திருப்பனந்தாள் செந்தமிழ்க்
கல்லூரியில் நான் தமிழ் பயின்றபொழுதுகளில்(1987
முதல் 1992 வரை) மரபுக்கவிதைகள்
எழுதுவதில் ஆர்வம்கொண்டு விளங்கினேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்
நான் சிற்றிலக்கியம் படைக்கும் திறன்பெற்றிருந்தேன். என் படிநிலை வளர்ச்சியை அறிய விரும்பும் நண்பர்களுக்காக நான் எழுதிய அச்சக
ஆற்றுப்படை என்ற நூலை என் பக்கத்தில் பதிந்துவைக்கின்றேன். தமிழ்நூற்கடல்
தி.வே. கோபாலையர் உள்ளிட்ட அறிஞர்களின்
பாராட்டினை இந்த நூல் பெற்றது.
(திருச்சிராப்பள்ளி மாவட்டம் உட்கோட்டையிலிருந்து அகவை முதிர்ந்த
ஒருவரைத் திருப்பனந்தாள் அம்பாள் அச்சகத்திற்கு இளைஞன் ஒருவன் ஆற்றுப்படுத்துவது)
கையில் கோலும், காலில் செருப்பும்,
மெய்யில் சட்டையும், மேனியில் தளர்வுமென
உடலம் சுமந்தே உலவும் பெரியீர்! வணக்கம்!
தம்பி வணக்கம்! தமிழின வீரனாய்க்
கவினுருக் கொண்டு காட்சி தரும்நீ
எவ்வூர் எனினும் இனிது வாழ்க!
அகவை முதிர்ந்த ஆளாம் எம்மைப்
பகடி செய்து பல்லிளிப்புக் காட்டும்
இற்றை இளைஞர் இழிதகு குழுவில்
கொம்பினில் பழுத்தநற் குடமுட் பலவின்
செம்மைச் சுளையெனச்
செந்தமிழ் எடுத்தே
தளர்ந்த உளத்தைத் தண்மை செய்தாய்!
என்றன் பெயரன் இன்மண விழவிற்(கு)
அழைப்பிதழ் ஒன்றை அடிக்க அணியம்!
பிறந்தது முதலா வளர்ந்தது வரைக்கும்
திறம்பட வாழ்ந்தும்நான் அச்சகம் ஏற
அறிந்தேன் அல்லேன்! ஆசை ஒன்றுண்டு.
தளர்ந்த கிழவன் திண்ணையில் சாயுமுன்
கிளர்ந்த ஆசையைக் கிளத்துவன் கேளாய்!
உன்போல் அழகன் என்மகன் வயிற்றோன்!
அவனே,
நெளிமயிர்த் தலையன்! ஒளிவிடு விழியன்
தெளிபுலம் தோய்ந்த திறம்சால் வீரன்!
ஏழை மக்களின் இனிய வாழ்க்கைத்
தோழனாய் நிற்போன்! தொழும்பன் அல்லன்!
மூவெட்(டு) ஆண்டு முடிந்த அவனுக்(கு)
ஈரொன் பானாண் டெய்திய செல்வியை
மண்ணகம் வியக்க மணவிழாச் செய்யப்
பெண்ணகம், என்னகம் பேசி முடித்தோம்!
அத்தகு விழவில் அனைவரும் வியக்கப்
புத்தொளிர் புதுமுறை பொலியக் கூட்டி
அழைப்பிதழ் அடிக்க அச்சகம் கேட்டே
இழைக்கும் எல்லோன் இளைப்பையும் கருதாது
தெருக்கள் பற்பல திரிந்துயான் வருகிறேன்!
படித்த மாணவப் பண்புளோய்! நீதான்
அறிந்து மகிழ்ந்த அச்சகம் யாண்டும்
உளதோ? கூறுவாய்! நன்றி உடையேன்!
செம்மையும் அழகும் சேர்ந்தே அச்சிட
எம்மை வினவும் எழில்மிகு தாத்தா!
முன்னொரு பொழுதில் நும்போல் நானும்
கன்னித் தமிழ்நூல் அச்சிட முனைந்தும்
கண்டிலேன் கவின்மிகும் அச்சகம் தன்னை!
ஆயிடை,
உணவும், உடையும், உறையுளும் தந்தே
உயிரும், அறிவும் உவந்தே காத்தவெம்
ஆருயிர்த் தந்தையார் “பிழைபொறுத் தானெனும்”
சீரோர் கூறிய செவ்வழி ஓர்நாள்
பனசை நகரம் போந்தேன்! ஆண்டு
மனத்தைக் குளிர்க்கும் “மாரி யம்மன்”
கோயில் தெருவில் குளிர்நிழல் தவழும்
‘அம்பாள் அச்சகம்” பலகை கண்டேன்!
எம்பால் எழுந்த இன்பம்என் னென்பேன்!
