நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 27 ஜூன், 2015

இலக்கண அறிஞர் பேராசிரியர் சு.அழகேசன்

பேராசிரியர் சு.அழகேசன்

  தொல்காப்பிய மன்றம் அமைப்பது தொடர்பில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். தூத்துக்குடியில் வாழும் பேராசிரியர் சு. அழகேசன் அவர்களைத் தெரியுமா? என்று முனைவர் கட்டளை கைலாசம் அவர்கள் வினவினார். மனோன்மணியப் பல்கலைக்கழகப் பேராசிரியரா? என்று ஒரு வரியில் நிறுத்திக்கொண்டேன். ஆம். அவரேதான்! அவரையும் அவர் பணிகளையும் அறிவீர்களா? என்றதும், ஓரிரு கருத்தரங்குகளில் நொதுமலர் போல் பார்த்துள்ளேன் என்று முடித்துக்கொண்டேன்.

      பேராசிரியர் கட்டளை அவர்கள்தான் நம் ஐயா அழகேசன் அவர்களின் இலக்கண ஈடுபாட்டையும், அவரின் தொல்காப்பியப் பணிகளையும் அறிமுகம் செய்து வைத்தார்கள். இன்றைக்கு வாழும் பேராசிரியர்களில் தொல்காப்பியம் குறித்து உரையாடவும், இலக்கணம் குறித்து ஈடுபாட்டுடன் பேசவும் மிகச் சிலரே உள்ளனர். அந்தத் தலைமுறையினரின் எண்ணிக்கை குறைந்துவருகின்றது. இந்த நிலையில் பேராசிரியர் சு. அழகேசன் அவர்களின் இலக்கண ஈடுபாடு அறிந்து அவரைச் சந்திக்க அவரின் தூத்துக்குடி இல்லத்திற்குச் சென்றேன். இன்முகத்துடன் வரவேற்ற பேராசிரியர் அவர்களுடன் மூன்றரை மணிநேரம் உரையாடும் இனிய வாய்ப்பு அமைந்தது.

     பேராசிரியர் சு. அழகேசன் அவர்கள் சங்க இலக்கிய உரையாசிரியர்கள் உணர்த்தும்  இலக்கணக் குறிப்புகள் தொகுப்பும் ஆய்வும் என்ற தலைப்பில் செம்மொழி நிறுவனத்திற்காக உருவாக்கியிருந்த அரிய ஆய்வுத்தொகுதியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இந்த ஆய்வுத்தொகுப்பின் ஒவ்வொரு இயலும் ஒரு முனைவர் பட்ட ஆய்வுக்குரிய தலைப்பாகத் தெரிந்தது. பழம்பெரும் உரையாசிரியர்களின் கடலன்ன உரைகளில் மூழ்கி ஆய்வுமுத்துக்களை எடுத்துள்ள இந்த முத்துநகர் ஊராரின் புலமையைப் "பாம்பின்கால் பாம்பறியும்" என்ற அடிப்படையில் நுழைந்து பார்த்தேன். அவர்தம் கடும் உழைப்பைப் போற்றி, வாழ்த்தினேன். “மகன் எனல் மக்கள் பதடி எனல்என்பதில்எனல்என்ற ஒரே சொல் ஈரிடங்களில் இருபொருளில் வரும் புதிரைப் பரிமேலழகர் வழியில் விடுவித்தபொழுது இலக்கணப் புலி ஒருவர் பதுங்கி வழிவிட்டதை நம் பேராசிரியர் சு. அழகேசனார் சொன்னபொழுது உள்ளம் மகிழ்ந்தேன்.

