தைக் கதிர்.தமிழ்வாணன் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் நூலாசிரியனாகிய என் முயற்சியை வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்கள். குமரகுருபரர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு. இரத்தின. சுவாமிநாதன் அவர்கள் முன்னின்று நூல் வெளியீட்டு விழாவை நடத்தினார்.

நூல் வெளியீட்டு விழாவில் தவத்திரு. குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களுக்கு மலர்மாலையை விழாக்குழு சார்பில் அணிவித்தார்கள். தாம் அணிந்த அந்த மலர் மாலையைத் தவத்திரு அடிகளார் அவர்கள் கழற்றி, என்னை மேடைக்கு அழைத்துச் சூட்டி அழகுபார்த்தார்கள். தவத்திரு அடிகளார் அவர்கள் பேச்சின் ஊடே, “என்னை விடவும் இவன் இன்று உயர்ந்தவன் – நூலாசிரியன்” என்று தாயுள்ளத்துடன் அரவணைத்து, வாழ்த்தி, ஊக்கப்படுத்தினார்கள். அந்த ஈர நன்மொழிகளே என்னை இன்னும் எழுத வைக்கின்றன…

பேராசிரியர் ம.வே. பசுபதி அவர்கள் உரை


பேராசிரியர் ம.வே. பசுபதி அவர்கள் நூலை வெளியிட, கல்லூரியின் செயலர் பெற்றுக்கொள்ளும் காட்சி


 தவத்திரு குமராசாமித் தம்பிரான் அவர்களின் அருளுரை
குடந்தைக் கதிர். தமிழ்வாணன் வாழ்த்துரை


தவத்திரு. அடிகளார் அவர்கள் மாணவப் பருவத்து நூலாசிரியனைச் சிறப்பிக்கும் காட்சி


தவத்திரு. அடிகளாரால் போற்றப்பட்ட மு.இளங்கோவன்(1990)

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அன்பர்கள் 

புதன், 18 நவம்பர், 2015

பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம் மறைவு!


முனைவர் கா. மீனாட்சிசுந்தரம்


மூத்த தமிழறிஞரும்  கல்லூரிக் கல்வித் துறையின்  மேனாள்  இயக்குநருமான முனைவர்   கா. மீனாட்சிசுந்தரம் அவர்கள் (அகவை 90)  இன்று  18.11.2015  கோவையை  அடுத்த  வெள்ளங்கிணறு  என்னும் தம்  சொந்த ஊரில்  அமைந்த ஞானமணிப் பண்ணை இல்லத்தில் இயற்கை எய்தினார்.   பேராசிரியரை  இழந்து  வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள்  என  அனைவருக்கும்  என் ஆழ்ந்த இரங்கல்.

பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம் அவர்கள் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். மூத்த அறிஞர்களிடம் கல்வி பயின்றதுடன் சிறந்த மாணவர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. The Contribution of European Scholars to Tamil என்ற தலைப்பில் இவர்   முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். பேராசிரியர் இரா. பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் மா. இராசமாணிக்கனார் ஆகியோர் இவரின் நெறியாளர்களாக இருந்தவர்கள். 1966 இல் சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.  

முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு அவர்களின் முயற்சியால் பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்களின் ஆய்வேடு 1974 இல் நூல்வடிவம் பெற்றது. இது ‘ஐரோப்பியர் தமிழ்ப்பணி’ என்னும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தால் 2003 இல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆய்வேடுகளுக்கு முன்மாதிரியான ஆய்வேடாக இது விளங்குகின்றது. பேராசிரியர் கா.மீ. அவர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ள ஐரோப்பியர்களின் தமிழ்ப்பணிகளை மூலமாகக் கொண்டு, பல ஆய்வேடுகள் எதிர்காலத்தில் உருவாக்குவதற்குரிய செய்திகளை இந்த ஆய்வுநூல் தாங்கியுள்ளது. 
 பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம் அவர்கள்


பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம் அவர்கள்

பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு:

கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு என்னும் சிற்றூரில் 11.07.1925 இல் உழவர் குடும்பத்தில், திரு. காளியப்ப கவுண்டரின் திருமகனாகப் பிறந்தவர். ஏழாம் வகுப்பு வரை பிறந்த ஊரில் கல்வி பயின்றவர். 1948 ஆம் ஆண்டு கோவை அரசு கல்லூரியில் பயின்று பி.ஏ. பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  தமிழ் முதுகலை பயின்று 1950 ஆம் ஆண்டு, முதல் மாணவராகத் தேறிப், பரிசில் பெற்றவர். பணியிலிருந்தபடியே எம்.லிட், முனைவர் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பயின்று பெற்றவர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1950 ஆம் முதல் 1957 ஆம் ஆண்டு வரை தமிழ் விரிவுரையாளராகப் பல்வேறு வகுப்புகளுக்குப் பாடம் நடத்தியவர். 1957 முதல் 1983 வரை அரசு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவ்வகையில் சென்னை மாநிலக் கல்லூரி, சேலம், திருப்பூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் அமைந்த அரசு கல்லூரிகளில் பணியாற்றியவர். கல்லூரி முதல்வராகவும் பணிபுரிந்தவர். 1979 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்லூரி முதல்வர் விருதினைத் தமிழக அரசிடமிருந்து பெற்றவர்.

1981 ஆம் ஆண்டுமுதல் 1983 ஆம் ஆண்டுவரை தமிழக அரசின் கல்லூரிக் கல்வியின் இணை இயக்குநராகவும், தலைமை இயக்குநராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர்.

15.09.1971 முதல் 20.06.1974 வரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைமை ஆட்சியராக இருந்தவர். அப்பொழுது தமிழியல் என்ற காலாண்டு ஆய்விதழைத் தமிழ் ஆங்கிலம் என இருமொழிகளிலும் தொடங்கி, முதன்மைப் பதிப்பாசிரியராக இருந்து நடத்தியவர்.

சென்னை, மதுரை, கோவை, பாரதியார், பாரதிதாசன், தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்து பணிபுரிந்தவர். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுக்களில் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்து பணியாற்றிய பெருமகனார் இவர்.

முனைவர் கா. மீனாட்சிசுந்தரம்
2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் பாஷா சம்மன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்களின் தமிழ்க்கொடை:

1.   The Contribution of European Scholars to Tamil
2.   A Study of the achievements of S. Bharathi

தமிழ் நூல்கள்

1.   பன்மையில் ஒருமை
2.   அகராதிக்கு அப்பால்
3.   பாரதியின் பாநிலை
4.   சிலம்பில் துணைப்பாத்திரங்கள்
5.   கம்பன்
6.   மகரிஷி தேவேந்திரநாத தாகூர்
7.   வேதம் புதுப்பித்த தீரர்
8.   மனோன்மணியம் சுந்தரனார் புரட்சி – திறன்
9.   உடலும் மருந்தும் –நூறு வினா விடைகள்
10. பல்நோக்குக் கட்டுரைகள்
11. ஐரோப்பியர் தமிழ்ப்பணி
12. கற்க கணிப்பொறி(வழிகாட்டுக் குழுத்தலைவர்)
13. திருவள்ளுவரிடம் இல்லை மயக்கம்

குறிப்பு: இக்குறிப்புகளை எடுத்தாளுவோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் கு. இராமசாமி அவர்கள் மீண்டும் பொறுப்பேற்பு!

பேராசிரியர் கு. இராமசாமி அவர்கள் 

பேராசிரியர் கு. இராமசாமி அவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டு, நேற்று 17.11.2015 பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். மாண்புநிறை துணைவேந்தர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் உரித்தாக்குகின்றேன். 

நுண்ணுயிரியல் துறையில் உலக அளவில் புகழ்பெற்ற அறிவியல் அறிஞராகப் பேராசிரியர் கு. இராமசாமி அவர்கள் போற்றப்படுபவர். நேர்மைக்கும், கண்டிப்புக்கும், எளிமைக்கும் பெயர்பெற்ற பேராசிரியர் கு.இராமசாமி அவர்கள் தகுதிக்கும், திறமைக்கும் முதன்மையளிப்பவர்.  மிகச்சிறந்த தமிழ்ப்பற்றுடையவர். இவர் உழவர்குடியில் தோன்றியதால் வேளாண்மைக் கல்வி அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் செயல்படுவர். மரபுவழி வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர். அதேபொழுது தேவையான தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதிலும் ஆர்வம்கொண்டவர்.

பேராசிரியர் கு. இராமசாமி அவர்கள் திருவாரூர் வேலுடையார் பள்ளியில் பள்ளிக் கல்வியையும், அறந்தாங்கி அரசுப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பையும் பயின்றவர். பெல்சியத்தில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் (Post-Doctoral) பட்டம் பெற்றவர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தம் பேராசிரியர் பணியைத் தொடங்கிய இவர் பல்வேறு துறைகளில் தலைவராகவும், புல முதன்மையராகவும் விளங்கியவர். பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களில் வேளாண்மைக் கல்வி வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் பங்களிப்பு நல்கியவர். கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் விளங்கியவர். உலகின் பல நாடுகளுக்கும் சென்று தம் அறிவாய்வுக் கட்டுரைகளை வழங்கி அறிஞர்களின் பாராட்டினைப் பெற்றவர். இதுவரை 120 - க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 7 நூல்களையும் படைத்தவர். வேளாண்மை, சுற்றுச்சூழல், மண்வளம் சார்ந்த பல்வேறு குழுக்களின் ஆலோசகராகப் பணியாற்றியவர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது துணைவேந்தராக 26.8.2012-இல் முனைவர் கு. ராமசாமி அவர்கள் பொறுப்பேற்றர். இவரின் மூன்று ஆண்டு பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாள் நிறைவடைந்தது.

