பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்
“தமிழ் நாட்டுப்புறக் கலைகள்”
குறித்த ஓர் ஆய்வுரை எழுத அண்மையில் நூல்களைப் படித்தபொழுது,
தொடர்புடைய அறிஞர்களிடம் பேசியும் விவரம் பெறலாம் என நினைத்தேன்.
முதலில் தொடர்புகொள்ள நினைத்ததும் தூத்துக்குடிப் பேராசிரியர் ஆ.
சிவசுப்பிரமணியன் அவர்களின் பெயர் நினைவுக்கு வந்தது. தொலைபேசியில் முதற்கட்டப் பேச்சு முடிந்தது. அடுத்து
சிலநாள் இடைவெளியில் மீண்டும் பேசினோம். உரையாடல் அரைமணி நேரத்திற்கும்
மேலாக நீண்டது.
உரையாடல் நிறைவில், “ஐயா! தாங்கள் புதுச்சேரி வரும்பொழுது செய்தி சொல்லுங்கள். இல்லம் வாருங்கள்” என்று வேண்டுகோள் ஒன்றை வைத்தேன்.
அப்பொழுதுதான் பேராசிரியர் அவர்கள் தம்மால் நெடுந்தூரம் பயணிக்கமுடியாது
என்றும் சிலவாண்டுகளுக்கு முன் நடைபெற்ற நேர்ச்சியொன்றில் கால் எலும்புகள் முறிந்து
இல்லில் ஓய்வெடுப்பதாகவும் கூறினார்கள். இச்சொற்கள் என் உள்ளம்
கரைத்தது. நாட்டுப்புறவியல் ஆய்வுக்கெனப் பலநூறு கல்தொலைவு அலைந்து
திரிந்து செய்தி திரட்டி, அறிவுத்தீ கொளுத்திய ஒரு பேராசான் இல்லில்
சிறைப்பட்டமைபோல் வாழ்வது வருத்தம் தந்தது.
அப்பொழுது, நான் வந்து பார்க்க இசைவு
தரும்படி கேட்டுக்கொண்டேன். நாள் குறித்தோம். தொடர்வண்டியில் சீட்டுப் பதிந்து உரிய நாளுக்குக் காத்திருந்தேன்.
22. 06. 2015 முத்துநகர் தொடர்வண்டியில்
தூத்துக்குடிக்குப் புறப்பட்டேன். இவ்வூருக்கு என் முதல்செலவு
இதுவாதலின் நண்பர்களிடம் உரையாடி ஊர்குறித்த உரிய விவரங்களைப் பெற்றுக்கொண்டேன்.
23. 06. 2015 காலை எட்டு மணியளவில் பேராசிரியர் இல்லம் சென்றடைந்தேன்.
இதுதான் பேராசிரியருடன் அமையவுள்ள நெருக்கமான முதல் சந்திப்பு.
இதற்கு முன்பு கருத்தரங்குகள் சிலவற்றில் பேராசிரியரின் உரை கேட்டிருந்தாலும்
என் உருவம் நினைவில் நிற்கும்படியாக எந்தச் சந்திப்பும் இதுவரை நடந்ததில்லை.
பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின்
இல்லத்தில் ஒரு குளியல் போட்டேன். பேராசிரியர் அவர்களின் துணைவியார்
திருவாட்டி அருணா அம்மா அவர்கள் சிற்றுண்டியும் பகலுணவும் குறிப்பறிந்துகொடுத்தார்கள்.
மெதுவாக நலம் வினவியபடி தமிழ் ஆய்வுச்சூழலில் இருவரும் புகுந்தோம்.
