பண்ணாய்வான் ப.சு. சீர்பரவுவார் விருதுபெறல்
(இடம்: இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு, திருவரங்கம்)
திருவரங்கத்தில் இராசவேலர் செண்பகத் தமிழ்
அரங்கு என்னும் அமைப்பு தமிழுக்கு ஆக்கப்பணிகள் செய்யும் அறிஞர்களை அழைத்துப் பலவாண்டுகளாகப்
பாராட்டுவதை நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றது. இதுவரை 1200 கூட்டங்களை இவ்வமைப்பினர்
நடத்தியுள்ளனர். ஒவ்வொரு காரிக்கிழமையும் இங்கு மூத்த தமிழறிஞர்கள் கூடி, தமிழ் குறித்துச் சிந்திப்பார்கள். எந்த விளம்பர வெளிச்சமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் இங்குத் தமிழ் குறித்தும்
இலக்கியங்கள் குறித்தும் அறிஞர்கள் சிந்திக்கின்றனர். இங்கு அறிஞர்கள் பாராட்டப்பட்டால்
அவர்கள் தமிழுக்கு ஏதேனும் ஒருவகையில் தொண்டுபுரிந்தவர்களாகவே இருப்பார்கள்.
என் பேராசிரியர் எழில்முதல்வன், முதுமுனைவர்
இரா. இளங்குமரனார், தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர், திரு. எம். எஸ். நாடார் உள்ளிட்ட
எத்தனையோ அறிஞர்கள் இந்த அரங்கில் உரை நிகழ்த்தியுள்ளனர். இவமைப்பினர் நல்கிய பட்டங்களையும்,
விருதுகளையும் மேன்மையாகக் கருதிப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை
ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று மாலை ஆறு மணிக்குத் திருவரங்கம், செண்பகத் தமிழ் அரங்கில்
நடைபெற்றது. தமிழகத்தின் மிகச் சிறந்த தமிழ் உணர்வாளர்கள், புலவர் பெருமக்கள் அழைக்கப்பட்டு
உரையாற்றும் வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் த. கனகசபை ஐயா கலந்துகொண்டு விழாப்
பேருரையாற்றினார். அன்னாரின் உரை இசைத்தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பதாகவும், ப.சு. அவர்களின்
பன்முக ஆற்றலை விளக்குவதாகவும் இருந்தது.
புலவர் பெருமான், சிற்றிலக்கியவேந்தர் திருமழபாடி
மா. திருநாவுக்கரசு அவர்கள் கலந்துகொண்டு ஒரு மணிநேரம் பண்ணாராய்ச்சி வித்தகருடன் தமக்கிருந்த
தொடர்பை அவையோர் வியக்க எடுத்துரைத்தார். மணல்மேடு திரு. குருநாதன் ஐயா கலந்துகொண்டு,
தாம் பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சு. அவர்களின் தலைமையில் திருமணம் செய்துகொண்டமையை நினைவுகூர்ந்தார்.
மணல்பாறையிலிருந்து புலவர் நாவை சிவம் ஐயா
கலந்துகொண்டு தம் நினைவுகளை நினைவுகூர்ந்தார். திரு. தமிழழகன் ஐயா தலைமையில் இந்த விழா
நடைபெற்றது. ஒவ்வொருவரும் குடந்தை ப. சுந்தரேசனாரை எந்த அளவு நேசித்துள்ளனர் என்பதை
அவர்களின் உரையால் அறிந்து உவந்தேன். பண்ணாராய்ச்சியாளர் வாழ்வும் பணியும் குறித்து
யான் இயக்கிய ஆவணப்படத்தின் முன்னோட்டத்தைத் திரையிட்டுப் பார்த்தோம். அனைவரின் கண்களிலும் கண்ணீர்
பனித்தது. “ஆர்வலர் புன்கணீர் பூசல்தரும்” என்ற திருவள்ளுவப் பெருமானின் வரிகளை நினைந்து
நானும் கலகினேன்.
குடந்தை
ப. சுந்தரேசனாருடன் பழகியவர்கள் முன்னிலையில் அவரை நேரில் பார்த்தறியாத யான் எடுத்த
படம் முன்னோட்டமாகக் காட்டப்பட்டமை என் வாழ்வில் நினைக்கத்தகுந்த பொழுதுகளாகும். என்னுடைய
முயற்சியை அனைவரும் பாராட்டி உள்ளம் உவகையுற்றனர். என் தொடர்பணிகளை ஊக்கப்படுத்தும்
வகையில் பண்ணாய்வான் ப.சு. சீர் பரவுவார் என்ற உயரிய விருதை அண்ணன் திரு. கேசவன் அவர்களின்
கையால் வழங்க, அனைவரும் வாழ்த்தொலி முழக்கினர்.