இதற்கிடையே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவைத் தமிழக அரசு அமைத்தது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.என்.வேதநாராயணனைத் தலைவராகக் கொண்ட இந்தக் குழுவில், சன் அக்ரோ பயோடெக் ஆய்வு மையத்தின் இயக்குநர் சீனிவாசன் சித்தானந்தம், தில்லி ஐ.சி.ஏ.ஆர். இயக்குநர் எஸ்.அய்யப்பன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவுக்கு 40-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை அனுப்பி இருந்தனர். துணைவேந்தர் பதவிக்கான 3 பேர் அடங்கிய பரிந்துரைப் பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த கு.ராமசாமி அவர்களை இரண்டாவது முறையாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்து வேந்தரும், ஆளுநருமான கே.ரோசய்யா உத்தரவிட்டார்.

இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் 11-ஆவது துணைவேந்தராக கு.ராமசாமி அவர்கள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். பேராசிரியர் கு.இராமசாமி அவர்கள் 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலும் இந்தப் பதவியில் நீடிப்பார்.


நன்றி: தினமணி 18.11.2015

வெள்ளி, 13 நவம்பர், 2015

பேராசிரியர் மது. ச.விமலானந்தம் அவர்கள் மறைவு!



தஞ்சாவூரில் வாழ்ந்துவந்த பேராசிரியர் மது. ச.விமலானந்தம் அவர்கள் 14. 10. 2015 காலை மறைந்த செய்தியை இன்றுதான் தற்செயலாக இணையத்தில் படித்தேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்பில் இருந்த பெருமகனார் மறைந்த செய்தி எனக்கு மிகப்பெரிய துன்பத்தைத் தந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நானும் பூண்டிக் கல்லூரிப் பேராசிரியர் பாலா அவர்களும் நடு இரவில் ஐயாவைச் சந்திக்க தஞ்சையில் முயன்றும் இயலாமல் போனது.

பேராசிரியர் மது.ச. அவர்கள் சாதி, மதம் கடந்து பழகும் உயர்ந்த உள்ளம் உடையவர். புதுவையில் நான் படித்தபொழுது(1992) எங்கள் அறையில் பலநாள் தங்கி எங்களை ஊக்கப்படுத்திய பெருமகனார் ஆவார். தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்னும் நூலின் வழியாக அவர் என்றும் நம்முடன் இருப்பார்.


பேராசிரியரின் மறைவால் வாடும் குடும்பத்தார், மாணவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்!

பேராசிரியர் மது. ச. அவர்களின் தமிழ்ப்பணியை அறிவதற்கு இங்குச் செல்லவும்!

திங்கள், 9 நவம்பர், 2015

கவிஞர் கி. பாரதிதாசனின் சொல்லோவியம்…



மண்மணம் குழைத்து மரபுப்பாடல் வரைவோர் அருகிவரும் வேளையில் பிரான்சில் வாழும் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் சொல்லோவியம் என்னும் நூலினைச் சுவைக்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமும், உவமைக்கவிஞர் சுரதா அவர்களிடமும் அமைந்துகிடக்கும் சொல்வளமை இந்த நூல்முழுவதும் அமைந்துள்ளமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும். நூறு சொல்லோவியங்கள் இந்த நூலை அழகுசெய்கின்றன. பெண்ணொருத்தியின் உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் அகவுணர்வு பாட்டுவடிவில் பக்குவமாக வெளிப்பட்டு நிற்கின்றது. தம் உள்ளங் கவர்ந்து உறவாடியவனை நினைத்துப், பேதைப் பெண்ணொருத்தி வெளிப்படுத்தும் அன்புமொழிகளைப் பாவலர் அழகாக இந்த நூலெங்கும் எதிரொலிக்கச் செய்துள்ளார்.

கடந்த கால நிகழ்வுகள் கனன்று எழுவதையும், கைப்பற்றியவனின் அன்புச்செய்கைகள் அவளுக்குக் கற்கண்டாய் இனிப்பதையும் இந்த நூலில் பெண்ணாக உணர்வுதாங்கிப் பாவலர் பாரதிதாசன் வடித்துள்ளார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிற்றூர் மக்களின் சொல்லாட்சியையும், கற்பனையையும் கற்று மகிழ்ந்தேன். கடல்கடந்து சென்றாலும் தமிழர்களின் மரபார்ந்த வாழ்க்க்கையைப் பாரதிதாசனால் மறக்கமுடியவில்லை என்பதை இந்த நூல் காட்டுகின்றது.

