நீண்ட
நாட்களாக இருந்த விருப்பம் நிறைவேறும் மகிழ்ச்சியான நிமையங்கள் அவை. ஆம். தமிழர்களின்
இசைக்கருவூலமான சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கானல்வரிப் பகுதியின் அரிய பாடலடிகளைக்
காட்சிப்படுத்தித் தமிழ் இலக்கிய அறிமுகம் இல்லாதவர்களும் கண்டு மகிழச் செய்ய உள்ளோமே
என்று நெஞ்சுக்குள் நினைவுகள் சுழன்றவண்ணம் இருந்தன. திங்கள் மாலை வெண்குடையான்,
மன்னு மாலை வெண்குடையான், உழவரோதை மதகோதை எனத்
தொடங்கும் கானல்வரிப் பாடல்களுக்கு உரிய காட்சிகளைப் படத்தொகுப்பாளர் பொருத்திக்கொண்டிருந்தார்.
சில காட்சிகள் கண்களைக் குளிர்ச்சிப்படுத்தின. சில காட்சிகள் இலக்கியவரிகளுடன் பொருந்தி நின்று இன்பம் தந்தன. சில நேரங்களில் வந்த காட்சி மீண்டும் மீண்டும் வருவதுபோன்று
உணர்ந்தேன்.
காட்சி குறைவாக உள்ளதால் வந்த காட்சியையே
அடுக்க வேண்டியுள்ளது என்று தொகுப்பாளர் சற்று அலுத்தவாறு சொன்னார். அன்புகூர்ந்து தொகுப்புப்பணியை நிறுத்தி வையுங்கள். ஒரு
நாள் கொடுங்கள். உரிய காட்சிகளுடன் திரும்புகின்றேன் என்று உறுதி
சொல்லி இல்லம் மீண்டேன். முன்பு இரண்டுநாள்
காவிரியாற்றில் எடுத்த காட்சிகள் போதுமானதாக இல்லை என்பது உண்மைதான். மீண்டும் காவிரிக்கரையில் ஒரு நாள் முழுவதுமாக வாழ வேண்டும் என்று நினைத்துத்
திட்டமிட்டேன்.
முன்பெல்லாம் காலையில் அல்லது பகலில் புறப்பட்டுத் திருச்சிராப்பள்ளியை அடைவதற்குள் மாலை வந்துவிடும். எனவே இந்த முறை திருச்சிராப்பள்ளிக்கு
இரவே சென்று தங்கிவிட வேண்டும். வைகறையில் எழுந்து காட்சிகளை
எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்குத் தகுந்தாற்போல் திருச்சிராப்பள்ளி
நண்பர்களிடம் எங்கள் பயணத்திட்டத்தை உறுதிப்படுத்தினேன். செண்பகத்
தமிழரங்கு இராச. இளங்கோவன் அவர்கள் அண்ணன் திரு. கேசவனார் அவர்களிடம் சொல்லித் தங்குவதற்கு அறையைப் பதிந்தார். என் வருகையை அறிந்த அவர்கள் மகிழ்ச்சியுடன் ஊக்கப்படுத்தி,
அழைத்தனர்.
ஒரு வாடகை மகிழ்வுந்தில் புதுச்சேரியிலிருந்து
மாலைநேரத்தில் நானும், ஒளி ஓவியர் தம்பி பரத்தும் புறப்பட்டோம். இடையில் சிற்றுண்டி
உளுந்தூர்ப்பேட்டையில் முடித்தோம். இரவு
பத்து மணியளவில் திருச்சிராப்பள்ளித் தெப்பக்குளம் ஒட்டிய விடுதிக்குச் சென்று
சேர்ந்தோம்.
வைகறை நான்கரை மணிக்கு எழுந்தோம். நான் வெளியில் வந்து நின்று விடிந்தும்
விடியாத காலைப்பொழுதில் மலைக்கோட்டை அழகைக் கண்டு மகிழ்ந்தேன். முதலில்
நான் குளித்து முடித்துத் தெப்பக்குளத்தைச் சுற்றி ஒரு நடைபோட்டேன்.
பலவாண்டுகளுக்கு முன்பு நடந்த இடம் அல்லவா? பழைய
நினைவுகள் நெஞ்சில் எழுந்து அடங்கின.
தெப்பக்குளத்தில் பலவாண்டுகளுக்கு முன்பு பார்த்த மீன் காட்சியைப்
பார்க்கலாம் என்று நினைத்தேன். இன்னும் பொழுது சரியாகப் புலராததால்
மீன்கள் காட்சிக்குக் கிடைக்கவில்லை.
ஐந்தரை மணிக்கு விடுதியிலிருந்து வெளியேறினோம். காவிரியின் தென்கரையில்
இருந்தபடி ஆற்றை ஒரு நோட்டமிட்டோம். இன்னும் கங்குல் விலகவில்லை.