பேராசிரியர் அவர்களின் இளமைக்காலம், கல்வி,
ஆசிரியர்பணி, ஆய்வு, களப்பணி,
நூல் முயற்சிகள், ஆய்வறிஞர் நா.வா. அவர்களின் தொடர்பு, திராவிட இயக்க ஈடுபாடு,
பொதுவுடைமை இயக்க ஈடுபாடு, வ.உசி குறித்த விவரங்கள்,
ஆஷ்கொலை, ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட வரலாறு,
நெல்லையில் கிறித்தவம் பரவிய வரலாறு, தாமிரபரணி
சார்ந்த எழுத்தாளர்கள், கரிசல் எழுத்தாளர்கள், நெல்லை மாவட்டத்துப் படைப்பாளர்கள், இன்றைய விருதளிப்பு,
இலக்கியப்போக்குகள் என்று மாலை
4 மணிவரை எங்கள் உரையாடல் தொடர்ந்தது. உரிய செய்திகள்
சிலவற்றை ஒலிப்பதிவில் பதிந்துகொண்டேன். சில படங்களையும் நினைவுக்கு
எடுத்துக்கொண்டேன்.
பேராசிரியர் அவர்கள் சற்றும் சலிப்படையாமலும் சோர்வடையாமலும்
ஒரு வகுப்புத்தோழனிடம் உரையாடுவதுபோல் உரையாடினார்கள். அவர்களின்
பணிகளைப் பிறகு விரித்து எழுத நினைத்தாலும் இப்பொழுது சில குறிப்புகளைப் பதிந்துவைக்கின்றேன்.
பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள்
நெல்லை மாவட்டம் ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் 09.04.1943 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் ஆழ்வாரப்பன்,
சுப்பம்மாள் ஆவர். தந்தையார் தொழிலின் நிமித்தம்
பல ஊர்களில் வாழ்ந்ததால் இவரின் படிப்பும் பல ஊர்களில் அமைந்தது. அவ்வகையில் ஓட்டப்பிடாரம், சென்னையில் சூளைமேட்டில் இருந்த மாநகராட்சிப்
பள்ளி, ம.தி.தா.இந்துக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி என இவரின் பள்ளிப்படிப்பு அமைந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தம் இருபதாம் அகவையில் புலவர் வகுப்பில்
சேர்ந்து நான்கு ஆண்டுகள் கல்வி பயின்றவர் (1963 - 67). அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் ஆ.சிவசுப்பிரமணியன் பயின்றபொழுது உலக ஊழியர், உளுந்தூர்பேட்டை சண்முகம், அ.நடேசமுதலியார்,
மெய்யப்பன், மு.அண்ணாமலை,
ஆறு. அழகப்பன், சோம.இளவரசு போன்ற பேராசிரியர்கள் பணிபுரிந்தனர்.
1967 இல் தூத்துக்குடியில்
உள்ள வ.உ.சி. கல்லூரியில் பணியேற்றார்.
2001 ஏப்ரல் மாதம் வரை இவரின் தமிழ்ப்பணி இக்கல்லூரியில் அமைந்தது. பேராசிரியர் அவர்கள்
தூத்துக்குடி கல்லூரியில் பணியாற்றியபொழுது பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு,
பல்வேறு ஊர்களில் மாணவர்கள், பொதுமக்கள், இயக்கத்தவர்களுக்கு மார்க்சிய வகுப்புகளை
நடத்தியுள்ளார்.
பேராசிரியர் நா.வானமாமலை, தோழர் நல்லகண்ணு,
தோழர் ப.மாணிக்கம் உள்ளிட்ட பொதுவுடைமை இயக்கத்தவர்களுடன் அமைந்த நட்பால் இவர்தம் படிப்பு
சமூகவியல் சார்ந்தும், நாட்டுப்புறவியல் சார்ந்தும் விரிவடைந்தது.
பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின்
கட்டுரைகளும் நூல்களும் தமிழகத்தில் அறியப்படாமல் இருந்த பலசெய்திகளை வெளிச்சமிட்டுக்
காட்டுவன. ஆஷ் கொலை குறித்தும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. குறித்தும் இவர் வரைந்துள்ள
ஆய்வுரைகள் தமிழ்நாட்டு அறிஞர்களால் பெரும் வரவேற்பைப்பெற்றவை. நெல்லை மாவட்டத்தின்
சிற்றூர்ப் புறங்களிலும் கடற்கரைப் பகுதிகளிலும் மக்களிடையே இருந்த வாய்மொழி வழக்காறுகளைத்
தொகுத்து, தமிழகத்தின் மக்கள் வரலாறு எழுதுவதற்கு முன்னோடியாகச் செயல்பட்டவர். எழுதுவதும்
பேசுவதும் இவரின் இயல்பாக உள்ளது. அறிவார்வம்கொண்டவர்கள் பேராசிரியர் அவர்களின் உரையில்
நனைந்தால் புத்துணர்ச்சியும் புத்தறிவும் பெறலாம்.
பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்-அருணா இணையருக்கு மூன்று மக்கட்செல்வங்கள். ஆழ்வார்,
இராமலிங்கம், சுப்பு(மகள்) ஆவர். அனைவரும் படித்து நல்ல
நிலையில் உள்ளனர்.
பேராசிரியர் அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் எழுதுவதிலும், பேசுவதிலும் தம் வாழ்நாளை உவப்புடன் ஈடுபடுத்திவருகின்றார்.
பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் நூல்கள்
1. பொற்காலங்கள் – ஒரு மார்க்சிய
ஆய்வு(1981)
2. அடிமை முறையும் தமிழகமும்(1984)
3. வ.உ.சியும் முதல் தொழிலாளர்
வேலை நிறுத்தமும்(1986,2012)
4. ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்(1986, 2009)
5. மந்திரமும் சடங்குகளும்(1988,1999,2010,2013)
6.பின்னி ஆலை வேலைநிறுத்தம்(1921,1990)(இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி)
7. எந்தப் பாதை(2000)
8. வ.உ.சி. ஓர் அறிமுகம்(2001)
9. கிறித்தவமும் சாதியும்(2001,2001,2003,2006,2011)
10. தமிழ் அச்சுத்தந்தை அண்டிரிக் அடிகளார்(2003)
11. தமிழகத்தில் அடிமை முறை(2005,2007
மார்ச்சு,2007நவம்பர்,
2010,2012
12. நாட்டார் வழக்காற்றியல் அரசியல்(2006)
13. பஞ்சமனா பஞ்சயனா(2006)
14. தோணி(2007)
15. கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும்(2007,2012)
16. கோபுரத் தற்கொலைகள்(2007)
17. வரலாறும் வழக்காறும்(2008,2010)
18. ஆகஸ்ட் போராட்டம்(2008)
19. வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-ஓர் அரிச்சுவடி(2008)
20. உப்பிட்டவரை…(2009)
21. இனவரைவியலும் தமிழ் நாவல்களும்(2009)
22. பண்பாட்டுப் போராளி-
நா.வானமாமலை(2010)
23. படித்துப்
பாருங்களேன்….(2014)
பதிப்பு
1. பூச்சியம்மன் வில்லுப்பாட்டு(1989, 2013)
2. தமிழக நாட்டுப்புறப் பாடல்களஞ்சியம்(தொகுதி 10)(2003)
3. தமிழக நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம்(தொகுதி10)(2004)
4. உபதேசியார் சவரிராய பிள்ளை
1801 -1874(2006)
5. கல்லறை வாசகப்பா – கூத்து நாடகம்(2007)
6. பெரியநாயகம் பிள்ளை தன்வரலாறு(2008)
குறுநூல்கள்
1. எந்தப் பாதை(1992)
2. தர்காக்களும் இந்து இஸ்லாமிய ஒற்றுமையும்(1997)
3. பிள்ளையார் அரசியல்(2000)
4. பண்பாட்டு
அடையாளப் போராட்டங்கள்(2014)
5. மதமாற்றத்தின் மறுபக்கம்(2002)
6. விலங்கு உயிர்ப்பலித் தடைச்சட்டத்தின் அரசியல்(2003)
7. புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள்(2006)
8. இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்(2012)
9. தமிழ்ச் சமூகத்தில் சீர்திருத்த சிந்தனைகள்(2012)
10. தர்காக்களும் இந்து இசுலாமிய ஒற்றுமைகளும்(2014)
11. இந்தியாவில் சாதிமுறை:
அம்பேத்கரும் காந்தியும்(2014)
12. அம்பேத்கரும் மனுஸ்மிருதியும்(2014)
** இக்குறிப்புகளை, படங்களை எடுத்தாள விரும்புவோர் எடுத்த இடம் சுட்டுக.