நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 23 ஏப்ரல், 2015

சமூக ஆர்வலர் முனைவர் இ.கே.தி. சிவகுமார்



 முனைவர் இ.கே.தி.சிவகுமார் அவர்கள்

திருக்குறளை நான் விரும்பிப் படிப்பதுண்டு. அதில் நட்புக்கு மட்டும் அதிகமான குறட்பாக்கள் இருப்பதை அவ்வப்பொழுது படித்து வியப்பதுண்டு. தேய்பிறை என்றும், வளர்பிறை என்றும் நட்புக்குச் சான்றுகாட்டி நம்மை ஒத்த எளிய மக்களுக்கு நல் நட்பையும், அல் நட்பையும் திருவள்ளுவர் விளக்குவார். இருபதாண்டுகளுக்கு மேல் என் நட்புவட்டத்தில் வளர்பிறைபோல் வளர்ந்துகொண்டிருக்கும் நட்புக்கு உரிமையுடையவர் பொதட்டூர்பேட்டை இ. கே. தி. சிவகுமார் ஆவார்.

பொதட்டூர்பேட்டை என்பது திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் இருக்கும் ஊர். நான் கலவைக் கல்லூரியில் பணியாற்றியபொழுது திரு.கோகுல், திரு. சரவணன் என்னும் இரு நன்மாணக்கார் அந்த ஊரிலிருந்து வந்து கற்றனர். அப்பொழுதுமுதல் அருமை நண்பர் சிவகுமார் அவர்களை அடிக்கடி நினைக்கவும், சந்திக்கவுமான வாய்ப்புகள் அமைந்தன. எளிய சிற்றூர்ப்புற மாணவராகச் சென்னை நோக்கி வந்து, தம் உழைப்பாலும், பழகும் பண்பாலும் இன்று அனைவராலும் மதிக்கத்தகுந்தவராக விளங்கி வருகின்றமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும்.

பொதட்டூர்பேட்டை சிவகுமார் அவர்கள் படிப்பு, பணி என்று மட்டும் அமையாமல் பல்வேறு அறப்பணிகளையும் தொய்வின்றிச் செய்து வருகின்றார். எளிய நிலையில் இருப்பவர்கள்கூட சாதனைகள் செய்யமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் முனைவர் .கே.தி. சிவகுமார் என்றால் மிகையாகாது. இவர் பொதட்டூர்பேட்டையில் டாக்டர் .கே. திருவேங்கடம், விஜயா ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்.

குடும்பப் பின்னணி:

ஏழ்மை நிலையில் உள்ள பலருக்கும் சிவகுமாரின் குடும்பம் தொடக்க காலம் முதலே தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வந்திருக்கிறது. அவரது தந்தையார் முனைவர் . கே. திருவேங்கடம் ஒரு ஆசிரியராக, எழுத்தாளராக, இலக்கியவாதியாக நன்கு அறியப்பட்டு வந்துள்ளார்.

  மேலும் அந்தக் காலத்திலேயே மிகவும் புகழுடன் அறியப்பட்ட ஏகிரி. சுப்பிரமணியனின் மகளாக .கே.தி. சிவகுமாரின் தாயார் திருமதி. விஜயா குடும்பப் பொறுப்புகளைத் திறம்பட நிர்வகித்து வந்துள்ளார். .கே.தி.சிவகுமாரின் மனைவி .சி. இராஜேஸ்வரி, ஒரு பதிப்பாசிரியராகவும், நல உதவி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் இருந்துகொண்டு, கணவரின் சமுதாயப் பணிகளுக்கும் உறுதுணையாக இருந்து செயலாற்றி வருகிறார்.

இவரது பிள்ளைகளான .சி. இராஜ்குமார்சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் (எம்..டி) மின்னணு பொறியியல் படித்து வருகிறார். மற்றும் .சி.விக்ணேஷ்குமார் 10 ஆம் வகுப்பில் படித்து வருகிறார். .கே.தி.சிவகுமாரின் இரண்டு உடன்பிறந்தவர்களும் (உலக பலகுரல் நாயகரான) செந்தில் என்கிற செந்தில்குமார், ‘‘கலைமாமணி விருது’’ பெற்றவர். மற்றும் .கே.தி.அன்புமணி அவர்கள் பதிப்பாளர். இருவருமே தத்தமது பணிகளில் நேர்மையாகவும் திறமையாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

சிவகுமாரின் உடன்பிறப்பு .கே.தி.கவிதா, ஆசிரியராகக் கல்விப் பணியாற்றி வருகிறார்.கே.தி.சிவகுமாரின் தந்தைவழி தாத்தாவான எமு.குப்பன் அவர்கள், எளிய குடும்பமாக இருந்தாலும் அந்தக் காலத்திலேயே கடுமையாக முயன்று நல்லதொரு பெயரைப் பெற்றவர்.

அவரது மகனாக டாக்டர்..கே.திருவேங்கடம் டாக்டர் பட்டம் பெற்று ஒரு கல்வியாளராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் சமூதாய நோக்கோடு 1997 இல் ‘‘வாரியார் சுவாமிகளின் பெயரில் முதியோர் காப்பகம் ஒன்றை நிறுவி அதனைத் திறம்பட செயல்படுத்தியும் வந்துள்ளார்.