கரூர் சாலையில் அல்லூரை நோக்கிச் சென்ற வண்டியைத் திருவள்ளுவர்
தவச்சாலையை ஒட்டி நிறுத்தும்படி சொன்னேன். தவமுனைவர்
ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் தம் தவச்சாலை வாழ்க்கையில் நிறைவுகண்டு
இப்பொழுது மதுரைக்குப் போக உள்ள செய்தி நினைவுக்கு வந்ததால் ஐயாவின் தவமனையைக் காணும்
வேட்கை எழுந்தது.
1994
அளவில் ஐயா அவர்கள் தவச்சாலையை
உருவாக்க நினைத்தபொழுது நான் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்
ஆய்வு மாணவன். தவச்சாலை திறந்தபொழுது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவன்.
அதன்பிறகு தவச்சாலை நூலகத்தை காரி, ஞாயிறு கிழமைகளில்
பயன்படுத்திப் படித்தவன். அதுபோல் ஐயாவிடத்து மிகுந்த அன்புகொண்டவன்.
அவர்களின் தமிழ்ப்பணியையும், தமிழ் உணர்வையும்
அறிந்தவன். அந்த அடிப்படையில் தவச்சாலைக்குள் இருந்த அம்மையாரை
அழைத்து, என்னை அறிமுகம் செய்துகொண்டு தவச்சாலையைப் பார்க்க விரும்புவதைத்
தெரிவித்தேன். அவர்களும் அன்புடன் வரவேற்றுத் தவச்சாலை நிலைகளை விளக்கினார்.
ஐயா அவர்கள் தம் வாழ்நாள் செயலாக உருவாக்கிய திருவள்ளுவர் தவச்சாலையிலிருந்து
விடுபட்டு இப்பொழுது மதுரையில் வாழ்வதற்கு முன்வந்த செய்தியை அம்மா அவர்கள் எனக்கு
விளக்கினார்கள். தவச்சாலை நூல்கள் திரு. சு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்ப்பற்றுடையை தங்கள் குடும்பத்திற்கு
ஐயா அவர்கள் மதிப்புத்தொகை பெற்றுக்கொண்டு இந்த தவச்சாலையை வழங்கியுள்ளதாகவும் அம்மா
அவர்கள் சொல்ல, அறிந்தேன்.
காவிரிக்கரையில் ஐயா அவர்கள்
தவவாழ்வு நடத்திய அந்தத் தவமனை இப்பொழுது ஐயா இல்லாமல்
தனித்து உள்ளது. ஆனால் ஐயா அவர்களுடன் மூன்று தலைமுறையாகப் பழகிய,
தமிழ்ப்பற்றுடைய குடும்பத்தினரிடம் தவமனை இப்பொழுது
உள்ளமை ஆறுதலாக இருந்தது. தவமனையில் இருந்த அம்மாவிடம் விடைபெற்றுக்கொண்டு
காவிரியாற்றின் போக்கைப் படமாக்கும் திட்டத்தில் இறங்கினோம். மேட்டூர் அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால், அண்மையில்
பெய்த மழைநீர், பிற அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட மழைநீர் காரணமாகப் புதிய நீர்ப்போக்கு மிதமாக இருந்தது.
சில இடங்களில் கரையிலிருந்தும். சில இடங்களில் ஆற்றின் நடுவிடம்
வரையும் சென்றும் காலைக் கதிர்க்காட்சிகளைப் பின்புலமாகக் கொண்ட காவிரியை அழகுடன் காணொளியில்
எடுத்துக்கொண்டோம். காவிரியை மீட்க முடியவில்லை என்றாலும் எதிர்காலத்
தமிழகத்திற்குப் பாதுகாத்து வழங்கும் வகையில் சில நீர்ப்போக்குக் காட்சிகளை எடுக்க முடிந்ததே என்று மன அமைதிகொண்டேன்.
குளித்தலை வரை பயணம் செய்து காவிரியின் தென்கரைப் பகுதிகளைக்
கண்டு மகிழ்ந்தோம். பல்வேறு அணைசார் காட்சிகள், மதகுக் காட்சிகள் யாவும்
சிலப்பதிகார வரிகளுக்குப் பொருத்தமாகப் படமாக்கிக்கொண்டோம். அடுத்துக்
காவிரியின் வடகரையிலிருந்து பல்வேறு காட்சிகளை எடுக்கத்தொடங்கினோம். பல்வேறு குருவிகள், கொக்குகள், நாரைகள், அரிநெல்லிக்காய், பூக்கள்,
குரங்குகள், மீன்கள், நீர்க்கோழிகள்
படக்கருவிகளில் பதிவாயின.
