நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 26 பிப்ரவரி, 2011

இணையவெளியில் திருக்குறள்


பனைநிலம் வெளியீடு

  திருக்குறள் தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் பெருநூலாக விளங்குகின்றது. உலக அளவில் பலமொழிகளில் பல வடிவங்களில் திருக்குறள் பரவியுள்ளது. ஓலைச்சுவடியில் இருந்த திருக்குறள் அச்சுவடிவம் கண்டதுபோல் இணையவெளியிலும் பல தளங்களில் பலவாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பயன்படும்வண்ணம் திருக்குறள் மூலமாகவும், உரையுடனும், மொழிபெயர்ப்புடனும், ஒலி, ஒளிவடிவிலும், திருக்குறள் கருத்துகள் அசைவுப்படங்களாகவும், படக்கோப்புகளாகவும், ஒருங்குகுறிவடிவிலும், தரப்படுத்தப்பட்ட எழுத்துகளிலும், தனியார் நிறுவனங்களின் எழுத்துகளிலும் உள்ளன. திருக்குறளைச் செல்பேசிகளில் எடுத்துச்செல்லும்வண்ணம் தரவிறக்கும் வாய்ப்புகளுடனும் உள்ளது. ஒலிவட்டுகளாக்கி மூலமும் உரையும் இணைந்த பேச்சு வடிவிலும் திருக்குறள் உள்ளது. திருக்குறள் சார்ந்த அறிஞர்களின் பேச்சுகளாவும் திருக்குறள் இணையத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திருக்குறள் பரவல் இணையப்பெருவெளியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இணையத்தில் இடம்பெற்றுள்ள திருக்குறள் பதிப்புகள் பற்றியும் இணையதளங்களின் பதிப்புச் சிறப்புகள், சில தளங்களின் மேம்படுத்தலின் இன்றியமையாமை பற்றியும் இக்கட்டுரையில் சில செய்திகள் பதிவாக உள்ளன.

திருக்குறள் இணையப் பதிப்புகளின் பொதுத்தன்மைகள்

  திருக்குறள் தொடக்கத்தில் தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்களைக் கொண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. படக்கோப்புகளாகவும் (பி.டி.எப்.) சில தளங்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. சில தளங்கள் தனியார் நிறுவன எழுத்துகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன (கலைஞரின் திருக்குறள் உரை, குறளோவியம்). இன்று ஒருங்குகுறிப் பயன்பாட்டின் முதன்மை தெரிந்த பிறகு பல இணையதளங்களும் ஒருங்குகுறி எழுத்துருவில் யாவரும் படிக்கும் வண்ணம் எந்த எழுத்துருச்சிக்கலும் இல்லாமல் படிக்கும் வகையில் பதிப்பித்துள்ளன. தினமலர் போன்ற நாளிதழ்களின் தளத்தில் திருக்குறள் சிறப்பாக மூலத்துடனும் உரையுடனும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தினமணி நாளிதழ்த் தளத்தில் நாளும் ஒரு திருக்குறள் இடம்பெறுகின்றது. அருகில் உள்ள பொத்தானை அழுத்தி திருக்குறளுக்கு உரிய பொருளை அறிந்துகொள்ளலாம்.

  ஒவ்வொரு கணினி, இணையத் தொழில்நுட்பம் அறிந்த ஆர்வலர்களும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்பத் திருக்குறளைப் பலவகையாகப் படித்து மகிழும்வண்ணம் பதிப்பித்துள்ளனர். பொதுவாகப் பால்பகுப்பு, இயல்பகுப்பு, அதிகாரப் பகுப்பு இவற்றின் வழியாகத் திருக்குறளைப் பார்வையிடும்படி செய்துள்ளனர். சில தளங்களில் திருக்குறள் எண்ணைச்சொடுக்கியும் திருக்குறளைக் காணலாம். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பதிப்பில் மூலமும் மொழிபெயர்ப்புகளும் உரைகளும் பலவாக இருக்கின்றமை பயனாளிகளுக்குப் பெரும் பயன் தரும் ஒன்றாகும்.

  மேலும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தின் முகப்பிலும் குறள் அமுதம் என்னும் தலைப்பில் திருக்குறள் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பாகும். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தில் உள்ள திருக்குறள் தரப்படுத்தப்பட்ட எழுத்துகளில் உள்ளன. இந்த எழுத்துகளை நம் கணினியில் உள்ளிட்ட பிறகே திருக்குறள் பயன்பாட்டை நுகரமுடியும்.ஒருங்குகுறி வடிவில் இருக்கும்பொழுதே இதன் பயன்பாடு எளிமையாக அனைவருக்கும் கிடைக்கும்.


  இதில் பரிமேலழகர் உரை,பாவாணர் உரை, கலைஞர் உரை எனப் பல உரைகள் உள்ளிடப்பட்டுள்ளன. போப் அடிகளாரின் ஆங்கிலமொழிபெயர்ப்பும், சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் உள்ளன. ஒலிவடிவில் கேட்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் தொழில்நுட்பம் எளிமைப்படுத்தப் படவேண்டும்.


முத்து வ.,சித்தார்த் என்னும் இருவர் (http://kural.muthu.org/)உருவாக்கியுள்ள தளத்துக்குச் சென்றால் திருக்குறள் பயன்படுத்துவதற்கு எளிய முறையில் உள்ளிடப்பட்டுள்ளது. பால் பகுப்பும், இயல்பகுப்பும், அதிகாரப் பகுப்பும் சிறப்பாக உள்ளது. தேடும் வசதியும் இந்தத்தளத்தில் சிறப்பாக உள்ளது.

  திருக்குறள்(http://www.thirukkural.com/) என்னும் தளத்தில் எளிமையான அமைப்பில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் அமைத்துள்ளனர். பயன்மிகு பக்கங்கள் என்ற தலைப்பில் பல இணைப்புகளும் வைத்துள்ளனர். எழுத்துகள் ஒருங்குகுறி அமைப்பில் இருப்பதால் எந்தக் கணினியும் சிக்கலின்றி எழுத்துகளைக் காட்டும்.கலைஞர் உரை, மு.வ. உரை.சாலமன் பாப்பையா உரை ஆங்கில உரைகள் யாவும் சிறப்பாகப் பயன்படுத்தும்படி உள்ளன.

  அகரம் (http://agaram-thirukkural.blogspot.com/) என்னும் தளத்துக்குச் சென்றால் தமிழ் ஆங்கில விளக்கத்துடன் திருக்குறள் சிறப்பாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. குறள்களை எண்ணைச் சொடுக்கிப் பயன்படுத்தும் வகையில் எளிய உரைகள் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன.

  செந்தமிழ்(http://senthamil.org) என்னும் தளத்தில் திருக்குறளின் முதற்சீர் மட்டும் குறியீட்டுச் சொல்லாக அமைந்துள்ளது. அதனைச் சொடுக்கினால் உரிய திருக்குறள் மூலத்தை மட்டும் படிக்கலாம்.இதில் ஒரு நெறிமுறை இல்லாமல் இல்லாத முறையைச் சீர் செய்தால் சிறந்த தளமாக அமையும்.

  மதுரைத்திட்டத்தில் (http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0001.html) உள்ள திருக்குறள் மூலம் மட்டும் கொண்டதாக அமைந்துள்ளது. படக்கோப்பு வடிவிலும், தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவிலும்,ஒருங்குகுறி வடிவிலும் திருக்குறள் இடம்பெற்றுள்ளது.

  ஆச்சார்யா தளத்தில் (http://acharya.iitm.ac.in/tamil/kural/kural_browse.php) உள்ள திருக்குறள் யாவும் மூலமும் அதற்கு ஆங்கில விளக்கமுமாக உள்ளன. எண்ணைச்சொடுக்கிக் குறளைப் பெறும் வகையில் தளம் உள்ளது.

  தமிழன் வழிகாட்டி (http://www.tamilsguide.com/) இணைய தளத்தில் தினம் ஒரு திருக்குறள் என்னும் தலைப்பில் திருக்குறள் இடம்பெற்றுள்ளது. தமிழ் ஆங்கிலம் என்னும் இருமொழிகளில் அறியும்வண்ணம் உள்ளது. திருக்குறளுக்குத் தமிழ் உரையை அ.பொ.செல்லையா அவர்கள் வழங்கியுள்ளார். ஆங்கில விளக்கவுரையை அவர் துணைவியார் திருவாட்டி யோகரத்தினம் செல்லையா வழங்கியுள்ளார். ஆங்கிலத்தில் அதிகார எண், குறள் எண், ஆங்கில எழுத்தில் குறள், ஆங்கிலத்தில் விளக்கம் உள்ளது. தமிழிலும் இந்த வரிசைமுறையில் குறட்பாக்கள் உள்ளன. உரையாசிரியர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பு.


  பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் பற்றி அறிய http://nvkashraf.co.cc/nvkashraf/kur-trans/languages.htm என்னும் தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் சௌராட்டிரமொழி, இந்தி, வங்காளம், குசராத்தி, ஒரியா, மராத்தி, தெலுங்கு, அரபி, உருது, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, இசுபானிசு, சுவீடிசு, என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள விவரங்களை ஓரிடத்தில் பெறலாம்.


பன்மொழிகளில் திருக்குறள் தளம்

திருக்குறள் ஒலிப்பதிப்பு (http://universalepublishers.com/)

திருக்குறள் ஒலிப்பேழைகளாக (கேசட்) முன்பு உலகத் தமிழர்களுக்குக் கிடைத்தது. இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிற்கும் தமிழர்கள் தங்கள் அறிவுத்திறமைகளால் திருக்குறளை ஒலிவடிவில் கேட்டு மகிழக் குறுவட்டுகளாக வெளியிட்டுள்ளார்கள்.

  1330 அருங்குறட்பாக்களும் எட்டரை மணி நேரம் கேட்டு மகிழும் வகையில் உரையுடன் குறுவட்டில் பதிப்பித்துள்ளனர். முன்னுரையும், பால்பகுப்பும் சுட்டி, இயல் பகுப்பு உணர்த்தி, அரிய இசை முன்னோட்டமும், அதிகாரத்தின் எண்ணும், அதிகாரத் தலைப்பும், குறளும் அதற்குரிய பொருளும் இசை நிறைவும் கொண்டு ஒவ்வொரு அதிகாரமும் இந்தக் குறுவட்டில் சிறப்புடன் பதிவு செய்யப்பெற்றுள்ளது. பின்னணி இசையும் மென்மையாக ஒலிக்கின்றது.

திருக்குறளை இனிய குரல்வளத்துடன் பொருள் விளங்கும்படி படித்து, கேட்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் பதிவு செய்துள்ளமை பாராட்டத்தகுந்த முயற்சியாகும்.

முனைவர் க.ப.அறவாணன் அவர்களின் திருக்குறள் உரை இந்த ஒலிப்பேழையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  திரு.டெய்சன் அவர்களின் குரலில் ,ஒலிவல்லுநர் தினேசுகுமார்,(கிருபா எண்மியம்)ஒலிக்கோர்வை செய்ய, அமரர் இரா.இரவிச்சந்திரன் இசையில் இவர்களின் கூட்டுழைப்பில் இந்த ஒலிக் குறுவட்டு கோவையிலிருந்து செம்மொழி மாநாடு நடைபெறும் நாளில் வெளிவந்தது.திருக்குறள் ஒலிக் குறுவட்டுகள் செம்மொழி மாநாட்டை ஒட்டி நடந்த தமிழ் இணையமாநாட்டு அரங்கில் கண்காட்சிக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

  நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள்,அல்லது அலுவலகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் திருக்குறளைக் கேட்டபடி தங்கள் பணிகளைச் செய்ய இத்தகைய ஒலிப்பதிப்புகள் பயன்படும்.அயல்நாட்டுத் தமிழர்கள்,தமிழ் ஆர்வலர்கள் யாவருக்கும் பயன்படும்.ஒரு குறுவட்டின் விலை (இந்திய உருவா) 150-00

திருக்குறள் மறைமொழி (http://panainilam.blogspot.com/2009/02/1330.html)

  1330 திருக்குறளும் இசையுடன் பாடிக் குறுவட்டாக அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. ஏழு பெண்களும், ஏழு ஆண்களும் அடங்கிய இரு குழுக்கள், ஒவ்வொன்றும் மாறி மாறி அவ்வைந்து அதிகாரங்களாகப் பாடியுள்ளது. எளிமையான இசையோடு மறைமொழியின் (மந்திரம் என்ற சொல்லுக்குத் தமிழில் மறைமொழி) மெட்டில் 1330 குறட்பாக்களும் பாடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்பும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் சுமார் ஒன்றரை நிமிடங்கள் இசைக்கின்றன. மொத்த குறட்பாக்களைக் கேட்க ஆகும் நேரம் சுமார் மூன்று மணி நேரம். இதற்கான ஒலிப்பதிவு Island Sounds என்ற ஒலிப்பதிவகத்தில் Steve Green என்பவரால் செய்யப்பட்டது. ஒலிப்பதிய எடுத்துக்கொண்ட நேரம் சுமார் ஆறு மணி நேரம். குறுந்தகட்டுக்கான முன்னுரையை வழங்கியிருப்பவர் திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையைச் சார்ந்த இரா.இளங்குமரனார் அவர்கள் இதன் விலை 5 அமெரிக்க டாலர் ஆகும்.

  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் சென்னையில் உள்ள தமிழ் மையம் திருக்குறளின் 330 குறட்பாக்களை 50 பாடல்களாக உருவாக்கியுள்ளது. திருக்குறள் இசைத்தமிழ் என்னும் பெயரில் இம்மையம் குறுவட்டை உருவாக்கியுள்ளது. செம்மொழி நிறுவனத்தின் தளத்திற்குச் சென்று(http://ta.cict.in/thirukkural330-tamil-maiyam ) இலவயமாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

  திருக்குறள் சார்ந்த பதிப்புகளையும், இணையதளங்களையும் ஆய்வதுடன் திருக்குறள் பதிப்புகள் முறையாக இணையத்தில் உள்ளனவா என்று ஆராய்வது இன்றைய தேவையாக உள்ளது.திருக்குறள் பதிப்புகள், உரைவெளியீடுகள் மிகுந்துவரும் இந்த நாளில் அவற்றை இணையப் பதிப்புகளாக வெளியிடுவது மிகவும் எளிதாகும். அவ்வாறு வெளியீடு செய்தால் இணையப் பெருவெளியில் திருக்குறள் உரைகள் யாவும் ஓரிடத்தில் காணும் வாய்ப்பு ஏற்படும்.


உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் தளம்


திருக்குறள் சார்ந்த இணையதளங்கள் தொகுப்பு: மு.இளங்கோவன்
1.http://kural.muthu.org/
2.http://www.kural.org/
3.http://www.thirukkural.com/
4.http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0001.html
5.http://www.dmk.in/thirukural/index.html
6.http://acharya.iitm.ac.in/tamil/kural/kural_browse.php
7.http://nvkashraf.co.cc/nvkashraf/kur-trans/languages.htm
8.http://ulagam.net/2008/10/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9/
9.http://agaram-thirukkural.blogspot.com/
10.http://www.tamilvu.org/library/l2100/html/l2100001.htm
11.http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thirukkural2.html
12.http://www.koodal.com/valluvam.asp
13.http://www.tamilcanadian.com/kural/
14.http://www.a1tamilnadu.com/images/kural.pdf
15.http://vikku.info/thirukural/
16.http://www.dinamalar.com/kural_main.asp?kural_athikaram=1
17.http://itunes.apple.com/us/app/thirukural-on-iphone/id371067163
18.http://www.appbrain.com/app/thirukural-way-of-life/com.premapps.Thirukural
19.http://www.gokulnath.com/thirukurals
20.http://prharikumar.net/mobile_thirukkural
21.http://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D
22.http://thatstamil.oneindia.in/art-culture/kural/
23.http://valluvam.blogspot.com/
24.http://www.tamildesam.org/special-pages/thirukural/
25.http://www.shakthimaan.com/ta/thirukkural.html
26.http://astrology-vastu.mywebdunia.com/2009/05/11/1242053940000.html
27.http://www.thamilworld.com/forum/index.php?showforum=23
28.http://www.sundarraj.com/2006/08/blog-post.html
29.http://www.anbukudil.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D
30.http://nambikkairama.posterous.com/40024979
31.http://www.marikumar.co.cc/2010/03/blog-post_29.html
32.http://ta.straightworldbank.com/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D
33.http://www.youtube.com/watch?v=gvrY_4C3nKA
34.http://www.youtube.com/watch?v=oG4q3dAVElo
35.http://tamilelibrary.org/teli/thkrl.html
35.http://www.tamilsguide.com/
36.http://ta.cict.in/thirukkural330-tamil-maiyam

37.http://www.abdulkalam.com/kalam/kalamindex/kuralview.jsp?kuraltitleid=88&kuralname=Arathuppal

38.http://kurals.com/wp/

  புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வான்புகழ் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கில் காட்சிவழிப் படைப்பாக இக்கட்டுரை வழங்கப்பட்டது. நாள் 13.02.2011
நன்றி: முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி அவர்கள்

இக்குறிப்புகளைப் பயன்படுத்துவோர் இணைப்பு வழங்க வேண்டுகிறேன்.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

புதுவை என்றால் பாவேந்தர்...


பாவேந்தர் நூற்றாண்டு நினைவு வாயில்

புதுவை என்றால் பாவேந்தர் பாரதிதாசன் அனைவரின் நினைவுக்கும் வருவார். எழுச்சி மிக்க தமிழ்க்கவிதைகளால் கற்றோர் நெஞ்சில் இடம்பிடித்தவர்.தமிழகத்தில் கிளர்ந்தெழுத்த தமிழ் உணர்வுக்கு அவர் பாடல்கள் பெரும் பங்களிப்பு செய்தன.பாவேந்தர் வழியில் பாட்டெழுதும் ஒரு பெரும் படையே உருவானது.இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை உலகில் பாவேந்தரின் தாக்கம் மிகுதி.

புதுவைத் தொடர்பு 1992 ஆம் ஆண்டு முதல் எனக்கு உண்டு.பாவேந்தர் தொடர்பான தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுமேற்கொண்ட காலம் முதல் அவரின் நினைவில்லம் சென்று பார்வை நூல்களைப் பார்ப்பது, படி எடுப்பது என்று தொடர்ந்து பாவேந்தர் ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றேன்.

நேற்று(19.02.2011) பாவேந்தர் நினைவில்லத்தில் பல நூல்களைப் பார்வையிடச் சென்றிருந்தேன். புதுவையின் துளிப்பா முன்னோடிப் பாவலர் சீனு. தமிழ்மணி
அவர்களும் வந்திருந்தார். எங்கள் பணிகளை முடித்துக்கொண்டு வெளயே வந்தோம். பாவேந்தர் மறைவுற்றபொழுது அவரை அடக்கம் செய்த நன்காட்டைப் பார்வையிடவேண்டும் என்றேன். பலநாள் நினைத்தும் பணி நெருக்கடிகளுக்கு இடையே என் எண்ணம் கனியாமல் இருந்தது.

அவரும் நானும் புதுவைக் கடற்கரை ஒட்டியப் பாப்பம்மாள் கோயில் வீதியில் இருந்த நன்காட்டை அடைந்தோம்.அங்குப் பல கல்லறைகள் உள்ளன. தமிழகத்தின் எழுச்சி மிக்க பாவலரான பாவேந்தர் மீளாத் துயில்கொள்ளும் இடம் கண்டு செஞ்சுக்குள் அகவணக்கம் செலுத்தினேன். பார்வையிடாத அன்பர்களுக்காகச் சில படங்கள் எடுத்துவந்தேன்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாவேந்தரின் பிறந்த நாள், மறைந்தநாள் வருகின்றன.


நினைவிடம்


பாவேந்தர் நினைவிடம்


மீளாத்த்துயில்கொள்ளும் இடம்


கல்வெட்டு

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

சித்தர் சிவஞானி கல்லூரியில் பயிலரங்கம் இனிதே நிறைவு


மாணவர்கள்

சித்தர் சிவஞானி கல்லூரியில் இன்று பிற்பகல் இரண்டரை மணியளவில் தொடங்கப்பெற்ற தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நிறைவுற்றது. விரிவான செய்திகள் பிறகு...


பேராசிரியர்திருநாவுக்கரசு, மு.இ, பேராசிரியர் சரசுவதி

சித்தர் சிவஞானி கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுகம்


அழைப்பிதழ்

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் சித்தர் சிவஞானி கலை, அறிவியல் கல்லூரியின் இலக்கிய மன்ற விழா இன்று(15.02.2011) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழால் இணைவோம்:இணையம் கற்போம் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாட்டை விளக்கி மாணவர்களுக்கு உரையாற்ற உள்ளார்.

