சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்கள்
கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் வாழும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், எழுத்தாளர்கள், தொழிலாளர்களென அங்குப் பணிபுரியும் என் உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் பழகும் வாய்ப்பு எனக்குக்
கிடைத்துள்ளது. சிலரைப்பற்றி முன்பே என் பதிவுகளில் எழுதியுள்ளேன்.
எதிர்காலத்தில் இந்தப் பட்டியலில் பதிந்துவைக்கத்தக்க பெருமைக்குரியவர்கள் இன்னும் பலர் உள்ளனர்.
இந்தமுறை சிங்கப்பூர் சென்றபொழுது தொல்காப்பிய மன்றம் அமைப்பது குறித்து உரையாடிக்கொண்டிருந்தோம். அப்பொழுது திரு.
கி. திருமாறன் அவர்களும் நண்பர்திரு.
சந்தன்ராசு அவர்களும் சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்களைப் பற்றியும் அவர்களின் பணிகளைப் பற்றியும் ஆர்வமுடன் குறிப்பிட்டார்கள்.
திரு. சித்தார்த்தன் அவர்கள் தமிழ்மொழியிலும் தமிழ்க்கல்வியிலும் தமிழ் இலக்கணத்திலும் மிகுந்த நாட்டமும் ஈடுபாடுமுடையவர் என்பதறிந்து அவரைச் சந்திக்க எண்ணினோம்.
திரு.சித்தார்த்தன் அவர்களைச் சந்திக்க நேரமும் இடமும் தெரிந்துகொண்டு
அவரைச் சந்தித்தோம். மூன்றுமணி நேரத்திற்கும் மேலாகத்திரு. சித்தார்த்தன் அவர்களுடன் உரையாடிப் பல்வேறு செய்திகளைத் தெரிந்துகொண்டேன்.
நண்பர்திரு. முனியாண்டியும் (மலேசியா)
எங்கள் உரையாடலில் ஆர்வமுடன் கலந்துகொண்டார்.
சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி வரலாற்றை எழுதி முழுமைப்படுத்த,
திரு. சித்தார்த்தன் அவர்களிடம் அரியசெய்திகள் பல உள்ளன. ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் தோன்றிய வரலாறு, அதற்குப் பின்புலமாக இருந்த பெருமக்கள் என அனைவரையும் திரு. சித்தார்த்தன் எங்களுக்கு நினைவூட்டினார்.
திரு. சித்தார்த்தன் அவர்களிடம் அரியசெய்திகள் பல உள்ளன. ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் தோன்றிய வரலாறு, அதற்குப் பின்புலமாக இருந்த பெருமக்கள் என அனைவரையும் திரு. சித்தார்த்தன் எங்களுக்கு நினைவூட்டினார்.
திரு.
சித்தார்த்தன் அவர்கள்
சிங்கப்பூரில் 1936 - இல் பிறந்தவர். அவருடைய இயற்பெயர் கேசவன்.
இவரது தந்தையார் டாக்டர் ரெ. பார்த்தசாரதி; தாயார் உதயம் அம்மையார். தமிழகம் சென்று
கல்விபயின்று மீண்டும் சிங்கப்பூர் திரும்பி ஆசிரியப்பணியை மேற்கொண்டார். தமிழகத்தில்
மன்னார்குடிக்கு அருகிலுள்ள கடுக்காகாடு என்னும் ஊர் இவருடைய
பூர்வீகமாகும்.
தமிழ்க்
கல்விக் கழக நிருவாகத்திலிருந்த வாசுகி தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப்
பணியைத் தொடங்கிய சித்தார்த்தன், ஆங்கில உயர்நிலைப் பள்ளிகளிலும்
தொடக்கக் கல்லூரிகளிலும், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்திலும், தேசியக்
கல்விக் கழகத்திலும் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
சிங்கப்பூர்க்
கல்வி அமைச்சில் பாடநூல் எழுத்தாளராகவும், கல்வி மேம்பாட்டு அதிகாரியாகவும், சிங்கப்பூர்ப்
பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தில் அறநெறிக்
கல்வித்திட்டக் குழுவில் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த சித்தார்த்தன், கல்வித்
தொழில் நுட்பப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். தமிழ்மொழி,
இலக்கியப் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும்,
செயலாளராகவும் பொறுப்பு வகித்துச் செயலாற்றியதோடு, தமிழ்க்
கல்வி தொடர்பான பல்வேறு குழுக்களிலும் உறுப்பினராக இருந்து
பணியாற்றியுள்ளார்.
சிங்கப்பூர்
150 - ஆம் ஆண்டு விழாச் சிறப்பு மலரைத் தமிழ்ப் பள்ளிகளும்,
ஆங்கிலப் பள்ளிகளின் தமிழ்ப் பகுதியும் இணைந்து வெளியிட்டன.
அந்த மலரின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக இருந்து முக்கியப் பங்காற்றினார்.
இளமைதொட்டே
தமிழ்மொழியிலும் இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுடைய சித்தார்த்தன் 1960 –
இலிருந்தே நாளிதழ்களிலும், இதழ்களிலும்
பல்வேறு பொருள்பற்றிக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழ்மொழி,
இலக்கியம், பண்பாடு, சமூகம் முதலியவைபற்றி ஆய்வரங்குகளில் கட்டுரைகள் படைத்திருக்கின்றார்.
சிங்கை வானொலியில் பல ஆண்டுகள் வாரந்தோறும் இவர் எழுதிவந்த ‘எளிய
இலக்கணம்’ நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்தின் மாணவர்களுக்கான
நிகழ்ச்சிகள் பலவற்றில் இவரது
பங்கு குறிப்பிடத்தக்கது.
நிருத்தியாலயா
கவின் கலைக் கழகத்தின் ஆதரவில் கவியரசு கண்ணதாசனின் ‘ஆட்டனத்தி
ஆதிமந்தி’ என்னும் குறுங்காவியத்தை ஒடிசியில் நாட்டிய நாடகமாக்கி மேடையேற்றியதில்
இவருக்கு முக்கியப் பங்குண்டு. இவர் எழுதிய ‘குலுக்குமாமி’,
‘புயலுக்குப்பின்’ என்னும் நாடகங்களும் நிருத்தியாலயா ஏற்பாடு செய்த நாடக விழாவில் அரங்கேறின.
சமுதாயப்
பணியில் ஆர்வம் மிக்க சித்தார்த்தன் பல்வேறு சமூக அமைப்புக்களில் முக்கியப்
பொறுப்புக்களை ஏற்றுப் பணியாற்றியுள்ளார்.
1980 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தை உருவாக்கிய முன்னாள் அதிபர் தேவன் நாயர் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதோடு அதன் கௌரவ செயலாளராகவும் இருந்தார். அச்சமயத்தில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறநிறுவனம், தேசிய நூல் வளர்ச்சிக் கழகம், தமிழர் பேரவை பன்னோக்குக் கூட்டுறவுக் கழகம்ஆகியவற்றிலும் முக்கியப் பொறுப்புக்களிலிருந்து பணியாற்றியுள்ளார்.
1980 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தை உருவாக்கிய முன்னாள் அதிபர் தேவன் நாயர் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதோடு அதன் கௌரவ செயலாளராகவும் இருந்தார். அச்சமயத்தில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறநிறுவனம், தேசிய நூல் வளர்ச்சிக் கழகம், தமிழர் பேரவை பன்னோக்குக் கூட்டுறவுக் கழகம்ஆகியவற்றிலும் முக்கியப் பொறுப்புக்களிலிருந்து பணியாற்றியுள்ளார்.
1965–
ஆம் ஆண்டில் தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் ‘போராட்டம்’ என்னும்
தமிழ் இதழுக்குப் பொறுப்பேற்று நடத்தினார். தேசியக் கலைக் கழகத்தின் இலக்கியப்
பிரிவில் (Resource Panel) உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1997 – ஆம் ஆண்டுமுதல் 2000 -
ஆம் ஆண்டுவரை தமிழர் பேரவையின் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
நிருத்தியாலயா
கவின் கலைக் கழகத்தின் துணைத்தலைவராக இருக்கும்
சித்தார்த்தன், பாஸ்கர் ஆர்ட் அகாடமியின் இயக்குநர்களில் ஒருவராகவும் பொறுப்பு
வகிக்கிறார். பதவி ஓய்வு பெற்றாலும் இவருடைய தமிழ்ப்பணி தொய்வின்றித் தொடர்கிறது.
சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்களின் தமிழ்க்கொடைகள்:
1.தமிழ் வாழும் (2000) (நர்மதா பதிப்பகம்)
2.இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்(2003)(நர்மதா பதிப்பகம்)
3.நமது இலக்கு என்ன? அதை அடைவது எப்படி? (2007)(நர்மதா பதிப்பகம்)
4.தமிழ்நலம் தமிழர்க்கு ஆக்கம் (2008)(நர்மதா பதிப்பகம்)
5.மெய்ப்பொருள் காண்போம் மேனிலைஅடைவோம். (2014)(நர்மதா பதிப்பகம்)
இப்பொழுது தம்நெஞ்சில் நிறைந்த பெரியோர்களைப் பற்றி எழுதவேண்டும் என்னும்
வேணவாவில் எழுத்துப்பணியைத் தொடர்கின்றார்.
சித்தார்த்தன் அவர்களின் மகள் ஆங்கில உயர்நிலைப் பள்ளி ஒன்றில் துணைமுதல்வராகவும்,
மகன், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கலைநிலையத்தில் துணைஇயக்குநராகவும் பணிபுரிகின்றனர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழும் இந்தச் செம்மல்,
படிப்பதும் படைப்பதுமான தமிழ்வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார்.
தமிழ் இலக்கணத்தை எளிமையாக எழுதிவழங்கியுள்ள செயலுக்கும்,
தமிழ்ச் சமூகவளர்ச்சிக்கு இவர் வழங்கியுள்ள கட்டுரை நூல்களுக்கும் தமிழுலகம் என்றும் நன்றிக்கடன்பட்டுள்ளது.
திரு. கி.திருமாறன், திரு. சந்தன்ராஜ், திரு.சித்தார்த்தன், மு.இளங்கோவன், திரு. முனியாண்டி
** இக்கட்டுரையின் குறிப்புகளை எடுத்தாள விரும்புவோர் எடுத்த இடம் சுட்டுக
1 கருத்து:
அறிஞர் அறிமுகம் நன்று. விக்கிபீடியாவில் ஓர் அறிஞரின் நூல் அறிமுகம் தொடர்பாக உங்களது வலைப்பூவை மேற்கோளாகச் சுட்டியுள்ளேன். விக்கி விதிப்படி அவர்கள் வலைப்பூக்களை மேற்கோளாக எடுத்துக்கொள்வதில்லை என நினைக்கிறேன். ஒரு சிறு முயற்சியாக தங்களின் பதிவு எனக்கு உதவியதை அங்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.
கருத்துரையிடுக