  நம் பேராசிரியர் சு. அழகேசனார் அவர்கள் குறிப்பு வினைகள்அமைப்பும் வருகை முறையும் என்ற தலைப்பில் கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றவர்(1983). ஆய்வுக்காலத்தில் இவர்தம் நெறியாளர் பேராசிரியர் மா. இளையபெருமாள் ஆவார். தம் ஆசிரியர்மேல் மிகுந்த மதிப்பும், அன்பும்கொண்டு அழகேசனார் விளங்குவது பின்பற்றத்தகுந்த பண்பாகும். ஆய்வு மாணவராகப் பயின்றபொழுது இலக்கணப் பாடங்களை மாணவர்கள் உள்ளம்கொள்ளும் வகையில் இவர் நடத்திப் புகழ்பெற்றவர். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் அதில் பணிபுரிந்த பேராசிரியர்களும் நன்மாணாக்கர்களை உருவாக்குவதில் தலைசிறந்தவர்கள்.

  பேராசிரியர் சு. அழகேசனார் சிவகாசி அய்யநாடார் சானகி அம்மாள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பலவாண்டுகள் பணியாற்றியவர். அதன்பிறகு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி இம்மாத நிறைவில்(2015, சூன் 30) ஓய்வுபெற உள்ளார்.

  பேராசிரியர் சு. அழகேசன் அவர்கள் நெல்லை மாவட்டம் இராதாபுரம் வட்டம் பழவூர் என்ற ஊரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர்(20.03.1955). இவர்தம் பெற்றோர் அ.சுப்பையா பிள்ளை, திருவாட்டி காந்திமதி அம்மாள் ஆவர். கடும் உழைப்பும், நல்லோரின் தொடர்பும் இவருக்குக் கல்விக்கரையில் துணைநின்றன.  பள்ளி இறுதி வகுப்பு வரை வடக்கன்குளம் தூய தெரேசாள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் புகுமுக வகுப்பையும்(1972), இளம் அறிவியல் வகுப்பையும்( 1975) நிறைவுசெய்தவர். முதுகலைத் தமிழ்ப் பாடத்தினை நெல்லை ம.தி.தா இந்துக் கல்லூரியில் பயின்றவர். மொழியியலில் முதுகலைப்பட்டமும், சான்றிதழும், சைவசித்தாந்தத்தில் பட்டயமும் பெற்றவர். முப்பது ஆண்டுகளாப் பேராசிரியர் பணியாற்றிய இவர் 32 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற நெறியாளராக விளங்கியுள்ளார். 80 ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்கு நெறியாளராக இருந்துள்ளார். 21 நூல்களையும் 150 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் வரைந்துள்ளார். "அழகு" என்ற இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். பல்வேறு இலக்கிய அமைப்புகள், கல்விக்குழுக்கள், சமூக மேம்பாட்டு அமைப்புகளில் பொறுப்புகள் ஏற்றுத் திறம்படச் செயல்பட்டுள்ளார்.

  பேராசிரியர் சு. அழகேசன் அவர்கள் கல்லூரிப் பணியை ஒரு முகவரிக்கு உரிய இடம்  என்று நினைக்காமல் சேவை செய்வதற்குக் கிடைத்த ஓர் இடமாக நினைத்தவர். இதனால் எளிய நிலை மாணவர்கள் படித்து முன்னேறப் பெரும் உதவியாக இருந்தவர். இவரின் ஆதரவில் படித்துப் பலர் முன்னேறியுள்ளனர். இலக்கணத்தை வெறுத்து ஒதுக்கிய மாணவர்களையும் தம் வெல்லப் பேச்சால் இலக்கணம் பக்கம் இழுத்து ஆய்வுசெய்ய வைத்தவர். பேராசிரியர் ச.வே.சு. அவர்களின் பெயரில் அறக்கட்டளை நிறுவி ஆண்டுதோறும் பொழிவுகள் நடக்க வழிவகை செய்துள்ளார். தூத்துக்குடிப் பகுதியில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளுக்கு உயிர்கொடுக்கும் ஒரு கொடையாளராக இருந்து உதவிசெய்பவர்.

