காலை 8.30 மணிக்கு உரோமாவின் பெலிசு விடுதி அறையிலிருந்து புறப்பட்டோம்.
பெட்டிகளைக் கொண்டுபோய் வண்டியில் அடுக்கினோம். மழை விட்டு விட்டுப் பெய்துகொண்டிருந்தது. விடுதி மேற்பார்வையாளர் எங்களுக்குச் சிற்றுண்டிக்காக வழங்கிய உணவு அட்டையைக் கொண்டுபோய் அருகிலிருந்த கடையில் கொடுத்து,
பாலும் பண்ணியமும் வாங்கி உண்டோம்.
அவை சுவையாக இருந்தன. மீண்டும் அடுத்தமுறை வந்தால்
இந்த விடுதியில் முன்பதிவு செய்து மகிழ்ச்சியாகத் தங்கலாம் என்ற முடிவோடு மீண்டும்
உரோமாபுரியை இளங்காலைப் பொழுதில் கண்டு மகிழப் புறப்பட்டோம். தூறல் இதமாகப் பெய்தது. ‘ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருக்களின்’
அழகையும், அங்கிருந்த நினைவுச் சின்னங்களையும்
மகிழ்வுந்தில் அமர்ந்தபடியே பார்த்துக்கொண்டு நகருலா வந்தோம்.
சிறைக்கூடம்
“அதோ! கோட்டை போன்று உள்ள கட்டடத்தைப் பாருங்கள்” என்று அருள்
ஒரு கோட்டையைக் காட்டினார். இங்குதான் போர்க்காலங்களில் கைதிகளைக்
கொண்டுவந்து அடைப்பார்கள். அரிமாக்களுடன்(சிங்கம்) போர்புரிய அந்தக் கைதிகளைச் சொல்வார்களாம்.
அரிமாவை வென்றால் கைதி உயிர் பிழைக்கலாம். இல்லையென்றால்
அரிமா கைதிகளுக்குத் தீர்ப்பு எழுதிவிடும் என்று அருள் சொன்னபொழுது சிறைக்கொடுமையை
உணரமுடிந்தது.
வாடிகன் முகப்பில் அரவணைப்பு கு.இளங்கோவனும்,
அவர்களின் துணைவியாரும்.
அங்கிருந்த பழைய அமைப்பிலான தேவாலயங்கள், நினைவிடங்களைப் பார்த்தபடி
வாடிகனின் போப்பரசர் மாளிகைக்கு மீண்டும் வந்து சேர்ந்தோம். இரவு
பார்த்த இடங்களை இப்பொழுது பகலில் பார்த்தபொழுது இன்னும் சிறப்பாக இருந்தன.
பன்னாட்டுச் சுற்றுலாக்காரர்கள் வரிசையில் நின்று போப்பரசர் மாளிகைக்குச்
சென்றவண்ணம் இருந்தனர். சிலர் வெளியிடங்களைப் படம் பிடிப்பதில்
ஆர்வம் காட்டினர். மகிழ்வுந்துகள் போவதும் வருவதுமாக இருந்தன.
சிறப்பு விருந்தினர்கள் அவ்வப்பொழுது தனி மகிழ்வுந்துகளில்
சுழல்விளக்குகள் சுழல விரைவாகச் சென்றனர்.
வாடிகன் (Vatican City) என்பது தனிநாடாகும்.
44 எக்டேர் (108.07 ஏக்கர்) நிலப்பரப்பு மட்டும் கொண்டது. இந்த நாட்டின் மக்கள் தொகை
சற்றொப்ப 804 பேர் ஆவர். கத்தோலிக்கக்
கிறித்தவத்தின் தலைமையிடமாக வாடிகன் நகரம் விளங்குகின்றது. இதன்
தலைவராக விளங்குபவர் திருத்தந்தையார் ஆவார்.
வாடிகன் நகரத்தின் அரசாணைகள் இத்தாலி
மொழியிலும், திருப்பீடத்தின் அரசாணைகள் இலத்தின் மொழியிலும் வழங்கப்படுவதாக அறியமுடிகின்றது.
உலகம் முழுவதும் உள்ள கிறித்தவப் பெருமக்களால் போற்றி மதிக்கப்படும்
வாடிகன் நகரின் முகப்பில் நின்று அவ்விடத்தின் பெருமையை எண்ணி எண்ணி மகிழ்ந்தோம்.
பல கோடி மக்கள் நடைபயின்ற அத் திருமண்ணில் நின்று, வேண்டிய அளவு படமெடுத்துக் கொண்டோம். அங்கும் இங்கும்
காலார நடந்து பார்த்தோம். இப்பொழுது மழை இல்லை. அங்கே கிடந்த நாற்காலிகள் ஏதோ சிறப்புத் தொழுகைகளுக்கும், கூட்டத்திற்குமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
மற்ற மக்களைப் போல் வரிசையில் நின்று
போப்பரசர் மாளிகை, அருங்காட்சியகங்களைப் பார்க்க எங்களுக்கும் ஆசைதான். அண்ணனின் உடல்நிலை, அடுத்து நாங்கள் பார்க்க நினைத்த
வெனிசு மாநகரப் பயணத்திட்டம் நினைவுக்கு வந்தது. அதனால் பிரிய
மனமின்றிப் போப்பரசர் மாளிகையை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, மகிழ்வுந்துக்கு வந்தோம்.
நம் ஓட்டுநர் அருள் கள்வர்கள் எவராவது
தம் வண்டிக்கு வருவார்கள் என்று மணிக்கணக்கில் காத்திருந்தார். ஒருவரும் வரவில்லை போலும்.
மகிழ்வுந்தை ஓரிடத்திலும் நிறுத்தாமல் தொடர்ந்து ஓடவைத்துக்கொண்டு காத்திருந்தார்.
அனைவரும் ஏறிக்கொண்டோம். மகிழ்வுந்து மெதுவாக முன்னேறி
வெனிசுக்குச் செல்லும் பாதையை அடைந்தது. வண்டியில் கொள்ளும் அளவுக்கு
எண்ணெயை நிரப்பிக்கொண்டோம். ஆனால் அந்த எண்ணெய் அங்காடிக்காரன்
சில்லரை இல்லை என்று எங்களை ஏமாற்றினான். மூன்று லிட்டர் அளவில்
எண்ணெய்க்குரிய பணத்தைத் தண்டமாக இழக்க நேர்ந்தது.
ஓட்டுநர் அருள்
உரோமாபுரி! ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகால
வரலாற்றை உடையது. இது இத்தாலி நாட்டுக்கு இதயம் போன்று விளங்கும்
தலைநகரம். உலக நாகரிகங்களில் தொன்மையான நாகரிகம் கொண்ட மக்களையும்
எத்தனையோ வரலாறுகளையும் அடக்கிவைத்துக்கொண்டு நிற்கும் செல்வச் செழிப்புடைய வளமார்ந்த
நகரம். கலை வல்லுநர்கள் இந்த நாட்டை இழைத்து இழைத்து,
அழகுபார்த்துக் கட்டியுள்ளனர். இந்த நாட்டை நடுவணாகக்கொண்டு
இலக்கியங்களும் வரலாறுகளும் உலகம் முழுவதும் புனையப்பட்டுள்ளன. இதன் வளத்தை எண்ணி, எத்தனையோ நாடுகள் இதன்மீது படையெடுத்துள்ளன.
மாதக் கணக்கில் தங்கி ஒவ்வொரு கலைக்காட்சிகளையும் பார்க்கவேண்டிய சிறப்பிற்குரிய
ஊராக உரோமாபுரி உள்ளது. இந்த ஏக்கப் பெருமூச்சுடன் முற்பகல் 10.
30 மணிக்கு எங்களின் வெனிசு பயணம் தொடங்கியது.
உரோம் - வெனிசு சாலை மிக நீண்டிருந்தது.
இருமருங்கும் வயல்வெளிகளும், மலைகளும்,
குன்றுகளும், நகரும், ஊருமாக
இருந்தன. இயற்கை அன்னையின் அழகுக் காட்சிகளைப் பார்த்தபடி நாங்கள்
வெனிசு நகரத்தை மாலை 4.30 மணிக்கு அடைந்தோம்.
மகிழ்வுந்தை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு, இப்பொழுது கப்பல் பயணத்துக்குத்
தயாரானோம்.
வெனிசு உலகப் புகழ்பெற்ற கடல்நகரம்
ஆகும். பண்டைக்காலத்தில்
பெருவணிகம் நடந்த ஊராகும். உலகப் புகழ்பெற்ற வணிகர்கள் பலர் இந்த
ஊரில் இருந்துள்ளனர். மார்க்கோ போலோ (கி.பி 1254 - 1324) என்ற உலகப் புகழ்பெற்ற பயணி பிறந்து, வாழ்ந்து,
மறைந்த ஊர் இதுவாகும். இந்த நகரத்தைப் பார்க்க
கப்பல், படகுப் பயணம் உகந்ததாகும்.
வெனிசு நகரம் மொத்தம் 117 தீவுகளைக் கொண்டது.