நிகழ்ச்சி நிரல்

நாள்:15.02.2011
நேரம்: பிற்பகல் 2.30
இடம்: கல்லூரி வளாகம்

வரவேற்புரை: ந.கோதை அவர்கள்
முன்னிலை: முனைவர் அ.திருநாவுக்கரசு அவர்கள்(முதல்வர்)
வாழ்த்துரை: சிவத்திரு வழக்கறிஞர் குமார சிவ. இராசேந்திரன் அவர்கள் (செயலாளர்)
சிறப்புரை முனைவர் மு.இளங்கோவன்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

முத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம்


இரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணைய அறிமுக விழாவும், தமிழ்த்தாத்தா உ.வே.சா.தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழாவும் 12.02.2011 காரி(சனி)க் கிழமை பிற்பகல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பிற்பகல் 2.00 மணிக்குத் தமிழ் இணைய அறிமுக விழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் அவர்கள் நிகழ்ச்சி பற்றியும், இணையத்தின் தேவை பற்றியும் எடுத்துரைத்தார். புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சி பற்றியும் தேவை பற்றியும் மாணவியர் பயன்பெறும் வகையில் காட்சி விளக்கத்துடன் உரை நிகழ்த்தினார்.

தமிழ்த்தட்டச்சு தொடங்கி, தமிழ் இணையத்தின் பல்வேறு பயன்பாடுகளை விளக்கினார். ஸ்கைப் வசதியைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருப்பவர்களுடன் உரையாடமுடியும் என்ற வாய்ப்பையும் எடுத்துரைத்தார்.

சிங்கப்பூரில் உள்ள உத்தமத்தின் செயல் இயக்குநர் திரு.மணியம் அவர்கள் இணைய இணைப்பில் வந்து மாணவியர்களுக்குத் தமிழ் இணையப் பயன்பாட்டை விளக்கிச் சிறிது நேரம் ஊக்க உரை வழங்கினார். இரண்டே முக்கால் மணி நேரம் தமிழ் இணைய அறிமுகம் நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். ஆசிரியர்களுக்கும் இந்த உரை மிகுதியும் பயன்பட்டது. நிறைவில் பயன்பெற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

மாலை 5 மணிக்குப் பள்ளியின் வளாகத்தில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இலக்கிய மன்றத்தின் நிறைவு விழா நடைபெற்றது. திரு.நாகரத்தினம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். திரு. பஷீர் அவர்கள் முன்னிலையேற்றார். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பும் நடைபெற்றது.

இன்றைய கல்வி, பொருளாதார வளர்ச்சி சமூகத்தின் சமயம் / கலாச்சாரம்/ தாய்மொழி இவற்றை மேம்படுத்துகின்றதா? சீரழிக்கின்றதா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் மாணவியர்கள் கலந்துகொண்டு உரை வழங்கினர். முனைவர் மு.இளங்கோவன் நடுவராக இருந்து மாணவியர்களின் கருத்துகளைச் சீர்தூக்கி இன்றைய கல்வியும் பொருளாதாரமும் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றிருந்தாலும் மக்களை இவைச் சீரழித்து வருகின்றன என்ற தீர்ப்புரையை வழங்கினார். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர்த் தமிழன்பர் திரு.முஸ்தபா அவர்கள் நிகழ்ச்சி சிறப்புறத் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்து ஊக்கப்படுத்தினார்கள்.


சிங்கப்பூர் மணியம் அவர்களுடன் ஸ்கைப்பில் உரையாடும் 
இரகமத் பெண்கள் பள்ளியின் மாணவி


தமிழ் இணையப் பயிலரங்கில் மாணவியர்கள்,ஆசிரியர்கள்


தமிழ் இணையப் பயிலரங்கில் மாணவியர்கள்,ஆசிரியர்கள்


தமிழ் இணையப் பயிலரங்கில் மாணவியர்கள்


தமிழ் இணையப் பயிலரங்கில் மாணவியர்கள்


உ.வே.சா.தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா

சனி, 12 பிப்ரவரி, 2011

முத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம் சிறப்பாக நடந்தது...

முத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம் சிறப்பாக நடந்தது... சிங்கப்பூர் பொறியாளர் மணியம் அவர்கள் இணையம் வழி உரையாடினார். புதுச்சேரி மு.இளங்கோவன் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கினார்.



பயிற்சிபெறும் மாணவிகள்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் 11,12,13-02.2011 ஆகிய நாள்களில் நடைபெறுகின்றது.

தமிழகம்,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர்,இலண்டன் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிக்கின்றனர்.

இன்று(11.02.2011) காலை பத்து மணிக்குப் புதுச்சேரிப் பேருந்துநிலையம் அருகில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும், அதன்பிறகு புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் கவிப்பொழிவு நிகழ்த்தியும் விழா நடைபெறும்.

தொடக்க நிகழ்வு பல்கலைக்கழக அரங்கில் பகல் இரண்டு மணிக்குத் தொடங்குகிறது.
நடுவண் அமைச்சர் சா.செகத்ரட்சகன், முனைவர் க.ப.அறவாணன், திரு.சுகி.சிவம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.

நாளை நடைபெறும் நிகழ்வில் பேராசிரியர் அப்துல்காதர், அமுதன் அடிகள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். சொர்ணமால்யாவின் நாட்டிய நிகழ்வும்,மாணவர்களின் கலை நிகழ்வும் நடைபெற உள்ளது.

கருத்தரங்க அமைப்பாளர்
முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி அவர்கள்.
தொடர்புஎண் + 91 9360327019

வியாழன், 10 பிப்ரவரி, 2011

தமிழறிஞர் பேராசிரியர் பே.க.வேலாயுதம் மறைவு

திருச்சிராப்பள்ளி பெரியார் கல்லூரியில் பல்லாண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவரும் தமிழ், ஆங்கிலம்,சமற்கிருதம் போன்ற பன்மொழி அறிந்த அறிஞரும் சங்க இலக்கியக் கால ஆய்வில் தோய்ந்தவரும் கிரேக்க வரலாற்றிலும் கிரேக்க இலக்கியங்களில் மிகச்சிறந்த புலமை பெற்றவரும் எனக்குத் தந்தையார் நிலையிலிருந்து தமிழ்ப்பற்று ஊட்டியவருமான பேராசிரியர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்கள் 09.02.2011 இரவு 9.30 மணியளவில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பதினேழு ஆண்டு கால நட்பு நேற்றுக் கைநழுவிப் போனமை அறிந்து கையற்றுக் கலங்குகின்றேன்.

பேராசிரியர் பே.க.வேலாயுதம் பற்றி அறிய இங்கே சொடுக்குக

பேராசிரியர் பே.க.வேலாயுதம் இல்லமுகவரி:

33,இராசாராம் சாலை,
கலைஞர் கருணாநிதி நகர்,
திருச்சிராப்பள்ளி.
தொடர்புஎண் + 8825348100

புதன், 9 பிப்ரவரி, 2011

தமிழறிஞர் கா.ம. வேங்கடராமையாவின் நூல்கள் நாட்டுடைமை


பேராசிரியர் கா.ம. வேங்கடராமையா அவர்கள்

தமிழறிஞர் பேராசிரியர் கா.ம. வேங்கடராமையாவின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையை அடுத்த போரூர் அருகே உள்ள காரம்பாக்கத்தில் 1911-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் நாள் பிறந்தார் கா.ம. வேங்கடராமையா. பெற்றோர் கா.கிருட்டினையர்-வேங்கடசுப்பம்மாள். சென்னை இலயோலா கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். இவர் செங்கல்பட்டுத் தூய கொலம்பா உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும், தமிழ், சமசுகிருதம், பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் ஆய்வாளராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரிய கையெழுத்துச் சுவடிப் புலத்தின் தலைவராகவும், திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வாளராகவும் அரும் பணியாற்றியுள்ளார்.

தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.எனினும் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டு தமிழ்ப்பணியாற்றினார். தமது தமிழ்த்தொண்டுக்காகக் கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ் மாமணி, சைவத் தமிழ் ஞாயிறு, சிவநெறிச் செல்வர் உள்ளிட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

1994-ஆம் ஆண்டு மறைந்த வேங்கடராமையா, இலக்கியக் கேணி, சோழர் கால அரசியல் தலைவர்கள், கல்வெட்டில் தேவார மூவர் உள்ளிட்ட 19 நூல்களை படைத்துள்ளார்.மராட்டியர் கால வரலாற்றை அறிவதற்குத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக இவர் உருவாக்கிய மராடியர் மோடி ஆவணங்கள் குறித்த நூல் புகழ்பெற்ற ஒன்றாகும்."தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்" நூலின் வழியாக மராட்டியர் காலத் தமிழகத்தை அறியலாம்.

திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் பணிபுரிந்த இவர் கண்டிப்புக்கும் கடமைக்கும் பெயர் பெற்றவர். திருப்பனந்தாள் திருமடத்தின் சார்பில் அரிய தமிழ்நூல்கள் பல வெளிவருவதற்கும் இவர் உழைத்துள்ளார்.காசித்திரு மடத்தின் வெளியீடுகளுள் திருக்குறள் உரைக் கொத்துப் பதிப்புகள் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. திருக்குறள் உரைக்கொத்தைப் பதிப்பிக்கும்போது, எம்.எசு.பூரணலிங்கம் பிள்ளை, வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், எம்.ஆர்.இராசகோபால ஐயங்கார், வ.வெ.சு.ஐயர், ரெவரண்ட் லாசரசு ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுத் தகுந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார்.

கா.ம. வேங்கடராமையா அவர்கள் என் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களின் தந்தையார் ஆவார்.

பேராசிரியரின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவரது நூல்கள் அனைத்தையும் அரசுடைமையாக்குவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, அவரது பிறங்கடைகளுக்கு மரபுரிமைக்கான பரிவுத் தொகையாக உருவா. 15 இலட்சம் நிதி வழங்கவும் ஆணையிட்டுள்ளது.

சனி, 5 பிப்ரவரி, 2011

தமிழ் நாள்காட்டி

இணையத்தை ஆக்கமான செயலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் நான் கண்ணுங் கருத்துமாக இருப்பேன். அதனைவிடுத்துக் குழுப்போர்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து வருகின்றேன்.

அவ்வப்பொழுது பலர் என்னைப் பற்றி மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கும்பொழுது என்மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வதை மட்டும் வழக்கமாகக் கொள்வேன். அவ்வாறு தவறைச்
சுட்டிக்காட்டுபவர்களை நன்றியுடன் போற்றுவேன். என்னைப் பற்றித் தவறான செய்திகளைப் பரப்புபவர்களுக்காக இரக்கப்படுவது மட்டும் உண்டு. தமிழுக்கு, தமிழருக்கு ஆக்கமான பணிகளைச் செய்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களையும் அவர்களின் பணியினையும் போற்றுவதைக் கடமையாகக் கொண்டுள்ளேன்.

அந்த வகையில் இணையத்தில் தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்தவர்களிடம்
தனிப்பட்ட முறையில் நட்பாடுவதும் உண்டு.

அண்மையில் திரு.பிரின்சு என்னாரெசு பெரியார் என்னும் தோழரின் முயற்சியில் உருவான தமிழ்நாள்காட்டி என்னும் தலைப்பிலான செய்தி கண்டு அதனைப் படித்தேன்.

எங்கள் அண்ணன் வே.இளங்கோ அவர்களின் தந்தையாரும் தமிழ் இன உணர்வாளருமான கல்பாக்கம் வேம்பையன் ஐயா அவர்களின் முயற்சியில் உருவான தமிழ்நாள்காட்டியை இணையத்தில் பார்வையிட்டுப் பயன்கொள்ளும் நன்முயற்சியைப் பிரின்சு மேற்கொண்டிருந்ததைக் கண்டு வியந்தேன்.

கல்பாக்கம் வேம்பையன் ஐயா பல ஆண்டுகளாகத் தமிழ்நாள்காட்டியைச் சிறிய வடிவில் கூடுதல் படிகள் அச்சிட்டுத் தமிழகம் முழுவதும் இலவசமாகப் பரப்பி வருபவர்.தமிழகத்தில் தமிழ்நாள்காட்டி முயற்சியில் கல்பாக்கம் வேம்பையன் அவர்களின் பணி பாராட்டத்தக்கது. இணையத்தில் பிரின்சு அவர்களின் முயற்சியால் அந்த நாள்காட்டியைக் கண்டபொழுது இதுவன்றோ தமிழ்ப்பணி என்று போற்றினேன்.

என் வலைப்பூவில் இடப்பக்கத்தில் உள்ள அதனைத் தாங்களும் தங்கள் நண்பர்களும் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் வலைப்பூவிலும் இணைத்துக்கொள்ளலாம். இதுபோன்ற தமிழாக்கப் பணிகளில் ஈடுபடும்படி கணினி நுட்பம் தெரிந்த தமிழ்ப்பற்றாளர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.