நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 12 நவம்பர், 2014

அமெரிக்காவின் மூன்று மாநிலங்களில் தமிழ்மொழிக்கு ஏற்பளிப்பு





  அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் (அ.த.க.) என்கிற இலாபநோக்கமற்ற வரிவிலக்கு பெற்ற கல்வி அமைப்பு 4 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அறிமுகப் படுத்தித் தற்பொழுது 62 பள்ளிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர், அமெரிக்க நாட்டில்   மட்டுமல்லாது  இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் பள்ளிகளும் இவற்றில் அடங்கும்.

  இதுவரை 8 நிலைகள் உருவாக்கப்பட்டு 3500க்கும் மேற்பட்ட மாணாக்கர் தமிழ்
பயில்கின்றனர். அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணாக்கருக்கும் பயன்படும் வகையில் கல்வி மேலாண்மைக்கான பொதுவான மென்பொருள்களை நிறுவி உதவி புரிகிறது. அத்துடன் மின்கற்றலுக்கான பாடங்களையும் உருவாக்கி வருகிறது அ.த.க.  இவற்றின் மூலம் வகுப்பறை பயிலுதலைக் கடந்து மேல்நிலை மாணாக்கர் பழகுத்   தமிழுக்கான இலக்கணமும், அறிமுக நிலை மாணாக்கர் ஊடாட்டு மென்பொருள் வழியே அடிப்படை தமிழ் எழுத்துக்களையும், சொற்களையும்  பயில முடியும்.

  அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் வார இறுதியில், முழுதும் தன்னார்வத் தொண்டர்களால் இலாப நோக்கமற்று நடத்தப்படுபவை. தம் பிள்ளைகள்   அமெரிக்க மண்ணில் வாழ்ந்தாலும், அவர்கள்  தமிழ் படிக்க  வேண்டுமென விழையும் பெற்றோர்கள்  செலுத்தும் கட்டணங்களை மட்டுமே முதலாகக்கொண்டு நடைபெறும் பள்ளிகள் தான் அனைத்துமே.பயிற்றுவிக்கும் ஆசிரியர் யாவரும் ஊதியம் எதுவுமின்றி ஒவ்வொரு வாரமும் தங்களின் பொன்னான நேரத்தைச் செலவிட்டுப் பணியாற்றும் தன்னார்வத்  தமிழ் பெற்றோர்கள் தாம்.  எந்த அரசாங்கங்களும் (இந்திய/தமிழக) இவற்றுக்கு நிதியுதவியோ, இடமோ, பொருளோ வழங்குவதில்லை.

  அமெரிக்க நாட்டில் இலாப நோக்கமற்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் சலுகையாக  வகுப்பறை வசதிகள் சற்றுக் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கிடைக்கின்றன. தன்னார்வச் சேவைகளால் இயங்கும்  தமிழ்ப்பள்ளிகளின் செலவீனங்களில் பெரும்பகுதி வகுப்பறை வாடகைக்கே செலவாகிறது.

  இந்தச் சூழ்நிலையிலும் தமிழ்க்கல்வியைத் தரத்துடன் வழங்குவதன் மூலமே அமெரிக்கத் தமிழ் மாணாக்கர் மற்ற மொழிகளைப் போலத் தமிழையும் ஒரே தரத்தில் மதிப்பர் எனும் குறிக்கோளுடன் இயங்கி வருபவை இப்பள்ளிகள். 

  பெற்றோரின் விருப்பத்திற்காகத் தொடக்கப் பள்ளியில் (நான்கு / ஐந்தாம் வகுப்பு வரை) படிக்கும் மாணாக்கரே பெரும்பான்மையாக வாரக்கடைசியில் நடைபெறும் தமிழ்ப் பள்ளிகளில் பயில்கின்றனர். நடுநிலை/மேல்நிலை பள்ளி மாணாக்கரின் முதன்மை கல்வி சார்ந்த வகுப்புகளும் அதனை ஒட்டிய வீட்டுப்பாடங்களும்தினசரிச் சுமையாகிப் போவதால் அவர்களுக்கு வாரநாட்களில் மிகக்குறைந்த நேரமே கிடைக்கிறது. வாரக்கடைசி நாட்களில் இவர்கள் விளையாட்டு, மற்ற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

  இந்த ஆளுமையிலிருந்து மாணாக்கரை மீட்டுத் தமிழ்மொழி கற்பதிலும் அவர்களுக்குப் பயன் உள்ளது என்பதைப், பெற்றோரின் வற்புறுத்தலின்றி அவர்களாகவே உணர, தமிழ்ப்பள்ளிகளுக்கு உயரிய கல்வி நிறுவனம் எனும் அங்கீகாரம் ஒரு மாபெரும் தேவை.

  தமிழ்ப்பள்ளிக்கான  அங்கீகாரம் என்பது அமெரிக்க மண்ணில் நடக்கும் பள்ளிகளுக்கு இணையான தரத்துடன் நடைபெறும் கல்வி நிறுவனம் என்பதற்கான சான்று.இந்த அங்கீகாரத்தினைப் பெறுவது எளிதல்ல.கல்வித்துறையில் பணியாற்றி அனுபவமில்லாத தன்னார்வலர்களால் நடத்தப்படும் பள்ளிகள், உயர்தரக்கல்வி நிறுவனத்துக்கான அங்கீகாரம் பெற முயல்வது ஒரு மலைப்பான விடயம்.

  அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தினை  வடிவமைத்து, உருவாக்கி, அவற்றைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மெருகேற்றும்  பணியினைச் செய்து வருகிறது.  மட்டுமல்லாமல், பள்ளி நிர்வாகம், மின்கற்றல் போன்ற கட்டுமானப் பணிகளை அனைத்துப் பள்ளிகளுக்கும் பயன்பெறும் வண்ணம் செயல்படுத்துகிறது.இருப்பினும், இதனைக் கடந்து  பரந்து விரிந்த அமெரிக்க நாட்டில், மாநில/மாவட்ட அளவில் நடைபெறும் பள்ளிகளை நிர்வகிப்பது அந்தந்தப் பகுதி தமிழ்க்கல்வி அமைப்புகளும் தமிழ்ச்சங்கங்களும் தான். மாணாக்கரைச் சேர்ப்பது, ஆசிரியர்களை இனம் கண்டு நியமிப்பது, வகுப்பறைகளை வாடகைக்குப் பதிவு செய்வது பின்னர்த் தலையாயக் கடமையான தமிழ் மொழியைச் சீரிய முறையில் அடுத்த தலைமுறைக்குக் கற்பிப்பது போன்ற நடைமுறைப் பணிகள்வட்டாரத் தமிழ்ப்பள்ளி அமைப்புகளையே சாரும்.

  இப்படி  பல்வேறு சூழல்களில், அனைத்தையும் ஒருங்கிணைத்து நடைபெறும் அமெரிக்கத் தமிழ் பள்ளிகளின் அமைப்பு முறை தமிழ் நாடு, சிங்கப்பூர், மலேயா, ஈழம் போன்ற நாடுகளில் 12 ஆண்டுகள் தமிழ் கற்கும் முறையைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது.அமெரிக்காவில் இரண்டாவது மொழியாகவே தமிழ் மொழியைக் கற்கிறார்கள். அமெரிக்க நாட்டுக் கல்வி முறைப்படி குறைந்த பட்சம் மேல் நிலைப் பள்ளியில் (9 முதல் 12 வரை) நான்கு ஆண்டுகள் ஆங்கிலமன்றி வேறொரு மொழியை மாணாக்கர் கட்டாயமாகப் பயில வேண்டும். இதற்காக 4 மொழி மதிப்பீட்டு புள்ளிகளை  (language credits) மாணாக்கர் பெற முடியும். இதனால் கல்லூரியில்/பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் சேருவதற்குத்   தேவையான கூடுதல் புள்ளிகள் கிடைப்பதுடன், கட்டணமும் வெகுவாகக் குறைகிறது.

  பள்ளி ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரமும்   2 முதல் 4 மணி நேரம் செலவழித்துத் தமிழ்கற்கும் மாணாக்கருக்கு மற்ற மொழிகளைப் போல மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுத் தந்தால்மட்டுமே அவர்கள் உந்துதலுடன் தமிழ் கற்பர்என்ற நிலை உருவானது.இதனை மனதில் கொண்டு தமிழ் மொழி கற்பதற்கான தேவையையும் பூர்த்தி செய்வதுதான் தமிழ்ப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் (Accreditation).

  மொழி மதிப்பீட்டு புள்ளிகளுக்காக ஸ்பானிஷ், ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஏன் ஜப்பானிய, சீன மொழிகளைப் பயிலும் தமிழ் மாணாக்கர் அமெரிக்க நாடு முழுவதும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மற்ற மொழிகளுக்கு மாற்றாக அல்லது கூடுதலாகத் தமிழ் மொழியைப் பயில்வது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 4 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுத் தரும்.

  அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் வாயிலாகத் தமிழ் கற்கும் மாணாக்கரின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது ஒரு முதல் படி. தமிழர் அடர்த்தியாக வாழும் ஊர்களில் முழு நேரப் பொதுப் பள்ளிகளிலேயே தமிழ் மொழியைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பாக இது அமையக்கூடும்.

தமிழ்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது என்பதைத் தலையாயக் கடமையாகக் கொண்டு அ.த.க. கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்ததன் பயனாகத் தற்பொழுது 3 மாநிலங்களில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மினசோட்டா, மிசெளரி &டெக்சஸ் (ஹூஸ்டன் நகரப் பள்ளி) பள்ளிகள் இந்த மாபெரும் அங்கீகார முத்திரையை ஈண்டெடுத்திருக்கிறார்கள்.ஹூஸ்டன் பள்ளி முதலில் ஜூன் 2014ல் இந்த அங்கீகாரத்தைப் பெற்றது அதனைத் தொடர்ந்து மினசோட்டா/மிசெளரி மாநிலப் பள்ளிகள் அக்டோபர் 2014ல் இந்த மைல்கல்லைத் எட்டியிருக்கிறார்கள்.

  இந்தப் பள்ளி அங்கீகாரத்தை வழங்கிய நிறுவனத்தைப் பற்றிய சிறு குறிப்பு:
அட்வான்செட் (AdvancEd www.advanc-ed.org) எனும் இந்நிறுவனம் கல்வி நிலையங்களின் ஆற்றலைப் பல பரிமாணங்களில்ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வழங்கும்உலகளாவிய நிறுவனம்.

  இதுவரையில் இந்நிறுவனம் உலகம் முழுதும், ஏறக்குறைய 20 மில்லியன் மாணாக்கர் பயிலும்,  32,000 கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் 50 மாநிலங்களிலும் ஏற்கத்தக்க கல்வி மதிப்பீட்டு நிறுவனம் அட்வான்செட் ஒன்று தான். அட்வான்செட் வரையறுக்கும் பள்ளி மதிப்பீடுகளைத் மீறியதொரு தரம் இன்று வரை எதுவுமில்லை என்று சொல்லலாம்.

  மினசோட்டா, மிசௌரி, ஹூஸ்டன்- டெக்சாஸ் ஆகிய   3 தமிழ்ப் பள்ளிகளும் அரசு நடத்தும் பொதுப்பள்ளிகள் பெற்ற சராசரிப் புள்ளிகளை  விடஅதிகப் புள்ளிகள் பெற்று சீர்மிகு  தரத்துடன் நடப்பதாக, அட்வான்செட் தனது  இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  அரசாங்கம் பல மில்லியன் டாலர்கள் செலவழித்து முழுதுமாக எற்று நடத்தும்  பொதுப் பள்ளிகள் பல அட்வான்செட் வரையறுக்கும் அடிப்படைத் தரத்தைக் கூடத் தாண்டாது என்பதும், தரமான அரசாங்கப் பள்ளிகளின் சராசரி தரக் கட்டுப்பாட்டு புள்ளிகளைக்  காட்டிலும் கூடுதலாகப் பெற்று இம்மூன்று தமிழ்ப் பள்ளிகளும் அங்கீகாரத்தை ஈன்றெடுத்திருக்கின்றது என்பது சாலச்சிறப்பு.

  அட்வான்செட் நிறுவனத்தைச் சார்ந்த வெவ்வேறு தனி நபர்கள் அடங்கிய மூன்று குழக்கள்  மினசோட்டா, மிசௌரி, ஹூஸ்டன் டெக்சாஸ் இம்மூன்று பள்ளிகளையும் ஆய்வு செய்தன.   இருப்பினும் ஆய்வின் முடிவுரையாக அவர்கள் குறிப்பிட்டது ஒரே கருத்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

  "எங்களின் 30 ஆண்டு கல்வித்துறை அனுபவத்தில் இத்தமிழ்ப்பள்ளி அமைப்புகள் போன்றதொரு தன்னார்வு கல்வி நிறுவனத்தைக் கண்டதில்லை. பயிற்றுவித்தல் என்பது இத்தன்னார்வலர்களுக்கு முதன்மை பணியாக இல்லாவிடினும் தரமான கல்வி மற்றும் கல்வி நிறுவனத்துக்கான அத்தனைத் தேவைகளையும்/பணிகளையும் இவர்கள் திறம்படச் செய்வது கண்டு வியக்கிறோம்.அத்துடன் தமிழ் மொழியின் மேல் கொண்டிருக்கும் பற்றைப் பள்ளி நிர்வாகக் குழு, ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணாக்கர உட்பட அனைவரின் கண்களிலும்   நாங்கள் காண முடிந்தது" என்றார்கள்.

  இம்மூன்று பள்ளிகளின் அங்கீகாரம் ஒரு தொடக்கம் தான்.  இது காட்டுத்தீ போல மற்ற மாநிலங்களுக்கும் பரவும். சிங்கப்பூர், மலேயா நாடுகளுக்குக் குடி புகுந்த தமிழர் எப்படித் தமிழை அந்நாட்டில் தழைத்தோங்கச் செய்தார்களோ அதைப்போலத் தற்போதைய அமெரிக்கத் தமிழ்த்  தலைமுறையினர்    அமெரிக்க நாட்டில் வாழும் அடுத்த தலைமுறையினருக்கும் அதனைக் கடந்தும் எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.


  ஆசியாவின் மூத்த செம்மொழியான தமிழ்மொழி 2000 ஆண்டுகளுக்கும் மேலாகமாற்றங்களற்ற இலக்கணத்துடன் பயன்பாட்டில் உள்ள ஒரே மொழி என்பதனை உலக வல்லரசான அமெரிக்காவும் உணர்ந்து போற்றும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. பல்வேறு நாட்டு இனங்களையும் மொழிகளையும் பேசும் புலம் பெயர்ந்த மக்களைப் பிரதானமாகக் கொண்டு, அனைத்துப் பண்பாடுகளையும் மொழிகளையும் சமமாக மதிக்கும் அமெரிக்க நாடும் தமிழின் உயர்வையும், பெருமையையும்  உணரத்  தொடங்கியுள்ளது.

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பதிவினைக் கண்டேன். நம் மொழியின் அருமை பெருமையை அவர்கள் உணர்ந்ததறிந்து மகிழ்கின்றேன்.