தமிழ்த்தொண்டர் அண்ணன் கேசவன் அவர்கள் நாங்கள் எந்த இடத்தில்
இருக்கின்றோம் என்று வினவி எங்களை ஆற்றுப்படுத்தியவண்ணம் இருந்தார். முக்கொம்பிலிருந்து அணைக்கரை,
மேலூர் வழியே திருவரங்கம் வரும்படி சொன்னார். அதனால்
நாங்களும் காவிரியின் வடகரையில் பயணம் செய்யத் திட்டமிட்டோம். முதல்நாள் பெய்த மழையில் சாலைகள் பழுது என்பதால் இந்த வழியில் மகிழ்வுந்து
செல்லாது என்று வழிப்போக்கர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில்
பெரிய மகிழ்வுந்து ஒன்று வந்தது. அவர்களை வினவியதில் பாதைகளில்
கவனமாகச் செல்லமுடியும் என்றும் தாங்கள் அவ்வாறே வந்ததாகவும் கூறினார்கள்.
ஒரு வண்டி மட்டும் செல்லும் வழியாக அந்தப் பாதை இருந்தது. எதிரில் ஏதேனும் வண்டிகள்
வந்தால் மாற வழியில்லை. எங்கள் வண்டி சிறிய வண்டி என்பதால் நம்பிக்கையுடன்
சென்றோம். இடையில் மயில்களின் கூட்டமும் குயில்களின் குரலும்
கேட்டவண்ணம் இருந்தன. ஆனால் அவற்றைப் படமாக்கமுடியவில்லை.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இடங்களின் வருணனைகளின் அனைத்துக்
காட்சிகளும் இப்பொழுதும் எங்களுக்குத் தெரிந்தன. பாதையில் மெதுவாகச் செல்ல நேர்ந்தது.
தூரம் நீண்டுகொண்டே இருப்பதாக உணர்ந்தேன். இடையில்
சிறு பள்ளம் இருந்தது.
மற்ற வண்டிகள் பெரிய வண்டி என்பதால் தாராளமாகச் சென்றன. எங்கள் வண்டி சிறிய வண்டி
என்பதால் பள்ளங்களில் வண்டியின் “முன் பார்” இடித்தது. எனவே அருகில் கிடந்த கற்களை எடுத்துப்போட்டு,
பள்ளத்தைச் சரிசெய்தபடியே சென்றோம். சிறிது கவனம்
தவறினாலும் வண்டி ஆற்றிலோ, அல்லது அடுத்த கொள்ளிடத்தின்
பள்ளத்திலோ விழ நேரும் என்ற நிலை இருந்தது. இப்பொழுது
பள்ளம் அடிக்கடி தென்பட்டது. இனி திரும்பவும் முடியாது.
முன்னேறவும் முடியாது என்ற நிலை. வழிப்போக்கர்கள்
எங்களுக்காக இரங்கினார்கள். ஆனால் படபிடிப்பில் நாங்கள் சமரசம்
ஆகாமல் தொடர்ந்து படம் எடுப்பதும் அலுப்பு ஏற்படும்பொழுது வண்டியை நகர்த்திக்கொண்டு
திருவரங்கம் நோக்கி முன்னேறுவதுமாக வந்தோம்.
பெரும் இடையூறுகளுக்கு இடையே அணைக்கரை என்ற ஊர் தென்பட்டது. அங்குதான் தார்ச்சாலை தொடங்கியது.
மக்கள் வாழும் பகுதி அது. அங்கு சில ஆட்டு நிரைகளைப் படமாக்கினோம். இனி எங்கும் இறங்காமல் நேரே வண்டியைச்
செலுத்தும்படி ஓட்டுநரைக் கேட்டுக்கொண்டோம். வண்டி திருவரங்கத்தை அடைந்தது. சிறப்பான வீட்டு உணவு. உண்டவர்களின் உரையாடலில் மயிலாப்பூர், மேற்கு
மாம்பலம், பெங்களூரு என்ற சொற்கள் அடிக்கடி ஒலித்தன. பணி ஓய்வுக்காலம் பற்றி அவர்களின்
உரையாடலில் சிறப்புச் செய்திகள் இருந்தன. வாழ்வதற்கு ஏற்ற இடம் திருவரங்கம் என்று ஆர்வமுடன்
பேசிக்கொண்டு இருந்தார்கள். பகல் ஒரு மணியளவில் மதிய உணவை முடித்தோம்.
ஓர் உணவு அறுபது உருபா. சில திண்பண்டங்களையும்
வாங்கிக்கொண்டு கல்லணை வழியாகத் திருவையாறு செல்லும்படி ஓட்டுநருக்குக் குறிப்பு வழங்கினேன்.
ஓட்டுநரும் இப்பொழுது குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தின்
பெரும்பகுதியை அறிந்துவிட்டதால் அவரே தேவையான இடங்களில் வண்டியை
நிறுத்தினார். இப்பொழுது ஒரு வாத்துக்கூட்டம் வயலில் பெருங்குரல்
எடுத்து பேசிக்கொண்டிருந்தது. மெதுவாக அந்த வாத்துகளை ஓரிடத்தில்
குவித்துக் காட்சிப்படுத்தினோம். திருக்காட்டுப்பள்ளி வழியாகத்
திருவையாற்றை நோக்கி வந்து சேர்ந்தோம். ஐயா தங்க. கலியமூர்த்தி அவர்கள் எங்கள் வருகைக்காகக் காத்திருந்தார். மாலை நான்குமணிக்குத் திருவையாற்றில் சில காட்சிகளை எடுக்க நினைத்தோம்.
புகைப்படக்கருவிகள் இப்பொழுது மின்னேற்றம் செய்தால்தான் இயங்கும் என்ற
நிலை ஏற்பட்டது. எங்கள் புகைப்படக் கருவிகளுக்கு உரிய மின்கலன்களை
இப்பொழுது மின்னேற்றம் செய்தோம். அதுவரை குடந்தை ப. சுந்தரேசனார் குறித்த செய்திகளை
உரையாடி என் செல்பேசியில் பதிந்துகொண்டேன்.
மாலைவெயில் குறையத் தொடங்கியது. சில காட்சிகளை அவசர அவசரமாக
எடுத்துக்கொண்டோம். குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் அமர்ந்து பெரியபுராணம்,
சைவசித்தாந்த சாத்திரங்களைத் திருவையாற்றுப்பகுதி மக்களுக்குப் பாடம் நடத்திய அரங்கினைக்
காட்சிப்படுத்தினோம். ஐயா அவர்கள் விரும்பி உண்ட திருவையாறு அசோகா அல்வாவை எங்களுக்கு
வாங்கித் தர திரு. கலியமூர்த்தி அவர்கள் விரும்பினார்கள். வேண்டாம் என்றும் அடுத்த
முறை வரும்பொழுது அமர்ந்து உண்ண அணியம் என்றும் கூறிப் பிரியா விடைபெற்றோம்.
மாலை
4.30 மணிக்குப் புறப்பட்டு, திருமானூர்.
கீழைப்பழூர், பொய்யூர். வி.கைகாட்டி, தத்தனூர் வழியாக ஒரு மணி நேரத்தில் உடையார்பாளையத்தை அடைந்தோம். எப்பொழுதும் குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் எங்கள் வண்டி
பெருவேகமெடுத்துப் பறந்தது. பொழுது சாய்ந்து, இப்பொழு
இருட்டின் சாயல் தெரியத் தொடங்கியது. மலங்கன்குடியிருப்பு இரா. இரவி அவர்கள்
முன்பே திட்டமிட்டு ஏற்பாடு செய்தபடி நண்பர் திரு.
அரங்கன் அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தார்.
நானும் நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு, இடையாறு என்னும் சிற்றூருக்குச்
சென்று நில உரிமையாளரைத் தேடிப்பிடித்து நிலத்துக்குச் செல்லும்பொழுது இருட்டத்தொடங்கியிருந்து.
இன்னும் சற்று நேரத்திற்கு முன்பாக வந்திருந்தால் ஒரு ஏக்கர் பரப்பில்
இருந்த காந்தள் மலர்களை (கார்த்திகைப்பூக்களை) அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். இருப்பினும் காந்தள்
மலர்களைக் கிடைத்த நேரத்தில் காட்சிப்படுத்தினோம். சில படங்கள் அழகாக இருந்தன. மற்ற படங்கள் தெளிவாக இல்லை. எங்கள் முயற்சிக்குக் கிடைத்த
பரிசாக அந்த அரிய படங்களை எடுத்துக்கொண்டு புதுச்சேரிக்குப் புறப்பட்டோம்.
வழிப்பட்ட ஊர்களில்
எல்லாம் உறவினர்களின் - நண்பர்களின் வீடுகள் இருந்தன.
சில நண்பர்களை மட்டும் சாலைக்கு வரச்சொல்லிப் பார்த்தபடி புதுச்சேரிக்கு
வந்துசேர்ந்தேன். என் மனைவியும், குழந்தைகளும் காலையில் நடைபெறும் தம் தம்பியின்
மண உறுதிப்பாட்டுக்குச் சொல்லிவிட்டுச் செல்ல எனக்காகக் காத்திருந்தனர்.
1 கருத்து:
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......
http://blogintamil.blogspot.in/2014/11/gdh.html
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
கருத்துரையிடுக