மு.இளங்கோவனுக்கு இலக்கியச் செம்மல் என்ற விருதினைத் திருவையாற்றில் வழங்கிப் பாராட்டும் காட்சி. தஞ்சை மருத்துவர் கலைமாமணி சு. நரேந்திரன், புலவர் தங்க.கலியமூர்த்தி,
இசைக்கல்லூரி முதல்வர் ஸ்ரீ வித்யா, தமிழறிஞர்கள், மாணவர்கள்
திருவையாறு அரசு
இசைக்கல்லூரியும், திருவையாறு இளங்கோ கம்பன் இலக்கியக் கழகமும் இணைந்து பண்ணாராய்ச்சி
வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்க்கை குறித்த ஆவணப்படத்தைத் திரையிட்டு மாணவர்களுக்குப் பண்ணாராய்ச்சி வித்தகரின் பணிகளை அறிமுகம் செய்தன. குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் இந்தக் கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் முதன்முதல் இணைந்து தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவணப்பட அறிமுக நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களைக் கல்லூரி
முதல்வர் முனைவர் அ. ஸ்ரீவித்யா வரவேற்று உரையாற்றினார்., இக்கல்லூரியில் தொடக்க காலத்தில்
பணியாற்றிய குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் வாழ்க்கையையும், தமிழிசைப்பணிகளையும்
எங்கள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய முன்வந்த தமிழறிஞர்களுக்கு நன்றி என்று ஆர்வமுடன்
தம் உரையில் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இசைத்துறை மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வதற்கு இந்த ஆவணப்படம் பெரும் தூண்டுகோலாக இருக்கும் என்று பேராசிரியர் அ.ஸ்ரீவித்யா நம்பிக்கை தெரிவித்தார்.
குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழிசை வாழ்வையும் ஆராய்ச்சியையும் அறிமுகம் செய்யும் இந்த ஆவணப்படத்தின் பாடல்களைக் கேட்டும், பார்த்தும் சுவைத்த இசைத்துறை மாணவர்கள் படத்துடன் ஒன்றிப் பலரும் கண்ணீர்விட்ட காட்சி அவையினரின் உள்ளத்தை அசைத்தது. இசைத்துறைப் பேராசிரியர்கள் பலரும் தங்கள் கல்லூரியின் மூத்த பேராசிரியரின் வாழ்வு ஆவணமானது குறித்துப் பெரிதும் நன்றி தெரிவித்தனர்.
புலவர் தங்க. கலியமூர்த்தி
அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, அறிமுக உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தஞ்சை மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு ஆவணப்பட இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு
இலக்கியச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். குடந்தை ப. சுந்தரேசனார் தமிழிசை
உலகுக்கு மிகப்பெரிய பணியாற்றியவர். அவர்தம் வாழ்வும் பணியும் அறியப்படாமல் இருந்த
சூழலில் இன்று உலகம் முழுவதும் அவரின் தமிழிசைப்பணிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதனைச்
செய்த மு.இளங்கோவனை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன் என்று மருத்துவர் சு. நரேந்திரன் குறிப்பிட்டார்.
இசைப்பேராசியர் சு. வெங்கடேசன் நன்றியுரை வழங்கினார்.
மாலையில் திருவையாறு ஓய்வூதியர்கள்
சங்க அரங்கில் பொதுமக்களுக்கான திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்களும்
குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களுடன் பழகியவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப் பணிகளை நினைவுகூர்ந்தனர்.
தஞ்சைப்பகுதியில்
வாழும் தமிழறிஞர்கள் இராம. செல்வராசு, கரந்தை செயகுமார், தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் பா. ஜம்புலிங்கம், புலவர்
அறிவுறுவோன், புலவர் மா. திருநாவுக்கரசு, திருச்சி இமயவரம்பன், திருவாரூர் புலவர் எண்கண் சா. மணி, புரவலர் அ.மோகன்தாசு, திருச்சி ஈகையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இசைக்கல்லூரி முதல்வர் சு. ஸ்ரீவித்யா அவர்களின் வரவேற்புரை
மருத்துவர் சு. நரேந்திரன் அவர்களின் பாராட்டுரை
ஆவணப்படத்தை ஆர்வமுடன் பார்க்கும் இசைக்கல்லூரி மாணவர்கள்
1 கருத்து:
ஆவணப் படம் அருமை ஐயா
தங்களின் அயரா உழைப்பு
போற்றுதலுக்கு உரியது
நன்றி ஐயா
கருத்துரையிடுக