அவரது மறைவுக்குப் பிறகு அதனை கே.தி.சிவகுமார் பொறுப்பேற்றுத் திறம்படப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருவது பெருமைக்குரியது.

கல்வித் தகுதிகள்:

பொதட்டூர்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த .கே.தி.சிவகுமார், சென்னையில் உள்ள டி.ஜி.வைணவக் கல்லூரியில் வேதியியல் துறையில் இளங்கலைப் பட்டமும், குருநானக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், ஆராய்ச்சிப் படிப்பினை மாநிலக் கல்லூரியில் மேற்கொண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் முனைவர் பட்டமும் பெற்றவர்.

தொழில்நுட்பம் சார்ந்த பணி:

வேதியியல் துறையில் புலமை பெற்றதோடு சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் மருந்துகள் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்திப் பிரிவில் பணியாற்றிய .கே.தி.சிவகுமார் தனது அறிவியல் ஆராய்ச்சி பணிகளுக்காக இந்திய அளவிலான ‘‘அறிவியல் அறிஞர் - 2008’’ என்கிற விருதுக்கு டெல்லியில் உள்ள தேசிய சுற்றுச் சூழல் அறிவியல் கழகத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுப் பாராட்டும் பெற்றவர்.

மேலும் துறைச்சார்ந்த ஏராளமான ஆராய்ச்சி  மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் வழங்கியவர். உலக நாடுகளுக்குக் கல்விப்பயணம் மேற்கொண்டவர்.

தற்போது சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கல்விப் பணியாற்றி வருகிறார்.

இவரது கல்விச் சேவையைப் பாராட்டி அரிமா சங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் பாராட்டியுள்ளன. குறிப்பாக இவர் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உயர் கல்விக்கு உதவிட ‘‘கல்வி மற்றும் சமூதாய ஆராய்ச்சி நிறுவனம்’’ என்ற நல உதவி அறக்கட்டளையை கடந்த 2007 இல் நிறுவி பல இலட்ச ரூபாய் அளவில் ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறார்

இந்த அமைப்பின் சார்பில் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் .கே.தி.சிவகுமார் அவர்களது கால் நூற்றாண்டுகளுக்கும் மேலான சமுதாய சேவைகள் குறித்த, தமிழறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சான்றோர் பெருமக்களின் வாழ்த்துரைகள் அடங்கிய குறுந்தகடு ஒன்றும் வெளியிடப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது.

மேலும் மேதகு தமிழக ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளர்களுக்கான நல உதவிகளும் ஏழை மாணவ & மாணவியர்களுக்கு உயர் கல்விக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் .கே.தி.சிவகுமாரின் கல்விச் சேவையை மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் சிறப்பாகப் பாராட்டியது இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 பணிகளும் விருதுகளும்:

எக்ஸ்னோரா, அரிமா சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளில் திறம்பட செயலாற்றியதற்கான விருதுகளை .கே.தி.சிவகுமார் பெற்றுள்ளார். இதில் மாற்றுத்திறனாளிகளுக்காக இவர் செய்த சேவைகளுக்குத் தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சரால் ‘‘சிறந்த சமூக சேவைக்கான விருதுவழங்கப்பட்டது.

இவரின் சேவைகளைப் பாராட்டித் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இளம் வயதிலேயே இவருக்கு ‘‘வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது.

சப்பான் நாட்டுத் தூதரால் வழங்கப்பட்ட ‘‘மீடியா கில்டு’’ விருதும், சென்னை 38வது புத்தக கண்காட்சியில் ‘‘சிறந்த சிறுவர் அறிவியல் நூலிற்கான விருதும்’’ பெற்றவர் என்பது குறிப்பிடத்தகுந்தவை.

இவர் 1140 பக்கங்கள் கொண்ட உலகத் தமிழர் கலைக்களஞ்சியம் என்கிற நூலினை வெளியிட்டு சிறப்பான தமிழ்ப்பணியையும் செய்துள்ளார்.

பெரியோர்களின் பாராட்டுக்கள்:

தமது அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கிடையே, கல்விப்பணி, சமுதாயப்பணி, எழுத்துப்பணி, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான சேவைகள் என கடந்த 25 ஆண்டுகளாக இந்தச் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் வகையிலான சிறப்பான அறப்பணிகளை ஆற்றிவரும் .கே.தி.சிவகுமார் அவர்களுக்கும், அவரது செயல்பாடுகளுக்கும் மதிப்பளித்துச் சாதனையாளர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

சந்திராயன் 1 திட்ட இயக்குநரும் இஸ்ரோவின் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை அவர்களைச் சிறப்பாசிரியராகக் கொண்டு இவர் நடத்தி வரும் ‘‘வளரும் அறிவியல்’’ என்கிற காலாண்டு இதழ், சர்வதேச அளவில் பதிவு எண் பெற்று, அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பான தகவல்களை இந்தச் சமூகத்திற்கு வழங்கி வருகிறது.

சமூக நோக்கம் கொண்டு செயலாற்றி வரும் .கே.தி.சிவகுமார் போன்ற அறிவியல் அறிஞர்களை அரசும் சமூகமும் ஊக்குவிக்கவேண்டும்.

வாழ்க இ.கே.தி. சிவகுமார்! வளர்க அவர்தம் நற்புகழ்!


தொடர்புக்கு: 9841435126  

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நல்ல சமூக ஆர்வலர் ஒருவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்களுடைய பணியும்.