  தொல்காப்பியர் மன்றம் என்ற அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் தொல்காப்பியக் கருத்தரங்குகளும் இலக்கணக் கருத்தரங்குகளும் தம் சொந்த செலவில் நடத்துவதற்குத் திறம்படப் பணியாற்றியுள்ளார். இக்கருத்தரங்கச் செய்திகள் காற்றில் கரைந்துவிடாமல் நூல்வடிவில் ஆய்வுக்கட்டுரைகளாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாம்.

  பேராசிரியர் சு. அழகேசன் அவர்களின் தமிழ்ப்பணிக்கு உறுதுணையாக இருப்பவர் இவர்தம் துணைவியார் மருத்துவர் இராஜேஸ்வரி அவர்களாவார். தூத்துக்குடியின் புகழ்பெற்ற மருத்துவர் இவர். இவர்களின் ஒரே மகன் ருத்துவர் அ. சுதன்குமார் மருத்துவத் துறையில் மேல்படிப்பு படித்துவருகின்றார்.

 முனைவர் சு. அழகேசன், மருத்துவர் இராஜேஸ்வரி

  பணி ஓய்வுக்குப் பிறகும் தமிழ்ப்பணியில் - சிறப்பாகத் தொல்காப்பியம் பரப்பும் பணியில் ஈடுபட உள்ள பேராசிரியர் சு.அழகேசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

பேராசிரியர் சு. அழகேசன் அவர்களின் தமிழ்க்கொடை

 1. இலக்கணப் பாதைகள் (1991)
 2. டாக்டர் மா.இளையபெருமாள் அவர்களின் வாழ்வும் பணியும் (1994)
 3. திருவண்ணாமலை அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில்      வழிபாடுகளும் திருவிழாக்களும் (1996)
 4. இலக்கணச் சுவை (1996)
 5. இலக்கண ஆய்வு- தொல்காப்பியம் (2001)
 6. நன்னூல் எழுத்ததிகாரம் (2002)
 7. இலக்கண ஆய்வு - தொல்காப்பிய உரைகள் (2002)
 8. நன்னூல் சொல்லதிகாரம் எளிய உரை (2003)
 9. இலக்கண ஆய்வு: நன்னூல் (2003)
 10. இலக்கண ஆய்வு: நன்னூல் உரைகள் (2006)
 11. தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் ஒரு பல்கலைக்கழகம் (2006)
 12. இலக்கணப் பார்வைகளும் பதிவுகளும் (2007)
 13. தொல்காப்பியம் மூலம் மட்டும் (2008)
 14. இலக்கண ஆய்வுகள்: சிற்றிலக்கணங்கள் (2008)
 15. இலக்கணத் தேடல்கள் (2009)
 16. திருநெல்வேலி வட்டார ஆண்தெய்வங்கள் (2009)
 17. இலக்கண ஆய்வுக்கோவை (2011)
 18. ..சியின் தொல்காப்பிய எழுத்ததிகார இளம்பூரணம் (2011)
 19. தொல்காப்பியக் கொள்கைகளும், தமிழ் இலக்கண வளர்ச்சியும் (2012)
 20. பேரா.சுந்தரம் பிள்ளையின் பன்முகப் பரிமாணங்கள் (2012)
 21. இலக்கண ஆய்வுக்கோவை (2015)
பேராசிரியர் சு. அழகேசன் அவர்கள் பெற்ற விருதுகள்

 1. சிறந்த பேராசிரியர் விருதுமனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகம்
 2. ஜாம்பவான் விருது- தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம், சென்னை
 3. சங்கரதாஸ் சுவாமிகள் விருது- இயல் இசை நாடக மன்றம், புதுவை
 4. தொல்காப்பிய விருது, ..சி அரிமா சங்கம், தூத்துக்குடி
 5. இலக்கணச் செம்மல் விருது, கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்றம்,  சேலம்
 6. இலக்கியச் செம்மல் விருது, அரிமா சங்கம், தூத்துக்குடி
 7. சிறந்த சைவப் புரவலர் விருதுவெள்ளார் சங்கம், தூத்துக்குடி  

கருத்துகள் இல்லை: