நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார்(11.11.1911 - 29.09.2006)



 அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார்

புதுச்சேரியில் புகழுடன் விளங்கிய தமிழறிஞர்களுள் அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். அந்தாதி வகை இலக்கியங்கள் படைப்பதில் ஆற்றல் உடையவர். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் நல்ல புலமைபெற்றவர். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மாணவரான இவர் புதுச்சேரியில் நன்மாணாக்கர் பலர் உருவாகக் காரணமாய் அமைந்தவர். பள்ளிப் பணிகளுக்கு இடையே தமிழ்சார்ந்து நடைபெற்ற பல்வேறு அறப்போர்களில் கலந்துகொண்டு ஆதரவு நல்கியவர். இவர்தம் தமிழ்ப்பணிகளை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

இளமை வாழ்க்கை

அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் 11.11.1911 இல் புதுச்சேரியை அடுத்த கவுண்டம்பாளையத்தில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் சுப்புராயன், பார்வதி அம்மையார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரியபுத்திரன் என்பதாகும். இவருக்குக் காசிநாதன் என்ற ஒருபெயரும் உண்டு. இவர் இளம் அகவையில் திண்ணைப்பள்ளி ஒன்றில் பயின்றார். பின்னர் அரசு பள்ளியில் பயின்று, பிரெஞ்சியர் நடத்திய பிரவே (Brevet) தேர்வில் வென்றவர். பாவேந்தரின் மாணவராக அரசு பள்ளியில் படித்த பெருமைக்குரியவர். புதுச்சேரியில் உள்ள சொசியெத்தே தே புரோகரேசீசுத்  என்ற தனியார் பள்ளியில் தொடக்க காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்னர் பிரெஞ்சு ஆளுநரின் பரிந்துரையில் இவர் அரசு பள்ளியில் பணியில் இணைந்தார்.

இல்லற வாழ்க்கை

அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் சரசுவதி அவர்களை மணம் செய்துகொண்டு, குலசேகரன், பாரிவள்ளல், பரிமேலழகன் என்ற ஆண்மக்களையும், பூங்கோதை, புனிதவதி, வாசுகி என்ற பெண்மக்களையும் மக்கட் செல்வங்களாகப் பெற்றவர்.

இலக்கியப் பணிகள்

அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் பல்வேறு அந்தாதி நூல்களைப் படைத்துள்ளார். அவையாவன:

பார்த்தசாரதி அந்தாதி
நாகாத்தம்மன் அந்தாதி
தமிழ்த்தாய் அந்தாதி
சரசுவதி கையறுநிலை அந்தாதி
வள்ளலார் அந்தாதி
அகத்தியர் அந்தாதி
சிவசடையப்பர் அந்தாதி
வலம்புரி விநாயகர் அந்தாதி
பச்சைவாழியம்மன் அந்தாதி
ஆதிபராசக்தி அந்தாதி (56 பாடல்கள் மட்டும்)

அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் தம் மனைவியார் சரசுவதி அம்மையார் இயற்கை எய்தியபொழுது அவருக்குத் தம் வீட்டின் முன்பாகச் சிறிய கோயில் கட்டினார். தம் மறைவுக்குப் பிறகு தமக்கும் ஒரு சிலை தம் மனைவி சிலைக்கு அருகில் அமையும்படி முன்னேற்பாடு செய்திருந்தார். அதன்படி சிலையும் அமைக்கப்பட்டது.

நன்னூல் வகுப்பு

அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் பன்மொழி வல்லுநர். எனினும் தமிழ் இலக்கணம், இலக்கியம் அனைவருக்கும் பரவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்டவர். இலக்கணப் பாடங்களை ஆர்வலர்களுக்குப் பயிற்றுவித்துள்ளார். புதுச்சேரி அம்பலத்தாடையார் தெருவில் உள்ள பொதுநிலைக் கழகத்தில் இவர் மூன்றாண்டுகள் நன்னூல் பாடம் நடத்தி அனைவருக்கும் இலக்கணக் கல்வியைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தம் வாழ்நாளில் 1671 தமிழ்த் திருமணங்களை இவர் நடத்தி வைத்துள்ளார்.

நாவன்மை மிக்கவராகவும், பெரும் புலமைகொண்டவராகவும் விளங்கிய அந்தாதி அரசர் பா. சு. அரியபுத்திரனார் அவர்கள் 30.09.2006 இல் தம் 95 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.

நனி நன்றி:
புலவர் அரங்க. நடராசனார்
கவிஞர் கி. பாரதிதாசன் (பிரான்சு)



கருத்துகள் இல்லை: