நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 12 அக்டோபர், 2012

புதுச்சேரியில் மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுகம்


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழா இன்று(12.10.2012) வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. சப்தகிரி அறக்கட்டளையும், புதுச்சேரி வெற்றித் தமிழர் பேரவையும் இணைந்து நடத்திய இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சுற்றுச்சூழலை வலியுறுத்தியும், மக்கள் மரபுகளை வலியுறுத்தியும் எழுதப்பட்ட இந்த நூல் உழவர்களின் வாழ்க்கையை - அவர்களின் துன்பநிலையை எடுத்துரைப்பதாகக் கவிஞர் குறிப்பிட்டார். மொழிப்பற்று, மண்பற்று, பழயை மரபுகளைப் பாதுகாத்தல் குறித்துப் பல செய்திகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றார். காதல், வீரம், இலக்கிய இன்பம், துன்பம் என்று வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இந்த நூல் உள்ளது என்றார். இதில் இடம்பெறும் சுவையான பகுதிகளைக் கவிஞர் நினைவுகூர்ந்ததும் அரங்கம் அதிர்ந்தது. மண்பற்றும் நாட்டுப்பற்றும் கொண்ட இளைஞர்களை உருவாக்கவே இத்தகு நூல்களைப் படைத்து வருவதாகக் கவிஞர் குறிப்பிட்டார்.

மரபின் மைந்தன் முத்தையா கலந்துகொண்டு நூலின் சிறப்புப் பகுதிகளையும் கவிஞரின் படைப்பாற்றலையும் நினைவுகூர்ந்தார். முனைவர் நா.இளங்கோ நூல் குறித்த கருத்துரையை மிகச்சிறப்பாக வழங்கினார். கவிஞர் தி.கோவிந்தராசு அவர்கள் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். சப்தகிரி நிறுவனங்களின் உரிமையாளர் சிவக்கொழுந்து, இராமலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன், புதுவை வாழ் தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கம்பன் கலையரங்கம் நிரம்பியதும் பார்வையாளர்கள் வெளியில் அமர்ந்து நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.










கருத்துகள் இல்லை: