பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம்
தலையில் அடிபட்ட அண்ணன் அவர்களுக்கு மருத்துவம் பார்க்க,
பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டு,
பிரான்சு திரும்புவது அல்லது திட்டமிட்டபடி பயணத்தைத் தொடர்வது என இருவழிகள் எங்களுக்கு இருந்தன.
அண்ணன் அவர்களே
முடிவுசெய்யும்படி சொன்னோம்.
அவர்களோ, “வாருங்கள்! இரவு உணவு உண்போம்! உண்டவாறு பேசுவோம்!” என்று உணவகத்துக்கு அழைத்தார். இரவு எட்டு மணி
என்பதால் இண்டர்லாகனில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஒரு பாகித்தான் உணவகம் திறந்திருந்தது. கடையில்
அமர்ந்து, அவரவர்களுக்குத் தேவையான உணவைத் தரும்படிக்
கேட்டோம். ஓட்டுநர் அருளின் தட்டில் வைத்த உணவில்
முட்டைக்கோசு, கேரட் வெட்டப்பட்டுத் துண்டுகளாகக் கிடந்தன.
அதில் ஒரு புழு நெளிந்தது. உணவகத்தாரிடம் வேறு
உணவு கொடுக்கும்படி கேட்டோம்;
கொடுத்தார்கள். ஓரளவு வயிற்றுப்பசி தீர்ந்தது.
சிறிதளவு பனிக்கட்டி கடையில் வாங்கி அண்ணனுக்குத் தலையில் ஒத்தடம்
கொடுத்தோம். வலி மறைந்தது. இப்பொழுது இயல்பாக இருப்பதாகவும்,
பயணத்துக்குத் தயார் எனவும் சொன்னார். எங்களுக்கு
ஆறுதலாக இருந்தது. இண்டர்லாகனில் இரவு ஒன்பது மணியளவில் புறப்பட்ட எங்கள் மகிழ்வுந்து
பெரும் மலைப்பாதைகள் வழியாக இத்தாலி நோக்கி விரைந்தது. சுற்று
வழிகளைத் தவிர்த்துக் குறுக்கு வழியில் செல்ல மூன்று, நான்கு
பெரும் மலைகளைக் கடக்க வேண்டியிருந்தது. எங்கள் வண்டி,
தனித்துச் செல்வதாக உணர்ந்தேன். ஏதேனும்
விபத்து என்றாலோ, அல்லது வேறு உதவி தேவைப்பட்டாலோ உதவுவதற்கு
அந்த வழியில் ஆள் நடமாட்டம் இல்லை. இடையிடை சில இடங்களில்
மக்கள் வதியும் இடங்கள் தென்பட்டன. சிலர் நடுவழியில் தங்கள்
மகிழ்வுந்துகளை ஓரமாக நிறுத்தி ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். இத்தகு மலைப்பாதைகள் நம் நாட்டில் இருப்பின் ஆறலைக் கள்வர்கள் கைவரிசை
காட்டாமல் இருக்கமாட்டார்கள். சுவிசர்லாந்து என்பதால் கள்வர்
அச்சம் இல்லை. பல ஊர்களையும் வளைவுகளையும் கடந்து இத்தாலி
எல்லையை நள்ளிரவு 1.30 மணிக்கு அடைந்தோம்.
இத்தாலியில் உள்ள மிலன் நகரில் இன்று
இரவு தங்குவது என்று முடிவு செய்தோம்.
இணையத்தில் விடுதிகளில் முன்பதிவு செய்ய எத்தனையோ வசதிகள்
இருந்தாலும் உடனடியாக முடிவெடுத்து அப்பொழுதைக்கு அப்பொழுது எங்கள் பயணத்திட்டம்
மாற்றம் பெறுவதாக இருந்ததால் விடுதிக்கு முன்பதிவு செய்யவில்லை.
நள்ளிரவு நேரத்தில் ஒவ்வொரு
விடுதியாக நுழைந்து அறை கிடைக்குமா?
என்று வினவிப் பார்த்தோம். பெருநகர வீதி
என்பதால் விடுதிகள் பெரிய வனப்புடனும் வசதிகளுடனும் இருந்தன. இத்தாலி விடுதிகள் பளிங்குக்கற்களால் இழைக்கப்பட்டிருந்தன. விடுதிகளில் நுழைந்து அறை கிடைக்குமா என்று கேட்பதற்கே தயங்கும் வகையில்
விடுதிகளின் தோற்றப்பொலிவு இருந்தது. மகிழ்வுந்துகள்
இங்கொன்றும் அங்கொன்றும் வருவதும் போவதுமாக இருந்தன. ‘நகர
நம்பியர்கள் திரிதரு மறுகு’ என்பதற்கு அறிகுறியாகப் ‘பொருட்பெண்டிர்’
நடமாட்டத்தை அங்குக் கண்டேன்.
நானும் ஓட்டுநர் அருளும்
ஒவ்வொரு விடுதியின் முன்பும் இறங்கி விடுதியில் நுழைந்து அறை வேண்டிப்
பாடுகிடந்தோம். ஒரு விடுதியின் மேலாளர் தம் விடுதியில் அறை இல்லை எனவும் அருகில் உள்ள
‘சொபர்க்கா’ (Hotel Soperga) விடுதியில் அறை உள்ளதாகவும்
தெரிவித்தார். மூவர் தங்கும்படியாக ஒரு அறையைப் பிடித்தோம்.
குடிக்கூலி எவ்வளவு விலை என்றாலும் தருவதற்கும் தயாராக இருந்தோம்.
நள்ளிரவு 2.30 மணிக்கு அறை கிடைத்துது.
தூய்மையான விடுதி; அனைத்து வசதிகளும் இருந்தன.
சுமைகளை வைத்துவிட்டு, அமைதியாக உறங்கினோம்.
காலையில் எட்டு மணி வரை ஓய்வெடுத்தோம்.
காலையில் குளித்து முடித்து
விடுதியில் வழங்கிய காலைச் சிற்றுண்டியை உண்டோம். பகலில் என்ன உணவு கிடைக்குமோ என்ற அச்சத்தில்
காலை உணவைப் பழமும், மாப்பண்டமும், பாலும்,
பழச்சாறுமாக உண்டேன்.
தரமான பேரீச்சம்பழங்கள் இருந்தன. கூடுதலாக
உண்டமையும் பால் குடித்தமையும் சோர்வை நீக்கின.
பகல் 12 மணியளவில் புறப்பட்டு,
பிற்பகல் 3 மணிக்குப் பைசா (Pisa (/ˈpiːzə/;
Italian pronunciation) நகரத்தை நெருங்கினோம். அண்ணன் அவர்களும் அண்ணியார் அவர்களும் பின்னிருக்கைகளில்
ஓய்வெடுத்தபடியும், உறங்கியபடியும் வந்தார்கள். நான் ஓட்டுநர் அருள் அவர்களிடம் உரையாடியவாறு முன்னிருக்கையில் அமர்ந்து
வந்தேன். சாலை வனப்பையும், வயல்வெளிகளையும்,
வயலில் மேய்ந்த மாடுகளையும் திரைத்து வைத்திருந்த வைக்கோல்
திரைகளையும் படம்பிடித்தேன். நம்மவர்கள் தாளை உருளைபோல்
உருட்டிவைப்பதுபோல் அவர்கள் வைக்கோலை வைத்திருந்தனர். அடிப்படையில்
உழவர் குடும்பத்தினன் என்பதால் உழவுசார்ந்த காட்சிகளைக்
கவனிப்பதில் என்னையறியாமல் ஈடுபட்டேன்.
வைக்கோல் திரைகள்
பைசா என்பது உலகச்
சுற்றுலாக்காரர்களைக் கவர்ந்திழுக்கும் அழகிய நகரமாகும். பைசாவில் உள்ள கோபுரம்
எழுந்ததற்குச் சுவையான வரலாறு உண்டு. இத்தாலிக்கு அருகில்
உள்ள சிசிலித் தீவில் (Sicily) பாலர்மோ (Palermo) என்று ஒரு நகர் இருந்தது (இன்றும் உள்ளது). 1068 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள
மக்களுள் ஒரு பிரிவினரான பீசியன்கள் பாலர்மோ நகரின் மீது தாக்குதல் நடத்தி,
வைரங்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த செல்வங்களைக் கொள்ளையிட்டுக் கொண்டு
வந்தனர். அந்தக் கொள்ளையை மாபெரும் வெற்றியாகக் கருதினர்.
தங்களின் வெற்றியின் அடையாளமாக
அவர்கள் உருவாக்கியதுதான் பைசா கோபுரம். பாலர்மோ,
சிசிலியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையுடைய கட்டடங்கள், ஓவியங்கள் பழைமை மாறாமல் இன்றும் பராமரிக்கப்படுகின்றன. அந்நாட்டினரின் ஓவியத்திறமை, கட்டடக்கலை ஆகியவற்றை
நினைக்கும்பொழுது அவர்களின் அறிவார்ந்த நாகரிக வாழ்க்கை புலப்படுகின்றது. நம் கோயில்களையும், மாளிகைகளையும் பராமரிக்காத
இழிநிலை எண்ணி வருந்தவேண்டியுள்ளது.
இத்தாலியின் பளிங்குக்கல்
பைசா கோபுரத்தை கி.பி.1073 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கியுள்ளனர். இதனைக் கட்டி முடிக்க சுமார் 345 ஆண்டுகள்
ஆகியுள்ளன. 1417 இல் கட்டி முடித்திருக்கிறார்கள். சுண்ணாம்பும், பளிங்கும் இணைந்த அழகிய தோற்றம்
கொண்டு பைசா விளங்குகின்றது. அருகில் ஓடும் ஆற்றின் காரணமாக
மண் உறுதியற்றுக் காணப்பட்டுள்ளது. எனவே கட்டடம் கட்டத்
தொடங்கிய காலத்திலேயே கோபுரம் சாயத் தொடங்கியுள்ளது.
உலகின் பல கட்டடக்கலை வல்லுநர்களும் முயன்று சாய்கோபுரத்தைச்
சாயாமல் நிலை நிறுத்தியுள்ளனர். சுற்றுலா செல்லும் பெரும்பாலானவர்கள்
ஓரிருநாள் தங்கி, கோபுரத்தின் உயரே ஏறிப் பார்த்துத்
திரும்புவர். அருகில் உள்ள ஊர்களையும் நகரங்களையும்
பார்ப்பார்கள். எங்களுக்கு அந்த வாய்ப்பு இந்த முறை
அமையவில்லை. பைசா கோபுரத்தைப் பார்க்க மக்கள் சாரை சாரையாகச்
சென்றவண்ணம் இருந்தனர்.
கோட்டைச்சுவர் போன்ற பகுதியில்
வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தோம்.
பரந்த புல்வெளிகளில் மக்கள் வெயில் காய்வதும், படம் பிடிப்பதுமாக இருந்தனர். நாங்களும் தேவையான
அளவு படம் பிடித்துக்கொண்டோம். அருகில் சென்று கோபுர
வனப்பைக் கண்டு களித்தோம்.
கு.இளங்கோவன், அவர்களின் துணைவியார்
கோபுரத்தின் மேலேறுவதற்குக்
கூட்டம் வரிசையாக நின்றது. எங்களுக்கும் ஏறிப்பார்ப்பதற்கு
ஆசைதான். அண்ணனின் உடல்நிலை நினைத்து அந்த முயற்சியைக்
கைவிட்டோம். நேரப் பற்றாக்குறை காரணமாக அருகில் இருந்த
உணவகத்தில் பகலுணவு முடித்தோம்.
பைசா கோபுரத்தின் அழகிய தோற்றம்
சாலையோரக் காட்சிக் கடைகளில்
பொருள்களை அண்ணியார் வாங்கினார்கள். உரையாடியபடி பைசா
வீதிகளில் நடந்து பார்த்தோம். இங்குப் பொருள்களை விற்பனை
செய்வதற்கு ஆப்பிரிக்க இளைஞர்கள் சாலைகளில் அதிகம் காணப்பட்டனர். கள்வர் பயம் உண்டு என்று ஓட்டுநர் ஏற்கெனவே சொல்லியிருந்தார். எனவே எங்கள் மகிழ்வுந்தைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தியிருந்தோம்.
4.15 மணி வரை பைசாவில் இருந்தோம். இரவு
எங்குத் தங்குவது என்று கலந்துரையாடினோம். உரோமாபுரிக்குச்
செல்வது என்றும் உரோமாபுரியின் முகப்பிலேயே விடுதிகளில் தங்கிக்கொள்வது வாய்ப்பாக
இருக்கும் என்றும் முடிவுசெய்தோம். இடையில் இரவு உணவை
முடித்துக்கொள்ளலாம் என்று முடிவானதும் உரோமாபுரி நோக்கி வண்டி விரைந்தது.
1 கருத்து:
நாங்களும் தொடர்கிறோம் ஐயா
கருத்துரையிடுக