மாலையணிவித்தும், ஆடை அணிவித்தும். அன்பளிப்புகள்
வழங்கியும் தம் நன்றிப்பெருக்கை அனைவரும் வெளிப்படுத்தினர். இலால்குடி சிவா ஐயா அவர்களின் குடும்பத்தின் சார்பிலும் எனக்குச் சிறப்புச் செய்யப்பட்டது. அவரின் உடன் பிறந்தார் திரு. சுப்பிரமணியன் ஐயா எனக்குச் சிறப்புச்செய்தார்.
அங்கிருந்த அறிஞர்கள் ஒவ்வொருவரும்
தமிழுக்கு முதன்மையான பணிகள் செய்தவர்கள். பன்னூலாசிரியர்கள். பாவலர்கள், கொள்கையாளர்கள். எந்த
விளம்பர வெளிச்சத்துக்கும் அவர்கள் வராதவர்கள். கற்ற தமிழை மற்ற தமிழர்களுக்கு விரித்துரைத்தவர்கள்.
பல்வேறு தமிழ்க்கல்லூரிகளில் பயின்ற அவர்கள் ஒவ்வொருவரும் பண்ணாராய்ச்சி வித்தகருடன்
கொண்டிருந்த தொடர்பை நினைவலைகளாக வழங்கினர். இவர்கள் ப.சுந்தரேசனார் ஐயாவை அழைத்து, பெரியபுராணம் கேட்டுள்ளனர். சிலம்பை ஒலிக்கச் செய்துள்ளனர். பொருட்கொடை வழங்கி அப்பெருமகனாரின் துன்பம் விரட்டியுள்ளனர். பட்டாடை வாங்கியளித்தவர்களும், அணிமணிகள் வாங்கித் தந்து அழகுபார்த்தவர்களும் அங்கு வந்திருந்தனர். பண்ணாராய்ச்சியாளரின் தன்மானம் அறிந்தவர்கள் வந்திருந்தனர்.
அங்கு வந்திருந்த திரு. மணல்மேடு குருநாதன் ஐயா பாவேந்தர்
பாரதிதாசன் அவர்களிடத்து மிகுந்த அன்புகொண்டவர். பாவேந்தரைத் தம் இல்லத்துக்கு அழைத்து
விருந்தோம்பியவர். குயில் இதழில் தொடர்ந்து எழுதியவர். பன்னூலாசிரியர். பாவலர் சுரதாவிடத்து
அன்புகொண்டவர். அவர் தம் கையுறையாகச் சில அன்பளிப்புகளை நினைவுக்காக எனக்கு வழங்கிச்
சிறப்பித்தார். தந்தையார் நிலையில் இருந்து அவர் மொழிந்த இன்மொழிகள் என் உயிரைச் சில்லிடச்
செய்தது.
இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கின் அமைப்பாளராக
இருந்து, தந்தையாரின் பணியைத் தொடர்ந்து செய்துவரும் உடன்பிறப்பு இராச. இளங்கோவன் அவர்களின் பெருமுயற்சியில் இந்த விழா அமைந்தது. அவருக்கும் இராசவேலர் செண்பகத் அரங்குக்கும்
என்றும் நன்றியன். அங்கிருந்த அறிஞர்களின் அன்பில் மிதந்தபடி நள்ளிரவு புறப்பட்டு, வேலூருக்குச் செலவுநயப்பு மேற்கொண்டேன்.
செம்பியர்குடியிலிருந்து வந்திருந்தவர்கள் ஆடை அணிவித்து மகிழல்.
மணல்மேடு குருநாதன் ஐயா சிறப்பிக்கப்படுதல். அருகில் தனித்தமிழாசிரியர் திருக்குறள், மணல்பாறை சிவம் ஐயா
இசையறிஞர் பேராசிரியர் த.கனகசபை ஐயாவின் விழாப்பேருரை
சான்றோர் பெருமக்கள்
திருமழபாடியில் வாழும்
புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் உரை
மு.இளங்கோவன் உரை
3 கருத்துகள்:
தங்களின் அயரா பணிகளுக்கு வழங்கப்பெற்ற விருது
வாழ்த்துக்கள் ஐயா
திருவரங்கத்தின் கிடைத்த பெருமை தங்களது முயற்சிக்கும், அயரா உழைப்பிற்கும் உரியது. தங்களது மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்வதில் பெருமையடைகிறேன். தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புள்ள இளங்கோவனுக்கு.
வணக்கம். தங்களின் தேர்ந்த தமிழ்ப் பணிகளுக்கு இன்னும் பல விருதுகள் உங்களுக்காக அணிவகுக்கும். மனார்ந்த பாராட்டுக்களும் மனம்நிறை வாழ்த்துக்களும்.
கருத்துரையிடுக