கள்ளமில் அன்பும், கனிவும், கவின்தமிழ்
உள்ளமும் கொண்டஓ ரிளைஞர் எம்மை
இருகை வணங்கி, இனிதே அழைத்து
விசிப்பலகை மேலே விரும்பி அமர்த்தினர்!
வெண்மோர் தந்து வேண்டுவ பேசிக்
கண்ணினும் மேலாய் எனையுமென் புலமையையும்
அண்ணல் மதித்ததை அருகுளார் அறிவரே!
பொய்யில் நெஞ்சினர் புகன்ற உரையினால்
கையும் காலும் ஓடில! நடுங்கினேன்!
நூலொன்(று) அச்சிட யானும் வந்ததைப்
பைய நாவை அசைத்துப் பகர்ந்தேன்!
நூலின் கைப்படி பிரித்துடன் அளித்ததும்
தாளும் எழுத்தும் தகுமுறை காட்டி
அருகே இருந்த ஆளினை அழைக்கச்
சுருக்காய்க் கோத்ததும் சுற்றினன் அச்சினில்!
அற்றைப் பொழுதே நூலின் பாதி
கற்றைக் கற்றையாய்க் கவினுரு ஆனது!
ஓரிரு நாளில் சீருருக் கொண்ட
பேரிரு படிகள் பெற்றனன் யானே!
எஞ்சிய நூல்கள் என்னகம் நோக்கி
விஞ்சிடும் உந்தில் விரும்பி அனுப்பினர்!
வாழ்க அவர்தாம்! வாழ்கவர் நற்பணி!
அவரே,
அம்பாள் அச்சகத்து உரிமை யாளராம்!
செம்பால் நெஞ்சின் ‘சிவநேசர்’ காணீர்!
ஆதலால் பெரியீர்!
அம்பாள் அச்சகம் ஏகுவீர்! ஆண்டு.
மணவிழா அழைப்பும், மஞ்சள்நீ ராட்டும்
வளையணி அழைப்பும், வரவேற்(பு) அழைப்பும்
திருவிழா அழைப்பும் தீமிதி அழைப்பும்
புதுமனை புகுந்திடப் பொலியும் அழைப்பும்
பெருகிய கட்சிகள் பேரவை அமைப்பின்
அனைத்துக் கூட்ட அழைப்பும் அடிக்கவும்,
புத்தகம் அடிக்கவும், நூற்கட்டுச் செய்திடக்
குறிப்பேடு, பற்றுமுறி குறித்த காலத்தில்
அச்சிடக் கட்டுற ஆவலாய்ச் செல்வர்
அம்பாள் அச்சகம் அணுகுக இன்றே!”
“தம்பி!
கட்டை வண்டியில் கட்டுச் சோற்றுடன்
நெல்லும், எள்ளும் நிலம்பெறு கடலையும்
கொல்லையில் மலரும் முல்லை மொட்டும்
முன்னைய பொழுதில் வைகறை எழுந்து
சேவல் கூவிடும் செறியிருள் பொழுதில்
எடுத்துச் சென்று அடுத்துள சந்தையில்
விற்பதும் வருவதும் விரும்பிச் செய்தனன்!
பிள்ளைகள் அகவையில் பெரிதும் மூத்ததால்
வயலைப் பார்ப்பதும் வளமனை உலாவலும்
அயலூர் மக்கள் அல்லல் தீர்ப்பதும்
இற்றைப் பொழுதில் என்றன் செயல்கள்!
எனவே தம்பி, பனசை நகரம்
எவ்வழிச் சேரல் என்பதை அறியேன்!
அவ்வூர் செல்லும் ஆற்றின் அருமையைக்
கிழவன் யானும் உணரக் கூறுக!
நன்றே நவில்வன் தாத்தா!
தமிழக் குடியுள் தலைமைக் குடியென
இமிழ்கடல் உலகில் யாவரும் பேசும்
சோழக் குடியினர் உலவிய ஊரிதே!
ஈழம் சாவகம் பழந்தீ(வு) என்னும்
ஆழி சூழுலகை ஆண்டவர் அவரே!
அன்னார்,
ஆட்சி செய்தே அருமைக் குடிகளை
மீட்சிபெறச் செய்த மேனாள் பொழுதில்
மாளிகை அமைத்து மருங்கில் பற்பல
அரண்கள் வளைத்தே அரசு செலுத்திடக்
கோட்டைகள் கட்டிக் கொடிகள் உயர்த்திக்
கோட்டையைச் சுற்றி நீரரண் அமைத்து
வேட்டை முதலைகள் வேலியாய் இருக்க
மனைவியர் குழந்தைகள் மகிழ்மக் களுடன்
அணைந்து மேவியே ஆண்ட(து) இவ்வூர்!
பொன்னேரி என்னும் புனல்நிறை ஏரியால்
என்னூர் கொழிக்கும் வளந்தனைக் காண்பீர்!
வைகறைப் பொழுதில் சேவலின் ஓசை!
கொய்தளிர் மலரில் வண்டின் ஓசை!
மள்ளர் ஓட்டும் மாட்டின் ஓசை!
வயலினில் உழவரின் வணக்க ஓசை!
ஏரினை நடத்துவோர் இயம்பும் ஓசை!
அண்டையை எடுப்போர் ஆர்க்கும் ஓசை!
நாற்றினைப் பறிப்போர் அலசும் ஓசை!
சேற்றினில் நடுவோர் செழும்பாட்(டு) ஓசை!
களையினை எடுப்போர் கவின்பாட்டு ஓசை!
அறுவடை புரிவோர் அறையும் ஓசை!
கடாவடி செய்வோர் கழறும் ஓசையென
இவ்வூர் எழுஉம் இன்னோசை கேட்பீர்!
‘பொன்னேரி’ தன்னால் பொலியும் இவ்வூர்க்
‘கோட்டை’ என்று குறிக்கப் பெற்றிடும்
சிறப்பை யானும் செப்பக் கேண்மின்!
சோழர் குலத்தின் சுடர்மிகு பெருமையை
உலகம் அறிந்திட உயர்த்திய மன்னன்
‘அரச இந்திரனாம்’ அரும்பெறல் வேந்தன்
கங்கை யாற்றைக் கவர்ந்து, வெற்றியை
வானுயர் கோபுரம் வடக்கினில் எடுத்துத்
தென்மேல் மூலையில் மாளிகை அமைத்து
நாற்புறம் நீரரண் நனிபுடை சூழ
அமைத்தனன் அறிக! அத்தகு மாளிகை
அமைத்துக் கோட்டைகள் பற்பல கட்டினன்!
கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும்
செந்தமிழ்ப் புலவோர் சேர்ந்துறை நகரும்
இந்தப் பகுதியில் இயற்றினன் உணர்வீர்!
கருவூர்த் தேவர், காள மேகம்
செயங்கொண் டானுடன் சேக்கிழப் பெரியயோன்
ஒட்டக் கூத்தனும் உயர்ந்த கம்பனும்
உலவித் தமிழினை உயர்த்திய நகரிது!
மணியும் பொன்னும் மாளிகை தோறும்
அணிந்த பெண்டிர் அழகு நிலவெனத்
தோற்றம் காட்டிய தொன்வா னகமிது!
களிற்றுப் படையும் கவின்தேர்ப் படையும்
நெளிதர நெளிதர நிலவிய பேரூர்!
ஆயிரம் சிங்களர் அடங்காது வரினும்
தாயின் மறவுரை தன்னகம் நிறுத்தித்
தமிழரின் வீரம் தனிப்பெரு வீரமென
உலகவர் உணரப் புலிக்கொடி தாங்கிய
சோழக் குருளைகள் சுற்றிய ஊர்காண்!
தலைநகர் தழுவிய தனிப்பேர் ஊர்களாய்
இடைக்கட்(டு), ஆயுதக் களம்,மெய்க் காவலூர்,
வீர சோழ புரம், குழ வடையான்,
சோழன் மாதேவி, கடாரங் கொண்டான்,
வானவ நல்லூர், வாண திரையனூர்,
மேட்டுப் பாளையம் தொட்டிக் குளத்துடன்
உயுத்தப் பள்ளம் உயர்மீன் சுருட்டி,
உலகளந்த சோழன், உடையார் பாளையம்,
செயங்கொண்டம், சீரிரு வளையம், பழுவூர்.
வீர போகம், வியன்கொல்லா புரம்நல்
கொக்கரணை, சத்திரம், ஆமணக்கும் தோண்டி
வரலாற்றுப் பெயரால் வழங்கும் இவ்வூர்கள்
ஒவ்வொன்றும் ஒருகதை உடைய(து) உணர்வீர்!
பொன்னேரி நீரால் பொலிவுற் றிலங்கும்
இவ்வூர் இருந்து வடதிசை ஒருகல்
மெளவல் அவிழும் பொழில்வழி கடப்பின்
மாளிகை மேடெனும் ஆளுயர் பலகை
அழைக்கக் கண்டபின் அகம்நீர் மகிழ்வீர்!
அத்தகு மேட்டில் அகழ்வுத் துறையினர்
வித்திடு நிலத்தை விளங்கத் தோண்டி
ஆயிரம் ஆண்டின தான சுவரினை
வெளியே கொணர்ந்துள வியப்பினைக் காண்பீர்!
வெளியே தெரியும் வியன்சுவர் எல்லாம்
செங்கல் தன்னால் சீருற அமைந்த
வனப்பைக் கண்டு முனையோர் உணர்வை
மெச்சி நீவிரும் மகிழ்வீர்! மேலே
கற்சிலை பலவும் காணும் வண்ணம்
பொற்புற வரிசையில் பொலிந்து நிற்கும்!
அனைத்தும் காண்பீர்! அருகுள தோப்பினில்
தெங்கிள நீரைத் தந்த உழவர்
இங்குண வுண்ண இன்றேனும் இருப்பீர்
தங்கும் ஏந்துகள் தருவம் என்பர்!
முத்துக் குவியலைப் பச்சைப் போர்வையில்
குவித்துக் கட்டிக் குளிர்நிழல் மரத்தில்
கல்லா உழவன் கரந்த வைப்பென
வெல்லப் பலாப்பழம் வேண்டுவ கொண்டு
கொல்லை தன்னில் குறும்பலா நிற்கும்!
மாளிகை கண்ட மனத்துடன் நீங்கள்
மேற்குத் திசையில் இருகல் தொலைவில்
சோழ கங்கத்தைச் சுவைக்க லாமே!
பாழும் பகையைப் படையுடன் எதிர்த்துக்
கோழையர் குருதி குடைந்தே எடுத்துத்
தாய்ச்சூள் காத்த தனயன் வைத்த
செம்பொட்(டு) என்று சோணிலத் தாயின்
நெற்றிப் பொட்டாய் நீர்நிலை தென்படும்!
இத்தகு இனிய சோழக் கங்கத்தை
வெற்றிநீர்த் தூணென வேண்டுவ நனிபுகழ்ந்(து)
ஆலங் காட்டுச் செப்பே(டு) அறையுமே!
இதனைக் கண்டு குருகைக் கோயிலாய்
மூன்றுகல் கிழக்கினில் முனைந்து செல்லக்
கங்கை கொண்ட கவின்சோழ புரத்தின்
வடக்கு வாயிலை இடக்கின்றி அடைந்து
வந்த வண்டியை வாயிலில் நிறுத்திச்
செந்தேன் வண்டு திரிதரு பூங்கா ஊடே,
கிழக்கே ஏகிட அரிமாக் கேணி
புழையைக் கொண்டு பொலிந்து நிற்கும்!
அப்புழை நுழைந்தும் அம்நீர் நனைந்தும்
வெப்பம் தணித்து வெளியே வந்து
கேணியைச் சுற்றிக் கீழ்த்திசை நின்று
வானுற உயர்ந்து மேல்நிமிர் கோபுரம்
கண்ட கண்கள் கனவெனக் கழறும்!
ஒருகல் அமைத்துக் கருமை வடிவில்
காளை ஒன்று காலை மடக்கிக்
கீழ்த்திசை கிடக்கும் காட்சியைக் கண்டு
கீழை வாயில் மாண்பினைக் காணப்
பீளைக் கண்களைப் பெருவிரல் துடைத்து
மெல்ல நடந்து, நூறடி நகரின்
பண்டை நாளில் கண்ட கோட்டை
உண்டே! உள்ளம் உவகை கொள்ளும்!
கோயில் தோன்றிய காலந் தன்னில்
கீழை வாயிலில் கோயிலை மறைத்தக்
கோட்டை நின்றதைக் குழந்தையும் சொல்லுமே!
அவ்வுரு,
இற்றை நாளில் இனிய காட்சியில்
‘கல்கத்தா’ நகரில் காண உள்ளதாம்.
கீழைக் காட்சி கண்ட பின்னர்
மீண்டும் மேற்கே மெல்ல நடந்து
பச்சைப் புல்லில் படரடி பதித்துத்
தெற்குச் சுவரின் திறன்மிகு கலைகளைக்
கண்ட வண்ணம் ஒருமுறை வந்து
மீண்டும் கீழ்வழி மாடப் படியாய்க்
கோயில் வாயில் வழியே செல்வீர்!
மின்னியல் விளக்கு மேலே நின்று
கண்ணினை மயக்கிக் காட்டிடும் எழிலை
அங்கே கண்டதும் அகல்க! கோயிலில்
செப்புப் படிமம் சிலைகள் சிற்பம்
துப்பினில் நகைகள், தூய்மையின் உருவம்!
பற்பல வாயில்! பலகை அமைப்பு!
மேனிலை செல்லத் தூணில் படிகள்!
நூறடி வரையில்
சீரடி பெயர்த்துச் செல்லின்
சேய்மை நிலத்தைக் காண்பீர்!
இறுதி நிலையில் இருட்டுச் சூழக்
“குளுகுளு” காற்றுக் குளிர்க்கும் உடலை!
விளக்கு இலையேல் வியனுருத் தெரியா!
ஆதலால் பெரியீர் அதனுடன் செல்வீர்!
தளர்ந்திடும் உடலீர் நீவீர் ஆதலால்
குட்டைப் படிகளில் காலினைத் தோய்க்கையில்
உடலந் தன்னையும் வளைத்தே ஏறுவீர்!
மேலைக் காட்சி கண்ட பின்னர்
காலினைப் பெயர்த்துக் கீழே வருவீர்!
வருகையில்,
பண்டைத் தமிழர் பாட்டன் மார்கள்
கொண்ட கலையை வணங்கி மகிழ்வீர்!
கருவறை நடுவினில் பெருங்குறி நிலையென
ஒருகல் கொண்டே ஓங்கி இருப்பதை
நம்பு கில்லீர்! நடந்த(து) உண்மையே!
கருவறை வணங்கி வடதிசை வழியே
‘சண்டேச’ நிகழ்வைக் கண்டே மகிழ்வீர்!
மகிழ்ந்த வாறே மரநிழல் அமர்ந்து
கையினில் இருக்கும் கட்டுச் சோற்றை
உண்ட பின்னர் உயர்கை கழுவி
வடவாய் அடைந்து வண்டியை முடுக்குமுன்
கதிரவன் ஒளிவரக் கவின்மிகு கோபுரம்
ஒருகால் பொழுதும் நிழலைக் காட்டா
வியப்பினைக் கண்டு நயப்பிப் பீரே!
அவ்வழி்,
கிழக்குத் திசையில் இருகல் செல்லின்
கூட்டுச் சாலை காண்பீர்!
அவ்விடைத்,
தெற்கே குடந்தை திரும்பிடும் வழியே
உங்கள் வண்டியை ஓட்டும் பொழுதில்
பேருந்(து) ஒன்று பீறிட்டு வருமெனில்
பூபூ பூபூ பூபூ வென்றே
தாவி விழுந்தே தம்குரல் பிளிற்றிச்
சிறுவர் விலையினைப் பகரக் கண்டால்
சந்தை தன்னில் மொந்தம் பழந்தனை
விற்பவர் கூவும் வியன்நிகழ்வு நினைவுறும்!
பேருந்தில் செல்லும் பெண்டிர் சில்லோர்
காசு வீசாது கவின்பூ கைக்கொளின்
சிறுவர் வசைமொழி செவியினில் நிறையும்!
அதுபோல
இரண்டு பந்தாய் இணைத்துச் சுற்றித்
திரண்ட உருவைத் திருக்கண் சுற்றிக்
காசை எடுத்துக் கொடுக்கும் முன்னர்
ஒருபந்து உயரே வருவதும் உண்டென்க!
இதனைக் கண்டே இன்பம் எய்திடப்
பிள்ளையார் கோயில் பெருமரக் கீழே
உள்ளதை அறிவீர்! ஓய்வு கொண்மின்!
மீண்டும் எழுந்து மெய்க்காவல் புத்தூராய்க்
கருவழிச் சாலையில் கடகட வென்று
வண்டி ஓட வருமே ஓருர்!
வீர சோழ வியனூர் தன்னில்
காரை பூசிய கட்டிடம் நிற்கும்!
கஞ்சங் கொல்லை – சென்றிடு வழியிது!
தெற்கினில் தொடரத் தழுதாழை மேடு
முக்கால் கல்லின் முன்னே நிற்கும்!
முல்லை அரும்புகள் கொல்லையில் அவிழப்
பிள்ளைகள் பறித்திடும் பெருகிய காட்சியைக்
கண்ணால் கண்டு களிப்பீர்!
களித்தபடி ஏக, நீவீர்
குழவடை யானெ னும்
‘மேக” ஊரினைக் காண்பீர்!
சாலையின் மருங்கில் சோலைகள்! வாவிகள்!
பாலினைப் பொழியும் பெருமா திரியும்!
குயில்மொழி மகளிர் தயிரினைத் தலைக்கொண்டு
பயிர்விளை நிலம்வழிப் பகர்வர் விலையே!
புளிமரம் நிழலெனப் புடையினில் அமர்வுறக்
களிமிகு சிறுவர்கள் கிளையினில் தெரிவரே!
மஞ்சள் இஞ்சி மலிந்திடும் விளைவை
நெஞ்சினில் நிறுத்தியே நெடுவழி செல்ல
ஆறுகள் கூடச் சோலைகள் சூழக்
கரும்பசை நிறத்தில் காணும் காட்சி!
ஆம்! ஆம்!
‘அணைக்கரை’ எனும்பெயர்ப் பலகை ஒன்று
மணக்கும் பொழில்முன் மனத்தை இழுக்கும்!
கவின்மிகும் அணைகள்! கருநிற நீரினைப்
புவியினில் நிறுத்திப் பொறுமை புகட்டும்!
ஆற்றின் நடுவில் மீன்பிடி பரதவர்
சோற்றையும் பாராது வலையினை எறிவர்!
எறிந்த வலைவிழும் இருமீன் குவித்துச்
செறிந்த வைகறை சேர்வர் கரையினை!
மீனவர் சில்லோர் தேனெனக் கள்ளைக்
கானவர் போன்று குடித்துக் கிடப்பர்!
அருகே உள்ள ஊரினர் வந்து
பெருகு மீனைப் பையில் வாங்குவர்!
மேலைத் திசையினர் மரங்களை வெட்டி
வண்டி யேற்றித் தென்திசை செல்கையில்
இரவு பகலும் இருக்கும் விடுதியில்
உண்டியை முடித்தே ஓய்வுற்(று) அயர்வர்!
எனவே இவ்விடம் நெரிசல் இருக்கும்!
தளர்ந்த அகவைத் தாத்தா நீவீர்
பைய இறங்கிப் பார்த்துச் செல்மின்!
பையல்கள் சில்லோர் பகடி செய்வர்!
பழித்தல் வேண்டா!
கிழக்குத் திசைக்கே ஏகும் போது
முழக்கும் முழவுபோல் அலைகள் மோதும்!
இவ்வணை எழுந்த இயன்கதை நவில்வேன்!
கரிகால் வளவன் கரையை அமைத்த
காவிரியாற்றின் கிளையா றாகத்
திருச்சியின் மேற்கே முக்கொம்(பு) ஊரில்
பிரிந்து வந்திடும் கொள்ளிடம் இதுகாண்!
இதுவே,
கொள்ளிடம் அரசன் கால்வாய் வடவாறென
மள்ளர் தம்மின் மனத்தின் உள்ளது. இந்த
ஆற்று நீர்தான் அடங்காது பொங்கிக்
கஞ்சங் கொல்லை, காட்டூர், முட்டம்,
மஞ்சள் கொல்லை, இரட்டியூர், ஆயங்குடி,
உத்தம சோழகன் உயர்புகழ்த் தில்லை,
அத்திப் பட்டுடன், அழகிய குமராட்சி,
கொண்டா யிருப்புநல் ஈச்சம் பூண்டி,
கண்ட மங்கலம், காட்டு மன்னை,
இலால்பேட்டை, சீர்காழி, காட்டுப் படுகை.
வல்லம் படுகை, வளமாங்குடியுடன்
வெண்ணெய்யூர், மெய்யாத்தூர் விளங்கிடு சிவாயம்.
நந்தி மங்கலம், நற்கூளப் பாடி,
வாழைக் கொல்லை. பூலா மேடென
இத்தனை ஊரதனில் எழில்வளம் பெருக்கும்
மெத்தப் பெருமையை மேதினி அறியும்!
காண்போர் மயங்கிக் களிக்கும் படியெழில்
பூண்தகு பொழிலின் பொலிவு வந்தது
ஆண்(டு) இருநூற்றில் ஆமென அறிக!
ஆங்கிலர் நம்மை ஆண்ட பொழுதில்
ஈங்குள மக்களின் இன்வளம் கூட்டப்
பொறிஞர் சில்லோர் பேரவாக் கொண்டே
அறிஞர் வியக்க அணையைக் கோலினர்!
அருகே உள்ள அழகிய ‘புரத்தில்’x
பெருகிய கோபுரப் புறவரிக் கோட்டைகள்
இடிந்த வாறு கிடந்தமை எண்ணி
இடிந்த கற்களை எடுத்து வந்தே
அழகிய அணைகளை அமைத்தனர் காண்பீர்!
கங்கை கொண்ட புரத்துக் கல்லெனல்
இங்குள கற்களின் எழுத்தால் ஓர்வீர்!
வடவா(று) அரசனாறு வந்த பின்பு
நெடிய அணையொன்று நிற்கும்! அடுத்துத்
தீவு போன்றுள காவிடை நிற்கும்
கடைத்தெருக் கண்டு, கன்னல் பருகி
அடுத்துள பூங்கா அழகினை உவப்பீர்!
வானைப் பிடிக்கத் தாவும் மரங்கள்!
தெங்கப் பெண்டிர் திரண்ட முலையினை
அங்குள்ள ‘கமுகாம்” ஆடவர் தழுவுவர்!
கடுவன் சென்று மந்தியின் தலையில்
பொடுகுறு பேனைப் பொறுக்கித் தின்பதைக்
குருவிகள் கண்டு கூட்டத்தை அழைக்கும்!
வளமை மாந்தர் உழைப்போர் தம்மைக்
கிளையுடன் சுரண்டும் கீழ்மைச் செயலாய்ப்
பெருமர நிழலில் சிறுமரம் நரங்கும்!
பெருமரக் கீழே சிறுமர மொன்று
பருத்து வளர்தல் பாரினில் இலையெனும்
மொழிமூ தறிஞர் பாவாணர் கூற்றை
விழிவழிக் கண்டு வியன்நிலை தெளிவீர்!
கடல்மீன் கொணர்ந்து தடமலை என்று
குவித்த கூறுகள் கொள்விலைப் போட்டியில்
விற்பவர் பெறுபவர் விரிசொல் யாவும்
அற்பர் பூசல்போல் அவ்விடம் நிகழும்!
விளங்கிடு சோலையில் வேப்ப ஒண்பழம்
துலங்கு பொன்னெனத் தூவிக் கிடக்கும்!
ஆடிப் பெருக்கினைத் தேடிக் கண்டால்
கூடிக் கூடியே குடும்பம் நடத்த
இணைந்த ஆணும் ஏந்திழைப் பெண்ணும்
மாலை நனைத்திட மகிழ்வுடன் திரிவரே!
சிறுவர் கூடிப் பெருந்தேர் இழுத்து
வருவதும் போவதும் வனப்பாய் இருக்கும்!
வருவோர் போவோர் வலந்தர இருப்பதால்
தெருவெலாம் நெரிசல். தாத்தா நீங்கள்
வண்டியை விட்டுக் கீழே இறங்கி
அண்டி அண்டி அகலிடம் அறிமின்!
வெளியூர்க் காளையர் தளிருடல் மகளிரைக்
கிளிபோல் கொஞ்சுதல் கிழவர்நீர் காணீர்!
அண்டை நாட்டு மாந்தர் சில்லோர்
கண்டு மகிழும்
விருப்பின ராகிச்
சுற்றுலா வந்து நெற்றியின் வியர்வை
நிலத்தினில் துடைத்து நிழலில் இருப்பர்!
அவர் கண்முன் நீவீர் தென்படின்
உவப்புற நின்றே ஒளிப்படம் எடுப்பர்!
இத்தகு எழில்வளம் இருகண் நிறைத்து
மேலும் கீழ்த்திசை ஏகச் ‘சோழன்”
உணவகம் கண்டே உவகை அடைவீர்
இருதிசைப் புளிமரம் இடையே சாலையில்
பெருகிய விரைவில் வண்டியை இயக்கத்
தத்துவாஞ் சேரியெனும் தண்ணூர் வருமே!
தமிழராய் இருந்தோர் தாய்ச்சம யத்தால்
உமிழத் தக்க ஒருபொருள் என்றே
மதிக்க நேர்கையில் மனந்தான் மாறி
மாற்றுச் சமயம் புக்கனர் அறிக!
அன்னார் இசுலாம் தமிழராய், அவ்வூர்
பொன்னகர் என்று போற்றும் வண்ணம்
மாளிகை அமைத்து மாண்புற வாழ்வதை
இருகண் கண்டு பெருமை கொள்வீர்!
தொடர்ந்து தென்திசை துணிந்து செல்கையில்
‘உந்து’ கொண்டு நீரினை இறைக்கும்
உழவர் வண்மை எழில்விழி புகுமே!
ஆனை கட்டியும் அடிக்க இயலாமல்
பெரும்போர் பிணையிட வல்லுந்து திரிதரும்!
அடித்த நெல்லை அகத்தினில் சேர்க்க
முடியும் முத்திங்கள்; மீண்டும்
நடுபயிர்
அதற்குள் அறுபட அழைக்கும் ஆளை!
அறுப்பதும் விதைப்பதும் அறாது நடத்தலில்
வெறுப்படை உழவர் வேழம் நட்டு
விளைந்த பொழுது வெளியூர் மாந்தரால்
வெட்டி ஏற்றிக் கட்டி அனுப்பி
எயில்சூழ் மயிலாடு துறைக்கு விழைவர்!
ஆண்டு,
பந்தணை நல்லூப் பாதை பிரியும்.
பெட்டிக் கடையும் கொட்டகை சிலவும்
எட்டி எட்டியே இருக்க
இன்னிழல் கீழே
மலைபோல் இளநீர் வேட்கை தீர்ப்பன
குலைகுலையாகக் கொணர்ந்து நிற்பர்!
காசுகை இருப்பின் வீசி எறிந்தே
ஆசிலா நீரினை அவாவிப் பருகுவீர்!
பருகியே,
தென்திசை அண்மிட ஒருகல் தொலைவில்
கண்டே உவப்பீர் மண்ணி யாற்றை!
சோழர் ஆட்சிப் பொழுதில் இதுவே
குஞ்சர மல்லன் ஆறென வழங்கிப்
பருத்தி, கரும்பு, பாரிய வாழை,
குருத்து மஞ்சள், கொண்டை இஞ்சி
தென்னை, பனைகள் தேர்ந்திடு நெல்வகை
உயிர்தாம் வாழ உறுநீர் வளந்தரும்!
நெடிய தொலைவு கடந்தவர் ஆதலில்
தடித்த மரநிழல் வண்டியை நிறுத்தித்
தளர்வுடல் நீரால் தண்ணி தாக்கி
உலரவும், ஆடையை உடலில் வரித்து
மேட்டில் இருந்து பள்ளம் நோக்கக்
காட்டின் ஆறாய் வண்டி ஓடும்!
மாமர நிழலில் மலர்தமிழ்ப் பாவினை
மாணவக் குழுவினர் மகிழ்ந்தே இசைப்பதைக்
கேட்ட வாறே கிளர்விழி சுழற்றின்
ஆண்டு,
மஞ்சள் நிறத்தில் மன்னிய புகழின்
“திருப்பனந் தாளெனத்” திகழும் பலகை!
பனசை வந்த பாங்கினை அறிந்து
மனத்தைத் தேற்றி மருங்கினைச் சுவைக்கையில்
‘செஞ்சடை யப்பர்’ சீர்மிகு கோபுரம்
நெஞ்சை இழுக்கும்; நெடிது சென்றே
எஞ்சிய பொழுதில் இல்லம் மீளும்
எண்ணம் கொண்டு கோயில், நுழைந்தும்
கற்சிலை, பொற்சிலை கண்டு வியந்தும்
அற்கும் புகழை அவாவி ஓர்ந்தும்
தெற்கே உள்ள தமிழ்தரு கல்லூரி.
பேசரும் புகழின் ஆசிரியப் பள்ளி
நிற்பன அறிந்து நெஞ்சம் குளிர்ந்து
வடக்குத் தெருவின் வழியே சென்று
கீழைத் தெருவின் நடுவிடம் சென்றால்
காசி மடத்தின் கவின்மிகு தோற்றம்
பேசி மகிழ்வீர்! பிள்ளையர் பற்பலர்
அன்னைத் தமிழும் ஆங்கிலக் கல்வியும்
பயிலும் இடங்களின் பாங்கினை அறிவீர்!
மடத்தின் வாயிலில் மகிழ்வுடன் வண்டியைக்
கிடத்தி விட்டுக் கீழை வழியே
குமர குருபரர், குருவாம் குமரன்
அமரர் சிலரின் ஆழ்ந்த வாழ்வியல்
படத்தில் கண்டு வரைவினை வியப்பீர்!
அரண்மனை போலும் வாயிற் கதவை
உரியவர் மூலம் கடந்த பின்பு
தமிழ்நூல், மதநூல், அறநூல் பற்பல
நிமையந் தோறும் வருமிடம் இதுவென
உணர்ந்த வாறே உள்ளே சென்றால்
தவவுருத் தாங்கிய தமிழ்ப்பெரு முனிவர்
எவரெனப் பாரா(து) இன்னல் துடைப்பதைக்
கண்ணால் கண்டு கவினுரு வணங்கி
மீண்டும் வெளியே மிடுக்கென வருவீர்!
விட்ட வண்டியில் விரைந்து தாவித்
தெற்குத் தெருவின் வழியே மேற்புறக்
குடந்தைச் சாலையைக் குறுகுவீ ராயின்
கடைகள் பற்பல புடைசூழ்ந்(து) இருக்கும்
மருத்துவமனை, பள்ளிகள், திருந்திய தெருக்கள்
விருந்தினர் பலருக்கு வியப்பினை நல்கும்!
மேலைச் சாலையில் ஓலை மனையின்றி
கட்டிடம் நூலிடு காட்சியாய் இருக்கும்!
தேர்கள் மூடியே திகழ்ந்திட
நடையினர் கண்டு விழியினில் கவர்வர்!
தடையெதும் இன்றித் தெற்கே சுழன்றால்
மாரி யம்மன் கோயில் கண்படும்!
யாரை யேனும் அம்பாள் அச்சகம்
யாண்டென வினவின் வேண்டியோர் போலப்
படைச்சால் தொலைவே அச்சகக் குடிலினை
நடந்துடன் வந்து நன்கு காட்டுவர்!
அச்சகம் நுழைந்த ஆர்வ மிகுதியால்
மெச்சகம் என்று பலநாள் தங்காது
சிவவுரு வாகிய நிலவழகன் அவர்கள்
கவர்வுறு உரையைக் கேட்டு மகிழ்ந்(து),
அடிசில் உண்டே அன்பில் நனைந்து.
கழிநாள் தங்காது கடிதின் மீள,
அழைப்பை அச்சிட்டு எழில்மணம் காண,
இழைத்திடு வண்டியில் ஏறுக இனிதே!
1 கருத்து:
படித்து முடிப்பதற்குள் சோர்வடைந்துவிட்டேன். என்னவேகம், எவ்வளவு செய்திகள். அதே நடையில் இறுதிவரை வாசகனின் பார்வையை வேறு திசைக்குத் திருப்பாமல் அழைத்துச்சென்ற தங்களது பாணி பாராட்டுக்குரியது.
கருத்துரையிடுக