மக்களின் பேச்சுவடிவச் சொற்கள், இலக்கியத் தரம் கொண்ட சொற்களாகப் பாவலரால் இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளமை நூலின் தனிச்சிறப்பு என்று குறிப்பிடலாம். நகரச் சாயலோ, நாகரிக வாழ்க்கையோ தென்படாமல் முற்றும் சிற்றூர் மக்களின் செழிப்பான வாழ்வு இந்த நூலில் நினைவுறுத்தப்பட்டுள்ளது.

கள்ளிறக்கும் காலையிலே
கண்மயங்க வைத்தவனே!
உள்ளிருக்கும் உணர்வுகளை
உடையாகத் தைத்தவனே!
                             
என்பது  சொல்லோவியத்தின் ஒரு சுவைமிகுந்த பகுதியாகும். கள்ளுக்கும் காதலுக்குமான தொடர்பை முதலில் நினைவூட்டியவர் திருவள்ளுவனார் ஆவார். ‘உண்டார்கண் அல்லது அடுநறா காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இல்என்னும் குறளில் வள்ளுவனார் பார்வையின் மகிழ்ச்சியைப் படம்பிடித்துக் காட்டுவார். அதுபோல் நம் பாரதிதாசனும் தலைவியின் உள்ள உணர்வை இந்தப் பாடலில் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

மதுரைவீரன் சாமிபோல்
மார்பழகு கொண்டவனே!
குதிரைபோல எனைத்தூக்கிக்
கூத்தாடி நின்றவனே!

என்று பாரதிதாசன் தலைவனின் அழகையும், அவனின் செயலையும் சிற்றூர்ப்புற ஓவியமாக்கி நம் மனக்கண்ணில் நிறுத்துகின்றார்.

கத்தாழைக் காட்டுக்குள்
கணக்காக நின்றவனே!
சொத்தாக என்னழகைச்
சொந்தமிடும் தென்னவனே!

   இந்தப் பாட்டில் கத்தாழை மலிந்துகிடக்கும் காடு, தனிமைச் சந்திப்புக்கு ஏற்ற இடம் என்பதையும், அங்கு நாளும் சந்திப்பு நிகழ்ந்ததால் அது அடுத்தகட்ட மணவாழ்க்கைக்கு நகர்த்தியதையும் பெண்மைபூத்த உள்ளத்தோடு பாடியுள்ள பாவலரின் உள்ளுணர்வு போற்றத்தக்கது.

மஞ்சளிலே உனைச்சேர்த்து
மார்பினிலே பூசுகின்றேன்!
நெஞ்சினிலே உனைநிறைத்து
நிலையிழந்து பேசுகின்றேன் (சொல்லோவியம் 35)

என்று எளிய சொற்களை எடுத்து உணர்வையும் காட்சியையும் இயைத்து அழகிய படைப்பாளராகப் பாரதிதாசன் இந்தப் பாடலில் வெளிப்பட்டு நிற்கின்றார்.

பண்பாளா! உனைப்பாடப்
பண்கோடி வேண்டுமடா!
கண்ணாளா! உனைக்காணக்
கண்கோடி வேண்டுமடா!

  தலைவனுடன் பழகிய பழக்கத்தையும், அவனின் மேம்பட்ட பண்புநலன்களையும் பாடுவதற்கு இயலாத கையற்ற நிலையையும், தலைவனின் கண்டார் மயக்கும் அழகையும் கவினார்ந்த நிலையினையும் காண்பதற்குக் கண்கள் கோடி வேண்டும் என்று ஏங்கும் அபலைப் பெண்ணின் ஆசை உணர்வுகளை இந்தச் சொல்லோவியம் தாங்கி நிற்கின்றது.

பாவலர் கி. பாரதிதாசனுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்:

குறும்பாக்களில் உங்கள் கற்பனையும் திறமையும் குறுகிவிட வேண்டாம். பாவியம் புனைந்து தமிழன்னைக்குப் படையல் செய்யுங்கள். புரட்சிக்கவிஞர் பிறந்த மண்ணிலும், அவர் பண்ணிலும் தமிழ்த்தேன் குடித்த தாங்கள் கனிச்சாறு கொண்டு ஒரு காப்பிய விருந்து வையுங்கள் என்று கனிவுடன் வேண்டுகின்றேன்.

  • கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் சொல்லோவியம் நூலுக்கான அணிந்துரை