முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களிடம் பரிசு பெறல்(1991) அருகில் முனைவர் எழில்முதல்வன், முனைவர் அரு. மருததுரை
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில்
மாணவனாக இருந்தபொழுது படிப்பது முதல்பணி; பாட்டு எழுதுவது இரண்டாவது பணி. மரபு வகைகளில்
பாட்டு எழுதுவதை என் பேராசிரியர் ம.வே.பசுபதி ஊக்கப்படுத்துவார்கள். கட்டளைக் கலித்துறையில்
போகிற போக்கில் எழுதும் பயிற்சி இருந்தது. ஆசிரியம் அவல் தின்பது போல் இனிமையானது.
வெண்பா திருமண நாளில் பட்டுவேட்டி உடுத்துவது போல் அரிதாக இருக்கும். வெண்கலிப்பா,
கலிவெண்பா யாவும் கைவந்த வடிவங்கள்.
பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு(1991)
விழாவையொட்டி மரபுப்பாடல் எழுதும் போட்டியைப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்தது.
பாவேந்தர் இன்றிருந்தால்… என்ற தலைப்பில் பாடல் புனைந்து அனுப்பியிருந்தேன் (1991).
தமிழகத்தின் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் ஆர்வமாகக் கலந்துகொண்டனர். என்
பாட்டினை முதல் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுத்துப், பரிசில் 500 உருவா தருவதாக அறிவித்திருந்தனர்.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு
வழி வினவிக்கொண்டு ஒரு சிற்றூர் மாணவனாக,. விழா நடைபெறும் நேரத்திற்குச் சென்று சேர்ந்தேன்.
பல்கலைக்கழகத்தின் குளிர்மை அரங்கில் நுழைந்தபொழுது ‘குடைகண்டு மிரளும் கோடாங்கிக்
காளையாக’ இருந்தேன். பின்னாளில் அப் பல்கலைக்கழகம் என்னை வரவேற்று ஆய்வாளனாக மாற்றும்
என்று அப்பொழுது நினைக்கவில்லை.
என் பேராசிரியர் முனைவர் எழில்முதல்வன் அவர்கள்
என் பெயரை ஒலித்தபொழுது, அரங்கம் மெதுவாகக் கையொலி எழுப்பி வாழ்த்துரைத்தது. முத்தமிழ்க்
காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் திருக்கையால் பரிசிலையும் சான்றிதழையும் பெற்றுக்
கொண்டேன். பழைய நினைவுகளை மேலே உள்ள படம் அசைபோட வைத்தது. பாவேந்தரின் திருமகனார்
தமிழ்மாமணி மன்னர் மன்னன் ஐயா அந்த நிகழ்வில் சிறப்புரையாற்றினார். அவர்தம் திருவுருவம்
பாவேந்தரை ஒத்திருப்பது கண்டு, அவையினரும்
நானும் வியந்து பார்த்த பொழுதுகள் இப்பொழுதும் நினைவில் உள்ளன.
1 கருத்து:
இவ்வாறான நினைவுகள் நம்மை மென்மேலும் உயர்த்திச் செல்வதற்கான படிக்கட்டுகளாக அமையும். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகள்.
கருத்துரையிடுக