இவற்றின் ஊடே 150 வாய்க்கால்களும் ஓடுகின்றன. நிறைய சிறு
பாலங்கள் இக் கால்வாய்களைக் கடக்க உதவுகின்றன. மேலும் ‘கொண்டோலா’ எனப்படும் படகுகளும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன. உலகம் முழுவதிலிருந்தும் வருகைதரும் மக்கள் கப்பல்களில் ஒவ்வொரு இடமாகச் சென்று
பார்த்து மகிழ்கின்றனர். கடல்நீர் நடுவில் தங்கும் விடுதிகள்,
தெருக்கள், மாளிகைகள் உள்ளன. இளம் இணையர்கள் தனிப் படகுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, நீரைக் கிழித்துக்கொண்டு செல்லும் விரைவோட்டத்தில் திளைக்கின்றனர்.
ஒவ்வொரு இடத்தையும் இணைக்கப் படகுத்துறைகள், பாலங்கள்
உள்ளன.பன்னாட்டு அதிகாரிகள், தலைவர்கள் இன்பச் சுற்றுலா வந்து, இங்குள்ள மாளிகைகளில்
தங்கிச்செல்வது வழக்கம். அவர்களை மகிழ்விக்க ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும்
நடக்குமாம்.
நாங்கள் ஒரு கப்பலில் 10 யூரோ(உருவா 750) கட்டணத்தில்
உலாவுக்குத் தயாரானோம். எங்களைச் சுமந்த கப்பல் ஒவ்வொரு துறையிலும்
நின்று மக்களை இறக்கியும் ஏற்றியும் இறுதியில் உரிய இடத்தை அடைந்தது. அக்கரையில் இறங்கி உலவினோம். அங்கிருந்தபடி போக்கு வரவில்
இருந்த படகுகள், கப்பல்களைப் பார்த்தோம். பன்னாட்டுப் பயணிகளின் செயல்பாடுகளை
வேடிக்கையாக நின்று கவனித்தோம். அவரவரும் புகைப்படம் எடுத்தல்
உண்ணல், குடித்தல், சிறு கடைகளில் பொருள்களை
வாங்குதல் என ஆர்வமாக இருந்தனர். நாங்கள் பகல் உணவு உண்ணாததால்
மாலை 6 மணியளவில் அருகில் இருந்த கடைக்குச் சிற்றுண்டி உண்ணச்
சென்றோம்.
அந்தக் கடையில் ‘பீசா’ எனப்படும் உணவை உண்ணத் தலைப்பட்டோம். ஒரு பீசாவின் விலை
9 யூரோ என்றனர். நின்று உண்ணுவதற்கு இந்த விலையாம்.
அமர்ந்து உண்ண 15 யூரோ என்றனர். நாங்கள் நின்று உண்ணுகின்றோம் என்று சொல்லி ஒரு பீசா ஒன்பது யூரோ என்ற விலையில்
ஆளுக்கொன்று வாங்கிக்கொண்டோம். நாங்கள் இந்தியாவிலிருந்து வந்துள்ளோம்
என்பதாலும், அண்ணனுக்கு உடல் நலமில்லை என்பதாலும் கூட்ட நெரிசல்
இல்லை என்பதாலும் எங்களை அமர்ந்து உண்ணும்படி சொன்னார்கள். அனைவரும்
மகிழ்ச்சியாக உணவை முடித்தோம். அங்கு வந்த, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுடன் இணைந்து சில படங்களை நினைவுக்குப் எடுத்துக்கொண்டேன்.
மாலை 7 மணியளவில் நாங்கள் மகிழ்வுந்து
நிறுத்தியுள்ள இடத்துக்குக் கப்பலில் புறப்பட அணியமானோம். வந்து
இறங்கியதிலிருந்து ஒருமணி நேரத்திற்குள் திரும்பியிருக்க வேண்டும். திரும்புவதற்கு உரிய எங்களின் நேரம் முடிந்திருந்ததால் இப்பொழுது மீண்டும் 10
யூரோ கொடுத்துப் புதியச் சீட்டு வாங்க வேண்டியிருந்தது.
வெனிசு பயணம் முடித்த மக்களின் முகத்தில்
மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.
எங்களைப் போல் எத்தனையோ இலக்கம் மக்களை ஒவ்வொரு நாளும் இந்த வெனிசு மாநகரம்
வரவேற்பதும் வழியனுப்புவதுமாகப் பல்லாயிரம் ஆண்டுகளாகச் செய்திருக்கும் என்பது மட்டும்
உறுதி. கப்பல்களும் படகுகளும் போவதும் வருவதுமாக இருந்தன.
Boatel என்று ஒரு கப்பல் நின்றது. கடலில் ஒரு கப்பலை நிறுத்தி, அதில் அமைந்த விடுதி என்பதால்
புதுமுறையில் Boatel என்று பெயரிட்டுள்ளனர். அக் கப்பல்
மாளிகைபோல் கடலில் நின்று கொண்டுள்ளது. முதுமாலைப்
பொழுது என்பதால் விளக்கொளியில் வெனிசு நகரம் பூத்துக் குலுங்கியது.
உரோமையும், வெனிசையும் பார்த்தபொழுது என்
பேராசிரியர் மருதூர் வேலாயுதம் அவர்கள் நினைவில் வந்தார். திருச்சிராப்பள்ளியில் இருபதாண்டுகளுக்கு
முன்னர் முனைவர் பட்ட ஆய்வில் இருந்தபொழுது, அவர்தம் இல்லில் அமர்த்தி ஒவ்வொரு நாளும்
கிரேக்கம், உரோமாபுரி, வெனிசு பற்றி அவர் நடத்திய பாடமும் அவர்தம் இனிய அறிவார்ந்த
குரலும் என் நினைவுக்கு வந்தன. நூல் வழி என் ஆசிரியர் பெருமகனார் கற்ற உரோமாபுரியையும்
வெனிசையும் நான் நேரில் பார்க்க அமைந்த வாய்ப்பை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்.
இக்கரைக்கு வந்துபொழுது மாலை 7.45 மணி. எங்களை ஓரிடத்தில் காத்திருக்கச் சொல்லிவிட்டு ஓட்டுநர் அருள் மகிழ்வுந்தை
எடுத்துவரச் சென்றார். அண்ணனின் உடல்நிலை எவ்வாறு உள்ளது என்று
கேட்டோம். தாங்கும் நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்கள்.
இப்பொழுது புறப்பட்டால் காலை 7 மணியளவில் பாரிசு
திரும்பலாம் என்று திட்டமிட்டோம்.
மகிழ்வுந்து பாலங்களைக் கடந்து புறப்பட்டது. கையில் இருந்த நொறுக்குத்
தீனிகள் தீரும் நிலையில் இருந்தன. தின்பண்டங்களும் தண்ணீரும்
கையிருப்பு இருந்தன. ஓட்டுநர் அருளிடம் உரையாடியபடி நான் வந்தேன்.
அண்ணனும் அண்ணியும் ஓய்வெடுத்தவண்ணம் வந்தனர். இடையில் அண்ணியார் அவர்கள் சில மணிநேரம் அருள் அவர்களிடம் பேசியபடி வந்தார்கள்.
நான் ஓய்வெடுத்துக்கொண்டேன்.
ஓட்டுநர் அருளுக்குக் களைப்பு ஏற்படும்
நேரங்களில் இடையில் நிறுத்துவார்;
சிறிது கண்ணயர்வார்; தேநீர் குடிப்பார்;
காலார நடப்பார்; பின்னர் மீண்டும் மகிழ்வுந்தைச்
செலுத்துவார். சற்றொப்ப
1200 கி.மீ.
அவர் மகிழ்வுந்தை ஓட்ட நாங்கள் தொடர்ந்து பயணம் செய்தாக வேண்டும். காலையில் ஏழுமணிக்குப்
பாரிசு வந்து சேர்வோம் என்று கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்குச் செய்தி சொல்லியிருந்தோம்.
எங்கள் திட்டப்படி பாரிசு நோக்கி மகிழ்வுந்து முன்னேறியது.
காலை 9.30 மணி வரையிலும்
எங்களிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை என்பதால் கவிஞர் கி.
பாரதிதாசன் அவர்கள் பதைபதைத்து எங்களுக்குத் தொலைபேசியில் பேசினார்.
“திட்டமிட்டபடி வந்திருந்தால் இந்த நேரத்திற்கு உணவுமுடித்து ஓய்வெடுத்திருக்கலாம்.
எங்கே இருக்கீன்றீர்கள்” என்றார். எங்கள் மகிழ்வுந்து போக்குவரவு நெருக்கடியில்
சிக்கி மெதுவாக பாரதிதாசன் இல்லத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
1 கருத்து:
உங்கள் உடன் பயணித்துக்கொண்டிருக்கிறோம், அலுப்பு தெரியாமல். காணக்கிடைக்காத அபூர்வமான இடங்கள், செய்திகள். நாங்கள் உங்களைத் தொடர்ந்து வருகிறோம். நன்றி.
கருத்துரையிடுக